57 வருஷத்திற்கு பிறகு தேடிக் கண்டடைந்த நண்பன்!

-அஜிதகேச கம்பளன்

என்னுடன் படித்த சிறந்த ஒவியரான நண்பன் மெனுவேல் இது நாள் வரை என்ன ஆனான் என்பதே தெரியாமல் கவலையோடு இருந்தேன்! ஆனால், அவன் சற்றே மன நிலை பிறழ்ந்த நிலையில், ஏழ்மையில் வாழ்ந்தாலும், உயிரோடு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதே ஆறுதல் அளித்தது!

நடிகரும், ஓவியக் கலைஞருமான சிவகுமார் கோவை மாவட்டம் சூளுர் அருகேயுள்ள சின்னஞ் சிறு கிராமமான காசிகவுண்டன் புதூரில் பிறந்து வளர்ந்து இன்று நாடறிந்த பிரபலமாக இருந்த போதிலும், இன்று வரை தன் கிராமத்து நண்பர்கள், ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளி நண்பர்கள், ஓவியக் கல்லூரியில் உடன் பயின்றவர்கள், ஆரம்பகால திரையுலக நண்பர்கள் என அத்தனை பேருடனும் இடைவிடாத தொடர்பை கண்ணும் கருத்துமாகப் பேணி வருபவர்!

ஏப்ரல் 10 ஒரு காலை சுற்றெரிக்கும் வெயில் நேரத்தில் ராயப்பேட்டை மருத்துவமனையை ஓட்டியுள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள நெரிசல் மிக்க இடத்திற்கு நண்பனை தேடி சிவகுமார் வந்த போது அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டனர். இருள் சூழ்ந்த மாடிப் பட்டுகளில் ஏறி நண்பன் இருக்கும் இடத்திற்கு வந்து, ”டேய் மானுவல் எப்படிடா இருக்க..” எனக் கேட்டு ஆரத்தழுவிக் கொண்டார்! கூடவே மற்றொரு கல்லூரி நண்பன் சந்திரசேகரையும் அழைத்து வந்திருந்தார்!

மெனுவல், சிவகுமார், சந்திர சேகர்

இவன் 1959 முதல் 1965 வரை சென்னை எழும்பூர் ஓவியக் கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்தவன். கோவையை சேர்ந்த பழனிசாமியான நான், புதுப்பேட்டையில் தங்கி இருந்தேன்!ஆயிரம் விளக்கை சேர்ந்த மானுவல் நடந்தே தான் எழும்பூரில் உள்ள கல்லூரி வருவான். புதுப்பேட்டையில் அவனும், நானும் சேர்ந்து கொள்வோம்! அமைதியானவன். அதிகம் பேச மாட்டான். அவனைப் போல பிரையர் பண்ணமுடியாது! ஆழ்ந்த இறைபக்தி உள்ளவன்! படித்த பிறகு நான் திரையுலகை நோக்கி சென்று எட்டு வருட போராட்டத்திற்கு பிறகு சக்ஸஸ்புல் ஹீரோவானேன்! எல்லா நண்பர்களோடும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்பில் இருந்தாலும் மெனுவல் மட்டும் என்ன ஆனான் எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். எனக்கு மட்டுமல்ல, எங்கள் செட்டில் யாருக்குமே அவனிடம் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவன் குடும்ப வறுமை காரணமாக மன நிலை பிறழ்ந்து வாயில்லா பூச்சியாக விட்டேத்தியாக தனி நபராக ஏழ்மையில் வாழ்ந்து வந்துள்ளான். மிகச் சமீபத்தில் தான் இவனைப் பற்றி தெரிய வந்தது. ஆகவே, அவனுக்கு உதவும் நோக்கத்துடன் பார்க்க வந்தேன். அவனை கடைசி வரை பாதுகாக்கும் பொறுப்பை சிந்து பாஸ்கரிடம் ஒப்படைத்துள்ளேன்”  என்றார்!

தொப்பி போட்ட சிவகுமார்,மஞ்சள் கட்டத்துள் மெனுவல்

மெனுவலுக்கு கடந்த ஆறாண்டுகளாக வேலை தந்து அவர் மனம் விரும்பியபடி ஓவியங்களை வரைந்து கொள்ள தன் அலுவலகத்தில் இடம் தந்து, தினசரி செலவுக்கு பணமும் தந்து வருபவரான சிந்து பாஸ்கரிடம் பேசிய போது, ”உழைத்து சாப்பிட வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஓவியர் இமானுவேல். ஆனால், வேலையின்றி மனம் போன போக்கில் சாலையில் திரிந்து கொண்டிந்தார்! அவரை சிலர் கிண்டலடித்து வம்புக்கு இழுப்பார்கள். அழுது கொண்டே காவல் நிலையம் சென்று புகார் தருவார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, என்னைத் தேடி அலுவலகம் வந்தார். உழைத்து வாழ்வதில் ஆர்வமுள்ள அவருக்கான பணி என்னிடம் இல்லை என்ற போதிலும் மனிதநேய அடிப்படையில் அவருக்கு இருக்கை ஒன்றை ஒதுக்கினோம். தினந்தோறும் மதியம் வருவார். வரைவார். இப்படியே பல ஆண்டுகளாக வந்து போகிறார். தான் விரும்பியதை செய்து கொண்டே இருப்பதில் தான் வாழ்க்கை உயிர்த்திருக்கிறது!

இதோ ஏகப்பட்ட ஆயில் பெயிண்டிங் வரைந்துள்ளார். இதை யாரும் பெரிதாக வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்றாலும், அவரும் வரைவதை நிறுத்தவில்லை. நானும் அவர் வரையத் தடங்கல் செய்வதில்லை! படம் வரைவதற்கு அவர் கேட்பதை வாங்கி தருவேன். தினசரி செலவுக்கு பணம் தருவேன். சாந்தோமில் முகம்மது என்ற மலையாளி ஒருவர் தன் விடுதியில் தங்க இடமும்,ஒரு வேலை உணவும் கட்டணமின்றி தந்து வருகிறார். அதே போல ராயப்பேட்டை சபாரி உணவு விடுதி உரிமையாளரும் தினம் ஒரு வேளை உணவு தருகிறார்.

ஒருநாள் மூத்த பத்திரிகையாளர் ஜனசக்தி இசைக்கும் மணி எனது அலுவலகம் வந்தபோது, அவரை அச்சு அசலாக மானுவல் வரைந்தார். அதை இசைக்கும் மணி தனது வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டார். அதில் ஓவியக் கல்லூரியில் நடிகர் சிவக்குமார் படிக்கும்போது, மானுவலும் படித்ததாக பதிவிட்டார்.

அந்த வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் பெங்களூர் ஐ ஏ எஸ் அதிகாரி கன்னியப்பன் இதைப் படித்துவிட்டு, சிவக்குமார் கல்லூரி நண்பர் சந்திரசேகருக்கு தெரிவித்தார். அவர் நடிகர் சிவகுமாருக்கு தெரிவித்து விட்டு, என்னை தொடர்பு கொண்டார்.

அவர் என்னிடம், ”சிந்து பாஸ்கர் உங்களிடம் இருக்கும் மானுவல் எனக்கும்,சிவக்குமாருக்கும் நண்பர். ஏதோ ஒருவகையில் அவருக்கு நீங்கள் உதவியதற்கு நன்றி..உங்கள் செல்பேசி எண்ணை சிவக்குமார் வாங்கியிருக்கிறார். நாளை உங்களிடம் பேசுவார்” என்றார்.

மறுநாள் சிவக்குமார் என்னை அழைத்து உருக்கமாக பேசினார். ”மன நலம் குன்றிய எனது நண்பனுக்கு உதவிகள் செய்ய விரும்புகிறேன்…அவனை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். மேலும் அவன் இனியாவது நிம்மதியாக படுத்து உறங்க உதவுகிறேன். உங்கள் அலுவலகம் வந்து நண்பனையும், என்னையும் சந்திப்பதாக கூறினார். ஒருநாள் என் செல்பேசியில் மானுவல் அவர்களிடம், ‘ டேய் மானுவல்…நான் பழனிசாமி பேசறேண்டா’ என்று அன்பொழுக பேசினார்!

கண்ணிய நாயகன் சிவக்குமார் ஏற்கெனவே சொன்னபடி நேற்று காலை 11 மணிக்கு எமது அலுவலகம் வந்தார்.

பல ஆண்டுகள் கழித்து ”டேய் மானுவல் எப்படிடா இருக்கே” என்று மகிழ்ச்சியுடன் நுழைந்தார்.

மானுவல் அவர்களை கட்டிப்பிடித்தார்…கன்னத்தை கிள்ளினார். ”கவலைப்படாதே”என்றார். மானுவல் வரைந்த சில ஆயில் பெயிண்ட்- தைலவண்ண ஓவியங்களை நல்ல தொகை கொடுத்து விலைக்கு வாங்கினார்…அந்த தொகையை கொண்டு மானுவலை கவனித்து உதவுமாறு கூறினார். அடுத்து ‘சிந்துபாஸ்கர் குடும்பம் எல்லோரும் வாங்க’ என்று அன்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இத்தனை ஆண்டுகாலமாக மானுவல் அவர்களை ஏளனமாக பார்த்தவர்களையும், எள்ளி நகையாடியவர்களையும், மானுவல் ஒரு அனாதை என்ற கருத்து கொண்டவர்களையும், அதிரவைத்து இருக்கிறது சிவக்குமாரின் வருகை. பல வருடங்கள் கழித்து மானுவல் முகத்திலும் ஒரு தெம்பும், பரவசமும் பற்றி பரவியுள்ளதை பார்க்க முடிகிறது!

அஜிதகேசகம்பளன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time