ஏன் இந்தக் கல்விக் கொள்கைக்கான குழு..?

-சாவித்திரி கண்னன்

ஒரு சமூகத்தின், அந்த மண்ணின் அடையாளம் கல்வி தான்! கல்வியில் தவறாக கைவைப்பது ஒரு சமூகத்தையே காவு கொடுப்பதாகும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கான ஒரு கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு! இது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல…!

2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.  நாடு இன்றிருக்கும் நிலையில் – மத்திய பாஜக அரசு ஒற்றைக் கலாச்சாரக் கொள்கையை கல்வியிலும் திணிக்கத் துணிந்துவிட்ட நிலையில் – இந்த அறிவிப்பு தமிழக மக்களின் பலத்த வரவேற்பை பெற்றதில் வியப்பில்லை!

இதன்படி, தமிழக அரசு ஒரு குழுவை கட்டமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக தில்லி  உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசனும், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர் நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற  கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச. மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராம சீனுவாசன், யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சான்குப்பம், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெய தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்.”  என தமிழக அரசு அறிவித்துள்ளது!

ஒரு நாட்டின் கல்விக் கொள்கை என்பது வெறும் கல்விக் கொள்கை அல்ல! அது தான் அந்த நாட்டின் வளரும் தலைமுறையின் சிந்தனை போக்கை, செயல்பாடுகளை, கலாச்சார இயக்கத்தை தீர்மானிப்பதாகும். சுருங்கச் சொல்வதாயின், கல்விக் கொள்கை தான் எதிர்கால சமூகத்தின் திசைவழியை தீர்மானிப்பதாகும். அத்தகைய ஒரு கல்விக்குழுவை உருவாக்க கூடியவர்களுக்கு இந்த சமூகத்தின் கட்டமைப்பு, கலாச்சார சூழல்கள், பொருளாதாரக் கூறுகள், மானுட விழுமியங்கள், மண்சார்ந்த பண்பாட்டு கூறுகள் ஆழமாக தெரிந்திருக்க வேண்டும். குழுவின் அறிஞர்கள் வெவ்வேறு தளங்களில் இருந்தாலும், கிட்டதட்ட ஒத்த சிந்தனை போக்குள்ளவர்களாக இருக்க வேண்டும். அதாவது, சமூகத்தின் பாரம்பரியத்தை உள்வாங்கிய முற்போக்கு பார்வை அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்த மண் மற்றும் அதன் மரபுகள் குறித்த ஆழமான புரிதல் இருக்க வேண்டும்.

”இவ்வாறெல்லாமாக இந்தச் சமூகம் இருக்கிறது, இனி, இவ்வாறாக கட்டி எழுப்படுதல் வேண்டும்” என்ற பார்வையை கொண்டிருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, இதில் மெனக்கிடுவதற்கு நேரமும், ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். ‘இந்த குழுவின் உறுப்பினர் பதவி என்பது கவுரவப் பதவியல்ல, கடமைகளை செய்யக் கிடைத்த பதவி’ என்ற புரிதல் இருக்க வேண்டும். பிரபலமானவர் என்பதற்காகவும், இன்னின்னாரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒரு சிலரை இதில் இணைத்துள்ளனர் என்பது தெரிகிறது.

இந்தக் குழுவில் அவசியம் இடம் பெற வேண்டியவர்கள் என நாம் கருதிய பேராசிரியர் ஜவகர் நேசன் கல்வி கொள்கை குறித்த மிகத் தெளிவான பார்வைகளை ஏற்கனவே பல மேடைகளிலும், தான் எழுதிய நூல்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தி வருபவர்! கல்வித் தளத்தில் பல உயர் பொறுப்புகளை வகித்தவர்.

கல்வி தொடர்பான பல அரிய அற்புதமான நூல்களை எழுதிய முனைவர், எழுத்தாளர் ச.மாடசாமி, கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், இயற்கை சூழலியல் அறிஞர் சுல்தான் இஸ்மாயில், மானுட விழுமியங்களை காக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், குழந்தைகள் உரிமைகளை நன்கு புரிந்துள்ள யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் முனைவர் அருணா ரத்னம், அறிவொளி இயக்கத்திலும்,அறிவியல் இயக்கத்திலும் அனுபவம் பெற்றுள்ள நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சான்குப்பம், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் இரா. பாலு, ஏற்கனவே கல்வி சார்ந்த செயல்பாடுகளில் அகரம் குழுமத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய தாமோதரன் ஆகியோர் நியமனங்களை புரிந்து கொள்ள முடிகிறது!

கூடுதலாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆய்வறிஞர் பொ.வேல்சாமி ஆகியோர்களை  போட்டு இருந்தால் வெகு சிறப்பாக இருந்திருக்கும்! இவர்களெல்லாம்  தமிழ்ச் சமூகத்தின் கிடைதற்கரிய பொக்கிஷங்கள்! மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்படக் கூடியவர்கள்!

பொதுவாக இது போன்ற ஒரு கல்விக் குழுவிற்கு கமிட்மெண்ட் உள்ள, தீர்க்கமான பார்வை கொண்ட கல்வியாளர் ஒருவரை தலைவராக நியமிப்பதே சரியாகும். இதை மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் அவர்களுமே சுட்டிக் காட்டியுள்ளார். அவர் மட்டுமின்றி பல பேராசிரியர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனென்றால், முன்பெல்லாம் கூட லஷ்மணசாமி முதலியார், கோத்தாரி போன்ற கல்வியாளர்களை தான் இது போன்ற குழு தலைவர்களாக போட்டனர். அந்த வகையில் நீதிபதி ஒருவரை தலைவராக நியமித்தற்கு மாறாக, இந்தக் குழுவில் உள்ள மிகச் சிறந்த கல்வியாளரான ஜவகர் நேசனை மாநிலக் கல்விக் கொள்கைக்கான தலைவராகவே நியமித்திருக்கலாம்.

நீதிபதி ஏ.கே.ராஜனை தலைவராக போட்ட போதிலும், நீட் மசோதா குறித்த மிகச் சிறந்த ஆய்வறிக்கையை கடுமையாக உழைத்து தயாரித்தவர் ஜவகர் நேசன் தான். இதை நன்கு புரிந்திருந்தும் மீண்டும் ஒரு நீதிபதியையே தலைவராகக் கொண்டு கமிட்டி அமைத்துள்ளனர். இதை நாம் குறையாகச் சொல்லவில்லை. ஆழமான புரிதலும், தொலை நோக்கு சிந்தனையும் கொண்டவர்களுக்கு சுதந்திரத்தையும், உரிய அங்கீகாரத்தையும் தந்தால் தான் நோக்கம் முழுமையடையும் என்பதற்காக சுட்டிக் காட்ட வேண்டியதாயிற்று! நடந்த வரை, எல்லாம் சரி தான்! குறைந்த பட்சம் தலைவருக்கு அடுத்த நிலையில் செயல் தலைவர் என்ற நிலையாவது கல்வியாளருக்கு உருவாக்கித் தரலாம். அரசு பரிசீலிக்க வேண்டும்!

இது மட்டுமல்ல, இந்த குழு தருகின்ற பரிந்துரைகளை சம்பிரதாயமாக வாங்கி கிடப்பில் போட்டுவிடாமல், உடனே செயல் வடிவம் கொடுக்கவும் வேண்டும்! அவ்வாறு நடக்குமாயின் இந்த தமிழ்ச் சமூகம் இந்த ஆட்சியாளர்களுக்கு என்றென்றும் கடமைபட்டு இருக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time