ஆதிவாசிகள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை தோலுரித்துக் காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்! தங்கள் நிலவுரிமையை மீட்டெடுக்க நான்கு ஆதிவாசி இளைஞர்கள் நிகழ்த்திய அதிரடி சாகஸம் தான் இந்தப் படம்! சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜ சம்பவம் தான் தற்போது சினிமாவாகியுள்ளது!
‘ பட’ மலையாளப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. பட என்ற சொல்லுக்கு படை என்பது பொருள். ‘அய்யங்காளி படை’ என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சித்தலைவரை, அவரது அலுவலகத்திலேயே பணயக் கைதியாக்கி வைத்திருக்கிறார்கள். இதுதான் படத்தின் ஒரு வரிக் கதையாகும்!
கதையானது இருபது வருடங்களுக்கு முன்பு,1996 ல் பாலக்காட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கேரளாவில் ஆதிவாசிகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை குறைவு. அவர்கள் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, இசுலாமியர்களோ இல்லை. அவர்களை ஊடகங்களும் கண்டு கொள்வதில்லை. ஆதிவாசிகளின் நிலங்களை மற்றவர்கள் வாங்கவோ, குத்தகைக்கோ, அடமானம் வைக்கவோ கூடாது; அப்படி செய்திருந்தால் அது சட்டவிரோதமாகும் ( கிட்டத்தட்ட பஞ்சமி நிலம் போல). ஆதிவாசிகளின் நிலத்தை மற்றவர்கள் அனுபவித்து வருவதை சட்டபூர்வமாக்கும் வகையில், நியாயமில்லாத ஒரு சட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த இ.கே.நாயனார் முதலமைச்சராக இருந்த காலத்தில் கொண்டுவந்தார்.
ஆதிவாசியென்றால் கேட்க நாதியில்லை என நினைத்திருந்த ஆட்சியாளர்களை கதிகலங்கடிக்க நினைக்கும் நான்கு இளைஞர்கள் இதனை எதிர்த்து 1996 ல் பாலக்காடு மாவட்ட ஆட்சித் தலைவரை பிணையக் கைதியாக ஒன்பது மணி நேரம் பிடித்து வைத்து விடுகிறார்கள்.
கேரள அரசு இயற்றியச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; ஆதிவாசிகள் வசம் இருந்த நிலம் எவ்வளவு என்ற விபரங்களை வெளியிட வேண்டும்; எவ்வளவு ஆதிவாசிகள் நிலத்தை, தனியாரும், மத நிறுவனங்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்ற விவரங்களை வெளியிட வேண்டும்; வனநிலங்கள் எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட்டு, அதில் ஆதிவாசிகள் நிலம் எவ்வளவு என்ற விபரத்தைச் சொல்ல வேண்டும்; ஆதிவாசிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாய் யார், யாருக்கு எவ்வளவு அளிக்கப்பட்டது என்ற விவரத்தைத் தர வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தனர். பரபரப்பாக அப்போது பேசப்பட்ட சம்பவம் இது. இதனை வைத்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பட திரைப் படம் வெளி வந்துள்ளது.
மலைக் கிராமம் ஒன்றிலிருக்கும் பாலு, தன் மனைவி, மகளை, தையல் இயந்திரத்தோடு பேருந்தில் வெளியூருக்கு அனுப்பி வைப்பதில் கதை தொடங்குகிறது. தையல் இயந்திரத்தை ஆட்டோவில் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு வறிய நிலை. பேருந்தில் ஏற்றிவிட்டவுடன், பாலு, தன் பெண் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தைக் கேட்கிறான். இதை அடகு வைத்துப் பணம் வாங்கப் போகிறாயா என்று கேட்கிறாள் அச்சிறுமி. கல்லார் என்ற கிராமத்தில் இருக்கும் பாபு என்ற பாத்திரத்தில் வினாயகன் நடித்து உள்ளார். அற்புதமான நடிப்பு. பாலு எதற்காக தன் குடும்பத்தை தையல் இயந்திரத்தோடு வெளியூருக்கு அனுப்ப வேண்டும் ?
அதே போல மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஜோஜூ ஜார்ஜ் கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகிறார். இவர் ஏற்கனவே ஆசிரியராக பணியாற்றிவர். இவரைப் போலவே வேறு இருவரும், ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள் போல,தோளில் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு அங்கு வந்து ஒன்று சேர்க்கிறார்கள். முதல் நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்திற்கு வரவில்லை.
அதாவது மிக எளிய மனிதர்களான இந்த நால்வரின் நோக்கம் மாவட்ட ஆட்சித்தலைவரை பணயக் கைதியாக பிடித்து வைப்பதன் மூலம் அரசாங்கத்திடம், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற நெருக்கடி கொடுப்பதாகும்!. கமால்.கே.எம். படத்திற்கு வசனம் எழுதி, இயக்கி இருக்கிறார். அற்புதமான திரைக்கதை, இப்படியும் நடக்குமா..? என்ற ஆச்சரியத்தை ஐயமின்றி சாத்தியப்படுத்தி இருக்கிறது திரைப்படம்! அளவான வசனங்கள். கதை இடைவேளை வரை மிக வேகமாகச் செல்கிறது.
தலைமைச் செயலாளராக, பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இடதுசாரி அரசாங்கத்தின் அரசானது, வனவாசிகளை அப்புறப்படுத்த இயற்றிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த, மாவட்ட ஆட்சித் தலைவரை பணயக் கைதியாக பிடித்து வைத்து விடுகின்றனர். அரசாங்கம் இவர்களோடு பேச்சு வார்த்தை நடத்துமா? யாரை வைத்து பேசும்? என்ன பேசும் ?
மாநிலத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்களின் ஆதரவை இழக்கும் செயல் எதையும் செய்ய முடியாது. மாவட்ட ஆட்சித்தலைவரை எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்க வேண்டும்.
பெரிய செலவு ஏதும் இல்லை. அழுத்தமான கதை, படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. காட்சி அமைப்புகள், மனதில் நன்கு பதிகின்றன. அய்யங்காளி படை என்று சொல்லக் கூடிய இந்தச் சிறு குழுவினர் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அய்யன் காளி என்பவர் பட்டியலின மக்களின் உரிமைக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போராடியவர். விடுதலைக்கு முன்பாகவே (1863- 1941) வாழ்ந்த சமூகப் புரட்சியாளர். நம்முடைய பெரியார் போல, கேரளாவின் அனைத்து மக்களுக்குமான ஆதர்சமாக அவர் இன்றும் விளங்குகிறார்.
இவர்கள் காங்கிரசையும் எதிர்க்கிறார்கள். இடதுசாரி அரசாங்கத்தையும் எதிர்க்கிறார்கள். கேரளாவின் மக்கள் தொகையில் ஒரு சதம் உள்ள மலைவாழ் பிரச்சினை என்னவென்பதை உங்கள் அமைப்பு அறியுமா? என்று மாவட்ட ஆட்சித் தலைவரை கேள்வி கேட்கின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவராக அஜய் ஸ்ரீபத் டாங்கே என்பவர் இருக்கிறார். அதாவது சுருக்கமாக A.S.டாங்கே என்று சொல்ல முடியும். மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு நாணயமான ஓர் அதிகாரி. அதனால் என்ன பயன்?, உங்களால் ஆதிவாசிகளுக்கு முழு இழப்பீட்டைத் தர முடிந்ததா ? தனியார் தோட்ட முதலாளிகள் வசமுள்ள நிலத்தை, எடுக்க முடிந்ததா? என்று கேட்கிறார்கள். அர்ஜூன் இராதாகிருஷ்ணன் என்பவர் ஆட்சியராக நன்கு நடித்துள்ளார்.
பணயக் கைதிகளுக்கும் உரிமை உள்ளது என்பதை ஐ.நா. அவை இணக்கவிதிகளைச் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகிறார். அதற்கு முன்னதாகவே வனவாசிகளின் சம்மதம் இன்றி அவர்களை வெளியேற்ற முடியாது என இணக்க விதிகள் உள்ளன. சட்டங்கள் இருந்தன. அவர்களோடு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதா என எதிர்க்கேள்விகளை அவர்கள் கேட்கிறார்கள்.
Also read
மாவட்ட ஆட்சித் தலைவர் மனைவிக்கு யார் தகவல் சொல்லுவார்? இதில் நடித்துள்ள அனைவருமே இயல்பாக நடித்துள்ளனர். படத்திற்கு நான்கு கோடி ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது.
மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுக்கும் யதார்த்தமான படைப்புகளை மக்கள் கைவிடுவதில்லை. போராளிகள் வைக்கும் வலுவான நியாயங்கள் மக்களின் ஆன்மாவை தொடுகிறது. “பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவது வன்முறையின் அழகியல்” என்று திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் கூறுவார். இது சமகால சமூக – அரசியலை பிரதிபலிக்கும், விறுவிறுப்பான திரைப்படம்.
விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
2 Comments