இயற்கை வளங்களை சூறையாடும் திமுக அரசு!

தமிழகத்தில் மலைகளும், ஆற்றுப் படுகைகளும், கனிமங்கள் உள்ள கடலோரப் படுகைகளும் நாளும், பொழுதும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன! ஆட்சி மாறியும், காட்சி மாறாமல் கொள்ளை தொடர்கிறது! பிரிட்டிஷ் இந்தியாவில் கூட இந்த அளவு இயற்கை வளம் சூறையாடப் பட்டதில்லை.

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ்நாடு தற்போது இல்லை. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இன்று இருக்கும் தமிழகமும் இருக்க போவதில்லை. வருங்கால தலைமுறைகள் மலைகளையும், ஆற்றுப்படுகைகளையும் பழைய புகைப்படங்களில், சினிமாக்களில் மட்டுமே கண்டு ஆச்சரியப்படும்படி இருக்கும் என்ற யதார்த்ததை நினைத்தால் இதயமே நொறுங்கிப் போகிறது.

தமிழ்நாட்டில் கிரானைட் எடுப்பதற்காக மலைகளைக் குடையும் குவாரிகள் 86 உள்ளன!

ஹெவிமெட்டல்ஸ் என அணு கனிமகங்களை எடுக்கும் குவாரிகள் 81 உள்ளன!

பெருங்கனிமங்களை அள்ளும் குவாரிகள் 421 உள்ளன!

குரூட் ஆயில்,எரிவாயு எடுப்பதற்கான குவாரிகள் 25 உள்ளன!

மணல் அள்ளும் குவாரிகள் மலைக்க வைக்கும் அளவுக்கு உள்ளன!

இவை தவிர சிறு கனிமங்கள், சிமெண்டிற்கான சுண்ணாம்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கம் என பலதரப்பட்ட குவாரிகள் உள்ளன!

ஆக மொத்தத்தில் எல்லாமுமாக சேர்த்தால் சுமார் 3,790 குவாரிகள் உள்ளன!

இவற்றில் பெருமளவு தனியாருக்கு குத்தகை அடிப்படையில் தரப்படுகின்றன!

அவர்களோ மலையளவு சம்பாதித்து அரசுக்கு கொஞ்சமாக மடுவளவுக்கு கிள்ளித் தருகிறார்கள்!

தனியார்களுக்கு தருவதில் உள்ள செளகரியம் ஒன்று என்னவென்றால், நடக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கி சிறு அபராதம் வசூலித்துக் கொண்டு, பெரும் கமிஷனை வாங்கி போட்டுக் கொள்வது ஆட்சியாளர்களுக்கு வழக்கமாகிவிட்டது! அனைத்து குவாரிகளிலும் இருந்து கிடைக்கும் லாபம் அரசுக்கு சரியாக வந்தால் தமிழக அரசின் ஐந்து லட்சம் கோடிக் கடனை இரண்டு ஆண்டுகளில் அடைத்திருக்கலாம்.

மலை விழுங்கி மகா திருடர்கள்!

பல முக்கிய நதிகளை பிரசவிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை 1,60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.  இது  1,600 கி.மீ நீளத்திற்கு தமிழ்நாடு, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா உட்பட உள்ள மாநிலங்களில் விரிந்து பரவி காணப்படுகிறது. 2695 மீட்டர் உயரம் கொண்டது. இமயமலையை விட பழமையானது மட்டுமல்ல, பல்லுயிர் பெருக்கத்திற்கான தாயகமாகவும் திகழ்கிறது! அப்படிப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையையே பெயர்த்து தின்று செறிக்கின்ற சமூக அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு சந்திப்புக்கு பிறகு கம்பீரமாக நின்று கொண்டிருந்த அழகிய மலை பலவருடங்களாக கற்கள் உடைக்கப்பட்டதில், பஞ்சத்தில் வீழ்ந்த மனிதனைப் போல காட்சியளிக்கிறது. இதைப் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குகிறது!    சித்திரங்கோடு, வலியாற்றுமுகம் போன்ற பகுதிகளில் பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான டன் லோடுகள் கற்கள் வெட்டி எடுக்கப்படு கின்றன. நூற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் வெட்டி கடத்தப்படும் இந்த கற்களுக்கு அரசுக்கு நூறு கன அடி கிரானைட் கல்லுக்கு  ரூ.135 மட்டுமே கட்டணமாக தரப்படுகிறது. ஆனால், சந்தையில் ரூ.3,500 முதல் 4,000 வரைக்கும் விற்கிறார்கள் ! மதுரையில் சகாயம் ஐ.ஏ.எஸ் எடுத்த அனைத்து முயற்சிகளையும் அன்றைய அதிமுக அரசும், நீதிமன்றமும் வீணடித்துவிட்டன!

காவல்துறையினரே குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக உள்ளனர்! கற்களை கடத்தும் லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்துகிறது! அதில் பல மனித உயிர்கள் பலியாகின்றன! இதை எதிர்த்து கேட்கும் மக்கள் மீது தான் வழக்கு  போடப்படுகிறது !

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகள் கனிம வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. நெல்லையில் உள்ள கல் குவாரிகளில் பல குவாரிகள் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தங்கள் பினாமிகளின் பெயரில் நடத்தி வருவதாக பொதுமக்களும், சூழலியல் செயற்பாட்டாளர்களும் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்!

கல் குவாரிகளின் உரிமையாளர்கள்  அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் அதீத அளவில் கற்களை உடைத்து கடத்துவது நடந்து கொண்டே இருக்கிறது.இதை கனிமவளத்துறை கண்டு கொள்வதில்லை!

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் சீலாத்திகுளம் பகுதியில் கல் குவாரியில் வெடி வைத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் வெடிப்புவிட்டன. அதில் முருகன் என்பவர் வீட்டு மேற்கூரையே வீடு இடிந்து விழுந்ததால் மூன்று வயது குழந்தை பலியான சம்பவம் மக்களை பெருங் கோபத்தில் ஆழ்த்தியது! மக்கள் தெருவில் இறங்கி போராடினர்!

இருக்கன்துறையில் உள்ள ஒரு கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டதை ஆய்வு செய்து கண்டுபிடித்த சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி அந்த குவாரிக்கு ரூ. 20 கோடி அபராதம் விதித்தார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து கனிம கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை பறிமுதல் செய்தார்.இப்படி செயல்பட்டதால் இவர்கள் இருவரும் பணியிட மாற்றத்திற்கு உள்ளானார்கள் என்பதில் இருந்து இந்த திமுக ஆட்சித் தலைமையின் மனநிலையை நாம் புரிந்து கொள்ளலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியில் உள்ள தனியார் குவாரியால் சுற்றுவட்டார பகுதிகளான தாரத்தட்டு தொடங்கி இடைமலைக் கோணம் வரை சுமார் பத்து ஊர்கள் படும்பாடு சொல்லும் தரமன்று! வெடிவைத்து தகர்ப்பதாலும், கல் உடைக்கும் கிரஷர்களாலும் ஏற்படும் கற்புழுதி பலருக்கு காச நோயை தோற்றுவித்துள்ளது. இங்கிருந்து தினசரி சுமார் 1,500 லோடு கற்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன! உயர்ந்தோங்கிய மலைகள் எல்லாம் பள்ளதாக்குகளாக மாறியுள்ளதை காண சகிக்கவில்லை!

ஆற்றுப்படுகைகளை அழிக்கும் மணல் குவாரிகள்!

தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி, பாலாறு, வைகை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆறுகளில் 20 அடி முதல் 60 அடி வரை பள்ளங்கள் தென்படுகின்றன! இதனால், வாய்க்கால் கரைகளில் உள்ள நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை கடந்த ஜனவரி மாதம் காவிரி, கொள்ளிடம் உள்ள உள்பட்ட முக்கிய ஆறுகளில் 16 இடங்களில் லாரி மணல் குவாரிகளும், 21 இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகளூம் செயல்பட அனுமதி அளித்துள்ளது கொஞ்சம் கூட ஏற்க முடியாத அநீதியாகும்! துரைமுருகன் போன்ற ஊழலில் உண்டு  கொழுக்கும் திமிங்கிலங்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டிற்கு விடிவே இல்லை!

களவாடப்படும் கடற்கரையோரங்கள்!

அதிமுக ஆட்சி காலத்தில் அரசு ஆதரவுடன் கடற்கரையோரங்களை கபளிகரம் செய்தார் வைகுண்டராஜன்.! இதன் மூலம் அவரும்,அதிமுக தலைமையும் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிதார்கள்! கிழுக்கு கடற்கரையோர ஆற்றுப் படுகைகளும் சூரையாடப்பட்டு வருகின்றது! கடற்கரையோர கிராமங்கள் இதனால் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன!

இந்த கல் குவாரி கொள்ளைகளுக்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களை நடத்தியவர் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும், இன்றைய அமைச்சருமான மனோ தங்கராஜ்! அதனால், ஆட்சி மாறியவுடன் நிலைமை சரியாகிவிடும் என தென் தமிழக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது! ஆனால் நிலைமை கொஞ்சமும் மாறியபாடில்லை!

சட்டசபையில், குமரி மாவட்டத்தில் மூன்று குவாரிகள் தான் செயல்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். மாவட்ட_நிர்வாகமும் மூன்று குவாரிகள் தான் என்று கூறுகிறது. தற்போது மாவட்ட_அமைச்சர் மனோ தங்கராஜ் முன்பு 39 குவாரிகள் இருந்தன! ஆனால், தற்போது ஏழு குவாரிகள் மட்டுமே இயங்குவதாக கூறுகிறார். தற்போது கூட இவர்களுக்கு ரூ இரண்டு கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக சொல்லும் அமைச்சர், இந்த ஆட்சியை குறை சொல்பவர்கள் ஓனாய்கள் என்றார்! அரசு துறையில் அதிகாரிகளாக உள்ள கறுப்பு ஆடுகள் தான் தவறு செய்கின்றனர். என சமாதானம் செய்கிறார். ஆனால், உண்மையில் ஏராளமான குவாரிகள் செயல்படுவதை மக்கள் தங்கள் அனுபவத்தில் நாளும் பார்க்கிறார்கள்! திமுகவின் நெல்லை எம்பி ஞான திரவியமும் குவாரிகளில் சம்பந்தப்பட்டவர் தான்! இவருக்கு எதிராகவும் மக்கள் போராடி வருகிறார்கள்!

மனோ தங்கராஜ், முதல்வர் ஸ்டாலின்

இங்கே நாம் பார்க்க வேண்டியது அமைச்சர் துரைமுருகன் ஒரு எண்ணிக்கையும், அமைச்சர் ஒரு எண்ணிக்கையும் சொல்வதும் யதார்த்தமோ இருவர் சொல்வதில் இருந்து மாறுபட்டு இருப்பதுமாகும்! மேலும் இவர்கள் இரண்டு கோடி அபராதம் விதித்தார்கள் என்றால், அதற்காக அவர்கள் இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் லாபம் சம்பாதிக்க அனுமதித்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்?

உண்மையை சொல்வதென்றால், இயற்கை வளங்களை அழித்து பணம் சம்பாதிப்பது வளர்ச்சியுமல்ல, அதனால் கிடைக்கும் செல்வம் வளத்தை குறிப்பதுமல்ல. அது தன்னைத் தானே கொன்று தின்னும் பேரவலமாகும்! சில ஆயிரம் குடும்பங்கள் செல்வச் செழிப்பில் திளைக்க,பல கோடி மக்கள் மட்டுமல்ல, எதிர்கால சந்ததியே வஞ்சிக்கப்படுகிறது! இதை தடுக்க வக்கின்றி வாழும் நமக்கு மன்னிப்பே இல்லை!

சாவித்திரி கண்ணன்.

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time