குற்றவாளிகளை பாதுகாக்கும் ஐஐடி! அதிகாரமற்ற திமுக அரசு!

-சாவித்திரி கண்ணன்

சென்னை ஐஐடி, ஒரு உயர் கல்விக்கான நிறுவனம்! ஆனால், அதில் துயர் மரணங்களும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், சாதியப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் போன்றவையும் தொடந்து நடந்த வண்ணம் உள்ளன! ஆனால், அவற்றில் சட்டப்படியான நடவடிக்கைகள் என்பது சாத்தியமில்லாமலே போய்க் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

2018 தொடங்கி தற்போது வரையில் சென்னை ஐஐடியில் ஆறேழு மாணவ,மாணவிகள் மரணித்துள்ளனர். கொலையா அல்லது தற்கொலையா என வகைப்படுத்த முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இந்த மாணவர்கள் இறப்பதும், அவை தொடர்பான பல உண்மைகள் வெளி வந்தும் இன்று வரை இதில் யாருமே தண்டிக்கபடாமல் இருப்பதுவும் கூட ஒரே மாதிரியான குற்றங்கள் தொடர்வதற்கு காரணமாகின்றன!

சமீபத்திய ஒரு குற்றச்சாட்டை ஆராய்ந்தால் சுமார் ஐந்து ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது உறுதியாகிறது. வேதியியல் துறையில்  ஆராய்ச்சி (பி.எச்டி) செய்து வரும் மேற்குவனக்த்தைச் சேர்ந்த ஒரு மாணவியை இதேபிரிவில் ஆராய்ச்சி செய்து வரும்  மாணவர்கள் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் 2017ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். இது குறித்து புகார் தெரிவித்த இந்த மாணவியை, பேராசிரியர்.எடமன பிரசாத்தும் தன் பங்கிற்கு சாதி ரீதியாக, அவமானப் படுத்தியதோடு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனால், இதன் பிறகு, கல்வி வளாகம், ஆய்வுக்கூடத்திலும் வைத்து மாணவியை, கிங்ஷூக்தேப் ஷர்மா இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். கல்வி சுற்றுலா சென்ற இடத்தில், கிங்ஷூக்தேப் ஷர்மா, மாணவியை அறைக்குள் அடைத்து  அந்தரங்க பகுதிகளை செல்போனில் படம் பிடித்துள்ளார். அதைக்காட்டி கிங்ஷூக்தேப் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு  வந்துள்ளனர்.

கிங் ஷீப் தேப் சர்மா

சம்பந்தப்பட்ட மாணவி ஐ.ஐடியில் உள்ள புகார் அமைப்பிடம் முறையாக புகார் தருகிறார். அவர்கள் விசாரணை நடத்தி, ‘மாணவியின் புகார் உண்மை’ என அறிக்கையும் தந்தனர். ஆனாலும், அந்த குற்றமிழைத்த மாணவர்கள் மீது ஐ.ஐடி நிர்வாகம் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இது அந்த மாணவியை மிகுந்த மன உள்ழைச்சலுக்கு ஆளாக்கவே அவர் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சென்னை காவல் துறை ஆணையர், எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் ஆகியோருக்கு புகார் தருகிறார். அப்படியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பின்னர், தேசிய மகளிர் ஆணைய தலையீட்டிற்கு பிறகு, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, முனைவர் ரவீந்திரன், பேரா.எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சௌர்வதத்தா, அயன் பட்டாச்சார்யா  6 மாணவர்கள் 2 பேராசிரியர் உள்ளிட்ட  8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. வழக்கு பதிந்து 10 மாதங்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இந்த பத்து மாதங்களும் தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தான் நடக்கிறது.பாதிக்கப்பட்ட மாணவி பட்டியலினத்தை சார்ந்தவராக இருந்தும் குற்றமிழைத்தவர்கள் உயர்சாதியினர் என்ற வகையிலும், எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

பாத்திமாவின் சாவில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள்!

2019 ஆம் ஆண்டு இதே ஐஐடி வளாகத்தில் பாத்திமா என்ற மாணவி மதரீதியான பாகுபாட்டால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மரணித்தார். இன்று வரை அவர் மரணம் கொலையா? தற்கொலையா? என தெளிவாகவில்லை. கேரளத்தை சேர்ந்த அந்த மாணவியின் பெற்றோர் சென்னை காவல்துறை, முதல்வர் பல தரப்பிலும் தொடர்ந்து புகார் தந்தும் நடவடிக்கை இல்லை. அதில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் சுதர்ஸன் பத்மாநாபன், ஹேமசந்திரன் காரா, மிலிந்த் பிரம்மே ஆகியோர் தண்டிக்கபடவேயில்லை. அப்போது எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் விட்ட அறிக்கைகளும்,டிவிட்டர்களும்,கனிமொழியின் கண்டணங்களும் நினைவுக்கு வருகின்றன! ஆனால், இவர்கள் ஆட்சியில் ஏன் இந்த நிலைமை?

தோழமை கட்சியின் ஆட்சி என்று இது நாள் வரை பொறுத்து பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர்சங்கம் தற்போது இதில் தலையிட்டு மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர்  ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரியை ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் வி.பிரமிளா ஆகியோர் சந்தித்து புகார் அளித்ததுடன், ”இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி செய்தியாளர்களிடம் கூறிய போது: முதல் குற்றவாளி மாணவியை 2  முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். முதல் தகவல் அறிக்கையில் பிரிவு  376 சேர்க்கவில்லை. மாணவி தலித்  சமூகத்தை சார்ந்தவராக உள்ளார். அவ்வகையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படவில்லை.  தேசிய மகளிர் ஆணையத்திற்கு உறுதியளித்தபடி, காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. மாணவியை  ஆபாச படம் எடுத்த குற்றவாளிகளின் செல்போனை கூட பறிமுதல் செய்ய வில்லை.

ஆகவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். மயிலாப்பூர் காவல் நிலைய அதிகாரி விஜித்ரா தனது அடிப்படை கடமையை கூட செய்யாமல், குற்றவாளி களுக்கு சாதகமாக செயல்படுவதால் அவர் மீது 166ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும். முதல் தகவல் அறிக் கையில் ஐபிசி 376வது பிரிவை சேர்க்க  வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். குற்றப் பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். மாணவியின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும். இது தொடர்பாக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து  பேச உள்ளோம். உள்புகார் கமிட்டியில் பார்வதி புகார்  செய்த பிறகு, அவரை ஆய்வகத்திற்குள் விடாமல், ரசாயனங்களை தராமல்  பேராசிரியர் எடமனபிரசாத் தொடர் தொந்தரவு  (டார்ச்சர்) கொடுத்துள்ளார்.

காவல் துறை வழக்கு பதிந்த பிறகு, உள்புகார்  கமிட்டி விசாரணையை நிறுத்தி விட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது. விசாரணையை நிறுத்தி வைத்திருப்பது, நிர்வாகம் குற்றவாளி களை பாதுகாக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மாணவியின் படிப்பை அவசர அவசரமாக முடிக்க  நிர்பந்திப்பது சந்தேகத்தை வலுவாக்குகிறது. எனவே, விசாரணையை முழுமையாக முடித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றாவாளிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கல்வி வளாகத்திற்குள் உலா வந்து மாணவியை அச்சுறுத்துகின்றனர். இந்நிலையில் மாதர் சங்கம் தலையிட்டு, மாணவியை தமிழக மகளிர்  ஆணையத் தலைவரை சந்தித்து  பேச வைத்துள்ளோம்” என்றார்.

உண்மையில் இந்த சம்பவத்தில் நமக்கு எழும் முக்கிய கேள்வியே தமிழக டிஜிபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், திமுக ஆட்சியின் கரங்களை நடவடிக்கை எடுக்க முடியாமல் கட்டிப்போட்டிருக்கும் அதிகார மையம் எது என்பது தான். அதிமுகவை எதற்கெடுத்தாலும் அடிமை அரசு என சாடி வந்த ஸ்டாலின் ஏன் சிதம்பரம் கோயில் உள்ளிட்ட பல விவகாரங்களில் அதே அடிமை அரசின் இலக்கணத்தை கடைபிடிக்கிறார்! ஐஐடிக்குள் இருந்து கொண்டு கொலை உள்ளிட்ட எந்த குற்றத்தைச் செய்தாலும் ஒருவரை தண்டிக்க முடியாது என்பதும், மாநில அரசு அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் அல்லது ஆக்‌ஷன் எடுப்பது போல பாவலா காட்டும் என்பதும் நல்லதல்ல!

மாதர் சங்க தலையீட்டிற்கு பிறகு கல்கத்தா சென்று சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்ய போலீசார் முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவன் அங்குள்ள கோர்ட் ஒன்றில் முன் ஜாமீன் பெற்றுவிட்டான். அதனால், அடுத்த நாள் விசாரணைக்காக ஆஜராகச் சொல்லி சம்மனை கொடுத்து விட்டு தமிழக போலீஸ் வந்துவிட்டது. அந்த மானவனோ, தற்போது தனக்கு உடல் நிலை சுகவீனம்’ என்று சொல்லி இரண்டு வாரம் வாய்தா கேட்டு கடிதம் அனுப்பிவிட்டான்.

இந்த வழக்கை தமிழக காவல்துறை இவ்வாறாக ஏதோ கடனே என்று ஏன் கையாண்டது எனத் தெரியவில்லை. அங்கேயே நீதிமன்றத்தை அணுகி,அவரை விசாரணைக்கு அனுப்ப கேட்டு கையோடு கூட்டி வந்திருக்க வேண்டும். ”பொதுவாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாலியல் சம்பந்தப்பட்ட புகார்கள் மீது சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. ஏதாவது அழுத்தங்கள் ஏற்பட்டால் மட்டுமே சற்று அசைந்து கொடுக்கிறார்’’ என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time