எழுத்தாளார்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை போராளிகள், காந்திய செயற் பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆவணப்பட இயக்குனர் என பலதரப்பட்ட ஆளுமைகளின் நேர்காணல்களே பீட்டர் துரைராஜின் இந்த நூலாகும்! அரசியல், சமூகம், சினிமா ஆகியவை குறித்த ஆழமான புரிதலை படிப்பவர்களுக்கு தருகிறது!
30 தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும் அந்தந்தத் துறையில் லட்சிய வேட்கையோடு, தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்களது நேர்காணல்கள் மூலம் இந்நூல் சமூகம் சார்ந்த பல்வேறு செய்திகளைச் சொல்லி, அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது. இதன் மூலம் சமூகத்திலுள்ள சில மூக்கிய பிரச்சினைகளை தீர்க்க இந்நூல் வழிகாட்டியாக அமையும்
பீட்டர் துரைராஜ், அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதி! பல்லாவரத்தில் சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பை 26 வருடங்களாக நண்பர்களோடு இணைந்து நடத்திவருகிறார். தொழிற்சங்க மற்றும் சமூக செயற்பாட்டாளர்! மக்கள் களச் செயற்பாட்டாளர், தீவிர வாசிப்பாளர்! இவர் தன் நெருக்கடியான பணிகளுக்கு இடையில் பெரும்பாலான ஆளுமைகளை நேரில் சென்று, உரிய கேள்விகளை முன்வைத்து நேர்காணல் செய்திருக்கிறார். மிகுந்த உழைப்பில் உருவான நூல்.
”கேரளத்தில் பிறந்திருந்தால் பெரிய அளவில் அங்கிகரிக்கப்பட்டிருப்பேன்” என்ற எழுத்தாளர் பொன்னீலனின் நேர்காணல் அலட்சியப்படுத்த முடியாத ஒன்றாகும்! எழுத்தாளர் தமிழ்மகன் ”பெரியார் எந்த இனவெறியுமின்றி, எல்லோரும் சமமாக மனிதத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், அதனால் தான் தன்னுடைய எழுத்துகள் பெரியார் பார்வையை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளன’’ என்கிறார்.
மனித உரிமை செயற்பாட்டாளர் மார்க்ஸ், ”இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது. இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் வெற்றி” என்று பதிவு செய்கிறார். ”எந்த அரசியல் கட்சியும் சிறுபான்மையினரின் நியாயங்களை நாங்கள் பேசுகிறோம் என்று சொல்வதற்குத் தயாராக இல்லை. தேர்தலில் சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப, அவர்களில் பிரதிநிதித்துவம் இல்லாததை பதிவு செய்து, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசியல் இயங்கும் போது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உண்டு” என்பதை பதிவு செய்கிறார்.
கோம்பை அன்வர், இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலமே இந்துத்வாவை வெற்றி கொள்ள முடியும் என்றும், மத நம்பிக்கையையும், மதவாதத்தையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.
தோழர் தியாகுவின் நேர்காணல் சிறை சீர்திருத்தம், சிறை பராமரிப்பு ஆகியவை பற்றி விரிவாகப் பேசுகிறது. இதில் நீதிமன்றங்களின் பொறுப்பு, அரசின் பொறுப்பு ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் சிறைகள் நன்றாக பராமரிக்கப்ப்பட்டதற்குக் காரணம் இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் போன்றவர்கள் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் என்றும், வி.ஆர்.கிருஷ்ணய்யர் சிறைத்துறை அமைச்சராக இருந்துள்ளதையும் அங்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சிறைகள் பராமரிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும் பதிவு செய்கிறார்
ஏ.ஐ.டி.யு.சி.செயலாளரான ம.இராதாகிருஷ்ணன் தனது நேர்காணலில் தனது “துரத்தப்படும் மனிதர்கள்” நூலில் மலைவாழ்மக்களின் வாழ்நிலைகளையும்,பொய்வழக்குகளுக்கான “ரிசர்வ் போர்ஸ்” ஆக காவல் துறை இவர்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை பதிவுசெய்துள்ளார்! குற்றப்பரம்பரைச் சட்டத்தின் நீட்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், அவசியம் படிக்க வேண்டிய நூலாக, இந்நூலைக் பேராசிரியர் சிவசுப்ரமணியன் குறிப்பிட்டதை பதிவு செய்கிறார்.
ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார் அதனால்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். மனிதர் மனதில் உள்ள வன்முறை கல்வி, நாகரீகத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறை உணர்வை தட்டி எழுப்பி மோதல் ஏற்படுத்துவதன் மூலம் பாசிசத்தின் வெற்றி இருக்கிறது என்று பதிவு செய்கிறார்.
தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் வி.முத்தையா, (காக்கைச் சிறகினிலே ஆசிரியர்) மதுரை, பால் பண்ணைத் தொழிலாளர் போராட்டத்தை எம்.ஜி.ஆர். மூர்க்கத்தனமாக ஒடுக்கியது பற்றியும், கூட்டுறவுத்துறையின் நோக்கம் சிதைந்தது குறித்தும், அதனை மேம்படுத்த ஆலோசனைகளையும் கூறுவதோடு, தனது பத்திரிக்கைத் துறை அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.
கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் குறித்தும், கட்டுமானத் தொழிலாளர் நிதி எவ்வாறு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது அதனை சீர் செய்யும் வழிமுறைகளை கே.இரவி, கட்டிடத்தொழிலாளர் சங்கத் தலைவர் பகிர்ந்து கொள்கிறார்.
தொலைத்தொடர்புத்துறையே நெருக்கடியில் இருப்பதாகவும், அதனை பி.எஸ்.என்.எல். நெருக்கடியாக சித்தரிப்பதாகவும், பேரிடர் காலங்களில் பி.எஸ்.என்.எல் பணி குறித்தும், பி.எஸ்.என்.எல்.ஐ புத்தாக்கம் செய்வது குறித்தும், இதன் தொடர்பான அறிக்கைகள் பொது தளத்தில் விவாதிக்காமல் இருப்பதையும், இத்துறையை புத்தாக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆர்.பட்டாபிராமன் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
தரமான பாலினை வழங்கி வரும் ஆவின் நிறுவனம் குறித்தும், அதன் நிர்வாகத்தை சீர் செய்ய செய்ய வேண்டியவை குறித்தும், எம்.ஜி.ஆர்.அரசின் ஊழியர் விரோத போக்கு குறித்தும், ஆர்.பாளையம் தனது நேர்காணலில் பதிவு செய்கிறார்
ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவனப் பெயர் என்றும், ஆதார் என்று சொல்ல மாட்டேன், UID எண் என்பது அடித்தள மக்களுக்கு எதிரானது என்பதை ஆதாரங்களோடு சட்ட ரீதியாக பதிவு செய்கிறார் உஷா ராமநாதன்.. இதில் முரண்பாடான நலன் உள்ளது என்று பதிவு செய்கிறார். ராஜஸ்தானில் 80 வயது பாட்டி ஒருவர், அவரிடம் UID இல்லாததால், ரேஷன் கிடைக்காமல் இறந்ததையும் குற்ப்பிடுகிறார். சட்டம் வசதியானவர்களுக்கு வளைந்து கொடுக்கிறது, ஏழைகளை ஒடுக்குகிறது. ஆகவே, அதன் அங்கமாக இருந்தால் நீதிமன்றத்தை விமர்சிக்க முடியாது என்பதால் சட்டம் படித்திருந்தும் நீதித்துறையில் பணியாற்றவில்லை என நுட்பமாக பதிவு செய்கிறார்!
இதனை கேட்டு “Speak truth to Power, Make the truth Powerful and make the Powerful truthful” என்ற தென் ஆப்பிரிக்க கவிஞர் jeremy cronin கவிதை வரிகள் நினைவுக்கு வந்ததாக நேர்காணல் செய்த பீட்டர் துரைராஜ் கூறுகிறார்.இந்த நேர்காணல் உள்ளத்தை ஊடுருவுகிறது.
சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரன் நேர்காணல் சமகால சினிமாவைப் பற்றியும், அதன் முக்கிய ஆளுமைகள் குறித்தும் சரியான புரிதலை நமக்கு தருகிறது.
மனநல காப்பகங்களின் கட்டமைப்பு சிறைகளைப் போல உள்ளது எனக் கூறும் டாக்டர்.அரவிந்தனின் பேட்டி நெகிழ் வைக்கிறது. தமிழகத்தில் மது ஏராளமான மன நோயாளிகளை உருவாக்கிக் கொண்டுள்ளதை மருத்துவர் அனுவங்களின் வழி சொலிகிறார்!, மனநல மருத்துவத் துறையின் முன்னோடியான முருகப்பா குறித்து சிறப்பான அறிமுகம் தருகிறார்! இப்போதுள்ள கொள்கையின்படி மனநல நோயாளிகளை என்.ஜி.ஓ க்களிடம் ஒப்படைப்பது ஆபத்தானது மற்றும் மன நல மருத்துவத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாகும் என கண்டனம் செய்கிறார் அரவிந்தன்! மருத்துவம் குறித்த மருத்துவர்.அமலோற்பவநாதன் நேர்காணலும் கவனிக்கத்தக்கது.
காந்தியம் குறித்து மூன்று நேர்காணல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.புது தில்லி,காந்தி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை காந்தி இருந்திருந்தால் சபரிமலையில் பெண்கள் உரிமைக்காகப் போராடியிருப்பார் என்றும், சாதாரண மக்கள் தங்கள் கருத்தை ஆள்வோரிடம் பேசும் நிலை வர வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறுகிறார்! ”இன்று காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்” என்ற சரவணின் நேர்காணல் சுவாரசியமாக உள்ளது.
வேளாண் செயற்பாட்டாளர் க.சரவணன், பாமயன், நீர்மேலாண்மை குறித்த மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் நேர்காணல்கள் இத்துறைகளின் மேம்பாட்டிற்காக பல பல முக்கிய வழிமுறைகளை அழுத்தமாக முன் வைக்கின்றன. குறிப்பாக இயற்கை வேளாண் அறிஞர் பாமயனின் நேர்காணல் விவசாயம் பற்றிய அரிய தகவல்களையும், தெளிவான கண்ணோட்டத்தையும் வழங்குகின்றன!
”ரயில்வேதுறை தனியார்மயமானால் கட்டணங்கள் நான்கு மடங்கு உயரும். ரயில்கள் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும்” என அதிரடி செய்தியைத் தருகிறார் ராஜா ஸ்ரீதர்!
“அம்பேத்காரும் அவரது தம்மமும்” நூலை எழுதிய வசுமித்ரா, எது ஒன்றையும் தத்துவார்த்த ரீதியாக எதிர் கொள்ளாமல் சாதிய ரீதியாக எழுத்துக்களை எதிர்கொள்வது ஆதிக்கப்பார்வை என்கிறார்! இந்திய தத்துவ மரபில் 80 சதவீத நூல்கள் இறை மறுப்பு நோக்கம் கொண்ட நூல்களே என்றும், அதனால் எல்லாம் மறுவாசிப்புக்கு உட்பட்டதே” என்ற கருத்தை அழுத்தமாக முன் வைக்கிறார். பல்வேறு கேள்விகளை எழுப்பும். மிகவும் கவனிக்கத்தக்க நேர்காணல்.
”வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை” எனும் இரா.முருகவேளின் நேர்காணல் அருமையாக உள்ளது!
பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்கள் எளிய முறையில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் கவனம் பெற வேண்டிய பல செய்திகளை இந் நேர்காணல்கள் பதிவு செய்துள்ளன.
நூல் விமர்சனம்; கி.மீனாட்சிசுந்தரம்
பாளையம் கோட்டை
வெளியீடு;
A.M. Book House,
விலை;270
8817 , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
அய்யப்பாக்கம்,
சென்னை-600077.
செல்போன்; 9444 35 8351
“மனித உரிமை செயற்பாட்டாளர் மார்க்ஸ், ”இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது. இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் வெற்றி” என்று பதிவு செய்கிறார். ”எந்த அரசியல் கட்சியும் சிறுபான்மையினரின் நியாயங்களை நாங்கள் பேசுகிறோம் என்று சொல்வதற்குத் தயாராக இல்லை. தேர்தலில் சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப, அவர்களில் பிரதிநிதித்துவம் இல்லாததை பதிவு செய்து, சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசியல் இயங்கும் போது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உண்டு” என்பதை பதிவு செய்கிறார்.”.
உண்மை..
அருமையான, சுருக்கமான, பயனுள்ள தகவல்கள் நிரம்பிய நூல்.