ஆட்டம் முடிந்தது! அடுத்த பிரதமர் யார்?

கடுமையான பொருளாதார நெருக்கடி, தகுதிக்கு மீறிய ராணுவச் செலவுகள், ஊழல் நிர்வாகம்.. இதன் தொடர்ச்சியாக இம்ரான்கானின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது! மதவாத உணர்ச்சிகளைக் கடந்து, மக்கள் சரியான தலைவரை பாகிஸ்தானில் தேர்ந்தெடுப்பார்களா? ராணுவத்தின் சாய்ஸ் யார்?

மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார் இம்ரான்கான்! பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான்  அரசுக்கெதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  இம்ரான் கட்சி உறுப்பினர்கள் சிலரே அணி மாறி ஆதரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் பதவி இறக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால், இம்ரானின் ” கடைசி பந்து வீச்சில்” உதவி சபாநாயகர், ”நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நிய சக்திகளின் தூண்டுதலினால் புனையப்பட்ட தீர்மானம் இது அரசியல் சட்டத்திற்கு புற,ம்பானது, தேசப் பாதுகாப்பே முக்கியம்” என்றெல்லாம் கூறி நிராகரித்துள்ளார் . விவகாரம்  உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்கட்சிகளால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார் என அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இம்ரான்கான் அதிகார மையம் எனக்கு கொடுத்துள்ளது மூன்று வாய்ப்புகள் தான்;

# பதவி விலகுவது

# நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வது,

#  அடுத்த தேர்தலை சந்திப்பது.”

என்று பகிரங்கமாக மக்களிடையே பேசும்போது குறிப்பிட்டுள்ளார். அவர் அதிகார மையம் -Estabilishment-  என்று குறிப்பிடுவது பாகிஸ்தான் ராணுவத் தலைமையைத்தான் என்பது வெளிப்படை.

ராணுவத்தின் “தயவால்” தேர்தலில் வென்று, ராணுவத்தின் உதவியால் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்த இம்ரான்கான் இன்று ராணுவத்தலைமையுடன் முரண்பட்டு நிற்கிறார்.

இம்ரான்கானை தனது செல்லப்பிள்ளையாக பாவித்து பதவியில் அமர்த்திய ராணுவம், இன்று அவரை விரட்ட நினைக்க அவசியம் என்ன?

சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே பாகிஸ்தானில் , குறிப்பாக பாக். அரசமைப்பில் ராணுவத்தின் பங்கு மக்கியமான ஒன்றிலிருந்து ” முதன்மை” இடத்திற்கு மாறத்தொடங்கியது. குடியாட்சி தலைமையின் கீழ் ராணுவம் என்ற ஜனநாயக கோட்பாடு சிதைக்கப்பட்டு ராணுவ வழிகாட்டுதலில் நடக்கும் பொம்மை அரசுகளாகவே பாகிஸ்தானில் குடியாட்சி நடைபெற்று வருகிறது.

இந்தக் குறைபிரசவ ஆட்சிகள் எதுவும் கொடுக்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட ஐந்தாண்டுகளை முடிக்காமலே அற்ப ஆயுளில் குலைக்கப்பட்டன என்பதும் , 1948 முதல் 2022 வரை எழுபத்திநான்காண்டுகளில் பாக். ராணுவம் நேரடியாக ஆட்சி செய்த காலமே அதிகம் என்பது மற்றொரு அம்சமாகும் .

புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP)  யும் , நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்  (PML-N) கட்சியும் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அரசியலில் அதிரடியாக நுழைந்த கிரிக்கெட் புகழ் இம்ரான் கான் ஊழலுக்கு எதிராக குரலெழுப்பி,  ”தேசத்தை காப்பாற்றுவோம், இஸ்லாமியத்தை காப்பாற்றுவோம், புதிய பாகிஸ்தானை  – நயா பாக்கிஸ்தானை- வென்றெடுப்போம்” என்று அரசியல் களம் கண்டார்.

ஜியா உல் ஹக் கின் படுகொலைக்குப்பிறகு பாக்கிஸ்தான் ராணுவ தலைமை “கலவை ஜனநாயக” ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் ராணுவம் தன்னை முன்னிறுத்தாமல், அதே சமயம் தனது முதன்மை ஸ்தானத்தையும் இழக்காமல் “தேர்ந்தெடுக்கப்பட்ட” கட்சிகளின் ஆட்சியை முன்னிறுத்தி, தனது எண்ணங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தீர்மானித்தது.

பாகிஸ்தான் நாட்டின் உண்மையான அதிகாரம் ராணுவத்தலைமையே என்பதை உலகமே உணர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஜனநாயக ஆர்வலர்களும், முற்போக்காளர்களும் பாக். அரசமைப்பை ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்க விழைகின்றனர் . ஆனால், அங்குள்ள அரசியல் கட்சிகளோ, ராணுவ ஆளுமையை தங்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது எதிர்க்கிறார்கள் ,ஆதரிக்கிறார்கள், முரண்படுகிறார்கள். அதனால், கொள்கை அளவில் ராணுவத்தை கட்டுக்குள் வைக்க முயல்வதில்லை.

ராணுவத் தலைமையும் கிரிக்கட் அணிக்கு வீர்ர்களை தேர்வு செய்வது போல், ஆட்சியமைப்பிற்கு அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கிறது! அதன் பின் வேண்டாத பொழுது, விலக்கி வைத்து பந்தாடுகிறது.

எப்பொழுதெல்லாம் ராணுவத்தின் உத்திரவுகள் சிவிலியன் தலைவர்களால் மீறப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் பதவிகள் பிடுங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், நாடு கடத்தப்படுவார்கள், ஏன் தூக்குமேடைக்கும் அனுப்பப்படுவர்.

எப்பொழுதெல்லாம் சிவிலியன தலைவர்கள் ராணுவத் தலைமையோடு ஒத்துப் போகிறார்களோ, அப்பொழுதெல்லாம் பிரச்சினை எழுவதில்லை, சுமுகமான ஆட்சி தொடர்கின்றன.

இந்தக் கலவையைத்தான் ஹைபிரிட் டெமாக்ரசி  “கலவை ஜனநாயகம்” என பாக். ராணுவம் அழைக்கிறது. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ என்ற இந்தக் கலவையின் உண்மை முகம் ராணுவம் தான்.

ஆனால், ராணுவத்தால் தூக்கி நிறுத்தப்பட்ட தலைவர்கள் ராணுவத்தால் தூக்கி அடிக்கப்பட்டவர்கள் ஜுல்பிகர் அலி புட்டோ தொடங்கி நவாஸ் ஷெரீப், பெனாசிர் புட்டோ, அசிப் அலி ஜர்தாரி, வரை தொடர்ந்து இன்று இம்ரான் கான் வரை தொடர்ந்துள்ளது.

ராணுவத்தலைமைக்கும் இம்ரான் கான் அரசிற்கும் ஐ எஸ் ஐ தலைவரை நியமிப்பத்தில் தோன்றிய கருத்து வேறுபாடு மோதலாக வெடித்த பின்னர் ராணுவத் தலைமை எதிர்கட்சித் தலைவர்களின் பல நாள் கோரிக்கையான இம்ரானை பதவி இறக்குதல் என்ற கோஷத்திற்கு செவிமடுக்கத் தொடங்கினர் , இம்ரானை கைகழுவ முன்வந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பச்சை கொடி காட்டிவிட்டனர்.

ராணுவத்தை இன்று எதிர்க்கும் இம்ரான் கானை சிவிலியன் ஆட்சியை தூக்கிப் பிடிப்பவராக அவரது கட்சியினர் போற்றும் அதேவேளையில்  அரசியல் சட்டத்தையும், ஜனநாயக மாண்பையும் இம்ரான் காலில் இட்டு மிதிப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிரச்சினை இப்பொழுது பாக்.உச்ச நீதி மன்றத்திற்கு சென்றுள்ளது.

உச்ச நீதி மன்றம் இந்நடவடிக்கைகளுக்கு தடையோ, இடைக்கால தடையோ விதிக்கவில்லை. அனைத்து தரப்பினரும் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விரைவில் விசாரணை செய்யப்பட்டு தீர்க்கப்படும் என்ற உச்ச நீதி மன்றம் இவ்விசாரணையை முழு அமர்விற்கு-Full Bench-  மாற்ற வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இனி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த பக்கத்திற்கு சாதகமாக அமையும் என பல்வேறு ஊகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இடைக்கால பிரதமர் பதவிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியை பரிந்துரைத்துள்ளார் இன்றைய பிரதமர் இம்ரான் கான்.

புதிய தேசிய அவைக்கான தேர்தல் வேலையும் தொடங்க தயாராக உள்ளது. இது எதிர்கட்சிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

தானாக முன்வந்து வழக்கு நடத்தும் உச்ச நீதி மன்றம் “வெளிப்படையாகத் தெரியும் சட்டத்திற்கு புறம்பான பிரதமரின் செயலை” நிராகரிக்காமல் ஒத்தி போடுவதால், தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதால் உச்ச நீதி மன்றம் பிரதமரின் செயலை சட்ட விரோதமானது  என நாளை தீர்ப்பளித்தாலும், கலைக்கப்பட்ட தேசிய அவையை உயிர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் முன்வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், இதற்கு முன்னுதாரணம் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். அவர்கள் அக்டோபர் 1988 ல் பாக். உச்ச நீதிமன்றம் பாக். அதிபர் ஜியா உல் ஹக் மே மாதம்1988ல்  தேசிய அவையை கலைத்த நடவடிக்கையை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் சட்டவிரோதமாக கலைக்கப்பட்ட அவையை உயிர்ப்பிக்கவில்லை.

மற்றொரு உதாரணமாக 1993ம் ஆண்டு மே மாதம் பாக். அதிபர் குலாம் இஷாக் கான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசை டிஸ்மிஸ் செய்து தேசிய அவையையும் கலைத்து  பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.

ஆனால், இது நடந்த ஓரிரு வாரங்களில் ராணுவம் தலையிட்டு அதிபர் குலாம் இஷாக் கானையும் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருவரையும் பதவியிலிருந்து தூக்கியடித்தது வேறு கதை!

ஆறு மாதங்களுக்கு முன்னரே, இப்பொழுது தேர்தல்கள் நடத்த இம்ரான் முற்படுவதால் எதிர்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர் . ஜனநாயக அரிதாரத்தை  அனைத்து கட்சிகளும் பூசினாலும் யாருடைய பரப்புரை பாக்.மக்களிடையே எடுபடும்? எவ்வளவு தூரம் பாக். ராணுவம் இந்த கட்சிகளுக்கு தயவு காட்டும் என்பது யாருக்கும் முடிவாக தெரியவில்லை.

அமெரிக்க எதிர்ப்பு, ஊழல் பெருச்சாளிகளான பாக்.மக்கள் கட்சி மற்றும் பனாமா பேப்பர் புகழ் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் கட்சிக்கு எதிர்ப்பு போன்ற கோஷங்களை முன்னெடுக்கும் இம்ரான்கான் ”இஸ்லாமிற்கு ஆபத்து” என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார். இவரது வாதம் வெல்லுமா அல்லது இன்றைய மோசமான பொருளாதார நிலைக்கு இம்ரானே காரணம், அமெரிக்க உறவும், வர்த்தகமுமே பாக் . பொருளாதாரத்தை உயர்த்தும், இதற்கெதிரான இம்ரானின் சட்டவிரோத போக்கையும் முன்னிருத்தி எதிர்கட்சி கூட்டணி தேர்தலை சந்திக்கும்.

யார் முன்னணி பெறுவார்கள் என்பதைவிட ராணுவம் என்ன செய்ய போகிறது என்பது தான் அதிமுக்கியம்.

ஏனென்றால், பாக். ராணுவம், பாகிஸ்தான் நாட்டு எல்லைகளை மட்டுமல்ல, பாகிஸ்தான் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டின் பாதுகாவலனாகவும் தோற்றம் காட்டுகிறது! நாட்டின் சுதந்திரத்திற்கும், அடையாளத்திற்கும் மட்டுமல்ல, பாகிஸ்தான் ஜனநாயகயத்திற்குமே தானே பாதுகாவலன் என்றெண்ணுகிறது.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time