தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன!
தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ? எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ஏதிலி. இதனை ஏதிலியான ஒருவர் எழுதும் போது, அதற்கு உயிர்ப்பு வந்து விடுகிறது.
ஈழத்து வாழ்வியலை, இராணுவத்தோடு, அரசோடு மக்களுக்கு ஏற்பட்ட மோதலை முன் வைத்து பல படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தியாவில் அகதிகளாக வாழும், ஈழத் தமிழர்கள் பற்றிய படைப்பு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் இது வித்தியாசமானது. இதன் நூலாசிரியரான அ.சி.விஜிதரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர். முகாமில் வளர்ந்தவர். எனவே தனது சக பயணிகளின் வாழ்க்கை இவரை சலனப்படுத்தியிருக்கும். அதன் விளைவாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது என்று கூறலாம். அமெரிக்காவில் நடக்கும் தொழிலாளர் புரட்சியை வைத்து ஜாக் லண்டன் எழுதிய ‘இரும்புக் குதிகால்’ என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். ‘குருதி வழியும் பாடல்’, என்ற கவிதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.
இந்த நாவல் அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகிறது. தனி ஈழம் அமைவதற்காக ஆதரவு அளித்த தமிழகம், அதன் அகதிகளுக்காக அதே அளவு ஆதரவளிக்கிறதா ! குடியுரிமை, வேலைவாய்ப்பு, கல்வி உரிமை போன்ற உரிமைகளை அகதிகள் பெற இயலும். அதனைப் பெறுகிறார்களா ! அதற்காக ஆதரவுக் குரலையாவது நாம் எழுப்புகிறோமா! அகதிகள் உரிமை பற்றிய பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது குறித்த சட்டம் எதையும் இந்திய அரசு இயற்றி இருக்கிறதா ! அகதிகள் என்பதற்காகவே, நம் தயவில் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஆதிக்க மனோபாவம் இல்லையா !
தன் நிலத்தை விட்டு, ஒரு கால் இழந்த கணவனோடும், சிறுவனோடும் இலங்கையில் பேருந்திலும், பிறகு படகிலும் பயணிக்கும் அமுதா இந்தியா வருகிறாள். காலிழந்த அவன் புலியாக இருப்பதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. கள்ளத்தோணியில் முன்னாள் போராளிகளை வெளியே அனுப்புவதாக பிடிபட்டால் அவ்வளவுதான். இவர்களின் படபடப்பும், வேதனையும், மனக்கிலேசமும் வாசகனையும் பற்றிக்கொள்கின்றன. ஒரு வழியாக தமிழ்நாட்டில் அகதி முகாமை அடைந்து, விசாரணையை எதிர்கொள்ளும் போது சாதி என்னவென்று கேட்கிறார்கள். வெள்ளாளர் என்று சொல்கிறாள். எல்லாருமே ‘வெள்ளாளர்’ என்றே பதிவு செய்திருக்கின்றனர். இப்படி இந்த நாவல், அரசியல் பார்வையோடு விரிவடைகிறது. இதுபோன்று ரசிக்கும் பல இடங்களை நாவல் நெடுகிலும் காண இயலும்.
முகாம்வாசி என்பதால் குற்றவாளியாக நடத்தப்படுவதை சகிக்க முடியாமல் சுயமரியாதையோடு காத்திரமாக வெளிப்படும் ஒரு கதாபாத்திரம், வாழ்வின் பல கொடூரங்களை கண்ட நிலையில் யாரிடம், எதற்காகவும் சார்ந்து வாழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வெளிப்படும் ஒரு இளம் பெண் கதாபாத்திரம், ஈழத் தமிழர்கள் துன்பத்தைப் பேசி, பிரபாகரனுடன் இருந்த நெருக்கத்தை பேசி பிழைப்பு நடத்துபவர்களை அம்பலப்படுத்தும் ஒரு கதாபாத்திரம்.. என பலர் நம்முள் பதிந்து விடுகின்றனர்!
‘என்ன நடந்தது/ எனது நகரம் எரிக்கப்பட்டது/எனது மக்கள் முகங்கள் இழந்தனர்/எனது நிலம், எனது காற்று/எல்லாவற்றிலும்/ அந்நியப் பதிவு’ என்பது சேரன் எழுதிய கவிதை. இதைப் போன்ற பல பொருத்தமான, கவிதைகளை ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பும் ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார். கதையானது, முகாமிற்கு காலம் கடந்து வரும் கடிதங்கள் வாயிலாக, நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருக்கும் குறிப்புகள் வழியாக , உண்ணாவிரத உரை போல, முகாம் அறிவிப்பு போல, கேள்வி-பதில் போல பல வடிவங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆரம்பம் இல்லை; முடிவும் இல்லை. வழக்கமான புத்தக அளவும் இல்லை; அளவு குறைவாக, படிக்க இலகுவாக உள்ளது.
முகாமில் படித்த அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் இலகுவான தொழில் பெயிண்டிங்தான். அதை வைத்துதான் வாழ முடியும். முகாமிலேயே பிறந்து, வளர்ந்த தலைமுறையும் அங்கு வளர்கிறது. அவர்களுடைய பிரச்சினை என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு போனார்கள். இல்லாதவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஒரு மாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு 350 சதுர அடி வேண்டும். அப்படியென்றால், ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு இடம் வேண்டும் ? 13 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலை ஆய்வு செய்ய வரும் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வி இது. முகாம் என்பது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பது அவளுடைய கணிப்பு.
தலைமைக்கு வரும் முகாம் பொறுப்பாளர்கள், அவர்களது நடத்தைகள், கியூ பிரிவு போலீசாருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு, முகாமில் உருவாகும் கோவில்கள் – வேத கோவில்கள், காதல் – அதை எதிர் கொள்ளும் பெற்றோர் என நாம் சாதாரணமாக காணும் பல சம்பவங்கள் வந்து செல்கின்றன.
சைவ மத பெருமையைப் பேசும் ஆறுமுக நாவலார் கனவில் வருகிறார். அவரை ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான். மறுபடியும் இலங்கையில் குடியேறச் செய்யும் ஒரு என்.ஜி.ஓ வின் அரசியல் தோலுரிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓர் அகதி முகாமிற்கு சென்று வந்த உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.
மக்கள் சிவில் உரிமைகள் கழக செயற்பாட்டாளர் ச.பாலமுருகன் முன்னுரை எழுதியுள்ளார்.’ ஈழத் தமிழர்கள் நமது பொதுப் பதிவில், இலக்கியங்களில் காணாமல் போனவர்கள். அவர்கள் வாழும் இடத்தில் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்’ என்கிறார். ‘இயல்பாக எல்லா ஏதிலியர்களும் எதிர் கொள்ளும், பாதுகாப்பின்மை, அவமானம், இயலாமை, அடங்கிப் போதல் அதன் நீட்சியாய் எழும் மனப் பிறழ்வு போன்ற பாதிப்புகளைத் தாங்கிய பல மனிதர்கள் நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்கிறார்.
Also read
எளிய வார்த்தைகளில் வெகு இயல்பாக எழுதப்பட்டுள்ள கதை இது. ஓரிரு தினங்களில் இலகுவாகப் படித்துவிடலாம். நாவல் என்பதால் கதைக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதாக யாரும் எண்ண வேண்டாம். 14 அத்தியாயங்களில், 14 குடும்பங்கள் வருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருப்பதால் நாவல் வடிவம் பெறுகிறது. கதாபாத்திரங்களின் வழியே உண்மையைப் பேசுவதால், படைப்புக்கு ஒரு உன்னதம் வந்து விடுகிறது. இதைப் படிக்க வேண்டிய அவசியமும் நமக்கு வந்து விடுகிறது.
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
நூல்; ஏதிலி
ஆசிரியர்; அ.சி.விஜிதரன்
பக்கங்கள்; 305, விலை; ரூ.250
வெளியீடு; சிந்தன் புக்ஸ்,
கோபாலபுரம், சென்னை – 600086
தொடர்புக்கு: 9445123164/
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/tr/register?ref=UM6SMJM3