வட இந்தியத் தொழிலாளர்கள் மீது வெறுப்பை கட்டமைப்பதா?

-சாவித்திரி கண்ணன்

வட இந்திய தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து கலவரம்! இந்த செய்தி பல ஊடகங்களில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக வெளியாகியுள்ளது. சில ஊடகங்கள் செய்தியையே இருட்டடிப்பு செய்துவிட்டனர்! விசிக, நாம் தமிழர் அமைப்புகளோ வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர்! இதை எப்படி அணுகுவது?

ஈரோடை தலைமையிடமாக கொண்டு, எஸ்.கே.எம்., என்ற புகழ் பெற்ற நிறுவனம் இயங்கி வருகிறது. பூர்ணா ஆயில் என்ற பெயரில் அரிசி தவிடு எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பல வகை எண்ணெய்கள் உற்பத்தி, கால்நடை தீவன உற்பத்தி, முட்டை ஏற்றுமதி, சித்த மருத்துவமனை, சித்த மருந்து உற்பத்தி ஆலை மற்றும் மற்றும் விற்பனை நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இவை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. நிறுவனங்களின் தலைவராக எஸ்.கே.மயிலானந்தன், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன்கள் ஸ்ரீசிவகுமார், சந்திரசேகர் உள்ளனர். இந்த நிறுவனங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பார்க்கின்றனர். மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபாதுகாப்பு அம்சங்கள் எதுவுமற்ற நிலையில் அவர்கள் வேலை வாங்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உண்டு! இந்த எண்ணெய் ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் விபத்தோ, அசம்பாவிதங்களோ நடந்தால், அதற்கு உரிய நஷ்ட ஈடு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன!

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா எண்ணெய் நிறுவனத்தில் நள்ளிரவில் டேங்கர் லாரி மோதி பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம் என்ற இளம் தொழிலாளி உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 400-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விபத்தில் இறந்த காமோத்ராம் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது வடமாநில தொழிலாளர்களை சமாதானம் செய்து போலீசார் கூறுகையில், ‘முதலில் பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்து செல்ல ஒத்துழைக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசி  இழப்பீட்டு தொகை வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். ஆனால், தொழிலாளர்களோ, இங்கு இது போல் விபத்து நடந்தால் எதுவும் சரியாக தருவதில்லை. ஆகவே உரிய இழப்பீட்டு தொகை வழங்கிய பின்னர் தான் உடலை எடுத்து செல்ல வேண்டும் என ஆவேசத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகத் தரப்பில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு 12 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் தொகை பெற்றுத் தருகிறோம் எனக் கூறியுள்ளனர். இன்சூரன்ஸ் தொகை அவ்வளவு கிடைக்குமென்றால், அதை காசோலையாக இப்போதே தந்து உறுதிபடுத்துங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால், இறந்த தொழிலாளி உடலை அப்புறப்படுத்த காவல்துறை தீவிரம் காட்டி, லத்தி சுழற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டை மற்றும் கற்களை எறிந்து  வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், எண்ணெய் ஆலை நிறுவனத்தின் முன்புறத்தில் உள்ள காவலாளி அறை அடித்து நொறுக்கப்பட்டது. பத்து போலீசார் காயம்பட்டதாக செய்தி வெளியிட்ட பல பத்திரிகைகள் காவல்துறையால் எந்த ஒரு தொழிலாளியும் தாக்கப்பட்டதாக எழுதவில்லை. ஆனால், போலீசாரின் எதிர்வினை எப்படி மோசமாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதை தொடந்து ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்!

நமக்கு கடைசியாக கிடைத்த தகவல்கள்படி காவல்துறை சுமார் 40 தொழிலாளர்களை கைது செய்து அவர்களை ஒரு தனி திருமண மண்டபத்தில் ஒரு நாள் முழுக்க அடித்து நொறுக்கி, கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இனி இந்த தொழிலாளர்கள் பெயில் கிடைத்து வருவது கூட அரிது தான்! காவல்துறை வேட்டையாடுவது தெரிந்து, சுமார் 300 தொழிலாளர்கள் தங்கள் சொந்த  மாநிலத்திற்கே தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு தொழிலாளியின் மரணத்தை சரியாக கையாளத் தெரியாததின் விளைவாக தற்போது பல தொழிலாளர்களின் வாழ்க்கை படு மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த குரலற்ற தொழிலாளர்களின் சோகக் குரலை எந்த ஊடகங்களும் எழுதவும் மாட்டார்கள்!

மக்கள் சிவில் உரிமைகள் கழக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் இந்த சம்பவம் பற்றி  கூறுகையில்,”தொடர்ந்து பல வடமாநில தொழிலாளர்கள் பணியில் போது விபத்து மரணத்தை சந்திக்கும் நிகழ்வில், ஏதேனும் ஒரு சூழலில் தலையீடு செய்யும் அனுபவத்திலிருந்து அந்த தொழிலாளர்கள் உள்ளத்தில் ஏற்பட்ட அச்சு உணர்வும் பாதுகாப்பின்மையும் இயல்பாக ஏற்படக்கூடியது. ஏனெனில், இந்த தொழிலாளர்கள் ஒரு ஏஜன்ட் மூலம் வரவழைக்கப் படுகின்றனர். அந்த ஏஜெண்டுகள் முதலாளிகளுக்கு விசுவாசமாக நடக்கவே விரும்புகின்றனர். பல பணியிடை விபத்து மரணத்திற்கு உரிய இழப்பீடு தராமல் உடலை அடக்கம் செய்ய உதவி, செய்து சொற்ப தொகையை கொடுத்து பிரச்சினைகள் முடிப்பது வாடிக்கை.

தொழிலாளர்கள் இழப்பீடு சட்டம் எதுவும் பெரும்பாலும் இவர்களால் நடைமுறையில் சாத்தியமற்றது. வேறு மாநிலம், இங்கே இருந்து சட்டப்போராட்டம் நடத்த வாய்ப்பற்ற நிலை, அறியாமை, ஏழ்மை, ஆதரவற்ற நிலை போன்ற பல காரணங்கள் உண்டு. ஒரு சமயம் பணியின் போது இறந்து போன தொழிலாளர் ஒருவருக்கு உதவ நாங்கள் பிணவறையில் காத்திருந்தோம். குடும்பத்தினர் எங்களுடன் இருந்தனர்.ஆனால் தொழிலாளி உடலை நிர்வாகம் ஏஜன்ட் உதவியோடு எரியூட்ட கடத்தி போனது. தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க மறுக்கும் மனநிலை வெளிப்பாடு அது.

பொதுவாக காவல்துறையினர் சூழலை கையாளும் முறையில் உள்ள தவறுகள் சாதாரண பிரச்சினையை திசை திருப்பி விடும். காவல்துறைக்கு சிறு பாதிப்பு என்ற உடன் தாக்குதல், சித்திரவதை, கடும் வழக்கில் சிறை என அத்துமீறல் நீளும். எனவே, தமிழக அரசு இந்த நிலையில் மனித நேயத்துடன் அணுக வேண்டும்.

இந்த தொழிலாளிகளுக்கு உள்நாட்டு இடம்பெயர் தொழிலாளர்கள் சட்டம் உண்டு. அவை ஒருபோதும் நடைமுறை படுத்த படுவதில்லை. வடமாநில தொழிலாளர்கள் கழிப்பிட வசதி, முறையான குடியிருப்பு இன்றி , குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்படுவதே எதார்த்தம்.

இந்த தொழிலாளர்கள் மீது கட்டப்படும் வெறுப்பு உணர்வு அபத்தமானது. சில அமைப்புகள் இவர்களை வெளியேற்ற வேண்டும் என போஸ்டர் ஓட்டுகிறார்கள். ஆனால் வடமாநில தொழிலாளிகளால் நமது தொழில்துறைக்கு தான் நன்மை. பாதிக்கப்படும் தொழிலாளிக்கு இழப்பீடு உள்ளிட்ட சட்டத்தின் பலன்கள் உடனே கிடைக்க நிதி ஆதாரம் ,காப்பீடு போன்றவற்றை எதிர்காலத்தில் உருவாக்கவேண்டும். இதற்கு அரசு பொறுப்பு எடுப்பது அவசியம்.

இந்த பிரச்சினையில் தமிழக அரசு மனித நேயம்,மென்மையோடு அணுகி கைது செய்யப்பட்ட தொழிலாளிகளை விடுதலை செய்ய முன் வர வேண்டும். இத்தகைய சூழலில், காவல்துறை மற்றும் எஸ்கேஎம் நிர்வாகத்துக்கு ஆதரவாக ஒரு அமைப்பு (ஈரோடு கிழக்கு மாவட்ட விசிக வுடன் இணைந்தது) பின்வரும் வெறுப்பூட்டும் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அபாயகரமானதாகும்’’ என்றார்!

நம்மை பொறுத்த அளவில் இந்தப் பிரச்சினையை வட இந்திய தொழிலாளர் மீதான வெறுப்பாக பார்ப்பது மனித நேயமற்றது! உண்மையில், அந்த தொழிலாளர்களின் உழைப்பு மட்டும் இல்லை என்றால், இன்று தமிழகமே ஸ்தம்பித்துவிடும். அதுவும் தொழில் பகுதியான கொங்கு மண்டலம் முற்றிலும் ஸ்தம்பித்துவிடும். மிகக் கடின உழைப்பை தந்து, சொற்ப ஊதியம் வாங்கி உயிர் பிழைக்கும் இந்த எளிய தொழிலாளர்கள் மீதான வெறுப்பு கட்டமைக்கப்படுவது என்பதை ஒரு போதும் ஏற்க முடியாது! மும்பையில் உள்ள தமிழ் தொழிலாளிகளுக்கு இது போல நேர்ந்தால் நாம் எப்படி யோசிப்போம்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time