புரட்சிக்கும், புதிய பாதைக்கும் பெயர் போன மேற்கு வங்கம், அரசியல் வன்முறை கலாச்சாரத்திலும் நம்பர் ஒன்னாகும்! அரசாங்கத்தைவிட, அரசியல்வாதிகளுக்குத் தான் அங்கு பவர் அதிகம்! பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம், ஒரு கொலைக்கு பல கொலைகள் எனத் தொடரும் அராஜக அரசியலுக்கு அத்தாரிடியே மேற்குவங்கம் தான்!
இதற்கு காரணம், மேற்கு வங்க சமூகமே அடிப்படையில் கட்சி அடிப்படையிலான சமூகமாகும்! அது அவ்வாறாக மாறி வெகு நாட்களாகிவிட்டது. அன்றாட மக்கள் வாழ்க்கையில் குடும்பம், சாதி, மதம் , அரசு,போலீஸ் ஆகிய அமைப்புக்கள் செலுத்தும் ஆளுமையைவிட கட்சி செலுத்தும் ஆளுமையே மேற்கு வங்க மக்கள் வாழ்வில் அதிகம் .
இன்னும் எளிமையாக கூற வேண்டுமென்றால், மக்களின் அன்றாட வாழ்கையில் குடும்ப உறவுகளின் பங்கு, சாதிய பின்புலத்தின் பங்கு, மதம் சாரந்த சர்ச்,மசூதி, கோவில் போன்றவைகளின் பங்கு ஆகிய அழுத்தங்களை விட கட்சியின் பங்கே அதிகம் எனலாம் .
குடும்ப விவகாரங்களில் தொடங்கி குடியிருப்பது முதல் பள்ளி, வேலை,ரேஷன் ,போலீஸ் ஆகிய அனைத்து விஷயங்களிலும் கட்சி(ஆளுங்கட்சி) தலையிட்டு பஞ்சாயத்து செய்யும், தீர்மானிக்கும். எனவே, கட்சியின் கிளைச் செயலாளர்களும், வட்டச் செயலாளர்களும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! ஆளுங்கட்சியில் அனைவரும் ஐக்கியமாவதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்!
இத்தகைய கட்சியை பிரதானப்படுத்தும் போக்கு தன்னுள்ளே மற்றொரு அம்சத்தையும் உள்ளடக்கியுள்ளது. கட்சியை பிரதானப்படுத்தும் சூழலில், எதிர்கட்சிகளை அப்புறப்படுத்துவது, இருவருக்கும் பொதுவான சமநிலையை குலைப்பது, உரிமைகளை மறுப்பது என்பதே மற்றொரு அம்சமாகும் . நாணயத்தின் இரு பக்கங்களாக செயல்படும் இவ்விரு அம்சங்களும் ஆளுபவர்களுக்கு மமதையையும், அகங்காரத்தையும், எதிர்கட்சிகளுக்கு கதியற்ற கொடுமையும், தண்டனையுமாக முடிவதில் வியப்பில்லை!
தீ வைப்பு சம்பவங்கள் மிக அதிகம் நடக்கும் மாநிலம் மேற்குவங்கம்! கும்பல் வன்முறைக்கு பேர் போன நிலம்! கல்வீச்சுகள், தடியடிகள், காவல்துறையின் துப்பாக்கிச் சூடுகள் இங்கு சர்வ சாதாரணம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் வேகம் பெற்று, வன்முறையில் தொடங்கி வன்முறையில் முடியும்! இந்த வன்முறை கலாச்சாரம் வங்கத்தின் மீது படிந்த கறையென்பதை அனைத்து கட்சிகளும் அவர்கள் ஆட்சி கட்டிலில் இல்லாத பொழுது ஒத்துக் கொள்வதும் ,ஆளும் பொறுப்பு வந்தவுடன் அந்தக்கறையை பெருமைக்குரிய ஆயுதமாக போற்றி கடைப்பிடிப்பதும் அனைத்து மேற்கு வங்க கட்சிகளின் போக்காக உள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, காங்கிரஸ் கட்சியினரோ, பாஜ கட்சியினரோ ..யாருமே விதி விலக்கில்லை!
கடந்த மார்ச் 21 ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் , பிர்பூம் மாவட்டத்தில் குண்டுவீசி கொல்லப்பட்டார் . இதற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் பாட்டிக் ஷேக் மற்றும் சோட்டு லாலன் ஷேக் ஆகிய இருவரின் குடும்பத்தினரை-பெண்கள் குழந்தைகள் உட்பட எட்டு பேரை- ஒரு வீட்டினுள் போட்டு அடைத்து அவ்வீட்டை கொளுத்தி வெறியாட்டம் ஆடியுள்ளனர் கொல்லப்பட்ட பாது ஷேக் கட்சியினர் . எரிந்து சாம்பலாகிப் போன பெண்டிர் மற்றும் குழந்தைகளின் குற்றம் தான் என்ன?
இந்த வன்முறை வெறியாட்டம் அகில இந்திய அளவில் பெரும் கண்டனத்திற்குள்ளானது.
தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி, ஈரமுள்ள இதயங்களை பதற வைத்த இந்த 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தானே வலிந்து எடுத்துக் கொண்டு விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிகழ்வு நடப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியை சார்ந்த தப்பன் கண்டு என்ற நகர்மன்ற உறுப்பினர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். நகர்மன்ற உறுப்பினரான கண்டுவின் மரணத்திற்கு ஆளுங்கட்சியினரும், காவல்துறையுமே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நீதிமன்ற கண்காணிப்பில் சி பி ஐ விசாரணை தேவை என நாடாளுமன்றத்திலும் சௌத்திரி குரல் எழுப்பியுள்ளார்.
எதிர்கட்சியை சார்ந்த அனீஷ் கான் என்ற மாணவரும் இரண்டாவது மாடியில் இருந்து பிடித்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வன்முறை நிகழ்வுகள் நடந்து முடிந்த மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் நிகழ்வின் இறுதிப்படலமாகும் .
இது போன்றே கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன, மோதல்கள் நடைபெற்றன! தோற்றவர்கள், எதிர்த்து ஓட்டு போட்ட மக்கள் ஆகியோர் வயது வித்தியாசமின்றி கடுமையாக தாக்கப்பட்டு 22 பேர் கொல்லப்பட்டனர்!
இந்தியாவையே அதிர வைத்த திரிணாமுல் கட்சியின் இந்த ஜனநாயக விரோத போக்கை அனைத்து கட்சியினரும் எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர்.
உண்மையில், இத்தகைய அரசியல் வன்முறை , சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சூழல் மிக நெடுங்காலமாக மேற்குவங்க அரசியலில் தொடர்ந்து வந்துள்ளது.
1965 ஆண்டிற்குப் பிறகு குறிப்பாக சித்தார்த்த சங்கர் ரே காங்கிரஸ் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே ஆளுங் கட்சியினரின் அரசியல் வன்முறை என்பது மேற்கு வங்க அரசியலின் ஒரு அங்கமாக உள்ளது. இப்போக்கு காங்கிரசை அடுத்து வந்த கூட்டணி அரசு காலத்திலும் , அதன் பின்னர் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியதாக பறைசாற்றிக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் நீண்ட நெடிய 35 ஆண்டுகால ஆட்சியிலும் தொடர்ந்தது.
அதே போக்கு இன்று திரிணாமுல் ஆட்சி காலத்திலும் தொடர்கிறது. அன்றிருந்த காங்கிரஸ் ஆட்சியை ஜனநாயக விரோத ஆட்சி, பாசிச ஆட்சி என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டித்தனர், ஆனால், இடது முன்னணியின் நீண்ட ஆட்சியில் இதே வன்முறைகள் எந்த மாற்றமுமின்றி, தொடர்ந்த பொழுது எதிர்கட்சியினரின் கண்டனக் கணைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பாய்ந்தன. இன்று அதே கண்டனங்கள் திரிணாமுல் கட்சி மீது பாய்கின்றன. உள்துறை அமைச்சர் இதைச் சாக்காக வைத்து மம்தா பானர்ஜிக்கு ஏகப்பட்ட குடைச்சல் தந்து கொண்டிருக்கிறார்!
சமநிலை இல்லாத சமூகத்தில் கட்சி அரசியலும், அதையொட்டிய தேர்தலும், வாக்குரிமையும், தேர்தலில் வெற்றியின் அவசியமும் சமுதாயத்தில் பல கீறல்களை ,ரணங்களை ஏற்படுத்துகிறது. தேர்தல் வெற்றியும் அதையொட்டிய ஆளுமையும், அதிகாரமும் தான். இந்தப் போக்கின் உந்து சக்தி எனலாம் .
மற்ற மாநிலங்களில் வெற்றி தோல்வியை ஒட்டி அதிகார மாற்றமும், அதிகார பரவலும் நடைபெறுகின்றன . ஆனால், மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றவனுக்கே அனைத்து ஆளுமையும் , அதிகாரமும் என்ற நியதி எழுதப்படாத விதியாக அங்குள்ளது.
தேர்தலில் தோற்றவர்கள் பதவி விலகலாம் , அதிகாரங்களை இழக்கலாம். ஆனால், அவர்கள் அரசியல் செய்யும் உரிமையை இழக்கலாமா? அவர்கள் அநியாயத்தையும், அதிகார அத்துமீறலையும் எதிர்த்து குரல் எழுப்பும் உரிமையை இழக்கலாமா? பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க அவர்கள் முயலும் உரிமையை இழக்கலாமா?
தேர்தலில் வென்றவர்கள் , ஏதோ எதிரி நாட்டின்மீது படையெடுத்து ஆட்சியை பிடித்தவர்கள் போல் தோற்றவர்களின் ஏரியாவிற்குள் கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்குவதும்,கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்ப்பதும், தோற்ற எதிர்கட்சி உறுப்பினர்களை அவர்கள் வசிக்கும் இடங்கள் ஊர்களில் இருந்து அப்புறப்படுத்துவதும் மேற்கு வங்க அரசியலில் வாடிக்கையாக உள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் பொழுது, வெற்றியின் மூலம் கிடைத்த அதிகாரத்தை முழுமையாக நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்.
தோற்றவர்கள் தொடர்ந்து இருக்கவே(வாழவே) அருகதையற்றவர்கள் என்ற போக்கை நடைமுறைப்படுத்தும் பொழுது வன்முறைகளும் உயிர்பலிகளும் தொடர்கின்றன. அடுத்து மேற்கு வங்கத்தில் காவல்துறை என்பது முழுக்க, முழுக்க ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக அல்ல, ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகவே செயல்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட எந்த கட்சியினரும் இதை மாற்ற துணியவில்லை!
வன்முறை இல்லையென்றால் எல்லாம் நன்றாக உள்ளது என்று அர்த்தமல்ல, எதிர்த்து குரல் கொடுக்க நாதியில்லை என்று அர்த்தம். நாதியிருந்தால் எதிர்ப்பும், வன்முறையும் சேர்ந்தே அங்கு வரும்.
Also read
அதிகார மாயையே 40 சதவிகித வாக்குகளோடு, 35 ஆண்டுகளாக ஆட்சி கட்டிலில் தொடர்ந்து இருந்த இடது முன்னணியின் கண்ணை மறைத்தது. இதனால், ஆட்சியை பறிகொடுத்து, இன்று எதிர்கட்சியாக பத்து சதவிகித வாக்குகளை தக்க வைக்க மார்க்சிஸ்ட் கட்சி படும் பாட்டை நாம் காண்கிறோம் . கொள்கை வழியில் கோட்பாட்டின் அடிப்படையில் தொண்டர்களை அடிப்படையாக கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கிகள் சரிந்த கதைகளே இப்படியென்றால், வருங்காலத்தில் இன்றைய ஆட்சியாளர்களின் நிலை பற்றி நீங்களே ஊகித்து கொள்ளலாம்.
புரையோடிப்போன இப்போக்குகளை யார் மாற்றுவர்? அதற்கான பொறி எங்குள்ளது எனத் தேடுவது அவசியம். ஜனநாயகத்தை மட்டுமல்ல சமுதாயத்தையே சீரழிக்கும் இந்தப்போக்கை களைய அரசியல் கட்சிகள் குறிப்பாக மேற்கு வங்க அரசியல் தலைவர்கள் தயாரா?
அறிவுசார்ந்த மேற்குவங்க சமூகம் இதற்கு வழிகாட்டுமா? தாகூரையும், சுபாஷ் சந்திர போசையும் பக்கிம் சந்திர்ரையும், ராஜாராம் மோகன் ராயையும் அமர்த்தியா சென்னையும் உலகிற்களித்த வங்கம் இந்த கட்சி சமூகத்தை(Party society) தகர்தெறிய முயலுமா? முயலவேண்டும் என்பது நமது அவா!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
//புரையோடிப்போன இப்போக்குகளை யார் மாற்றுவர்? அதற்கான பொறி எங்குள்ளது எனத் தேடுவது அவசியம். ஜனநாயகத்தை மட்டுமல்ல சமுதாயத்தையே சீரழிக்கும் இந்தப்போக்கை களைய அரசியல் கட்சிகள் குறிப்பாக மேற்கு வங்க அரசியல் தலைவர்கள் தயாரா?// Good article.
கட்டுரை சிறப்பானதே
ஆனால் எல்லாக் கட்சிகளும் ஏற்ற இறக்கமின்றி ஒரே தன்மையான வன்முறையாளர்கள் என்பது ஏற்பதற்கில்லை !
வன்முறையின் அடிப்படையை அலசவில்லை என்பது இது மேம்போக்கானது என்பதாகிறது !
வன்முறைக்கு எதிரான வன்முறை -வன்முறையாகாது !
கட்டுரையாளர் தனது பார்வையில்-அல்லது எண்ணிக்கை/ கொடுமைத் தன்மை/ வினை-எதிர்வினை அளவு கோலில்,புள்ளி விவரப்படி இக்கட்சிகளின் போக்கு குறித்து எழுதியிருந்தால் நேர்மையாக இருந்திருக்கும் !அனைத்து கட்சிகளையும் சம தளத்தில் நிறுவுவது :
1. மெனக்கெடாமல் அறையில் அமர்ந்து சொற்ச்சிலம்பமாக எழுதுவது !
2. எந்தக் கட்சியும் தம் மீது கோப்ப் படக்கூடாது என்ற எச்சரிக்கை/பயம் !
3. நேர்மையாக எழுதி என்ன நடக்கப்போகிறது என்ற கையறு மனநிலை ; இது இதழியல் “அறம்” ஆகாது !
“நடுநிலை “ என்பது சரியான அளவுகோல் கொண்டு அலசுவது ; பூசி மெழுகுவதல்ல !