அதிகமாக முட்டை உட்கொள்வது நல்லதா? கெடுதலா?

நாகப்பன் சூரியநாராயணன்

தற்போதெல்லாம் மருத்துவர்கள் பெரு நிறுவனங்களின் குரலாக ஒலிக்கிறார்கள்! எதை சாப்பிடக் கூடாதோ அதை சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்! எதை சாப்பிட வேண்டுமோ, அவற்றை தவிர்க்கச் சொல்கிறார்கள்! இதன் மூலம் நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடவும், மருத்துவத் துறை வளம் பெறவும் துணை போகிறார்கள்!

ஒரு பாரம்பரியமான நிறுவனத்தில் இருந்து வெளிவருகிற பிரபல வார இதழில் “ஆரோக்கியம் ஒரு பிளேட்” என்ற கட்டுரை வெளியாகி இருந்தது. இணையதளத்தில் அந்தக் கட்டுரையைப் படித்து, அறிந்து அதிர்ந்தேன். இது குறித்த யதார்த்தங்களை சொல்ல வேண்டும் என்ற உந்துதலில் சில தரவுகளோடு உண்மைகளை இங்கே பகிர்கிறேன்.

கட்டுரையாசிரியரான அந்த மருத்துவர் முட்டை சிறந்த உணவென்றும், அதனால் நாள்தோறும் மூன்று முட்டைகளில் இருந்து நான்கு முட்‍டைகள் வரை உண்ணலாம் என்றும் பரிந்துரை செய்கிறார். ஆனால், அந்த டாக்டர்,  யாரால் மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்வு முட்டையை சிறந்த உணவாகக் கூறுகிறது என, ஆய்வின் பெயரைக் குறிப்பிடவே இல்லை!

முட்டை மிகச் சிறந்த உணவு என்று மருத்துவரே கூறுகிறார் என்று நம்பி நாள் ஒன்றுக்கு மூன்று முட்டைகளை மக்கள் உண்ண ஆரம்பிக்கலாம். இதனால் மக்கள் உடல் நலம் பாதிக்கப்படும். மக்கள் நிரந்தரமான நோயாளிகளாவார்கள். அதைத் தான்  மருத்துவர்கள் விரும்புகிறார்கள். புதிய புதிய நோயாளிகளை உருவாக்க மருத்துவர்களே துணை நிற்பது அவலம்.

நம் உடலுக்குத் தேவையானது 2000 மில்லிகிராம் கொலஸ்ட்ராலாம்!. நாம் மூன்று முட்டைகள் சாப்பிட்டால் அதன் மூலம் நம் உடலுக்கு 600மில்லிகிராம் கொலஸ்ட்ரால் கி‍டைக்குமாம்.  உணவின் மூலம் 600 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் கிடைத்துவிட்டால், மீதம் தேவையான 1,400 மில்லிகிராம் நமது உடல் உற்பத்தி செய்து கொள்ளும் என்பது எந்த ஆய்வின் அடிப்படையிலோ புரியவில்லை!

கொலஸ்ட்ரால் நல்லது. நம் உடலுக்குத் தேவையானது. ஆனால், உணவில் இருந்து உடலுக்குள் செலுத்தப்படும் கொலஸ்ட்ரால் (டயட்டரி கொலஸ்ட்ரால்) உடலுக்கு நல்லது என்று எந்த ஆய்வின் அடிப்படையில் டாக்டர் குறிப்பிடுகின்றார் என்பது தெரியவில்லை.இது போன்ற மக்களின் உடல் நலம் சார்ந்த கட்டுரைகளை எழுதும் கட்டுரையாசிரியர்கள் முழுமையான தரவுகளை முன்வைக்காமல் பொத்தாம் பொதுவாக எழுதி பொது புத்தியில் சில கருத்தாங்கங்களை ஏற்படுத்திவிடுகிறார்கள்!

ஒரு நாளைக்கு எத்தனை  முட்டைகள் சாப்பிடலாம்? என்று ஒரு டாக்டர் ஒரு யூடியூப் காணொளியை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்காதான் முட்டைகளைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புகிறது என்று குற்றம் சாட்டிய டாக்டர்.  அவரது முட்டை ஆதரவு காணொளியில்  ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வை ஏன் சுட்டிக் காட்ட வேண்டும்? அமெரிக்காவில் உட்கொள்ளும் முட்டையானது தரத்தில் ஆசிய முட்டையில் இருந்து வேறுபட்டது! இந்தியா போன்ற நாடுகளில் அதுவும் குறிப்பாக நாமக்கல் கோழி பவுண்டரிகளில் மிகத் தரக் குறைவான முட்டையை – சாப்பிடத் தகுதியற்ற முட்டையை உற்பத்தி செய்கிறார்கள் என்ற யதார்த்ததை புறம் தள்ளக் கூடாது! சரி போகட்டும், இந்தியாவில் நிக்ழ்த்தப்பட்ட முட்டை குறித்த ஆய்வை எடுத்துக் காட்டியிருக்கலாமே. ஏன்  காட்டவில்லை? என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது.

Effects of carbohydrate restriction and dietary cholesterol provided by eggs on clinical risk factors in metabolic syndrome https://pubmed.ncbi.nlm.nih.gov/24079288/  என்ற இந்த ஆய்வுதான் அந்தக் காணொளி முழுவதும் டாக்டர்  அவர்கள் உயர்த்திப் பிடித்திருக்கும் ஒரே ஆய்வு.

சரி, அவரது அமெரிக்காவின் முட்டை ஆதரவு ஆய்வு என்பது எப்படிப்பட்டது? .
அவர் சுட்டிக் காட்டியிருக்கும் முட்டைக்கு ஆதரவான ஆய்வானது முட்டை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இணைந்து முட்டை விற்பனையை அதிகரிக்க பணம் கொடுத்து நடத்திய ஆய்வு. (Supported by a grant from the Egg Nutrition Center). இந்த Egg Nutrition Center என்ற நிறுவனம் முட்டைகளின் விற்பனையை அதிகரிக்க, அதனை சந்தைப் படுத்த பல்கலைக் கழகங்களுக்குப் பணம் கொடுத்து ஆய்வுகளை நடத்தச் சொல்லும் என்பது உலகறிந்த உண்மை!

எந்த ஒரு ஆய்வையும் படிக்கும் பொழுது அந்த ஆய்வு யார் நடத்தியிருக்கிறார்கள்?. என்ன நோக்கத்திற்காக நடத்தியிருக்கிறார்கள்? ஆய்வு பக்கசார்பில்லாததா..? என்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கிறோம்.

இத்தகைய  உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப் படுத்த நடத்திய  ஆய்வுகளின் அடிப்படையில் சில டாக்டர்கள் “முட்டை மிகச் சிறந்த உணவு” என்று காணொளிகளை வெளியிடுவதும், அதே காணொளிகளை கட்டுரைகளாக  பத்திரிகைகளில் எழுதுவதும் வெளியிடுவதும் வருந்தத் தக்கது.

பொது ஊடகங்களில் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முட்டையைப் பற்றிய உண்மைகள் என்ன? என்று அறிந்து கொள்ள கீழ்கண்ட ஆய்வுகளை அறம் வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

# கொலஸ்ட்ராலை நம்ம உடம்பே உற்பத்தி செய்தால், அது இயற்கையான கொலஸ்ட்ரால்! உணவு மூலமா நம்ம உடம்புக்குள்ள கொலஸ்ட்ராலை கொடுத்தால், அது டயட்டரி கொலஸ்ட்ரால். அதாவது, திணிக்கப்படுவது என்றால், அது செயற்கையான கொலஸ்ட்ரால். இந்த டயட்டரி கொலஸ்ட்ராலானது இரத்தத்தில் கொலஸ்ட்ராலோட அளைவக் கூட்டும் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
Effects of dietary cholesterol on serum cholesterol: a meta analysis and review

(https://academic.oup.com/ajcn/article-abstract/55/6/1060/4715430)

# டயட்டரி ஃபேட், டயட்டரி கொலஸ்ட்ரால் மற்றும் முட்டை சாப்பிடுவதால் பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை புற்றுநோய் பற்றியது இந்த ஆய்வு.
A pooled analysis of 12 cohort studies of dietary fat, cholesterol and egg intake and overian cancer (https://link.springer.com/article/10.1007/s10552-005-0455-7)

# இந்த ஆய்வு மூன்று நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுறவங்களுக்கு 81விழுக்காடு புராஸ்ட்டேட் கேன்சர் வருவதற்கான அபாயம் அதிகரிக்குது அப்படின்னு சொல்கிறது.

Egg, Red Meat, and Poultry intake and risk of Lethal Prostate cancer in the Prostate-Specific Antigen-Era: Incidence and Survival (https://cancerpreventionresearch.aacrjournals.org/content/4/12/2110.short)

# முட்டை இதயநோய்களை உருவாக்கும் அப்படிங்கிறத இந்த ஆய்வு தெளிவாகவே விளக்கியிருக்கிறது.
Egg consumption and risk of cardiovascular diseases and diabetes: A meta-analysis
https://www.sciencedirect.com/science/article/pii/S0021915013002438?casa_token=5sC9E0xbWVsAAAAA:EwxYBWDjpfONZiQy48EgPQ7ga_4lhV5gK1AF385aL_EQpIeMsdQTOh_3W0UpQqkyph2BNiwMS2Q

#  meat, poultry, liver, fish, milk, cheese, egg இதையெல்லாம் சாப்பிடும் போது நம்ம வயித்துல இருக்கிற பாக்டீரியா  கோலினாட இணைந்து ட்ரைமெத்லமைன் உருவாக்குகிறது! அது ட்ரை‍மெத்லமைன் ஆக்சைடாக மாறி நம்ம இதயத்தல இருக்கிற கொரனரி ஆர்ட்ரரியை தாக்கி ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், மரணத்தை ஏற்படுத்துகிறது.

The contributory role of gut microbiota in cardiocascular disease

(https://www.jci.org/articles/view/72331 )

இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், போன்ற பொதுவான ‍நோய்களுக்கு காரணமாக முட்டை இருக்குது. பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை புற்று நோய், சினைப் பை புற்று நோய் போன்ற பல நோய்களுக்கும் காரணமாக முட்டை இருக்கிறது. ஆண்களுக்கு வரக் கூடிய புராஸ்டேட் புற்றுநோய்கும் காரணமாக முட்டை இருக்கிறது. எனவே, முட்டையை அதிக அளவில் உண்பது ஆபத்தானது. இயன்ற அளவு இது போன்ற விலங்குக் கொழுப்புகளை மக்கள் தவிர்த்திட வேண்டும். அல்லது உண்ணும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நமக்குத் தேவையான புரதங்கள் தாவரங்களில் இருந்தே பெறப்பட வேண்டும். தாவரங்களே புரதங்ளை உற்பத்தி செய்கின்றன.

இது அசைவ உணவுக்கு எதிரான கட்டுரையல்ல! மனித உடலும், அதன் ஜீரண உறுப்புகளும் தாவர உணவுகளை செறிக்கதக்கதாகவே உள்ளன! அசைவ உணவை ஒரு அளவுக்கு மேல் உடல் ஏற்காது!

பெண்கள் முட்டையை தங்கள் உணவுகளில் இருந்து விலக்கினால் பிரஸ்ட்கேன்சர், ஓவரியன் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு குறையுது. ஆண்கள் முட்டையை விலக்கிட்டடா புராஸ்டேட் கேன்சர் வர்றதுக்கான வாய்ப்பு குறையுது.

# நம் குழந்தைகளுக்கு நல்ல புரோட்டீன் வேண்டும் என்றால், பீன்ஸ் அண்ட் லெகூம்ஸ் கொடுங்க. பீன்ஸ் அண்ட் லெகூம்ஸ் என்பது அவரை, துவரை, மொச்சை, வகைகளை குறிக்கும். கொண்டக் கடலை, பட்டாணி, கொள்ளு, பிளாக் பீன்ஸ், பிளாக் ஐ பீன்ஸ், பின்டோ பீன்ஸ் போன்றவற்றைத் தாராளமாக நம்ம உணவுல சேத்துக்கோங்க.

# நம்ம குழந்தைகளுக்கு நல்ல கால்ஷியம் அப்படிங்கிற சுண்ணாம்புச் சத்து வேண்டும் என்றால், நிறைய கீரைகளைக் கொடுங்க! விட்மின்கள் வேணும்னா, பழங்களைக் கொடுங்க!

# நம்ம குழந்தைகளுக்கு நல்ல கொழுப்புச் சத்து வேணும்னா வேர்க்கடலை,  பாதாம், முந்திரி, பிஸ்தா, தேங்காய் போன்ற  நட்ஸ்ம், வெள்ளரி விதை, பூசணி விதை, எள்ளு போன்ற விதைகளையும் சாப்பிடக் கொடுங்க.

# நாம் நம் உடல் நலத்தையும் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தையும் பேண வேண்டுமானால், அதற்கு நம் உணவில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். உணவே மருந்து.

கட்டுரையாளர்; நாகப்பன் சூரியநாராயணன்,

ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நியூட்ரிஷியன் அறிவியலில் சான்றிதழ் பெற்றவர்.

ஐயோவாசிட்டி, ஐயோவா, அமெரிக்கா.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time