குட்டக் குட்ட குனியும் ஸ்டாலின்! கும்மாளத்தில் பாஜக!

-சாவித்திரி கண்ணன்

பாஜக தலைமையின் அம்பு தான் கவர்னர். போராட்ட உணர்வும், அஞ்சாமையும் இருந்தால் மட்டுமே பாஜகவின் பாஸிச அரசியலை எதிர் கொள்ள முடியும். இதே பாஜக கவர்னர்கள் மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும்,டெல்லியிலும் எப்படி தள்ளாடுகிறார்கள் என ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் ஒரு விஷயத்தை நன்கு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்பது சுயேட்சையாக செயல்பட முடியாத ஒரு அமைப்பு! அதன் ஒவ்வொரு நகர்வையும், செயல்பாட்டையும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தான் தீர்மானிக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி தமிழக அரசின் 18 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். தமிழக அரசு நீட் ஒன்றை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. கவர்னரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றை பற்றியும், அதனால் தமிழக மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளை பற்றியும் முதல்வரும் அந்தந்த துறை அமைச்சர்களும் மக்களிடையே சொல்ல வேண்டும். இதுவே இங்கு இன்னும் நடக்கவில்லை.

மாநில மாணவர்களின் உயர் கல்வி தொடர்பாக  சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இங்கே ஒரு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதற்கு கூட கவர்னர் அனுமதி தேவை!

மாநிலத்தின் எந்த ஒரு பல்கலைக் கழகத்தையும் கவர்னர் நினைத்தால் ஸ்தம்பிக்க வைக்கலாம்!

மாநில அரசின் அரசு அலுவலர் தேர்வில் தமிழையும் ஒரு பாடதிட்டமாக்க வேண்டுமென்றால் கூட, அவர் இசைவு தந்தால் தான் நடக்கும்!

சித்த மருத்துவத்திற்கு பல்கலைக் கழகம் தேவையா? ம்கூம் கூடாது!

நீட் தேர்வு வேண்டாம் என்று எல்லா கட்சிகளும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள் எதுவும் நடக்காது!

இதெல்லாமே ஏதோ நாம் காலனியாதிக்கத்தின் கீழ் இருப்பது போன்ற நிலைமையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாக இது போன்ற ஒரு சிந்தனை நமக்கு வந்ததில்லை! ஆனால், பாஜகவின் கவர்னர்கள் இந்தியா ஒரு குடியரசல்ல, மாநிலங்கள் மத்திய அரசின் அடிமை பிரதேசங்கள் என சொல்வது போன்று உள்ளது!

பாருங்கள், மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள். ஆனால், மாநிலத்திற்காக அனுப்பட்ட கவர்னர் 167 ஏக்கரில் அமைந்த மிகப் பெரிய நிலப்பரப்பில் காடுகளுக்குள் கட்டி எழுப்பட்ட ஆடம்பர மாளிகையில் வசிக்கிறார். கிட்டதட்ட ராஜாவை போல சொகுசு வாழ்க்கை! சென்னையிலும், உதகையிலுமாக இரு மாளிகைகள்! ஏகப்பட்ட சிப்பந்திகள்! ஆடம்பர வாழ்க்கை! இவர்களின் அத்தனை செலவுகளும் மாநில மக்களின் வரியில் இருந்து கோடிக்கணக்கில் கொடுக்கப்படுகிறது! மாநில கவர்னர்களின் வாழ்க்கை பற்றி

காலனி ஆதிக்கத்தின் மறுவடிவமா கவர்னர் ஆர்.என்.ரவி?

என ஏற்கனவே அறத்தில் எழுதப்பட்டது!

டெல்லியில் அத்துமீறிய கவர்னரை எதிர்த்து வீதியில் இறங்கி போராடி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார் அரவிந்த் கேஜ்ரிவால்! ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று தரும் மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுத்ததால் கவர்னர் மாளிகையிலேயே இரவு முழுவது தங்கி மக்களிடம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். இப்படியாகத் தான் அரவிந்த் கேஜ்ரிவால் கவர்னரை வழிக்கு கொண்டு வந்தார். எந்த மசோதாவை தடுத்தாலும், அதில் மக்களுக்கு ஏற்படும் இழப்பை வெளிப்படுத்தி, பல்முனை தாக்குதல் தொடுத்தார் கேஜ்ரிவால்!

இங்கே 18 மசோதாக்களை கவர்னர் தடுத்து நிறுத்தி உள்ளார். ‘அவை என்னென்ன? அவற்றால் தமிழகத்திற்கு உண்டாகும் இழப்புகள் என்ன?’என்பதை திமுக அரசு விவாத பொருளாக்கி இருக்க வேண்டும்.

தமிழக கவர்னரை போலத் தான் மேற்குவங்க கவர்னர் மம்தாவிடம் அழிச்சாட்டியம் காட்டி வருகிறார். ஆனால், அப்படி அவர் காட்டும் ஒவ்வொரு அதிகார தோரணைக்கும் தக்க பதிலடியை மம்தா அரசு திருப்பி தந்து கொண்டிருக்கிறது!

மேற்கு வங்க அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு கவர்னர்  ஜக்தீப் தன்கர் கையெழுத்திட்டு, ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து கோப்புகளை நிலுவையில் வைத்தார். இது தொடர்பாக பிரதமருக்கு தொடர்ந்து நான்கு முறை புகார் கடிதம் எழுதி, அகில இந்திய அளவில் அம்பலப் படுத்தி விவாதமாக்கினார் மம்தா! ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கொத்தடிமை போல நடத்துவதா?” என்ற போது, அந்தக் கோபம் மக்களிடம் கவ்ர்னர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. அடுத்த கட்டமாக கவர்னரை தன் டுவிட்டர் கணக்கில் இருந்தே முடக்கிவிட்டார் மம்தா!

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் தொடங்கி காவல்துறை தலைவர் வரை கவர்னர் எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.முதல்வர் கட்டளைகளைகளுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்கள்! கவர்னர் அங்கு ஒரு செல்லாக்காசாக்கப்பட்டுவிட்டார்! கிட்டதட்ட அனாதை தான்! அப்படி ஒரு டெரரான சூழலை மம்தா கட்டமைக்காவிட்டால் என்றோ, அவரை தின்று செரித்திருக்கும் பாஜக!

அதே பாணியைத் தான் தற்போது தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் பின்பற்றுகிறார். தமிழிசை தண்ணி குடித்துக் கொண்டு இருக்கிறார். ”நாங்க எவ்வளவோ மரியாதை தந்து பார்த்தோம். அதை காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லை. இது எங்க ராஜ்ஜியம். ‘நாங்களா பார்த்து உங்கள மதிச்சா தான் உண்டு. இல்லாவிட்டால் இங்கே நீ செல்லாக்காசு” என்பதை தமிழிசைக்கு நன்கு உணர்த்தி வருகிறார் சந்திரசேகரராவ். ஏனென்றால், மம்தாவும் சரி, சந்திரசேகரராவும் சரி இயற்கையிலேயே போராட்ட குணம் உள்ளவர்கள். பல வருட இடையறாத போராட்டத்திற்கு பிறகு சந்திர சேகரராவ் வென்றெடுத்ததே தெலுங்கானா!

தமிழிசை எந்த ஒரு மாவட்டத்திற்கு சென்றாலும், அவரை வரவேற்க மாநில ஆட்சியரும், எஸ்.பியும் போவதில்லை! அவராக அனாதையாக போய் வந்து கொண்டிருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டது. முன்பு போல தங்கள் விழாக்களுக்கு எந்த ஒரு அமைப்பும் கவர்னரை ‘இன்வைட்’ பண்ணுவதில்லை. அப்படி கவர்னரை அழைக்கும் கல்லூரியோ, பல்கலைக் கழகமோ அல்லது தனியார் நிறுவனமோ பிறகு மாநில அரசின் கோபத்திற்கு தப்ப முடியாது. இது ஏதோ மாநில அரசுக்கும் அல்லது முதல்வருக்கும் கவர்னருக்குமான தனிப்பட்ட பிரச்சினையல்ல. தெலுங்கானாவின் தன்மானப் பிரச்சினை.

எங்கே ஆரம்பித்தது பிரச்சினை?

தெலுங்கானாவின் சட்ட மேலவைக்கு கெளசிக் ரெட்டியை மாநில அரசு பரிந்துரைகிறது. கவர்னர் அதை அங்கீகரிக்கவில்லை. ”அப்படியா? சரி இனிமே கவர்னரை அழைக்காமலே சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்திக் காட்டுகிறேன்” என சந்திரசேகரராவ் நடத்திவிட்டார்.

”ஐயோ என்னால் மாநில அரசின் ஒராண்டு செயல்பாடுகளை விவாதிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டதே..இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என கதறினார் தமிழிசை!. உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்த்து புகார் கூறினார். ஒன்றும் நடக்கவில்லை. அதன் பிறகு கவர்னர் பயணம் செல்வதற்கு கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்டது. கவர்னர் காரிலோ, ரயிலிலோ போய்க் கொள்ளட்டும் என்றார் சந்திரசேகரராவ்! தமிழிசை கதிகலங்கி போய்விட்டார். ரயிலில் தான் போனார்.”என்னை தெலுங்கானா கவர்னரில் இருந்து விடுவிக்க வேண்டும்” என அவர் மேலிடத்தை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது!

மாநில மக்களின் நலனுக்கு எதிராக எங்கிருந்தோ வரக் கூடிய ஒரு கவர்னர் அதிகாரம் செய்வார் என்றால், அப்படி அவர் செயல்படுவதற்கான அரசியல் சட்டத்தை திருத்தி மாற்றி அமைக்க வேண்டும். காலனி ஆதிக்கத்தின் போது பிரிட்டிஷ் கவர்னர்களுக்கு இருந்த அதிகாரம், சுதந்திர இந்தியாவில் தொடர்கிறது என்றால், வெள்ளைக்காரன் மாறியுள்ளான். அந்த இடத்திற்கு இந்திக்காரன் வந்துள்ளான் என்பது தான் மக்களின் புரிதலாகிவிடும்.

தமிழக கவர்னர் விஷயத்திற்கு வருவோம். இந்த மனிதரை அனைத்து கட்சிகளும் ஒன்றுப்பட்டு அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டும்! அம்பிற்கு ஏற்படுகின்ற அவமானம் அதை எய்தவன் உள்ளத்தில் கலக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும்.

அதற்கேற்ப ஆண்மை திறத்துடன் ஸ்டாலின் வியூகம் வகுக்க வேண்டும். மேற்கு வங்கத்தையும், தெலுங்கானாவையும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். தமிழகத்தில் கவர்னரின் கால் நக்கியாக யார் இருந்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

பாஜக தான் இந்தியாவை ஆட்சி செய்கிறது! அதே போல எல்லா மாநிலங்களிலும் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என அந்த கட்சி நினைக்கிறது! அதற்காக எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எல்லா வகைகளிலும் இன்னல்கள் தருகிறது. எதிர்கட்சிகளை பகை கட்சியாக பார்க்கும் பாசிச அரசியல் கலாச்சாரத்தை பரப்புகிறது.

தெலுங்கானாவில் கண்டபடி பேசிய பாஜவினருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் சந்திரசேகரராவ்! ”உளறலைத் தவிருங்கள். எங்களைப் பற்றி தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்தால் மாநில பாஜக தலைவர்கள் நாக்கை அறுப்போம். நாய்களைக் குரைக்க விடுவது நல்லது என்று நினைத்து இதுவரை அமைதியாக இருந்தோம். ஆனால், இனி அமைதி காக்க மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசிய பிறகு தான் வழிக்கு வந்தனர்.

அண்ணாமலை இங்கே தொடர்ந்து அத்துமீறி பேசியவண்ணம் உள்ளார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் குறைந்தது இருபத்தி ஐந்து தொகுதிகளை பாஜக வெல்லுமாம்! பாஜக எம்.பிக்கள் வந்தால் தான் தமிழகத்திற்கு நல்ல மக்கள் நலதிட்டங்கள் கிடைக்குமாம்! வேறு எந்த கட்சி எம்பிக்களாலும் எதுவும் நடக்காதாம்! அப்படியானால் என்ன பொருள்? பாஜக அல்லாத எந்த எம்.பியின் குரலுக்கும் பாஜக அரசு செவி சாய்க்காது. எங்களுக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர உங்களுக்கு வழியில்லை.

இது மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை மட்டுமல்ல, அதிமுக உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து விடுக்கப்படும் எச்சரிக்கை தான்! அதிமுகவை அழித்தால் ஒழிய தமிழகத்தில் பாஜகவிற்கு 25 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்காது. தன்னை அழித்துவிட்டு தமிழகத்தில் தழைத்தோங்கி விட நினைக்கும் பாஜகவை இன்னும் அதிமுக தோழமை கட்சியாக வைத்திருப்பது அதன் தற்கொலையில் தான் முடியும். கவர்னரின் அடாவடித்தனங்களை அதிமுகவும் கண்டிக்க முன்வர வேண்டும். பாமகவும் கண்டிக்க முன்வர வேண்டும்.

ஸ்டாலினுக்கு எதிர்த்து நின்று போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. குட்டக் குட்ட குனிந்து கொண்டிருந்தால் தீர்வே கிடைகாது! அரசியலில் தற்குறியாக உள்ள அண்ணாமலை எல்லாம் எகிறி, எகிறி அடிப்பதும், திமுக போன்ற ஒரு பெரிய கட்சியின் தலைவர் பம்மிப் பதுங்குவதும் தொடர் கதையானால் ஸ்டாலினின் மரியாதை தரைமட்டமாகிவிடும். பணம், செல்வம், அந்தஸ்த்து..என எதை இழந்தாலும் மீட்டு எடுத்துவிடலாம். மானம் இழந்தால், மக்களின் நம்பிக்கை இழப்பீர்கள்! பிறகு மீள முடியாது! மாயாவதிக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும்.

கெஞ்சினால் நடக்காது.

அஞ்சினால் முடிந்தது உங்கள் கதை!

துஞ்சினால் துடைத்தெறியப்படுவீர்கள்!

வெஞ்சினத்துடன் வீறு கொண்டு எழுவீர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time