‘இந்து விரோத திமுக ஆட்சி ஒழிக! பிராமண துவேஷ திமுக ஆட்சி ஒழிக!’ என அரசியல் ஆயுதத்தை பாஜகவினர் கையில் எடுத்தனர்! ஆனால், ‘அயோக்கியர்களின் பிடியில் அயோத்தியா மண்டபமா?’ என்பதாக ஜெயலலிதா ஆட்சியில் தான், இது, அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது! நீதிமன்றமும் ஏற்றது! இதன் பின்னணி என்ன?
திமுக அரசுக்கு எதிராக சுமார் ஐம்பது பேர் கூடி அயோத்திய மண்டப வாயிலில் கத்தினார்கள்! பாஜக அண்ணாமலை ஆர்பரித்தார்! பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனோ, ”சென்னையிலேயே இந்த ஒரு பகுதியில் தான் வார்டு கவுன்சிலர் தேர்தலில் பாஜக வென்றுள்ளது! பாஜகவின் வளர்ச்சியை பிடிக்காமல் திமுக அரசு அயோத்திய மண்டபத்தை அற நிலையதுறைக்கு எடுத்துள்ளது” என மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்!
உண்மை நிலை அறியக் களம் இறங்கினோம்!
”இங்கு ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன! ஆகவே, அயோத்தியா மண்டபத்தை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ள வேண்டும்” என இந்த அமைப்பை சார்ந்த சிலர் தான் அற நிலையத்துறைக்கு புகார் மனுக்களை அளித்தனர். அதில் இருவர் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்தனர். அப்படி வழக்கு தொடுத்த ஒரு பிராமணர் இறந்துவிட்டார். மற்றொருவரான ரமணி என்ற முதியவரான வழக்கறிஞர் அசாதாரண மன உறுதியுடன் போராடி வருகிறார். அவர் வழக்கு தொடர்பான விவகாரங்களில் படுபிஸியாக இருந்தார். அதனால், அவர் தரப்பிலானவர்களிடம் பேசினோம்.
சென்னை மேற்கு மாம்பலத்தின் ஆரிய கவுடா சாலையில் ராம்சமாஜ் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்தியா மண்டபம் இயங்கி வருகிறது. 1954ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை ராம சமாஜம் என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பு தன்னை சொசைட்டியாக பதிவு செய்துள்ளது! அதாவது, இது ஒரு ஆன்மீக பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்பு! இங்கு ஆன்மீக சொற்பொழிவுகளும், சாஸ்திரபூர்வமான சடங்குகளும் நிறைய நடந்து கொண்டே இருக்கும்! இதில் ஆரம்பத்தில் பிராமணர்கள் மட்டுமே முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். பிறகு வேறு சில சமூகத்தை சார்ந்தவர்கள் ஒரு சிலரும் வந்தனர்! ஆயினும் மிக சொற்பமே!
1990 கள் வரை பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை! அதன் பிறகு தான் எதற்கெடுத்தாலும் பணம் வசூலிப்பது, கணக்கு வழக்கு இல்லாமல் முறைகேடு செய்வது என இதன் போக்கில் மாற்றங்கள் உருவாயின! அதன் பிறகு இங்கு, ராம் லஷ்மண, சீதை பஞ்சலோக விக்கிரகங்கள் மற்றும் சங்கராச்சாரியார் வைக்கப்பட்டு வழிபாடுகள், அர்ச்சனை, பூஜை புனஸ்காரம் எல்லாம் நடந்தது. பொதுவாக ஆஞ்சனேயர் மீது எல்லோருக்கும் மிக பக்தி உண்டு என்பதால், ஆஞ்சநேயருக்கு கருங்கல் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து ஜெகத்ஜோதியாக வழிபாடுகள் நடந்தன! வடை மாலை சார்த்தல் தொடங்கி அனைத்து விதமான கோயில் வழிபாடுகளும், பண வசூலும் கொடிகட்டி பறந்தன!
இதில் பல லட்சங்களில் வருமானம் கொட்டியதில் நிர்வாகிகளின் போக்கே மாறியது! சட்டப்படி ஒரு சொசைட்டி இது போல செயல்பட அனுமதியில்லை. ஆகவே இது சட்டவிரோதம். அது மட்டுமின்றி, பொருளாதார முறைகேடுகளை யாரும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு சிண்டிகேட் அமைத்து ஒரு குழு உண்டு கொழுத்தது! ஆனால், இது தெய்வத்தின் பெயரால் நடப்பதால் இதன் உறுப்பினர்களில் மனசாட்சியுள்ள சிலர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தோம். அப்படிப்பட்டவாளை மிரட்டவும், ஒடுக்கவும் அன்றைய அதிமுக பிரமுகரான கலைராஜன் என்பவரை உள்ளே அழைத்து வந்தது அந்த கோஷ்டி!
இதனால் மனம் நொந்து போன சிலர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு 2004 ஆம் ஆண்டிலேயே புகார்கள் அனுப்பினோம். அறநிலையத் துறைக்கு தெரிவித்தோம். இதற்கிடையில் அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்தது. கருணாநிதியிடம் புகார்கள் தந்தும் பலனில்லை. ‘எதுக்குடா இந்த பிராமண விரோதம்’ என அவர் ஒதுங்கினாரோ, என்னவோ! அதன் பிறகு 2011 ல் அதிமுக ஆட்சி மீண்டும் வந்தது. தொடர்ந்து தந்த புகார்களின் விளைவாக ஜெயலலிதா அரசு உளவுத் துறை மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது என உறுதிபடுத்திக் கொண்டது! ஆகவே, அற நிலையத்துறை இந்த இடத்தை எடுத்து நிர்வகிக்க ஜெயலலிதா அரசு ஆணையிட்டது. இதனை தொடர்ந்து, நாகா எண் 1947 /2012 31.12.2013 எண் கொண்ட தமிழக அரசு ஆணையின் படி, அயோத்யா மண்டபத்தை 2013 ல் இந்து சமய அறநிலையத் துறை கைப்பற்றியது.
இதனை எதிர்த்து, இராம சமாஜம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர், மாம்பல பகுதியின் அறநிலையத்துறை தக்கார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அப்போது அந்த வழக்கு விசாரணையின் போது, மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் , ஆராதணை செய்து வழிப்பாடு நடந்தது எனவும் உண்டியல் வைத்தும், பல்வேறு வழிமுறைகளிலும் மக்களிடம் காணிக்கை பெறப்பட்டது எனவும், இந்துசமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, TNHRCE ACT எனும் சட்டத்தின் படி, சிலை வைத்து வழிபாடு நடைபெறுவதால் இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆயினும், இந்த நிர்வாகம் இடைகால தடையை உடனே வாங்கிட்டாங்க! அந்த தடையை நீக்கு முன்பே ஜெயலலிதா கைது, விடுதலை, பிறகு தேர்தல் எல்லாம் நடந்து விட்டது. அதைத் தொடந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா உடல் நலன் குன்றி இறந்து விட்டார்! அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ஐந்தாண்டுகளுக்கு முன்பே இதை அற நிலையத் துறை வசப்படுத்தி இருக்கும்! அப்ப, இந்த மாதிரி போராடும் தைரியம் ஒருத்தனுக்கும் வந்திருக்காது!
இடைக்கால தடையை வைத்து தான் இத்தனைக் காலம் மீண்டும் அதே பொருளாதார முறைகேடுகள் தொடர்ந்தன! பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக சுமார் 20 ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் அற நிலையத்துறைக்கு அனுப்பட்டு வந்த நிலையில் இந்த மண்டபம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராமணர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை மார்ச் மாத மத்தியில் பிறப்பித்தது. இதை தினகரன் தவிர்த்த எந்த தமிழ் தினசரி பத்திரிகையும் பிரசுரிக்க கூட இல்லை.
அதில், ”அயோத்யா மண்டபம் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அதில் எந்தவொரு தனியார் அமைப்புகளும் உரிமை கொண்டாட கூடாது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ராம சமாஜம் சார்பில் தொடரப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ”அயோத்யா மண்டபம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது” என்று உத்தரவு பிறப்பித்தார்!
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே அற நிலையத்துறை இந்த மண்டபத்தை கைவசப்படுத்தி இருக்க முடியும். ஆனால், கிட்டதட்ட ஒரு மாதம் இவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் தந்து பார்த்து தான் தற்போது எடுத்துள்ளனர்’’ என்றனர்.
மேலும் நாம் விசாரித்த வகையில் அயோத்தியா மண்டபம் அறநிலையத் துறை வசம் வந்ததற்கு திமுக அரசு எந்த விதத்திலும் பொறுப்பாகாது எனவும், ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் சரி என உறுதிபடுத்தியதை அடுத்தே மண்டபத்தை அரசு கைவசப்படுத்தியது எனவும், இதை அனைத்து பாஜக தலைவர்களும், இந்து ஆதரவாளர்களும் திமுகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக்கப் பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தனர்! ஆனால், இந்த ராமசமாஜம் அமைப்பில் உள்ள 900 பேரில் சுமார் 20 பேர் மட்டும் தான் இந்த நடவடிக்கைக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினர். அவர்களோடு பாஜகவினர் 30 பேர் வந்து நின்றனர். அமைதியாக ஒதுங்கி நிற்பவர்கள், மெளனமாக இருப்பவர்கள் எல்லாம் இந்த நிர்வாகத்தின் தவறுகளுக்கு உடந்தை அல்லது ஆதரவு என தவறாக பொருள் கொள்ள முடியாது என்பதை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்!
உண்மையில் ஸ்டாலின் அரசு இந்துமதம் சார்ந்த விவகாரங்களில் கூடுதல் அக்கறையுடனும், பிராமணர்களிடம் கரிசனத்துடனும் நடக்கிறது என்பது எங்களோட அபிப்ராயம்! இங்குள்ளவாள்ல நிறைய பேரு அவர்கிட்டயும், துர்கா ஸ்டாலினிடமும் உதவி பெற்று இருக்காங்க. பாஜகவினர் தேவையில்லாமல் அரசியல் செய்து இருக்கிற சூமுகச் சூழலை கெடுத்துடக் கூடாது’’ என்றும் சிலர் குறிப்பிட்டனர்.
Also read
”என்ன ஒன்று! இங்க சிலை வழிபாடுகள், கோயில்களைப் போல ஆக்டிவிட்டீஸ் நடக்கிறதை ஜனங்க விரும்பறாங்க. அதை ஏன் திருட்டுத்தனமாக செய்யணும்? செய்துட்டு இல்லவே இல்லை என்று சாதிக்கணும். அதுக்கு இந்து அறநிலையத் துறை கையில் எடுத்தால் ஒரு அங்கீகாரம் வந்துடும். முறையாகவே செய்துட்டு போகலாமே! ஆனால், வழக்கம் போல பணம் சுருட்ட முடியாது. அது தான் பிரச்சினை” என்றனர்!
அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கில் அயோத்தியா மண்டபம் அற நிலையத் துறைக்கு கீழ் கொண்டு வரப்படும் என்ற தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்றும், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் வரும் 21ம் தேதி இறுதி வாதம் நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு என்ன வருகிறது எனப் பார்ப்போம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுதாம்