சர்க்கரை நோயை எளிதாக வெல்லலாம்!

- எம்.மரிய பெல்சின்

நீரிழிவு, என்றழைக்கபடும் சர்க்கரை நோய் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. தொற்றா நோயான இந்நோய் உயிரைப் பறிக்கும்  அளவுக்கு மோசமானதா? அந்த அளவுக்கு சர்க்கரை நோய் கொடியதா?

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் சம்பந்தப்பட்டவரை விட்டு விலகாது என்பதும், இது ஒரு பரம்பரை நோய் என்பதும் உண்மையா? இதுபற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்;

சர்க்கரை வியாதி என்று சொல்வதைவிட அதை ஒரு குறைபாடு என்று சொல்வதே சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். பொதுவாக நம் ஒவ்வொருவரின் உடலிலும் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும், குறைவதும் இயல்பே. உதாரணமாக கர்ப்ப காலங்களில் தாய்மாருக்கும், பிரசவத்தின்போது தாய்க்கு சர்க்கரை அளவில் மாறுதல்கள் ஏற்படலாம். குறிப்பாக இந்த காலகட்டத்தில் புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகம் சுரக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்துமே நம் உடலிலுள்ள கணையம் சுரக்கும் இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யக் கூடியவை என்பதால் அந்தச் சூழலை சமாளிப்பதற்காக இன்சுலின் சற்று அதிகமாகச் சுரப்பது இயல்பு. இதுதான் உடலியக்கத்தின் மிகச் சரியான செயல்பாடாகும்.

கர்ப்பிணிகளில் சிலருக்கு உடல் பருமனாக இருந்தாலோ, பிசிஓடி பிரச்சினை இருந்தாலோ அல்லது அவர்களது குடும்பத்தில் யாருக்கும் ஏற்கெனவே சர்க்கரை பாதிப்பு இருந்தாலோ  போதுமான அளவு இன்சுலின் சுரக்காது. இன்சுலின் சுரக்காத இந்தச்சூழலில் உடனடியாக அதை கர்ப்பகால சர்க்கரை நோய் என்று கூறி அதற்கேற்ற சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆனால், முறையான சிகிச்சை அளிக்காத பட்சத்தில் கர்ப்ப காலத்துக்குப் பிறகு சிலர் நிர்ந்தர சர்க்கரை நோயாளியாக்கப்படுகிறார்கள்.

கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல், ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், முதியோர் மற்றும் உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கும் கூட சில நேரங்களில் இன்சுலின் சுரப்பதில் மாற்றங்கள் நிகழும்போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நோயைக் குணப்படுத்தவும், உடலுக்கு சக்தி கொடுக்கவும் இன்சுலின் தேவைப்படும். ஆனால், சிலர் இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு நிரந்தர சர்க்கரை நோயாளிகளாக்கி விடுகிறார்கள். இன்சுலின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்போது உடனடியாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அதே போல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தாலும் பதறியடித்துக் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. இந்த விஷயத்தில் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். வாழ்நாள் சர்க்கரை நோயாளியாக மாறுவதிலிருந்து உங்களை நீங்களே தடுக்கவேண்டியது அவசியம்.

இது ஒரு புறமிருக்க உணவுமுறை மாற்றங்களால் நம்மில் பலரது உடலியக்கங்களில் மாற்றங்கள் நிகழ்கின்றன. முற்காலங்களில் உள்ளது போன்று இல்லாமல் இப்போது உடலுழைப்பும் குறைந்துவிட்டதால் உண்ட உணவு செரிமானமாகாமல் அவை சர்க்கரை நோய் உருவாக வழிவகுக்கின்றன. அடிப்படையில் உணவுமுறையை ஒழுங்குபடுத்தினாலே சர்க்கரை நோய் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். காலை உணவாக பழைய கஞ்சி சாப்பிட்ட வரைக்கும் யாருக்கும் எந்தவித பிரச்சினையுமில்லை. இட்லி, இடியாப்பத்துக்கு மாறினாலும் கூட, ஆவியில் வெந்த அந்த உணவுகளால் உடல்நலனுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. மேலும் குறிப்பாக தவிடு நீக்கப்படாத பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய உணவுகளை உண்ணும் போது எந்த உடல் நலக்குறைவும், யாருக்கும் வரவில்லை.

ஒவ்வொரு வேளை உணவையும் திட்டமிடப்பட்டு சாப்பிட்ட வரை எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், குறிப்பாக பொருந்தாத உணவுகள் உண்பதை நம் முன்னோர்கள் தவிர்த்தார்கள்.

குடிப்பழக்கம் மற்றும் இரவில் இறைச்சி உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலியக்கத்தில் தடுமாற்றங்கள் ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படும்! இரவில் எடுத்துக் கொள்ளப்படும் இறைச்சி ஜீரணமாக சிரமாகும்!

இன்றைக்கெல்லாம் இரவுநேர உணவகங்கள் அதிகரித்துவிட்டன. காலை மற்றும் மதிய உணவு விடுதிகளைவிட `மிட் நைட் மசாலா’ என்ற பெயரில் நிறைய உணவகங்களைக் காண முடிகிறது. ஊர் உறங்கும் நேரத்தில் மூக்குமுட்ட மதுபானங்களை குடிப்பதும், வயிறு நிறைய இறைச்சியும், உணவையும் சாப்பிடுவதுமாக இருக்கிறார்கள். அதிலும் மிக தாமதமாக செரிமானமாகும் தந்தூரி உணவுகள், கிரில் சிக்கன், பிரைடு ரைஸ் என பாதி வெந்தும், பாதி வேகாத உணவுகளை உட்கொள்வது அதிகரித்துவிட்டது. இதனால் தான் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மையெல்லாம் பதம் பார்க்கின்றன. மிக முக்கியமாக சிறுநீரகச் செயலிழப்பு, ஃபேட்டி லிவர், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் அதிகரிப்பிற்கு இந்த உணவுகளே காரணம்.

சமீபத்தில் 40 வயது ஆண் ஒருவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. குடிப்பழக்கம் இல்லாத அந்த நபர்  கிலோ கணக்கில் மீனை வாங்கி வந்து வீட்டின் ஃப்ரிட்ஜில் அடுக்கிவைத்து அவ்வப்போது சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மீனுக்கு அடுத்தபடியாக அவர் விரும்பி உண்பது மாட்டிறைச்சி. கொழுப்பு அதிகமுள்ள மாட்டிறைச்சி அவருக்குப் பிடித்த உணவுகளுள் ஒன்று. இறைச்சி, மீன் இல்லாத உணவு அவருக்கு பிடிக்காது என்பதால் இவை நிச்சயம் அவர் உணவில் இடம் பிடிக்கும். இன்றைக்கு அவருக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதுடன் சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இறைச்சி உணவுகளையோ மீன் உணவையோ நாம் வேண்டாமென்று சொல்லவில்லை. இரவில் சாப்பிட வேண்டாம் என்று தான் சொல்கிறோம். அதுவும் சாப்பிட்ட அந்த உணவுகள் செரிமானமாகாவிட்டால் என்னாகும்? மூன்றுவேளை உணவென்பது அவசியமே என்றாலும் அவற்றை வகைப்படுத்தி உண்ண வேண்டும். பெரும்பாலும் இரவுநேர உணவு எளிதில் செரிமானமாகும் உணவாக இருப்பது நல்லது.

40, 50 வயதைத் தாண்டினாலே இறைச்சி, மீன் உணவுகளை பகலிலும் குறைத்துக்கொள்வது நல்லது. அப்படியே உண்டாலும் அவை செரிமானமாகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் உணவு உண்டதும் தாம்பூலம் தரித்தல் என்ற பழக்கம் இருந்தது. குறிப்பாக சுப காரியங்களின்போது உணவுக்குப் பிறகு தாம்பூலம் தரிப்பது வழக்கம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிடுவதால் உண்ட உணவு செரிமானமாகும். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கமே அற்றுப்போய்விட்டது. இதனால் நோய்களும் துளிர்விட்டு நம்மை ஆட்டிப்படைக்கின்றன. எனவே, இனியாவது விழித்துக்கொள்வோம்.

பழங்கள் எளிதாக செரிமானமாகும். அவற்றை மற்ற சமைத்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது! அப்படி சாப்பிட்டால் அவை செரிமானமாக நேரமாகும். ஆக, எளிதில் செரிமானமாகும் பழமும், தாமதமாக செரிமானமாகும் வெந்த உணவுகளும் வயிற்றுக்குள் நீயா? நானா? போட்டியை நடத்தும். முடிவில் எந்தவித செயல்பாடும் நடைபெறாமல் உடலில் நச்சுக்கள் சேர்ந்துவிடும். மலச்சிக்கலில் தொடங்கி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் நெல்லிக்காய், நாவல்கொட்டை பொடிகளை மோருடன் கலந்து சாப்பிடுவது, சீந்தில் கொடி சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது, இரவில் திரிபலா சூரணம் சாப்பிடுவதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

அத்துடன் வாழைப்பூ, வாழைத்தண்டு, பிஞ்சு பாகற்காய், பிஞ்சு கத்தரிக்காய், அவரைக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது, பாரம்பரிய அரிசிகளான கறுப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எந்தவித சிரமமுமின்றி வாழலாம். உணவுக் கட்டுப்பாடு என்பதைவிட உணவுமுறைகளிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்ட நாம் மீண்டும் நம் பாரம்பரிய உணவுகளை உண்ணப்பழகினாலே சர்க்கரை நோய் மட்டுமல்ல, வேறு எந்த நோய்களையும் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்;  எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time