கவர்னரின் அத்துமீறல்களும், கள்ள மெளனம் சாதிக்கும் ஸ்டாலினும்!

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  நியமனத்திற்கு இத்தனை தடைகளா? ஏற்கனவே 19 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கவர்னரின்  அடாவடித்தனங்களை கள்ள மெளனத்துடன் சகித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

மிக முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழக அரசை தவிப்பிலும், அயர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்!

இந்த மருத்துவ பல்கலை கழகத்துக்கு 10வது துணைவேந்தராக இருந்த டாக்டர் சுதா சேஷய்யனின் பதவி காலம் கடந்த 2021 டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அவரது பதவிக் காலம்  நிறைவடைவதை முன்னிட்டு, அதற்கு முன்னதாகவே புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை தமிழக அரசு நியமித்தது!

அந்த குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் ஒருங்கிணைப்பாளராகவும், மைசூரின்  ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் டாக்டர் பி.சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் எஸ்.தணிகாசலம் ஆகியோரை உறுப்பினர்களாகவும் இடம்பெற்றனர். அந்தக் குழுவானது விண்ணப்பங்களை கேட்டு அறிவித்ததில், 37 பேர் துணை வேந்தர் பொறுப்புக்கு விண்ணப்பித்தனர். அதில், தகுதியான மூன்று நபர்களை தெரிவு செய்து, அது குறித்த பரிந்துரைகளை பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநருக்கு அக்குழு அனுப்பியது. அதை பரிசீலித்து அவர்களில் ஒருவரை புதிய துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார் என்பதே மரபு.

ஆனால், வழக்கம் போல கவர்னர் கடந்த நான்கு மாதங்களாக அந்த மூவரில் இருந்து ஒருவரையும் தேர்ந்தெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டார்! நியாயப்படி புதிய துணைவேந்தரின் நியமனம் 2021 டிசம்பரில் நடந்திருக்க வேண்டும். ஆனால், கனத்த மெளனம் சாதித்தார் கவர்னர்! இதனால், பல்கலைக் கழக செயல்பாடுகளே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஸ்தம்பித்து கிடந்தது. இந்தச் சூழலில் தற்போது முந்தைய துணைவேந்தரான சுதாஷேய்யனுக்கே பதவி நீட்டிப்பு வழங்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளதோடு, புதிய துணைவேந்தர் தேர்வுக்கு புதிய தேர்வு குழுவை நியமிக்கும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது உண்மையில் தமிழக மருத்துவத் துறை வட்டாரத்தில் ஒரு பேரதிர்வை உருவாக்கியுள்ளது. அப்படியானால் தமிழக அரசு நியமித்த தேர்வு குழுவே தகுதி இல்லாததா? அவர்கள் பரிந்துரைத்த மூவருமே தகுதி இல்லாதவர்களா? 37 பேரில் தகுதியானவர் என யாருமே இல்லையா? அல்லது மாநில கவர்னர் விரும்புகிற நபர் இந்த 37 பேரில் யாருமே இல்லையா? என்ற பலவாறான விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன!

இது தமிழக அரசின் மீதான கவர்னரின் அவநம்பிக்கைக்கு மற்றொரு சாட்சியமாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த அரசுக்கு ஒரு பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்கக் கூட துப்பில்லை என கவர்னர் கருதுவது அப்பட்டமாகவே அவர் புதிய தேர்வு குழுவை அமைத்து விண்ணப்பங்கள் வாங்குங்கள் என கேட்பதிலேயே பட்டவர்த்தனமாக விளங்க வருகிறது. இதைவிட ஒரு பெரிய அவமானம் இந்த அரசுக்கு இருக்க முடியுமா? தெரியவில்லை.

டாக்டர். சுதாசேஷய்யன் சென்ற அதிமுக ஆட்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தராக 2018ல் அன்றைய கவர்னரால் நியமிக்கப்பட்டார். உண்மையில், அவரைவிட திறமையானவர்கள் பலர் இருந்தபோதும் சுதாவுக்கு இந்த பதவி தரப்பட்டதற்கு காரணம், அவர் ஜெயலலிதா இறந்த பிறகு அவரது உடலுக்கு எம்பார்மிங் செய்தவர் என்பது மட்டுமல்ல, அதிமுக அரசோடு மிக அணுக்கமாக ஒத்துழைத்து ஆறுமுகசாமி கமிஷனில் வாக்குமூலம் தந்தவர் என்ற அவரது விஸ்வாசம் கருதி வழங்கப்பட்டதே அந்தப் பதவி என பரவலாக விமர்சனம் செய்யப்பட்டவர்.

டாக்டர் சுதா சேஷ்ய்யன் பன்முக ஆற்றல் கொண்டவர். இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு, எழுத்தாளுமை எல்லாம் கொண்டவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், அவர் ஒரு நல்ல நிர்வாகியல்ல, இது அவரோடு வேலை செய்த அனைவருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. காரணம், அவர் பல விவகாரங்களில் தன் கவனத்தை சிதறடிப்பவர். அவர் கம்பராமாயணச் சொற்பொழிவு, மகாபாரத சொற்பொழி, சங்கராச்சாரியார் பெருமைகளை விதந்தோதும் சொற்பொழிவுகளில் காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் பத்தில் ஒரு பங்கு கூட தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் செலுத்துவதில்லை என்பது அவர் சர்வீஸ் ரெக்கார்டில் எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மை! தனக்கு,கீழே உள்ளவர்களின் தலையில் அனைத்தையும் சுமத்தி விட்டு ஹாயாக வலம் வருவது அவருக்கு கைவந்த கலை!

கடந்த மூன்றாண்டுகளில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர் செயல்பாடுகளை மதிப்பிடும் எவருக்கும் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பதை கற்பனை கூட செய்ய முடியாது என உடன் பணியாற்றிவர்களே சொல்கிறார்கள்!

இப்படியான ஒருவருக்கு மீண்டும் ஏன் பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும்?

கவர்னரின் செயல்பாடு குறித்து பிரபல வழக்கறிஞர் விஜயன் கூறியதாவது; கவர்னரின் செயல்பாடு பல வகைகளில் தவறான முன்னுதாரணம் ஆகும். முதலாவதாக இங்கே கவர்னர் இந்த விவகாரத்தில் அரசியல் அமைப்பு கவர்னருக்கு தந்த அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சட்டவிதிமுறைகள்படி தான் நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திற்கான துணைவேந்தரை தேர்ந்தெடுத்தது தமிழக முதல்வரோ, அமைச்சரவையோ அல்ல! சுகாதாரத்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற மூத்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, மருத்துவக் கல்வித் துறையில் பழுத்த அனுபவமிக்க சிண்டிகேட்,செனட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவர் என மூன்று நிபுணத்துவமிக்கவர்கள் சலித்து தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளனர். அதில் இருந்து தகுதியான ஒருவரை தேர்ந்தெடுத்து அறிவிப்பது  பல்கலை வேந்தரின் கடமை!

செக்‌ஷன் 10(4) என்ன சொல்கிறது என்றால், துணைவேந்தரின் பதவி காலம் முடியும் தருவாயில் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழு அமைக்கப்படாமலோ, அவர்கள் மூவரை பரிந்துரை செய்யாமலோ இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே இருப்பவருக்கு பதவி நீட்டிப்பு தரலாம்! அதே சமயம் பரிந்துரை கிடைத்துவிட்டால் அந்த பரிந்துரையில் உள்ள மூவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பது வேந்தரின் கடமையாகிறது. ஆனால், வேந்தர் தன் கடமையை செய்யவில்லை. மேலும், ஒருவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றால், அவர் பதவி காலம் முடிவதற்கு முன்பே அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது எந்த பொறுப்பிலும் இல்லாமல் உள்ளவருக்கு பதவி நீட்டிப்பு என்பது கேலிக்குறியதாகும்! இது சட்டப்படி தவறாகும்.’’ என்றார்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ் நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தானே தவிர கவர்னர் ஆட்சியல்ல! ஒருகால் தேர்வு குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டர்களுள் ஒருவரும் பார்ப்பனராக இல்லாதபட்சத்தில் ஆளுநர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது! இது தமிழக அரசை அவமதிக்கும் செயல்!” என்று கூறியுள்ள வீரமணி, இந்த விவகாரத்தில் இன்றுவரை மெளனம் சாதிக்கும் ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் விதமாக,

”துணைவேந்தரை முடிவு செய்வதில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை என்ற நிலையை சட்ட ரீதியாக உருவாக்கும் முடிவு பற்றி தமிழ்நாடு அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும். கொட்டினால் தான் தேள்-இல்லையெனில், பிள்ளைபூச்சி எனும் எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாதல்லவா..? நமக்கு சுயமரியாதை என்பது முதன்மையாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

துர்திர்ஷ்டவசமாக நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் பல விவகாரங்களில் உரிய முறையில் எதிர்வினை ஆற்றாமல் மெளனித்து இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இது ஏதோ தமிழக முதல்வருக்கும், கவனருக்கும் உள்ள தனிப்பட்ட விவகாரமில்லை. மருத்துவக் கல்வித்துறையை பெரிய அளவில் பாதிக்கும் ஒரு பிரச்சினை! தமிழக அரசின் தன்மானத்தை கேள்விக்குள்ளாக்கும் அணுகுமுறை! இந்த விவகாரத்தில் கவர்னரின் தவறை சுட்டிகாட்டி, தமிழக அரசின் உரிமையை, முதல்வருக்கான ஆளுமையை ஸ்டாலின் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்! இல்லையெனில், என்ன செய்தாலும் பிள்ளைப் பூச்சியாக பொறுத்துக் கொள்ளும் முதல்வர் என்ற புரிதல் கவர்னருக்கு உறுதிப்பட்டுவிட்டால்.., அதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது தமிழக மக்கள் தான்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time