32  பேரும் குற்றவாளிகள் அல்ல!  ‘ஜெய் ஸ்ரீ ராம்’

ஜா.தீபா

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,அந்த நிகழ்வு “தன்னிச்சையான செயல்“ என்று சொல்லியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தீர்ப்பில் ஒரு இடத்தில் 1949ல் ராமர் சிலையை மசூதிக்குள் தடையை மீறி வைத்ததை “தெய்வீகத் தலையீடு’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி அணுகியுள்ளது என்பதற்கு இந்த ஒரு வார்த்தையே போதுமானதாகும்.

ஆனால்,28 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியைத் தகர்த்தபோது இப்படியொரு தீர்ப்பை நீதிமன்றத்திடம் நாம் பெறமுடியும் என அந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கனவில் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை!

“முட்டாள்தனம். நீதிமன்றங்களை எதற்காக இங்கு இழுக்கிறீர்கள். நீதிமன்ற தீர்ப்பின் மீது எங்களுக்கு ஒன்றும் அக்கறை இல்லை” இப்படி ஆவேசமாக கரசேவர்கள் சூழ பத்திரிகையாளர்களிடம் பேசியது விஹெச்பியின் தலைவர் மறைந்த அசோக் சிங்கால். இப்படி அவர் சொன்னது 1992 பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு மறுதினம், அதாவது டிசம்பர் 7 அன்று. இப்போது அவர் உயிரோடு இருந்திருந்தால் தன்னை குற்றத்திலிருந்து விடுதலை செய்துவிட்டார்கள் என்று தெரிந்தால் அவர் என்ன சொல்லியிருப்பார் என்பது நமது யூகமே என்றாலும், “நீதிமன்றம் வழியாக சத்தியமும், நீதியும் நிலைநாட்டப்பட்டது” என்றிருப்பார். ஏனெனில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் இப்படித் தான் சொல்லி வருகிறார்கள்.

இந்தியாவில் வரலாற்றுப் பிழைகள் அதிகம் நிகழ்ந்துள்ளன. அவற்றில் என்றென்றைக்குமாய் அழியாத ஒரு சரித்திர நிகழ்வு பாபர் மசூதி இடிப்பு சம்பவம். அயோத்தியின் பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோயில்கட்ட வேண்டும் என்கிற பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தீவிரம் உச்சகட்டத்தை அடைந்து 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதற்கு பின்னால் இருக்கும் மூளை யாருடையது என்கிற கேள்விக்கான பதில் இன்னும் தேடப்படவில்லையாம்! குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டவர்களும் தற்போது செப்டம்பர் 30 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிறகு யார் தான் இந்த வரலாற்று சம்பவத்துக்கு காரணம்? 28 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகும் சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால் உட்பட 32 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அப்பாவிகள் என்று விடுதலை செய்திருக்கிறது.வழக்கின் நீண்ட நெடிய விசாரணை காலத்தில் ஏற்கனவே 17 பேர் தங்கள் இறப்பின் மூலம் விடுதலையாகிவிட்டிருந்தனர்.

இவர்கள் எல்லாம் இந்த பாபர் மசூதி சம்பவத்துக்கு காரணமானவர்கள் இல்லை என்பது மட்டும் தீர்ப்பு அல்ல, இவர்கள் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க பாடுபட்டார்கள் என்பதும் தீர்ப்பின் பகுதி. ஒரு தீர்ப்பில் குற்றவாளிகளே தியாகிகளாகவும் ஆக்கப்பட்ட அதி வினோதமான வரலாற்று தீர்ப்பாகவும் இது உள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு முன்பே இந்த 32 பேரில் இருவர் அப்பாவிகள் என ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தவர்கள் அவர்களுக்கு ராமஜென்ம பூமி ட்ரஸ்டின் தலைமைப் பொறுப்பை  வழங்கியுள்ளனர். ஒருவர் ட்ரஸ்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மகந்த் நிருத்ய கோபால் தாஸ். மற்றொருவர் ட்ரஸ்டின் பொதுச் செயலாளர் சம்பத் ராய்.

இதற்கு முன்பாக இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றங்கள் குறிப்பிட்டதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் நீதிபதிகள் பி.சி கோஷ் மற்றும் ஆர்எஃப் நாரிமன் இருவரும் இப்படிச் சொன்னார்கள், “இந்த சம்பவம் இந்திய இறையாண்மையை அசைத்துப் பார்த்துவிட்டது” என்றார்கள். நீதிபதி மன்மோகன் சிங் லிபெர்ஹான் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இப்படி சொன்னார், “வாஜ்பேயி, அத்வானி, ஜோஷி போன்றவர்கள் சங்க பரிவாரின் செயற்பாடுகளை அறியாதவர்கள் என்று சொல்லிவிட இயலாது” என்றார்.

ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் சூரியனுக்குக் கீழ் நிகழ்த்திய இந்த அசம்பாவித சம்பவத்தை அப்போதைய ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. அங்கு குழுமியிருந்த பாஜக, விஹெச்பி,ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வீடியோக்களும், புகைப்படங்களும் உடனுக்குடன் பத்திரிகைகளிலும், தொலைகாட்சிகளிலும் வெளிவந்தன. ஆனால் ’’அதில் நம்பகத்தன்மை இருப்பதில்லை’’ என நீதிபதி எஸ்கே. யாதவ் அதை சாட்சியாக ஏற்க மறுத்துள்ளார். இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட செப்டம்பர் 30 நீதிபதியாலும் மறக்கபடாத நாளாக மைந்துவிட்டது. எஸ்கே யாதவ் பணி ஓய்வு பெற்ற நாள் அது!

டிசம்பர் ஆறு இடிப்பு சம்பவத்துக்கு முன்பு அத்வானி நிகழ்த்திய ரத யாத்திரை எதை நோக்கியது என்பதும்,அது சென்ற இடமெல்லாம் எத்தனை வன்முறைகள் நடந்தேறின என்றும் தேசம் முழுமைக்கும் தெரியும்! என்றாலும், அதை சிபிஐ நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. வாரணாசியில் இருந்து அயோத்யாவுக்கு வந்த ரத யாத்திரையின்போது மேள தாள இசையுடன் ஆர்பபரித்திருந்த கூட்டத்திடம் அத்வானி இப்படி சொல்கிறார், “செங்கல்களும் உளிகளும் தான் செயலாற்ற வேண்டுமே தவிர, பக்தி பாடல்கள் அல்ல” என்கிறார். இவையெல்லாம் அப்போதைய பத்திரிகை செய்திகளில் இடம்பெற்றவை. மக்களின் கண் முன் நிகழ்ந்தவை.

இந்த பாபர் மசூதி சம்பவம் வெறும் ’ஒரு கட்டட இடிப்பு நிகழ்வல்ல’. இதன் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மக்கள் கலவரத்தின் போது கொலை செய்யப்பட்டர்கள், வாழ்வாதாரத்தை இழந்தார்கள். சொந்த மண்ணிலிருந்து வெளியேறினார்கள். அன்று தொடங்கிய பெருந்தீ தன் அனலை தணிக்காமல்  இப்போது வரை வைத்திருக்கிறது. இந்தியா நிரந்தமான வடுவைத் தாங்கிக் கொண்டது.

இந்தியா போன்ற மக்களாட்சி தேசத்தில் ஒரு சாமானிய குடிமகனின் கடைசி புகலிடம் நீதிமன்றமாகவே இருக்கிறது. அந்த நீதிமன்றம் தன்னுடைய கடமையை முழுமையாகச் செய்யாமல் கைவிடும்போது சாமானிய மனிதனின் நம்பிக்கைத் தகர்கிறது. நம்பிக்கைத் தகரும்போது ஏற்படக்கூடிய விளைவுகளும் மோசமானையாகவே மாறுகிறது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஒருபுறம் இது “எதிர்பார்க்கப்பட்டத் தீர்ப்பு” என்றும் அதே கட்சிகள் சொல்கின்றன. மேல்முறையீட்டுக்கு கேட்கின்றனர். அனைந்திந்திய இஸ்லாமிய அமைப்புகளும் கூட மேல்முறையீட்டினை ஆதரிக்கிறார்கள் என்பது முரண். இந்தத் தேசம் 28 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதிக்காக அலைந்து கொண்டிருக்கிறது என்பது எத்தனை துயரான நிகழ்வு!

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் 96ல் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாடியவர்கள், பாபர் மசூதியின் நிலம் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையினருக்கே சொந்தம் என நவம்பர் 2019ல் வந்தத் தீர்ப்பில் குதூகலமடைந்தவர்கள், ராமஜென்ம பூமி பூஜையின் போது ‘வரலாற்று சிறப்பு வாய்ந்த’ நிகழ்வு என்று உணர்ச்சிவசப்பட்டவர்கள், இப்போது 32 பேரும் குற்றவாளிகள் அல்ல எனும்போது “நீதிக்கு கிடைத்த மரியாதை” என்று சொன்னவர்கள் எல்லோருமே உதிர்த்த சொல் ‘ஜெய் ஸ்ரீ ராம்”.

ராமரின் பெயரால் இங்கு நடைபெறும் எதுவும் புனிதம் என்பதற்கு பதிலாக அறத்துக்கு எதிரானது என்பதாக மாறிவிட்டது. இந்த அறத்தின் விதிமீறலில் தான் பிரமாண்டமான கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கோயிலை எதன் அடையாளமாக மாற்றுகிறார்கள். வெற்றியின் அடையாளமாக, மதப் பற்றின் அங்கீகாரமாக! ஆனால், உண்மை என்றும் நிலைபெறக்கூடியது. வருங்கால சந்ததிகள் அந்தக் கோயிலைப் பற்றி அறிந்து கொள்ளும்போது இதனால் பலருக்கு ஏற்பட்ட துர்நிகழ்வுகளையும்., துரத்தும் துர்கனவுகளையும் மனிதாபிமானமுள்ளவர்களின் இயலாமையையும் சேர்த்தே அறியும்.

வரலாற்றை மாற்றி எழுத நீதிமன்றங்களால் எப்போதும் முடிந்ததில்லை. வரலாறு பல சமயங்களில் துயரம் மிகுந்தவர்களின் மனதிலிருந்து தலைமுறைகளைக் கடந்து கடத்தப்படுகிறது.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், கட்டப்படப்போகிற ராமர் கோயிலும் இந்த துயரார்ந்த வரலாற்றில் இடம்பிடித்துவிட்டன.

கட்டுரையாளர்: ஜா.தீபா

எழுத்தாளர்,இலக்கியதிறனாய்வாளர், விமர்சகர், குறும்படஇயக்குனர், திரைதுறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயலாற்றி வருபவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time