அமெரிக்கக் கனவும், அவசரச் சட்டங்கள் மூன்றும்!

அறச்சலூர் செல்வம்

இந்த அவசர சட்டங்களும் அதிரடிச் சட்டங்களும் எதற்காக?

மத்திய அரசு  வேளாண்மை தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை  பெரும் அமளிக்கிடையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மட்டுமல்ல இதற்கு முன் வந்த  சில சட்டங்களும் வேளாண்மையை மேம்படுத்த , விவசாய வருவாயை இரட்டிப்பாக்க என்ற விளம்பர வார்த்தைகளோடு கொண்டு வரப்பட்டன.

கால்நடை இனப்பெருக்க சட்டம், மின்சார திருத்தச் சட்டம் – கூட்டுறவு சங்கங்களை மேலாண்மை செய்வதற்கான மாற்றங்கள் போன்றவைகளும் இப்படியான அறிவிப்புகளுடன் தான் வந்தன – சில வெகு முன்பாகவே. பெருவாரியான மக்களின் பார்வையை ஈர்க்காமலேயே.

ஒரே வரியில் சொல்வதானால்,இவை இந்தியாவை அமெரிக்காவாக மாற்றும் சட்டங்கள்..!

நம் எல்லோருக்குள்ளும் ஒரு அமெரிக்கக் கனவு புதைந்துள்ளது. அமெரிக்க பளபளப்பு, மினுமினுப்பும் பலரை அதிகம் ஈர்த்துள்ளது.  நம்மை அங்கே வரச் சொல்லி அழைத்துக் கொண்டேயுள்ளது.பல பேருக்கும் அமெரிக்காவை  இங்கே கொண்டு வர வேண்டும் என்ற ஆசையும் அவ்வப்போது வந்து சென்று கொண்டே இருக்கிறது.

அதைத் தான் பாஜக தான் கொண்டுவரும் திட்டங்களால் சாதிக்க நினைக்கிறது!

ஆனால், அமெரிக்கா நம்முடைய கனவிற்கு ஏற்ற நாடாக இருக்கிறதா என்ன?

உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் மக்கள் தொகை 4%. ஆனால் அமெரிக்காவில் கொரானாவால் இறந்தவர்கள் உலகில் கொரானாவால் இறந்தவர்களில் 16% மாகும்.

நான்கில் மூன்று அமெரிக்கர்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படுள்ளனர்.

அங்கு 71% இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்குரிய உடல் தகுதியில் இல்லை என்று ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவின் அறிக்கை சொல்கிறது. அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் பாதி பேருக்கு நீரிழிவு. 2012ல் நடந்த ஒரு ஆய்வு 12% அமெரிக்கர்கள் மட்டுமே சரியான ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்கிறது.

அமெரிக்கர் உண்ணும் மாட்டிறைச்சியில் 80 % வும், பன்றி இறைச்சியில் 60%வும், கோழி இறைச்சியில் 50% நான்கே நான்கு பெரும் நிறுவனங்களிடமிருந்தே பெறுகின்றனர். 4 கோடி ஏக்கர் நிலங்கள் வெறும் 100 பேரிடமே குவிந்துள்ளது.

இப்படியான நிலைக்குக் காரணம் அமெரிக்காவின் கார்ப்பரேட் ஆதரவு விவசாயமும், உணவு முறைகளுமே!

அந்த பணியில் சுதந்திர சந்தையை இங்கே உருவாக்குவதற்கானவைகளாக உள்ளது பாஜக அரசின் சட்டங்கள்! இதுவரையிலான இந்திய சந்தையில் அரசின் கட்டுபாடுகள் விவசாயிகளை, சிறு வணிகர்களை, சிறு தொழில்களை, நுகர்வோரை வணிக ஆதிக்கங்களில் இருந்து காப்பாற்றி வந்தது!அவற்றையெல்லாம் அகற்றி,பெரு நிறுவனங்கள் மட்டுமே பயன்படக் கூடிய சட்டங்களைத் தான் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

நம்ம ஊரில் உள்ள ரேசன் கடைகள் கூட சுதந்திர சந்தைக்கு தடையாக உள்ளவை என்று உலக வர்த்தக கழகமும், அமெரிக்காவும் கூறி வருவதை நாம் அறிவோம்.

இப்போது இந்த சட்டங்களுக்கு வருவோம். உண்மையில் இந்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகவா?

கொஞ்சம் அலசுவோம்.

விவசாயிகள் தங்களின் பொருட்களை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தடைகள் இல்லாமல் செய்கிறதாம் இந்தச் சட்டம்! இப்பவும் தடைகள் இல்லாமல் தானே உள்ளது.பிறகெதற்கு இந்த சட்டம்? நாளை பெரு நிறுவனக்கள் அவ்வாறு செய்யும் போது கேள்வி எழாதிருக்கவே சட்டம் செய்யப்படுகிறது! ஆக,இது பெருவணிகர்களின் வசதிக்கேற்ற வகையில் திருத்தப்பட்டுள்ளது.

அடுத்து இருப்பது அத்தியாவசிய பொருட்கள்  சட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் இனி எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம். தங்களின் உண்மையான வணிகத் தேவைக்களுக்கும்ம் மேலாகவும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பதுக்கி வைத்து விற்பனை செய்ய சட்டரீதியான அனுமதி தரப்பட்டுள்ளது.

அடுத்த சட்டம், ஒப்பந்த பண்ணையம் சட்டம். மத்திய அரசு ஏற்கெனவே ஒரு மாதிரி சட்டத்தை மாநிலங்களுக்கு அனுப்பி, அதை அந்தந்த மாநில அரசுகளை சட்டமாக்கக் கேட்டுக் கொண்டது.இந்தியாவில் பல மாநில அரசுகள் இதை மறுத்துவிட்டன.ஆனால்,தமிழக அரசு ஒப்பந்தப் பண்ணைய சட்டத்தை மத்திய அரசு  சட்டமாக ஆக்குவதற்கு முன்னரே  நிறைவேற்றித் தன் விசுவாசத்தை காட்டியது. இந்த சட்டம் விவசாயிகளை மொத்தமாக பெரு வணிக நிறுவனங்களின் நிரந்தரக் கொத்தடிமைகளாக்கும்.

கால்நடைகள் இனப் பெருக்க சட்டமும் ஒப்பந்தப் பண்ணைய சட்டத்தின் மாதிரி வரைவைப் போலவே நடந்தது.  மாட்டின் இனப்பெருக்கத்திற்கு காளைமாடுகள் தேவையில்லை சினை ஊசிகளே போதும் என்கிறது இந்த சட்டம். காளை மாடுகளை வளர்ப்பதையும் மாடுகள் இயற்கை முறையில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதையும் குற்றச் செயலாக பார்க்கிறது இந்த சட்டம்! அதுவும் இவ்வூசிகள் கிடாரிக் கன்றுகளை மட்டுமே கருவாக்கும் வகையில் விந்துணுக்கள் தெரிவு இருக்கும். இதை ஆங்கிலத்தில் Sex Selection என்பர். அதாவது பிறக்கும் கன்றுகளில் காளைக்கன்றுகள் இருக்காது. பால் உற்பத்தியை பெருக்க வேண்டும், காளைக் கன்றுகள் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுத்துகிறது என்ற வாதங்கள் முன் வைக்கப்படுகிறது.  கால்நடைத் துறையின் சேவைகள் இனி மெல்ல மெல்ல தனியாரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மின்சாரத் திருத்த சட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை இல்லாமல் செய்யும் என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறது. உண்மையில் இது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் இருக்காது. மேலும் மின் உற்பத்தியை தனியாரிடம் விட்டது போலவே விநியோகம், பராமரிப்பு இரண்டையும் தனியாரிடம் விடுவதற்கானது இச்சட்டம். தமிழக அரசு இந்த ஆண்டிற்குள்ளாகவே ஒரு மாவட்டதில் செயல்படுத்துவதாக மத்திய மின் துறை அமைச்சருக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளது. சென்னையின் ஒரு பகுதியில் விநியாகமும் தனியாரிடம் கொடுக்கப்பட உள்ளது.

இவையனைத்தும் இந்திய மற்றும் அன்னிய பெரு வணிக நிறுவனங்களின் நலன்களுக்காக நடத்தப்படுகிறது. சுதந்திர சந்தையின் அடுத்த பக்கம் தான் ஒரே நாடு ஒரே சந்தை.

இந்த அதீத அளவிலான வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டு நிலை அமெரிக்காவின் ஒட்டு மொத்த அரசியலையும் கட்டுப்படுத்தி வருகிறது, அமெரிக்காவின் அரசை மட்டுமல்ல, மற்ற நாடுகளையும் கூட கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவிலும் இப்படி நடக்க வேண்டும் என்பதன் அறிகுறிகளே இந்த சட்டங்கள். அமெரிக்காவில் 60 ஆண்டுளில் 40 இலட்சம் சிறு விவசாயிகளை இல்லாமல் செய்து தற்கொலைக்குத் தள்ளியது அதன் சுதந்திர சந்தை கொள்கை. .  வாஜ்பாய் அவரகள் பிரதமராக இருக்கும் போது  சி.ஐ.ஐ  விவசாய க்கு பல பரிந்துரைகளை வழங்கியது. அந்தப் பரிந்துரைகளின் மூலப் பரிந்துரை, இந்திய விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டுமானால், விவசாயிகளின் எண்ணிக்கையை 20 சதவிகிதத்திற்கு கொண்டு வேண்டும்.  இந்திய சந்தையை ஒரே சந்தையாக மாற்ற வேண்டும் என்றது.அதன்படி, பெரு வணிகர்களின் சந்தைக்காடாக இந்தியாவை மாற்றவே இந்த சட்டங்கள். இப்படி மாற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகள் விவசாயிகளை பாதிப்பதை விட ,  பொது மக்களையே அதிகம் பாதிக்கும்.

அப்படி என்ன நடந்து விட்டது அமெரிக்க மக்களுக்கு சுதந்திரச் சந்தையால்.

விதை உற்பத்தி, விற்பனை, இடு பொருட்கள், எப்படி எதை விவசாயம் செய்வது, எங்கு –எவரிடம் விற்பது, அது என்னவாக மாற்றப்படும், எப்படி மாற்றப்படும், யாரெல்லாம் மாற்றுவர் மக்களிடம் எந்த விதத்தில் செல்லும், இவைகளும் இன்னும் பலவும் பெரு நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இவைகள் மட்டுமல்ல அவர்களின் உணவுப் பண்பாடு, உடை பண்பாடு என எல்லாவற்றையும் இன்று பெரு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. பல மாநிலங்களில் வீட்டுக் காய்கறித் தோட்டங்கள் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது . வீடுகளின் புழக்கடையில் கோழி, முயல்கள் வளர்ப்பது சட்ட விரோதமாக உள்ளது பல மாநிலங்களில்.  இதன் காரணமாக அமெரிக்கர்களின் உணவு வணிக நிறுவனங்களின் கையில். அதன் விளைவு கட்டுரையின் ஆரம்பத்தில் கண்ட உண்மை நிலைகள்.

விதை முதல் உணவு வரை வணிக நிறுவனங்களின் பிடியில்அமெரிக்கா உள்ளது. இந்த நிலையை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவே இந்தச் சட்டங்கள். இது விவசாயிகளை பாதிப்பதை விட பல மடங்கு எல்லா மக்களையும் பாதிக்கும். எதிர்காலத் தலைமுறைகளையும் பாதிக்கும்.

இந்த சுதந்திர ஒரே சந்தையைக் கொண்டுள்ள, நம் கனவு தேசமான அமெரிக்காவில் நடப்பது என்ன?

அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனையும் புழு – இது நம்ம ஊர் பழமொழி.

என்பதை இந்தப் பக்கங்களுக்குச் சென்று நீங்கள் அறியலாம்!

handful of companies control almost A everything we buy …………..    (www.businessinsider.in)

Giant food corporations are controlling US-food supply (https://organic-market.info)

The United States has an Epidemic of Processed Food — and it’s Killing Us (https://blog.usejournal.com)

The US food system is killing Americans   https://edition.cnn.com

Why 80% Of Food We Are Eating Is Killing Us   (https://www.gtclife.com/blogs)

 

கட்டுரையாளர்;அறச்சலூர் செல்வம்

தமிழகத்தின் இயற்கை வேளாண்மை முன்னோடி! விவசாயப் போராளி! நம்மாழ்வாருடன் நீண்ட காலம் பயணித்தவர்.எழுத்தளர்,பேச்சாளர்,செயல்பாட்டாளர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time