கோடைக் கால நோய்களைத் தடுக்கும் உணவுகள் !

-எம்.மரிய பெல்சின்

கோடைக் காலத்தை  எப்படி சமாளிக்க போகிறோம். தகிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள சுகிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்! கோடைக்காலங்களில் சற்றே பாரம்பரிய உணவுகளின் பக்கம் கவனத்தை செலுத்துவது நம்மை காப்பாற்ற உதவும்!

இது கோடையின் தொடக்க காலம். இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. எப்போதுமே போலவே உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம். விளைவு, சில உடல் பாதிப்புகள், நலக் குறைவுகள் எட்டிப் பார்க்கின்றன. சிலருக்கு சிலநேரங்களில் கொஞ்சம் மோசமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அதன்பிறகு விழித்துக் கொண்டு சில நடவடிக்கைகளை எடுப்பது நம் இயல்பு.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து எந்த பலனுமில்லை. வருமுன் காப்பதே சிறந்தது. இந்தக் கட்டுரை கோடை கால நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே தடுப்பது தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. நிச்சயம், உங்களில் சிலருக்காவது பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பருவ காலம் என்பது நான்கு பருவகாலங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில், வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்துக்கும் இடையே வரக்கூடிய கோடை காலமானது வெப்பம் நிறைந்த காலமாகும். பொதுவாக கோடை காலத்தில் நீண்ட பகலும், குறைந்த இரவும் காணப்படும். பகல் நீடித்துக் காணப்படுவதால் தட்பவெப்பம் அதிகரித்து நமது உடலிலும் வெப்பம் கூடும்போது அது ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும்.

பருவகால மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் இன்றைக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, கோடைகாலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அத்தியாவசியமானதுமாகும். வெப்பம் அதிகரிக்கும் போது நீரின் தேவை அதிகரிக்கும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் வழக்கம் போலவே நீர் அருந்துவோம். அதே போலத் தான் திட உணவுகளையும் சாப்பிடுவோம். உடலும், குடலும் எச்சரிக்கை மணி அடித்தும்கூட நாம் கண்டும் காணாமல் இருப்போம். எனவே, கோடை துவங்கியதும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும். வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், முலாம்பழம், பனைநுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி மட்டுமன்றி பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கன்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீர் அருந்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெறும் நீராக அருந்தாமல் மண்பானையில் ஊற்றி இயற்கையாக குளிர்விக்கப்பட்ட நீரை அருந்துவது நல்லது. மண்பானையில் ஊற்றிய நீருடன் வெட்டி வேரைப்போட்டு ஊறியதும் அந்த நீரை அருந்தலாம். நன்னாரி சர்பத் அருந்துவதும் மிகவும் நல்லது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி வேரினை வாங்கி வந்து இரண்டு, மூன்று நன்னாரி வேர்த் துண்டுகளை நசுக்கிப் போட்டு நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். சூடு நன்றாக ஆறியதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து அருந்தலாம். நன்னாரி சர்பத் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சிரமம், நீர்ச் சுருக்கு போன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளும்.

தினமும் நன்னாரி சர்பத் அருந்துவதைவிட மோர் அருந்துவது நல்லது. குறிப்பாக, மோர் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். வெறும் மோராக இல்லாமல் அதனுடன் கொஞ்சம் மல்லித்தழை, கறிவேப்பிலை, சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துச் சாப்பிட சுவையாகவும் இருக்கும், செரிமான சக்தியையும் கொடுக்கும். மதிய உணவில் தயிர் சேர்ப்பதற்குப் பதிலாக மோர் சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலங்களில் கோவில் திருவிழாக்களின்போது  நீர் மோர் வழங்குவார்கள். அதேபோல் நற்பணி மன்றங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் சாலையோரங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் ஊற்றுவார்கள். தாகம் தணிக்கும் இந்தச் செயலை புண்ணியமாகக் கருதுவார்கள்.

நன்னாரி சர்பத், நீர் மோர் தவிர பானகம் அருந்துவதும்கூட நல்லது. விலை குறைவானது மட்டுமல்ல, எல்லோரும் அருந்தக்கூடிய பானகம் அல்லது பானகரத்தை நாமே தயாரிக்கலாம். புளியை நீரில் ஊற வைத்து நன்றாகக் கரைத்து கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்படுவதே பானகம். வயிற்றில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தைக் குறைக்கும் இந்த பானகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் தென்தமிழகத்தில் பலரது வீடுகளில் பானகரம் எனப்படும் இந்த பானகத்தை தயாரித்து அருந்துகிறார்கள். காலப்போக்கில் இந்த பானகம் ஏழைகளின் உணவாக பார்க்கப்பட்டதால் அதை அருந்துவது குறைந்துவிட்டது.

 

மதிய உணவில் பசலைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பருப்புக்கீரை, முள்ளங்கிக்கீரை, புளிச்சக்கீரை மற்றும் முள்ளங்கி, வாழைத்தண்டு போன்றவற்றை தினமும் மாற்றி மாற்றி சமைத்து உண்பதால் வெக்கை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயத்தை மதிய உணவில் பச்சையாக சேர்த்துக் கொண்டால் வியர்க்குரு, அம்மை போன்ற வெக்கை நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். வெயில் உக்கிரமாக இருந்தாலோ அல்லது அம்மை நோய் பரவுவது போல் தெரிந்தாலோ கத்தரிக்காயில் ஒருவித இணை உணவை நீங்களே தயாரித்து உண்ணலாம். அதாவது, நன்கு முற்றிய கத்தரிக்காயை தீயில் சுட்டு தேவையான அளவு மிளகாய் வற்றலையும் (காய்ந்த மிளகாய்) தீயில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு இணையாக புளி, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் அம்மை வராமல் தடுத்துக் கொள்ளலாம். இந்தக் கலவையுடன் சின்ன வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

கோடை காலங்களில் பலரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கும் பிரச்சினைகளுள் ஒன்று மூலக்கோளாறு. ஏற்கெனவே முன்னர் கூறிய போல மற்ற நாட்களில் சாப்பிடுவது போலவே கோடை காலத்திலும் பூரி, பரோட்டா, பிரியாணி, சிக்கன் உணவுகள், பிரைடு அய்ட்டங்கள் என உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதுடன் நீர் அருந்தும் விஷயத்தில் கவனம் இல்லாததால் மூலக்கோளாறு வர வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிதாகவோ அல்லது இதுவரை அடங்கிக் கிடந்த பிரச்சினை வீறுகொண்டு எழவோ வாய்ப்பிருக்கிறது. எனவே, உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பாரம்பரியம் பற்றி பேசும் நாம் இந்த கோடை காலத்திலாவது பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக பழைய சோறு உண்பது மூலக்கோளாறு வராமல் பார்த்துக் கொள்ளும். அதெல்லாம் ஒத்துக்கொள்ளாது என்று நினைப்பவர்களும், வாதக்கோளாறு மற்றும் ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்களும் பழைய சோறு சாப்பிடும்போது கவனமாக இருப்பது நல்லது.

பழைய சோறு மட்டுமல்லாமல் பழைய கஞ்சித் தண்ணீர் அருந்துவதுகூட வயிற்றில் நல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும். வயல்காட்டில் வேலைக்குச் செல்வோர் தூக்குச்சட்டியில் கஞ்சியும் தண்ணியுமாக கொண்டு செல்வது உண்டு. சிலர் பழைய கஞ்சியுடன் மோர் சேர்த்து அருந்துவார்கள். இது கூடுதல் சுவை தருவதுடன் நலம் பயக்கும் அருமருந்தாக இருக்கும். ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும் என்று தேரையர் சித்தர் கூறியுள்ளார். முதல் நாள் பொங்கிய சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் காலையில் பார்த்தால் ஏராளமான நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாகியிருக்கும் இந்த பழைய சோற்றின் நீர் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

இதுதவிர அடிப்படையில் பழ உணவுகள் எப்போதுமே நல்லது. நம்மில் பெரும்பாலானோர் பழங்கள் சாப்பிடுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். காலை அல்லது இரவு உணவுக்குப் பதில் ஒருவேளை உணவாக உண்ணலாம் அல்லது உணவு உண்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்லது. பழங்களில் உள்ள நீர்ச்சத்து நம் உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்தை பெற்றுத் தருவதுடன் வயிற்றுப்புண், மலச்சிக்கல், மூலக்கோளாறு போன்றவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

மேலும், பொதுவாக அதிக காரம் நிறைந்த, சூடான உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து பழைய சோறு, இட்லி, இடியாப்பம், மோர் – தயிர் சாதம். கம்பங்கூழ் போன்றவற்றை உண்பதன்மூலம் கோடைகால நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time