பைக் ரேசில் சாதிக்கத் துடிக்கும் ஏழை இளைஞன்!

-செழியன் ஜானகிராமன் 

எதை ஒன்றை சாதிக்க வேண்டும் என்றாலும், குடும்ப பின்புலமோ,பொருளாதாரப் பின்புலமோ தேவை என்பது இந்தியாவில் எழுதப்படாத நியதியாக உள்ளது. மிக வசதி படைத்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடிந்த பைக்ரேஸில் ஒரு கூலி தொழிலாளியும் சாதிக்க நினைத்தால் அது சவால் தானே?

சென்னை-மந்தைவெளி  ஏ.எம்.கார்டன் குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அப்பா தையல்காரர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். சிறுவயது முதல் பைக் தான் உயிர். படிப்பு ப்ளஸ் டூ தான்! மெக்கானிக் செட்டில் வேலை. அங்கு வரும் கஸ்டமர் ஒருவர் மூலம் பைக் ரேஸ் பற்றித் தெரிய வந்தது.7 வயதில் ஆரம்பித்த பைக் காதல் தான்  2019ஆம் ஆண்டு இந்திய அளவில் நடக்கும் பைக் ரேஸில் கலந்து கொண்டு  சாம்பியன் ஆகியது. அதற்கு வெங்கடேசன் பெற்ற அவமானக்கள், கற்ற பாடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

திரும்பிய பக்கம் எல்லாம் கிரிக்கெட் ஆடும் இந்த நாட்டில் பைக் ரேஸ் என்பது சாலையில் வேகமாக வண்டியை ஓட்டுவது என்ற அளவிலேயே மக்கள் மத்தியில் தெரிந்து உள்ளதாகக் குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படி கருத்து நிலவுவதால் என்னைப் போன்ற மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து இந்த விளையாட்டிற்குக் கலந்து கொள்வது என்பது மிகவும் சவாலாக உள்ளது. சம்பாத்தியம் எதையும் வீட்டு தரமுடியவில்லை. வீட்டுக்கு பாரமாகத் தான் இருக்கிறேன்’’ என்று சொல்லும் வெங்கடேஷ் இந்தியா-தமிழ்நாடு அளவில் பைக் போட்டிகள் பற்றிக் கூற தொடங்கினார்.

இருங்காட்டு கோட்டை

தமிழ்நாட்டிலிருந்து பைக் ரேஸில் கலந்து கொள்ள, கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இரண்டு இடங்கள் தான் உள்ளன! ஒன்று சென்னை அருகிலுள்ள இருங்காட்டு கோட்டையில் Madras Motor Race Track, இரண்டாவது  கோயம்புத்தூரில் உள்ள Kari Motor Speed Way ஆகும். இதனாலேயே இந்த விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் மிகக் குறைவாக உள்ளனர்.


12 வயசில இருந்து சுமார் ஏழாண்டுகளாக போட்டி நடக்கும் இடங்களுக்கு தவறாமல் சென்று ஆர்வத்துடனும்,ஏக்கத்துடனும் பார்த்தேன். ஒரு கட்டத்தில் நானும் இது போல ஓட்டி சாதனை செய்ய வேண்டும் என்ற வேகம் மனதில் ஏற்பட்டது. னண்பர்கள் உதவியில் 2016ஆம் ஆண்டு பைக் ரேஸ் முறையாக கற்றுக் கொண்டேன்.  பிறகு TVS பயிற்சி பள்ளியில் 2016ஆம் ஆண்டு 7000ரூபாய் கட்டி கற்றுக் கொண்டேன். ட்ராக்கில் கற்றுக் கொள்ள ஒரு நாள் பயிற்சிக்கு  7000 ரூபாய் ஆகும். பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளருக்கு ஒர் நாள் 10000 ரூபாய் கட்டணம். அந்த ஒரே நாளில் பைக் போட்டிகளுக்கான அனைத்தும் கற்றுக் கொண்டால் தான் உண்டு! இன்னும் ஒரு நாள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இன்னும் ஓர் 17,000 ரூபாய் கட்ட வேண்டும். என்னுடைய லெவலுக்கு ஒரு முறை கட்டி சேர்ந்ததே அபூர்வம்!

போட்டியில் கலந்து கொள்ளப் பணம்

பயிற்சி பெற்றதற்கு சான்றிதழும், ரேசில் கந்து கொள்ள லைசென்ஸ்சும் வாங்க வேண்டும்! இரண்டும் முடித்த பிறகுதான் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

இப்படி நடக்கும்  போட்டியில் கலந்து கொள்ளவும் பணம் கட்ட வேண்டும். ஒரு போட்டிக்கு 7,500ரூபாய் கட்டணம் மற்றும் ரூ 4,000 க்கு இன்சூரன்ஸ் எடுத்து இருக்க வேண்டும். மொத்தம் 11500 ரூபாய் கட்டி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படிக் கலந்து சாம்பியன் ஆனால் அறுபது ஆயிரம் ரூபாய் பரிசு கொடுப்பார்கள். இரண்டாவது, மூன்றாவது வருபவர்களுக்கு அதுவும் இல்லை. அப்படித்தான் 2019ஆம் ஆண்டு Stock 165cc போட்டியில் கலந்து கொண்டு  சாம்பியன் பரிசு வென்றேன். பரிசுத் தொகை குறைவு என்றாலும், இந்த விளையாட்டு மீது இருக்கும் அதீத ஆர்வம்தான் என்னை இயங்கவைக்கிறது.


பிறகு TVS Apache RTR 200cc போட்டியிலும் சாம்பியன் ஆனேன். மொத்தம் 10 கேட்டகிரி பந்தயம் உண்டு. இதில் 3 கேட்டகிரியில் கலந்து கொண்டு 2ல் சாம்பியன் ஆகி உள்ளேன். மேற்கொண்டு செல்ல பொருளாதாரம் இடம் தரவில்லை.

பயிற்சிக்குப் பணம் வாங்குவதில்லை

நான் இப்படி சாம்பியன் ஆனதினால் என்னிடம் பைக் ரேஸ் பயிற்சி எடுக்க பல ஏழைப் பசங்க ஆர்வம் காட்டறாங்க! ஒரு நாள் பயிற்சி கட்டணம் 10,000ரூபாய் என்ற நிலை இருப்பதால் என்னிடம் பயிற்சி கேட்டு வரும் புதியவர்களுக்குப் பணம் வாங்காமல் கற்றுக் கொடுக்கிறேன். இதுவரை நிறைய பேருக்குப் பயிற்சி கொடுத்துட்டேன். எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் பணம் வாங்கக் கூடாது என்று செயல்படுகிறேன். காரணம், நான் பட்ட அவமானங்கள் அவங்களுக்கு வரக் கூடாது!

ஒரு முறை சீனியரிடம் ட்ராக்கில் உள்ள C3 வளைவில் எப்படி இயங்க வேண்டும் என்று கேட்டேன். தெரியவில்லை என்றால் ஏன் ரேஸிற்கு வருகிறாய்? இங்கெல்லாம் வராதே என்று சொல்லி கடைசி வரை கற்றே கொடுக்கவில்லை. இப்படித் தொடர் புறக்கணிப்பு சுயமாகத் தேடித் தேடி முட்டி மோதி கற்றுக் கொண்ட அனுபவத்தால் என்னிடம் கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன்.


பைக் 6 லட்சம்! உடை  ஒரு லட்சம்!

பைக் ரேஸிக்கு மிக முக்கியம் வண்டி மற்றும் அதற்கான உடை! இரண்டுமே ரொம்ப காஸ்ட்லி!  என்னிடம் இருப்பது Yamaha  R15V3 165CC  தொடக்க நிலையில் உள்ள பைக். இதுவே ஒரு லட்சத்து எழுபதாயிரம்  ரூபாய் ஆகும். ஆனால் இந்த பைக்கை கொண்டு தொடக்க நிலையில் உள்ள போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

அதற்கு அடுத்த நிலையில் கலந்து கொள்ளத் தேவைப்படும் வண்டியின் விலை 6.5 லட்சம் ஆகும். இவ்வளவு விலை கொடுத்து வாங்க நிச்சயம் வாய்ப்பில்லை! ஆனால், போட்டி நடக்கும் இடத்தில் அந்த நேரம் இந்த வண்டியைக் கொடுப்பார்கள், அப்பொழுது எடுத்து ஓட்ட வேண்டும். அந்த நேரம்தான் நம் கைக்கு புது வண்டி வரும் என்பதால் நிச்சயம் நம்மால் முழு ஆற்றலைச் செலுத்த முடியாது.எனக்கேயான ஒரு பைக் இருந்தால் நிச்சயம் என்னால் வெல்ல முடியும்!

பைக் ரேசிற்கு உடை மிக முக்கியமாகும். புதிய உடை ஒரு லட்சம் மேல் ஆகும். புதியது வாங்க வசதியில்லை என்பதால் செகண்ட்கேண்டாக விற்கும் உடையை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வைத்து உள்ளேன்.

பழைய உடை என்பதால் சில நேரங்களில் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது  கிழிந்து விடுவதுண்டு! அப்படி கிழிந்துவிட்டால் அடுத்தநாள் போட்டியில் கலந்துக்க விட மாட்டார்கள். அன்றே ஒரு தையல்காரரை  தேடி இரவோடு இரவாகத் தைத்து மறுநாள் அணிந்து போட்டியில் கலந்து கொண்ட அனுபவமெல்லாம் உண்டு!  நல்ல ஒரு உடை இருந்து இருந்தால் எந்தவித அலைச்சலும் இல்லாமால் போட்டியில் கவனம் வைக்கலாம்

இவ்வளவு செலவுகள் செய்து கற்றுக் கொள்ளும் நிலையில் பைக் ரேஸ் உள்ளதால் பலர் சோர்வடைந்து இதிலிருந்து வெளியேறி விடுகிறார்கள். ஆனால், நான் மனம் தளராமல் செயல்படுகிறேன்.


நான் ஒரு தினக் கூலி! என்னுடைய சம்பளம் சொற்பம் என்றாலும் அதில்தான் எனக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி கொள்கிறேன். அதனால் இந்த விளையாட்டில் தொடக்க நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல யாரவது தமிழக அரசோ தனி நபரோ ஸ்பான்சர் செய்தால் நிச்சயம் உலக அளவில் நடக்கும் பைக் ரேஸில் கலந்து இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பேன்! உலக சாம்பியன்களான Valentino Rossi, Marc Márquez போன்று நானும் சாம்பியன் ஆவேன் என்று மிகுந்த நம்பிக்கை உள்ளது.

மலேசியாவில் நடைபெறும் போட்டி

அடுத்து மலேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகி உள்ளேன். ஆனால் அதற்கான தகுதியான உடை, பைக் போன்றவை இல்லை. அந்த நேரத்தில் கொடுக்கும் பைக்கை ஓட்ட வேண்டும். அதுவரை அவற்றை நாம் ஓட்டி பழக்கப்படுத்தி இருக்க மாட்டோம். ஆயினும் முழு கவனத்துடன் போட்டியில் கலந்து சாம்பியன் ஆக முடியும்.

இது போல் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளப் பயிற்சி(Practice) மிக முக்கியம் ஆகும். ஆனால் சாலையில் ஓட்டி பயிற்சி எடுக்க முடியாது. அதெற்கென் இருக்கும் ட்ராக்கில் பயிற்சி பெற வேண்டும் என்றால் அரை நாளுக்கு  2,500ரூபாய் பணம் கட்ட வேண்டும். நான்கு நாள் பயிற்சி எடுக்கப்  பத்தாயிரம் ரூபாய் இருந்தால்தான் முடியும். இதெல்லாமே எனக்கு சவாலாகிவிடுகிறது.

பைக் ரேஸ் போன்ற விளையாட்டிற்குத் தமிழக அரசின் கவனம் குறைவாக உள்ளது. இது போன்று
விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க அரசு நிச்சயம்  முன்வர வேண்டும். இதுபோல் இருக்கும் சாதனையர்க்ளை கவனித்து அவர்களுக்குத் தகுந்த உதவி செய்தால் அவர்களால் நிச்சயம் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள். நமக்கு ஒரு விஸ்வநாத் ஆனந்த் போதுமா? வெங்கடேஷ் போன்ற நபர்களும் மேல் நோக்கி வந்தால்தான் பல்துறை விளையாட்டில் தமிழ்நாடு பெருமை அடையும்.

வெங்கடேஷ் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர் அல்லது தமிழக அரசு கவனம் இருந்தால் அடுத்த சில ஆண்டுகளிலேயே உலக சாம்பியன் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவராக இருப்பார்.

நேர்காணல்; செழியன் ஜானகிராமன் 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time