ஸ்டாலினின் டெல்லி விசிட் தரும் புரிதல்கள் என்னென்ன?

-சாவித்திரி கண்ணன்

ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது?

டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது கட்டப்பட்டதாகும்!

இந்த டெல்லி விசிட்டின் நோக்கங்களில் ஒன்று 24 எம்.பிக்களை பெற்றுள்ள – அதாவது எண்ணிக்கையில் அதிக எம்.பிக்களைக் கொண்ட – இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்ற வகையில் தேசிய அரசியலில் தனக்கான முக்கியத்துவதை ஸ்டாலின் உணர்த்துவதாகும். அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோர் தேசிய அரசியலில் தங்களுக்கான ஒரு இடத்தை கொண்டிருப்பது போல, ஸ்டாலின் தனக்கான முக்கியத்துவத்தை விரும்பி மேற்கொண்டதாகும். இதில் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? என்பதை பார்ப்போம்.

ஸ்டாலின் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைத்து பல கட்சிகளின்  முக்கிய எம்.பிக்களை சந்திக்கிறார். கை குலுக்குகிறார், அவர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார். ஆனால், அவர்களோடு கலந்து உரையாடினாரா? கருத்துக்களை பறிமாறினாரா? என்றால் இல்லை. ஒரு புன்னகை, ஒரு கை குலுக்கல், ஓரிரு வார்த்தை.. இதற்கு மேல் உரையாட ஸ்டாலினால் முடியவில்லை. இது தான் அவரது இயல்பும் கூட!

ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா பாராளுமன்றத்தில் உள்ள திமுக அலுவலகம் சென்று பார்க்கிறார். அவரும் ஒரு சில நிமிடங்களில் விடை பெறுகிறார்.

பொதுவாக எந்த ஒரு தலைவரும் தன்னை நோக்கி வரும் மீடியாக்களை நன்கு கையாளுவதன் மூலம் தங்கள் ஆளுமையின் பிரகாசத்தை வெளிப்படுத்துவார்கள்! இந்த நான்கு நாள் விசிட்டில் தமிழ்நாடு பவனில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலிலோ, கூட்ட அரங்கிலோ ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி தேசிய அரசியல் குறித்த அவரது பார்வையை ஸ்டாலின் விளக்கி இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை. வாசலில் சூழ்ந்திருந்த பத்திரிகையாளர்களை தவிர்க்க முடியாமல் ஒரு சில நிமிடங்கள் பேசி வேகமாக விடை பெற்றுவிட்டார்.

ஒரு திரைப் பாடலில் கவிஞர் கண்ணதாசன்,

‘தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?’

என எழுதி இருப்பார்! ஸ்டாலின் தன்னைத் தான் உணர்ந்துள்ளாரா? அப்படி உணர்ந்திருக்கும் பட்சத்தில் அதை நேர்மையாக வெளிப்படுத்துவாரா? என்பதெல்லாமே பதில் தெரியாத கேள்விகளாகும்! தலைவர் இடத்திற்கு வந்துவிட்டார். ஆனால், தலைவராக ஆளுமை பெற்றுவிட்டாரா என்பதற்கு உத்திரவாதம் சொல்ல முடியவில்லை.

சரி, விஷயத்திற்கு வருவோம். திமுக என்ற இயக்கம், திராவிட சித்தாந்தத்தின் அடையாளமாக பார்க்கப்படும் கட்சி. காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோரோடு உறவில் இருக்கும் ஒரு கட்சி. ”திமுக,  தன் கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு பாஜக தலைவர்களை அழைப்பதை நாம் நாகரீகமாக எடுத்துக் கொள்வதா?”

”பாரபட்சமற்ற அணுகுமுறை எனப் புரிந்து கொள்வதா?”

எனப் பல வாசகர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

நடைமுறையில் எதிர் எதிர் சித்தாந்தமுள்ள கட்சிகள் தங்கள் கட்சி விழாக்களுக்கு ஒருவருக்கொருவர் அழைப்பு தருவதில்லை. சென்னையில் ஒரு புதிய கட்சி கட்டிடத்தை கட்டி திறந்தால், அதன் விழாவிற்கு அண்ணாமலையை அழைப்பது குறித்து சிந்தித்து கூட பார்க்க மாட்டார்கள்!

வட இந்தியாவில் கூட திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு தான் பாரபட்சமின்றி ஒருவருக்கொருவர் அழைப்பு தருவர். உதாரணத்திற்கு திரிணமுள் காங்கிரஸ் தன் கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு பாஜக தலைவர்களை அழைப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அப்படி இருக்க, ஸ்டாலின் ஏன் அழைப்பு விடுத்தார்? சோனியாவும், இடதுசாரித் தலைவர்களும் உள்ள இடத்தில் இவர்களின் இருப்பு அவர்களுக்கும் தர்ம சங்கடம், மற்றவர்களுக்கும் தர்ம சங்கடம்! அதனால் தான், அதே தெருவில் இருந்தும் அவர்கள் வராமல் தவிர்த்துவிட்டனர்.

‘அவர்கள் வர வாய்ப்பில்லை’ என்று ஸ்டாலினுக்கும் தெரியாமாலா இருக்கும்! இவற்றை எல்லாம் கடந்து அழைப்பிதழைக் கொண்டு அங்கு தருகிறார் என்றால்’ அதை எப்படி புரிந்து கொள்வது? இதே அமித்ஷா தான் நீட் விலக்கு தொடர்பாக தமிழக திமுக எம்.பிக்கள் குழு பல முறை அப்பாயின்மெண்ட் கேட்டும் தராதவர். தமிழக ஆளுனரின் அனைத்துவித அடமண்டான செயல்பாடுகள், பேச்சுகளுக்கும் பின்னணியில் இருப்பவர் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மையல்லவா?

தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி தரப்படாமல் இருப்பது குறித்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் வருத்ததுடன் கூறிய போதும், திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் பேசிய போதும் நிர்மலா சீத்தாராமன் எப்படி பதிலடி தந்தார். அலட்சியம் காட்டினார்! அவர்களை எல்லாம் விஞ்சி திறம்பட பேசி ஸ்டாலின் அம்மையாரை சம்மதிக்க வைக்க சென்றார் என நம்பவும் வாய்ப்பில்லையே!

இவர்களை எல்லாம் ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலத்தின் தேவைகளுக்காக சந்தித்தார் எனச் சொன்னால் ஏற்கலாம். ஆனால், இராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க வேண்டிய தேவை தான் என்ன?

பிரதமரை சந்தித்ததும் கோரிக்கை மனு அளித்ததும் ஏற்கக் கூடியது. அந்த கோரிக்கையில் பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பல மசோதாக்களை கிடப்பில் போட்ட கவர்னரை, ‘இனி பொறுப்பதில்லை’ என்பதாக வலியுறுத்தி வரும் ‘கவர்னர் மாற்றம்’ குறித்த கோரிக்கை அல்லவா பிரதானமாக இடம் பெற்று இருக்க வேண்டும். திமுகவின் ஒரு எம்பிக்கு இருக்கும் துணிச்சலில் சிறிதளவு கூட அல்லது முரசொலியில் தலையங்கமும், கட்டுரைகளும் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் துணிச்சல் கூட அதன் தானைத் தலைவருக்கு இருக்க வேண்டாமா?

இல்லையென்றால், ”திமுக தலைமை இரட்டை வேடம் போடுகிறது. மக்களிடம் ஓட்டு பெறுவதற்காகத் தான் பாஜக எதிர்ப்பு என்ற வீராப்பு’’ என்ற எண்ணம் தானே ஏற்படும்? அத்துடன் அமைச்சரவையில் பல ஊழல் அமைச்சர்கள் இப்போதே தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டதை மக்கள் பார்த்துக் கொண்டே தான் உள்ளனர். ஊழலுக்கு இடம் கொடுத்தால், அடுத்து சரண்டருக்கு இடம் தந்தாக வேண்டும் என்பது சொல்ல வேண்டியதில்லை.

அது தானே உத்திரபிரதேசத்தில் மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவ்விற்கும் நிகழ்ந்தது!

கடைசியாக ஒரு சம்பவத்தை சொல்லி கட்டுரையை நிறைவு செய்கிறேன். திமுக அலுவலக திறப்பு விழாவில் நடந்த டின்னர் மேஜையில் சோனியா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இருக்க, வி.சி.க தலைவர் திருமாவளவன், அகிலேஷ் யாதவ்விடம், ”நீங்கள் உபி.தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரவணைக்க தவறிவிட்டீர்கள். அப்படி அரவணைத்திருந்தால் இன்று நீங்கள் தான் முதல்வராகி இருப்பீர்கள்” என்ற போது, அகிலேஷ் யாதவ் எழுந்து நின்று திருமாவளவன் கைகளை பிடித்து, ”பிளிஸ்..பிளிஸ்…” என பேச்சை தவிர்க்க சொல்லி கெஞ்சியுள்ளார்!

‘காங்கிரஸை கழட்டிவிட வேண்டும் என்பது அகிலேஷ்க்கு பாஜக தந்த நிர்பந்தம்’ என்பது அங்கிருந்த சோனியா உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். ஆகவே தான், அவர் உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்து திருமாவளவனிடம், ”பிளிஸ், பிளிஸ்..” என வேண்டி தவிர்த்தார்! அகிலேஷ் யாதவ் ஆட்சியின் ஊழல்கள், குற்றங்கள் ஆவணமாக பாஜக கையில் உள்ளது. அதன் நிபந்தனையை அவர் ஏற்க மறுத்தால், அவர் லாலுபிரசாத் யாதவ்வை போல சிறை செல்ல வேண்டியது தான்!

அங்கே அந்த இடத்தில், இதை எல்லாம் கண் எதிரே பார்த்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் நிலைமை தன் நெஞ்சை உறுத்தி இருக்க வேண்டும். அப்படி உறுத்தி இருந்தால் அது அவருக்கு மட்டுமல்ல, திமுக என்ற இயக்கத்தின் எதிர்காலத்திற்கும், தமிழக மக்களின் எதிர்காலத்திற்கும் நன்மையாக முடியும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time