இப்படியும்  சர்க்கரை நோயை சுலபமாக வெல்லலாம்!

- எம்.மரிய பெல்சின்

சங்கடப்படுத்தும் அளவுக்கு சர்க்கரை நோய் தீவிரமடைய தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை என பல அடிப்படை காரணங்கள் உள்ளன! இது வந்து விட்டால் வாழ்நாள் சர்க்கரை நோயாளியாகி விடுகிறார்கள். ஆனால், நெல்லிக்காய், நாவல்கொட்டை, திரிபலா… சூத்திரத்தை தெரிந்து கொண்டால் தூள் கிளப்பலாம்!

சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டாலும் வெவ்வேறுவிதமான பாதிப்புகள் எப்போது வரும் என்று கணிக்கமுடியாத நிலையில் நீரிழிவாளர்களின் வாழ்க்கைப் பாதை சென்று கொண்டிருக்கிறது. சர்க்கரை நோய்க்கு சரியான மருந்து கிடைக்காதா என்று மக்கள் அலைமோதிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கூடவே,  ஃலைப் ஸ்டைல் என்னும் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றிப்பாருங்கள்; நிச்சயம் நல்லது நடக்கும். இன்னும் சொல்லப் போனால், மீண்டும் நமது முன்னோர் வாழ்ந்துவந்த பாரம்பரிய வாழ்க்கைமுறையை வாழ்ந்து பாருங்கள். அடிப்படையில் நாம் செய்யும் தவறுகளை சரிசெய்தாலே நிச்சயம் மீண்டெழலாம், சர்க்கரை நோயை  விரட்டி அடிக்கலாம்.

நம் நாவில் சுரக்கும் உமிழ் நீர் ஒரு அருமருந்து என்பதை நினைவில் கொள்வோம். உமிழ்நீரானது உணவை நிதானமாக அனுபவித்து உண்ணும் போது தானாகவே சுரக்கும். இன்றைய அவசர உலகில் உமிழ்நீரை சுரக்கவைத்து உண்பதற்கு நேரமில்லாமல், வேகவேகமாக உணவை விழுங்குகின்றனர் மக்கள்! உணவுடன் கலக்கும் எச்சில் எனப்படும் உமிழ்நீரானது உணவை பற்களின்மூலம் மிக எளிதாக அரைத்துக் கூழாக்க உதவுவதுடன் செரிமானத்துக்கு ஏற்றதாக மாற்றிவிடும்.

உமிழ்நீர் கலக்காத உணவு வயிற்றுக்குள் சென்றால் இன்சுலின் சுரப்பு சரியாக நடக்காது. இதனால், உணவிலுள்ள குளுக்கோஸை கிளைக்கோசனாக மாற்றும் செயல்பாடு நடக்காமல் அது சர்க்கரையாகவே ரத்தத்தில் தங்கி நாளடைவில் சர்க்கரை நோயை ஏற்படுத்தி விடுகிறது. நம் வாயில் ஊறும் உமிழ்நீரானது சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கும் பண்புகள் இருப்பதுடன் வேறு பல நோய்களையும் வராமல் தடுக்கக்கூடியது.

ஆற அமர்ந்து தரையில் உட்கார்ந்து சம்மணம் போட்டு உணவை மென்று சாப்பிடும் பழக்கம் இன்றைக்கு குறைந்து விட்டது. மாறாக, டைனிங் டேபிளில் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து உண்ணும் பழக்கத்தை பார்க்கமுடிகிறது. இன்னும் சிலர் நின்றுகொண்டு அவசர அவசரமாக சாப்பிடுகிறார்கள். இவையெல்லாம்கூட சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணங்களாகின்றன. எனவே, நமது பாரம்பரிய வழிமரபின்படி உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள். சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை அல்லது வேப்பிலைக் கொழுந்தினை வெறுமனே மென்று சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை குறையும். கட்டுக்கடங்காத சர்க்கரை நோயாளிகள் இதை ஒரு மண்டலமாவது (48 நாள்) தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும். இப்படி சாப்பிட பிடிக்கவில்லை என்றால் ஏழு வேப்பிலைகளை இரண்டு டம்ளர் நீர் சேர்த்து பாத்திரத்தில் ஊற்றி அது பாதியாக வற்றும்வரை நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். சூடு ஆறியதும் வடிகட்டி குளிரவைத்து காலை, மதியம், மாலை என குடித்து வந்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வேப்பிலையை அரைத்து சாறாக்கியும் குடிக்கலாம். இரண்டு டீஸ்பூன் வேப்பிலைச் சாறுடன் நான்கு டீஸ்பூன் கேரட் சாறு சேர்த்துக் குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயின் அபாயம் குறையும். வேப்பிலைக் கொழுந்துடன் மா இலைக்கொழுந்து, மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்டு மோர் அல்லது வெந்நீர் குடித்து வந்தால்  சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இதேபோல் வேப்பம்பூவும்கூட சர்க்கரை நோயாளிகள் மட்டுமன்றி அனைவருக்குமே நல்லது. சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்துத் தொங்கும்; அதில் துவையல் செய்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு உணவாக இருக்கும்.

சீஷன் நேரங்களில் பசுமையாக பறித்து பயன்படுத்தலாம். மற்ற காலங்களில் சேகரித்து காய வைத்த வேப்பம்பூவை நெய் விட்டு வதக்கி உப்பு, சுட்ட பழம்புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் சுவையான வேப்பம்பூ துவையல் தயாராகிவிடும். இதேபோல் வேப்பம்பூவில் ரசம் செய்து அருந்துவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகு ரசம் செய்வதுபோலச் செய்து அடுப்பிலிருந்து இறக்கிய ரசத்தில் வேப்பம்பூவை வறுத்துப் பொடியாக்கி கலந்தால் சுவையான வேப்பம்பூ ரசம் கிடைக்கும். இதை சூடான சாதத்தில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் எட்டிப் பார்க்காது. இங்கே நாம் கசப்பு நிறைந்த வேப்பிலை பற்றி சொன்னதைப் பார்த்து இங்கே சொன்ன எல்லாவற்றையும் தினமும் செய்தால்தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருமா? என்று சிலர் கேட்கலாம். தினமும் தொடர்ந்து செய்யத் தேவையில்லை. அவ்வப்போது செய்தால்போதும்; நோயின் தீவிரத்தைப் பொறுத்து நாட்களை அதிகரிக்கலாம்.

சீந்தில் கொடியும் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு மருந்து. இரண்டு, மூன்று சீந்தில் இலைகள் அல்லது சிறு துண்டு கொடியை பசுமையாக பறித்துவந்து அதனுடன் சிறிது மிளகு, நீர் சேர்த்து கொதிக்கவைத்து அருந்தலாம்.

இதேபோல் ஒரு நாட்டு நெல்லிக்காயுடன் இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்த சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் அருந்திவந்தால் இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டவர்கள்கூட நிறுத்தி விடுமளவுக்கு நல்ல மாற்றம் நிகழும். இந்த நெல்லிக்காய், பாகற்காய் கலவை ஜூஸை தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி விட்டு அதன் பிறகு அவ்வப்போது குடித்து வந்தால் போதும். மேலும், நெல்லிக்காய் துவையல், பாகற்காய் பொரியல் என வாரத்தில் ஒருநாள் சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்.

வெங்காயம்… குறிப்பாக சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் சர்க்கரை நோயாளிகள் உள்பட அனைவரும் அவசியம் சாப்பிடக்கூடிய ஒன்று. கார்போஹைட்ரேட் குறைந்த அளவு உள்ள இந்த சின்ன வெங்காயம் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. மதிய உணவின்போது பச்சையாக சேர்த்துக்கொள்ளலாம் அல்லது லேசாக எண்ணெய்விட்டு வதக்கிச் சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்துடன் எலுமிச்சைச் சாறு, மிளகு அல்லது பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மதிய உணவுடன் இணை உணவாக சேர்த்துச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகளை மிக தாமதமாக உடைத்து செரிமானத்தைத் தூண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் ஒன்றான மலச்சிக்கலைப் போக்கவும் உதவும்.

மதிய உணவின்போது பட்டை தீட்டிய வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்குப் பதில் நம் முன்னோர் சாப்பிட்ட தவிடு நீக்காத அரிசி வாங்கி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த பாரம்பரிய அரிசிகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும். கறுப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுவது, கருங்குறுவை,மாப்பிள்ளை சம்பா போன்ற அரிசிகளில் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற பலகாரங்கள் செய்து சாப்பிடுவது நல்லது. பிஞ்சு கத்தரிக்காய், பிஞ்சு அவரைக்காய், பாகற்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவைக்காய் மற்றும் கசப்பு, துவர்ப்பு நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் இறைச்சி உணவுகள் உண்பதை கூடியமட்டும்  தவிர்ப்பது நல்லது.  சாப்பிட்ட பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். சமைத்த உணவுகளுடன் இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து, சர்க்கரை நோயாளிகள் பழ உணவுகளை காலையில் தனி உணவாக உட்கொண்டு வந்தால் மிகவும் சிறப்பு.

முற்பகல் 11 மணி அளவில் டீ, காபி குடிக்கும் பழக்கத்திற்கு மாறாக, சர்க்கரை நோயாளிகள் மோர் அருந்தும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. நெல்லிக்காய் பொடி, நாவல்கொட்டை பொடி தலா அரை டீஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து 11 மணி அளவில் அருந்துவது சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும். நாவல் பழம் சாப்பிடுவதும் நல்லதே! இதேபோல் மாலைவேளையில் டீ குடிப்பதற்குப் பதில் ஆவாரம்பூ டீ, சுக்கு மல்லி வெந்நீர் அருந்துவது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்குமுன் கடுக்காய் பொடி அல்லது திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அருந்துவது நல்லது. இவை அல்லாமல் எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

விருந்துகளில் பங்கேற்று மூக்குமுட்ட சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. என்றைக்கோ ஒருநாள் சாப்பிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, பலர் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாது. முக்கிய பண்டிகை நாட்களில் மட்டுமே கறி விருந்து நடைபெற்று வந்த அந்தக் காலத்தில் நோய்கள் அதிகமில்லை. அதேபோல் இட்லி, தோசை உள்ளிட்ட பலகாரங்களைக்கூட விசேஷ நாட்களில் மட்டுமே சாப்பிட்டுவந்த நாம் இன்றைக்கு அன்றாட உணவுகளாக்கி விட்டோம். போதாக் குறைக்கு அந்நிய வரவுகளான மைதாவில் தயாரான பரோட்டா, நாண், பீட்சா, சமோசா, பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி அயிட்டங்கள் போன்ற சாப்பிடக் கூடாதவற்றை அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆகவே, உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் சர்க்கரை நோயை எளிதாக வெல்லலாம்.

கட்டுரையாளர்;  எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time