பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் 18 ம் நூற்றாண்டில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இவர் பாண்டிச்சேரி கவர்னர்களிடம் பணியாற்றிய நேரத்தில் நாள்தோறும் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் காணப்படும் சுராஷ்யமான,அபூர்வ செய்திகள்,பல நாவல்கள்,திரைப்படங்களுக்கு மூலக்கருவாகக் கூடிய அளவுக்கு ஆர்வத்தை துண்டுகின்றன!
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் குறிப்புகளை வைத்து ‘வானம் வசப்படும்’ ‘ மானுடம் வெல்லும்’ என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 -1761) எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஆங்கிலேய அரசும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகமும் பதிப்பித்து உள்ளது.
தனது 24 ஆம் வயதிலிருந்து, அவர் மறைந்த 52 ஆம் வயதுவரை, தினமும் தான் சந்தித்த நபர்கள், சம்பவங்கள், ராஜீய நிகழ்வுகள், தனது வியாபாரம், சடங்குகள் எனப் பலவற்றை மிக விரிவாக எழுதி வைத்துள்ளார் ஆனந்தரங்கப் பிள்ளை.
உதாரணமாக, சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வந்த ஒரு தேவரடியார்(தாசி) வங்காளம், ஜாவா போன்ற இடங்களில் இருந்து வாங்கிய சீமைச் சாராயத்தை வைத்து வியாபாரம் செய்கிறார்.அதனை பிரஞ்சு இராணுவ வீரர்கள் பறித்துவிடுறார்கள். கவர்னரின் மனைவி மேடம் துய்ப்ளக்ஸ், தனக்கு மாதம் முன்னூறு வராகன் லஞசம் தந்தால் தொடர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று சொல்லுகிறார். ‘அவர் என்ன செய்தார்…. முன்னூறு வராகன் கேட்கிறார்’ என்று தெருவில் புலம்பிக் கொண்டே அவள் ஓடுகிறாள்.இதனால் சேதி எல்லாருக்கும் தெரிந்து விடுகிறது. இதை பதிவு செய்துள்ளார் ஆனந்தரங்கப்பிள்ளை
“நாட்டியம் உள்ளிட்ட கோவில் வேலைகள் மட்டுமல்லாது, வியாபாரங்களில் ஈடுபடும் அளவுக்கு அதிகாரம் உள்ளவர்களாக தேவரடியார் இருந்திருக்கிறார்கள் என்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன” என்று இதற்கு விளக்கம் தருகிறார் தமிழ் முஸ்லிம்கள் குறித்த வரலாற்றை ‘யாதும்’ என்ற ஆவணப்படம் வழியாக பதிவு செய்த கோம்பை எஸ்.அன்வர்.
Also read
வங்காளத்தில் ( கல்கத்தா) ஆங்கிலேயர்களுக்கும் (இராபர்ட் கிளைவ் காலம்) பிரஞ்சுக்காரர்களுக்கும் போர் நடைபெறுகிறது.பிரஞ்சு கம்பெனியின் இரண்டு கப்பல்களை, ஆங்கிலேயர் கைப்பற்றும் நிலை வருகிறது. எனவே, கப்பலில் இருந்த பொருளைகளை படகுகளில் ஏற்றிக் கொண்டு, இரண்டு கப்பல்களையும் கொளுத்திவிட்டு, தப்பித்துப் போகிறார்கள். தப்பித்து போகும்போது ஆங்கிலேயர்களால் பிடிபடும் நிலை வரும்போது 19 படகுகளோடு தங்களை ஹூக்ளி நதியில் மூழ்கடித்துக் கொள்கிறார்கள். ஆங்கிலேயர்களிடம் பிணைக் கைதிகள் ஆவதை அவர்கள் விரும்பவில்லை. இது போன்ற விறுவிறுப்பான கதைகளும் நாட்குறிப்பில் வருகின்றன. “இந்த நாட்குறிப்புகளை வைத்து, பல திரைப்படங்களை சுவாரசியமாக எடுக்க முடியும்” என்கிறார் கவிஞரும், திரைப்பட இயக்குநருமான சாம்ராஜ்.
. “பலநூறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும் அளவுக்கு இதில் உள்ளடக்கம் உள்ளது” என்று ஆய்வாளர் கடற்கரய் கூறுகிறார்.
ஆனந்தரங்கப்பிள்ளைக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கிறது. எனவே ராசி,லக்னம்,கிரகம் போன்ற ஜோசியக் குறிப்புளோடு நாட்குறிப்பு எழுதுகிறார். ஜோசியத்தோடு எழுதி வைக்கப்பட்ட நாட்குறிப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும்.
இவற்றை கவிஞர் அ.வெண்ணிலாவும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான மு.ராஜேந்திரனும் இணைந்து ‘ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு’ என்ற பெயரில், பதிப்பித்துள்ளனர்.
ஆனந்தரங்கப் பிள்ளை எழுதியதை அப்படியே எழுதி, அதன் கீழ் அவர் என்ன சொல்லுகிறார் என்பதையும் விளக்கியிருக்கிறார்கள் பதிப்பாசிரியர்கள். ஏழு மொழிகளைச் சார்ந்த வார்த்தைகள் அவரது நாட்குறிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘கம்ரா’ என்றால் அறை, ‘கபறு’ என்றால் செய்தி,’கார்வார் செய்தல்’ என்றால் நிர்வாகம் செய்தல்,’ஆசாரம் பண்ணினேன்’ என்றால் ‘மரியாதை செய்கிறேன்’ என்று பொருள்.இந்த வார்த்தைகளை எல்லாம் இன்றைய மொழியில் எழுதியுள்ளனர்.
ஆனந்தரங்கப் பிள்ளை பல்லக்கில் பயணிப்பவர்.செருப்புக் காலோடு கவர்னர் மாளிகைச் செல்ல அனுமதி பெற்ற ஒரே நபர்.பாக்கு மண்டி, நெல் வியாபாரம், லேவாதேவி எனப் பல தொழில்களைச் செய்து அந்தக் காலத்திலேயே லட்சங்களை கையாண்டவர்.(கவர்னர் கொடுக்கும் சம்பளம் ஏழு ரூபாய்தான்).அவர் பாண்டிச்சேரி மட்டுமல்லாது சென்னை, தேவனாம் பேட்டை, விருத்தாசலம், செஞ்சி, பறங்கிப்படை, சென்னை போன்ற பல ஊர்களுக்கு பயணித்தவர். மக்கள் சார்பாக கவர்னரிடம் பேசியவர். எனவே இதை தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் வரலாறாகவும் நாம் கருத வேண்டும்.
கவர்னர் துய்ப்ளக்ஸ் – உடன் பழகி அவருடைய அன்பிற்கு பாத்திரமானவர். அவருக்குத் திவானாக, ஆலோசனை சொல்பவராக, கடிதம் எழுதபவராக, இருந்திருக்கிறார். எனவே சொல்லப்பட்ட வரலாற்றை மீறி அங்கு நடக்கும் அத்துமீறல், ஊழல், அதிகார மட்டங்களில், பிரான்ஸ் தேசத்தில், அங்குள்ள மன்னர், அமைச்சர் மட்டங்களில் நடப்பவையும் அவருக்கு தெரிந்திருக்கிறது. இதையெல்லாம் பதிவு செய்திருக்கிறார்.ஒரு வேளை இதனைக் கைப்பற்றி இருந்தால் அந்தக் காலத்தில் அது இராஜதுரோகமாக கருதப்பட்டிருக்கலாம்.இது ஆவண மதிப்பு மிகுந்தது.
கவர்னர் துய்ப்ளக்ஸின் மனைவி ‘ழான் பேகம்’ தனியாக ‘கிச்சன் கேபினட்’ நடத்துகிறாள். தனியாக வியாபாரம் செய்கிறாள். ஆனந்தரங்கப் பிள்ளையை குரோதத்தோடுதான் பார்க்கிறாள். இவளை கட்டுப்படுத்த முடியாமல்தான் கவர்னர் துய்ப்ளக்ஸ் – உம் இருக்கிறார். ஆனாலும் கவர்னரை விட்டு ‘அகலாது அணுகாது’ பல விஷயங்களை நடத்திச் செல்கிறார். இவையெல்லாம் சுவைபட எழுதி வைத்துள்ளார் ஆனந்தரங்கர்.
இவர் வைணவர், பதவிக்காக மதம் மாறவில்லை.கிறித்தவ மதம் வருகிறது. மாதா கோவில் வருகிறது. மத மாற்றத்தில் சாதி வகிக்கும் பங்கு பேசப்படுகிறது.கோவில்களில் தேவரடியார் வாழ்நிலை, காதுகுத்து, கல்யாணம், ருதுவாதல், சடங்குகள்,சாவு எனப் பலச் சம்பவங்கள் மானிடவியலைச் சொல்லுகின்றன.
பாண்டிச்சேரி கவர்னர் நீதி வழங்குகிறார். சாவடி (காவல்நிலையம்) நடத்துகிறார். திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது என உத்தரவு போடுகிறார். ஆங்கிலேயர்களோடு போராடி சென்னைக் கோட்டையை கைப்பற்றித் தோற்கிறார். அக்கால நீதி பரிபாலனத்தை, ஆளுகையை தெரிந்து கொள்கிறோம்.இவ்வளவு அதிகாரம் பெற்ற கவர்னர், கடற்கரைக்குச் சென்று, கப்பலில் வரும் கேப்டனை நேரில் வரவேற்கிறார்.அப்படியானால் யார் அதிகாரம் மிக்கவர் ?
“இந்த நூலின் ஒவ்வொரு தொகுதி குறித்தும் பல்வேறு ஆளுமைகள்,12 நாட்கள் இணையம் மூலம் நடைபெற்ற கருத்தரங்குகளில் பேசினார்கள்.இந்த உரைகள், பங்கு பெற்றவர்களின் எதிர்வினைகள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது” என்கிறார் அ.வெண்ணிலா.
பல அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்குத் தம் முன்னோரின் குலப்பெருமை தெரியாது. ஆனால் ஆனந்தரங்கரின் வாரிசுகள் இந்த டைரிக் குறிப்புகளின் பெருமையை பரவச் செய்யும் விதமாக பல கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர்.”அவரது குடும்பத்தைச் சார்ந்த இரவிச்சந்திரன் ஆனந்தரங்கம் இந்த பதிப்பு நூல் வருதற்கு ஊக்கம் அளித்தார்” என்கிறார் மு.ராஜேந்திரன்.
இந்த நூலை 12 தொகுகளில் அகநி வெளியீடு(வந்தவாசி) வெளியிட்டுள்ளது. இதன் விலை 8400 ரூபாய்.(இப்போது சலுகை விலையில்7000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது).
அ.வெண்ணிலா,பிற்கால சோழனான ராஜேந்திர சோழனை மையப்படுத்தி ‘கங்காபுரம்’ நாவலை எழுதியவர்.வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளவர். மு. ராஜேந்திரன் அதிகாரியாகத் தமிழக அரசில் பல பொறுப்புகளில் பணிபுரிந்தவர். இருவரும் இணைந்து, நான்கு ஆண்டுகள் உழைத்து தமிழ்ச் சமூகம் பலன் அடையும் வகையில் இந்த நூலை பதிப்பாசிரியர்களாக இருந்து தந்த வகையில் ஒரு மெச்சத் தகுந்த பணியை நிறைவேற்றியுள்ளனர்.
Leave a Reply