ஆதிக்கம்+அடிமைத்தனம்+மூர்க்கத்தனம் = காவல்துறை!

-பீட்டர் துரைராஜ்

காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிர வைக்கும் சம்பவங்களே கதை! காவல்துறையின் மூர்க்கத்தனத்தின் பின்னணி, அதிகாரிகளின் ஈகோ, ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வும் கட்டமைக்கப்படும் நுணுக்கம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடித்த வகையில் இது வரை சொல்லப்படாத கதைக் களமாகும்!

‘டாணா’ என்றால் காவல்நிலையம் என்று  பொருள் . டாணாக்காரன் என்பதை காவல்காரன் என்று சொல்லலாம். விக்ரம் பிரபு காவலர் பயிற்சிக் பள்ளியில் சேர்வதில் கதை தொடங்குகிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் பணிபுரிந்த தமிழ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். சரியான நிகழ்ச்சிகளை, நல்ல வசனங்களை இந்தப் படம் சொல்லுகிறது. இரண்டரை மணிநேரமும் விறுவிறுப்பாகச் செல்கிறது.

வித்தியாசமான கதைக்களன். ஏறக்குறைய படம் முழுவதுமே திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரு காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கிறது. அறிவு என்ற பயிற்சிக் காவலராக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.  அவரோடு மற்றவர்களும் பயிற்சிக்கு வருகிறார்கள்.

கதைத் தொடங்கும்போதே , முதல் விடுதலைப் போரைத் (1857) தொடர்ந்து உருவான காவல் சட்டம் (1861) மூலம் உருவான காவலர் அமைப்பு,  விவசாயிகளை அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் கூறிவிடுகின்றனர். எனவே அதன் கீழ் உருவாக்கப்பட்ட காவல் அமைப்பும் சாராம்சத்தில் பொதுமக்களை அடக்கி ஆள்வதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறிவிடுகின்றனர். அதற்கேற்ற முறையிலேயே இறுதிவரை காட்சி அமைப்புகள் உள்ளன. அதாவது, இந்தியாவை அடிமைத் தளையில் வைத்திருந்த பிரிட்டிஷார் கட்டமைத்த காவல்துறை அமைப்பைத் தான் நாம் இன்னமும் பின்பற்றுகிறோம். சுதந்திர இந்தியாவுக்கான நவீன சமூக சிந்தனையை உள்வாங்காத அமைப்பாகவே காவல்துறையை வைத்திருக்கிறோம் என்பதை படம் அற்புதமாக புரிய வைத்துள்ளது!

பயிற்சி வகுப்பு தொடங்கும் போதே, ”காவலரானால் என்ன செய்வீர்கள்” என்று பயிற்சி கொடுப்பவர் கேட்கிறார்.

”பொதுமக்களை மிரட்டலாம்” என்கிறான் ஒருவன்.

”மாமூல் வாங்கலாம்” என்கிறான் வேறொருவன்.

”ஆர்ப்பாட்டம் செய்பவர்களை அடக்கலாம்” என்கிறான் இன்னொருவன்.

இப்படி ஒவ்வொருவரும் சொல்லும் பதில்கள் மூலம் காவல்துறை மீது பொதுமக்கள் எத்தகைய பிம்பத்தை வைத்து இருக்கிறார்கள் என்பதை அழகாகச் சொல்லுகிறார் இயக்குநர் தமிழ். இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. காவல்துறையில் காவலராக  இருந்தவர். ஜெய்பீம் படத்தில் கொடூரமான இன்ஸ்பெக்டராக நடித்தவர்! இவரால் தமிழ்த்திரை உலகம் பெருமை அடையும்.

இயக்குனர் தமிழ்

அந்தப் பயிற்சிப் பள்ளியில் காவலர்களுக்கு போதுமான எண்ணிக்கையில் கழிவறைகள் இல்லை. கடுமையான பயிற்சிகள் தரப்படுகின்றன. பயிற்சியின் வெம்மை தாங்க முடியாமல் பயிற்சியை விட்டு ஓடி விடுவது நடக்கிறது; தூக்கு மாட்டிக் கொள்வது நடக்கிறது; மாடியிலிருந்து விழுவது நடக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு  உதவி செய்யும் காவல் படைக்கு இவ்வளவு கொடூரமான பயிற்சி அவசியமா என்ற கேள்வி எழுகிறது. நிறைய ஆய்வு செய்து திரைக்கதையை எழுதியுள்ளனர். எந்த காட்சி அமைப்பும் அதீதமாக இல்லை. இயல்பான காட்சியமைப்புகளாக உள்ளன. ஒரு பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அனைத்து விதமான செயல்பாடுகளும்  வருகின்றன.

சண்டைக்கோழி படத்தின் வில்லனாக லால், இதில் பயிற்சி அளிக்கும் காவலராக வருகிறார். அவர் ஒரு குழுவிற்கு பயிற்சியாளர். அவர் பயிற்சி அளிக்கும் குழுதான் ஒவ்வொரு முறையும் சிறந்த பரிசு வாங்குகிறது. தனது மேலாதிக்கத்தை உறுதி செய்வதில், காவலர்களை ‘அய்யா’ என்று சொல்ல வைப்பதை, எதிர்த்து கேள்வி கேட்காமல் இருப்பதை உறுதி செய்வதில் தெளிவாக இருக்கிறார்.மோதல் வருகிறது.

மேலதிகாரியை அடித்ததால் தண்டனைக்குள்ளான பாஸ்கர் இன்னொரு குழுவிற்கு பயிற்சி அளிக்கும் குணச்சித்திரப் பாத்திரம். நேர்மையான காவல் அதிகாரிக்கான பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரும்,போஸ் வெங்கட்டும் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்கள் மூலமாக பயிற்சியின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன. இறுதிவரை ஏதோ ஒரு முரணை முன்வைத்து, ஒன்பது மாத கால பயிற்சியும் நடக்கிறது.

பயிற்சிக் காவலரிடமே கையூட்டு வசூலிப்பது,  அவர்களை எத்தகைய காவலர்களாக உருவாக்கும் ? எதிர்த்து நிற்கிறார்கள். மோதல் வருகிறது. ”உன்னை காவலனாக ஆக்க அனுப்ப மாட்டேன்” என்று வன்மத்தோடு நடக்கிறார்கள்.  இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை !

ஒரு விதத்தில் வித்தியாசமான கதையை எடுத்தமைக்காக பாராட்ட வேண்டும். முழுவதும் பயிற்சிப் பள்ளியிலேயே நடந்தாலும் அதை தொய்வில்லாமல் எடுத்துச் செல்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சலி நாயர், பெயருக்கு வருகிறாள். படத்தின் நீளத்தைச்  சற்று குறைத்திருக்கலாம். ஏறக்குறைய அனைவருமே தனது பொறுப்புணர்ந்து நடித்துள்ளனர்.

கதாநாயக பிம்பம் எங்கும் வரவில்லை. பயிற்சி அளிப்பவர், ஆய்வாளர், உதவி ஆணையாளர், கல்லூரி முதல்வர் என அடுக்குகள் பல இருந்தாலும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களை  அடக்குவது நடைபெறுகிறது. அதனையும் மீறி திமிறல்கள் நடைபெறுகின்றன. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பத்தோடு பார்த்தேன். அனைவருக்கும் பிடித்திருந்தது. காவலராக இருக்கும் ஒவ்வொரு வரும் இதை பார்க்கையில் என்ன நினைப்பார்கள் ! காவல்துறை கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தை சொல்லாமலே புரிய வைத்துள்ளது படம்!

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time