மத்திய அரசுக்கு சித்தமருத்துவ ஆய்வுகள் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது! அதே சமயம் பல வருட ஆராய்ச்சியில் நடைமுறை ரீதியாக நாம் நிருபித்த சித்த மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஆயூர்வேத கண்டுபிடிப்பாக மனசாட்சியின்றி மடைமாற்றம் செய்வது இனிக்கிறதோ…?
புற்றுநோய் குறித்து சித்த மருத்துவத்தில் பல குறிப்புகள், மற்றும் பெரும் மருந்துகள் உள்ளன.
சென்னையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜட்ஜ் பலராமையா போன்ற புகழ் பெற்ற சித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கு வெற்றிகரமாக சிறப்பு மருந்துகளை கொடுத்து பலரை காப்பாற்றி உள்ளனர். இது குறித்து அவர் எழுதிய புத்தகம் இன்றளவும் பிரபலமாக உள்ளது!
சில மாதங்களுக்கு முன் மறைந்த கேரளாவின் டாக்டர் மேத்யூ சித்த மருத்துவ ஆராய்ச்சியில் மிக முக்கியமானவர். டாக்டர். மேத்யூ, கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராக இருந்தவர். அலோபதி மருத்துவரான அவர் தன் வாழ்நாளின் கடைசி காலம் வரை, தான் கண்டறிந்த சித்த மருந்துகளைக் கொண்டு பல புற்று நோயாளிகளை குணப்படுத்தி உள்ளார்!
அவர் சித்த மருந்துகளுடன் தேவைப்படுவோருக்கு அலோபதி மருந்துகளுடன் கதிரியக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல நூறு பேர்களை காப்பாற்றியுள்ளார்.
டாக்டர் மேத்யூ, ஒரு அரசு மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவர்! அவர் தான் எவ்வாறு சித்த மருத்துவத்தை கற்றார் என்பதையும், அதனை அரசு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் எவ்விதம் பயன்படுத்தினார் என்பதையும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
தன் பணிக்காலத்தில் அரசு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் இனி பிழைக்க மாட்டார்கள் என கைவிடப்பட்ட சில நோயாளிகளை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவர் சந்திக்க நேர்கிறது! அப்போது அவர்கள் நல்ல உடல் நிலையுடன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் ஒரு லாட சன்னியாசி இடம் சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டு குணமடைந்ததாகத் தெரிவித்தனர்.
மனித குலத்திற்கு பெரும் தீங்கான புற்று நோயை ஒரு சன்னியாசியால் குணப்படுத்த முடிகிறதென்றால் அவரை தான் சந்திக்க வேண்டுமே என ஆவலுற்றார்! டாக்டர் மேத்யூ அந்த லாட சன்னியாசியை தேடிச் சென்றார். அவரிடம் உரையாடினார். அவர் மனதில் நம்பிக்கை ஏற்பட்டது. அதையடுத்து அந்த சன்னியாசியுடன் சில காலம் தங்கி பணி புரிந்து, சித்த மருத்துவத்தின் நுட்பங்களை அறிந்தார்! அதன் பிறகு மேலும் தொடர் ஆராய்ச்சியாக தமிழகம் வந்து புற்று நோய்க்கான சித்த பெரும் மருந்துகளை கற்றுக் கொள்கிறார்! நவபாஷாண கட்டு மருந்துகள், தங்கம் சேர்ந்த மருந்துகள், கோரக்கர் மூலிகை சேர்ந்த மருந்துகள் போன்றவற்றை செய்யும் முறையை அறிந்து, அவற்றை செய்து தன் நோயாளிகளுக்கு கொடுத்து, பல ஆய்வுகள் செய்து, அவற்றை நிரூபித்துள்ளார்! தன் வாழ்நாளில் கடைசி காலம் வரை[90 வயது] சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
தன் ஆய்வு முடிவுகளை பல முறை ஒன்றிய அரசுக்கு எழுதி அனுப்பி உள்ளார்! அதுவும், குறிப்பாக கோரக்கர் மூலிகை கஞ்சா புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான தீர்வு தருவதாக பல ஆய்வுகளை செய்து ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்!
இவ்வாறாக ஒன்றிய அரசுக்கு டாக்டர் மேத்யூ அவர்களால் சமர்பிக்கப்பட்ட – அவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதி சித்த மருத்துவத்தை கொண்டு புற்றுநோயின் மீது செய்த ஆய்வு முடிவுகள், தரவுகள் – அனைத்தும் தற்போது மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. இனி அவையெல்லாம் ஆயுர்வேத மருத்துவ முறையின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆயூர்வேத மருந்துகளாக லேபிள் ஓட்டி புழக்கத்திற்கு வரலாம்!
இதை உறுதிபடுத்த இந்த நிகழ்வு ஒன்றே போதுமானது! நாடாளுமன்றத்தில், திமுக எம்பி.யியான திருமதி கனிமொழி சோமு அவர்கள், மத்திய அமைச்சர் ஆயுஷ் துறைஅமைச்சர் சர்பானந்த சோனோவால் அவர்களிடம் எழுப்பிய கேள்வியும், அதற்கான பதிலுமே இதற்குச் சான்றாகும்.
கனிமொழி சோமு; அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா?’’
மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால்: தேசிய புற்று நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த புற்று நோயியல்மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறைகளின்படி அமைந்த மருந்துகளின் அடிப்படையில் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை செயல்படுத்துவது இந்த மையத்தின் நோக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து கொண்டுள்ளது.’
ஆக, இவற்றை தடுக்கவும், கேள்வி எழுப்பவும் முடியாத சூழ்நிலையில் சித்தமருத்துவ ஆய்வுத்துறை கையறு நிலையிலேயே உள்ளன.
இதேபோல் முன்பு தாம்பரம் டிபி சானிடோரியத்தில் பணிபுரிந்த டாக்டர். சி.என்.தெய்வநாயகம் அவர்கள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் , காசநோய் எனப்படும் டிபி நோயாளிகளுக்கும் சித்த மருந்துகள் ரசகந்தி மெழுகு, ,நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம் ஆகிய கூட்டு மருந்துகளான[R.A.N therapy ]மருந்துகளை கொடுத்து பலரை குணப்படுத்தியும் , அவர்களின் வாழ்நாளை அதிகப்படுத்தியும் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளார்.
டாக்டர்.தெய்வநாயகம் அவர்கள் சித்த மருந்துகளின் மூலம் பெறப்பட்ட ஆய்வுகளை பல ஆய்வு மேடைகளிலும் மருத்துவ ஆய்வு இதழ்களிலும், பன்னாட்டு கருத்தரங்குகளிலும் வெளியிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக அவரின் ஆய்வு முடிவுகளை மத்திய ஆய்வு நிறுவனங்கள் ஏற்க முன்வரவில்லை, அவரின் ஆய்வுகளுக்கு போதுமான ஆய்வு உதவிகளையும் செய்ய முன் வரவில்லை.
அவரின் மறைவுக்குப் பின் அவர் சேகரித்து வைத்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் அப்படியே முடங்கி போயின.
இந்த இரண்டு சம்பவங்களின் வாயிலாக நாம் சொல்ல விரும்புவது இது தான்! நமது மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு மருத்துவ ஆய்வு கொள்கை மற்றும் மருத்துவக் காப்புரிமை விதிகள் அவசியமாகும்!
நம்முடைய நிருபிக்கப்பட்ட சித்த மருத்துவ கண்டுபிடிப்புகளை நாம் மேற்கொண்டு நவீன முறையில் ஆய்வு செய்து காப்புரிமை செய்து கொள்ள முடியவில்லை. சித்த மருத்துவத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசும் இதற்கு இசைவு தெரிவிப்பதில்லை. தமிழ்ச் சமூகத்தின் தனிப் பெரும் அடையாளமான சித்த மருத்துவ பாரம்பரியத்தை நம் கண் முன்பே ஆயுர்வேத பாரம்பரியமாக்கிக் கொள்ளும் முயற்சிகளை தடுக்கவும் முடியவில்லை.
கொரோனா காலகட்டத்தில் பெரிதும் பயன்பட்ட நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் போன்றவற்றை முறையாக ஆய்வு செய்ய ஒன்றிய ஆயுஸ் அமைச்சகம் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை என்பது மட்டுமல்ல, முட்டுக்கட்டை போட்டவண்ணமே உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டு பல ஆயிரம் பேர் குணம் பெற்றனர்! அந்த மையங்களில் இருந்து பெறப்பட்ட மருத்துவ தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த கட்ட ஆய்வுக்கு முன்னேற போதுமான ஆதரவு ஆயுஸ் அமைச்சகத்திடம் இருந்து கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன்,வேல்முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வானது செப்டம்பர் 2020 ல் வழங்கிய ஒரு தீர்ப்பில் மத்திய அரசின் ஆயூஸ் அமைச்சகத்திற்கு ஒரு கடமை உண்டு. சித்த மருத்துவமான கபசுரக் குடிநீர் தமிழகத்தில் பலருக்கு நல்ல பலனளித்து வருதான தகவலை கவனத்தில் கொண்டு இவை போன்றவற்றை விரைந்து ஆய்வு செய்து இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சித்த மருத்துவ மருத்துவமனையை உருவாக்கலாம்.’’ என்றனர்!
Also read
ஆனால், இதையெல்லாம் ஒன்றிய அரசும், அதன் ஆயூஸ் அமைச்சகமும் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
இதற்கிடையில் சில தனியார் நிறுவனங்கள் கபசுரக் குடிநீரையும், நிலவேம்பு கசாயத்தையும் ஆய்வு செய்ததாகக் காட்டி மருந்து தயாரித்து பல நூறுகோடிகள் சம்பாதித்துவிட்டன!
இதற்கெல்லாம் அனைத்து மருத்துவ ஆராய்ச்சிகளையும் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளதே மிக முக்கிய காரணமாகும்.
மேலும், மாநில அரசுக்கு என்று தனியாக எந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் , மருத்துவ ஆய்வு கொள்கைகளும் இல்லாததும் காரணமாகும்! இத்தகைய பிரச்சினைகளை இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என நாம் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர்; விஜய் விக்கிரமன்
சித்த மருத்துவர் மற்றும் ஆய்வாளர்
உண்மையே