அழித்தொழிப்பு அரசியலின் சின்னமா புல்டோசர்?

-சாவித்திரி கண்ணன்

அழித்தொழிப்பு அரசியலின் ஆயுதமாகிப் போன ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி விழாக்கள்! தங்கள் எல்லை கடந்த சகிப்பு தன்மையால் மட்டுமே இஸ்லாமிய சமூகம் தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உண்மையான ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்ற முடியவில்லை!

இந்தியாவில் ஏராளமான இந்து பண்டிகைகள், பெரும் மக்கள் திரள் பங்கேற்கும் கோவில் திருவிழாக்கள் எல்லாம் காலம்காலமாக நடந்து வருகிறது. இவையெல்லாம் மக்கள் சமூகத்தினரிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையும், ஆழ்ந்த அன்பையும் விதைக்கும் வண்ணமாக நம் முன்னோர்கள் கட்டமைத்தனர்.

சித்திரை திருவிழாவின் சிறப்புகள்!

இதற்கு ஏராளமான உதாரணங்களை சொல்லலாம். சமீபத்தில் மதுரை சித்திரை திருவிழா நடைபெற்றது! இந்த பத்து நாள் விழாவில் பல லட்சம் பக்தர்கள் நாள்தோறும் பங்கேற்றனர். எங்கும் எந்த இடத்திலும் இரு சமூகங்களுக்கு இடையிலோ, இரு மதத்திற்கு இடையிலோ சிறு அசம்பாவிதம் எதுவும் ஏற்படவேயில்லை. காரணம், நம் முன்னோர்கள் இது போன்ற விழாக்களை சமூகங்களை மேலும் ஒருங்கிணைத்து வலுப்படுத்து விதமாக கட்டமைத்தது தான்! அழகர் துலுக்க நாச்சியார் சன்னதி வந்து செல்வதும், ஒவ்வொரு சாதிசனங்களின் குலதெய்வங்களுக்கு மரியாதை செய்யும் வண்ணம் பல மண்டகப்படிகளில் தங்கி செல்வதும் அற்புதமான நிகழ்வுகளாகும்.

ஐயப்பனும்,வாவர் சாமியும்;

இதே போல 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லும் கோடானுகோடி ஐயப்ப பக்தர்கள் 18 ஆம் படி ஏறும் முன்பாக எரிமேலியில் உள்ள மசூதியில் வாவர்சாமியை தரிசிக்காமல் செல்வதில்லை.வாவர் சன்னதி சென்று அங்குள்ள இஸ்லாமிய அர்ச்சகர்களிடம் பூஜை செய்யச் சொல்லி விபூதி வாங்கிச் செல்வது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது.

இப்படியெல்லாம் நாம் இருக்க வட இந்தியாவிலோ குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி, விநாயகர் ஊர்வலம் ஆகியவை கலவரத்தில் ஏன் முடிகின்றன என பார்க்க வேண்டும். இதை இவர்கள் மசூதி இருக்கும் தெரு வழியே நடத்துகிறார்கள்! அது கூட தவறில்லை. அப்படி நடத்தும் போது அவர்கள் தொழுகை நேரத்தின் போது நடத்துகிறார்கள். அது கூட இவர்கள் அமைதியாக கடந்து செல்லும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. ஆனால், அந்த மசூதி அல்லது தர்கா வந்ததும் அதன் முன்பு பெருந்திரளாக அச்சுறுத்தும் விதமாக கூச்சலிடுவதும், தங்கள் காவி கொடிகளை மசூதியின் உச்சத்தில் ஏற்றி பறக்கவிடுவதும், இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷ்மிடுவதும் நடக்கிறது. இதற்கு எதிர்வினையாக மசூதி உள்ளிருந்து யாரோ ஒருவர் பொறுமை இழந்து கல் எறிந்தால் அவ்வளவு தான் தொலைந்தார்கள். ஏன் என்றால், இவர்கள் எதிர்பார்த்தது இதைத் தான்.

அடுத்த நாள் அந்த மசூதி மற்றும் அந்த தெருவில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகள் கடைகள் என அனைத்தையும் அரசாங்கமே காவல்துறை துணையோடு சென்று இடித்து விடுவார்கள்! எனக்கு தெரிந்து இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது தான் உ.பியிலும், மத்திய பிரதேசத்திலும், டெல்லியிலும் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் அகில இந்திய கவனம் பெற்று அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. பாஜக தலைமையில் செயல்படும் வடகிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட  ஜாகாங்கீர்பூரி பகுதியில் இது போல நடந்து, அங்குள்ள மசூதி மற்றும் வீடுகள் ஆக்கிரமிப்பு என்ற காரணம் காட்டி அதிரடியாக இடிக்கப்பட்டுள்ளன! ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்றால், அதே பகுதிகளில் உள்ள இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பணக்கார இந்துக்கள் கட்டிய பங்களாக்களையும் சேர்த்தே அல்லவா இடித்திருக்க வேண்டும்.

இதன் மூலம் பாஜக அரசுகள் சொல்ல வரும் செய்தி இது தான்;

”நாங்கள் உங்களை அச்சுறுத்துவோம். அசிங்கப்படுத்துவோம், ஆத்திரத்தை தூண்டும் விதம் செயல்படுவோம். நீங்கள் அடங்கி போக வேண்டும், பொறுமை இழந்து எதிர்த்தால் தொலைந்தீர்கள்! ஈவு இரக்கமே காட்டமாட்டோம். உங்கள் வாழ்வாதாரத்தையே கேள்வி குறியாக்கிவிடுவோம்’’ என்பதற்கான சமிக்சையே அது!

உண்மையை சொல்வதென்றால், அதிக சகிப்புத் தன்மையுடன் இது போன்ற நேரங்களில் இஸ்லாமியர்கள் பொறுத்து போவது பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு வழக்கமாகிவிட்டாலும், பத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம் இளைஞர்கள் யாராவது பொறுக்க முடியாமல் எதிர்வினையாற்றி பெரும் பேரழிவுகளை சந்திக்க நேர்ந்துவிடுகிறது. இது போன்ற நேரங்களில் இந்த இஸ்லாமியர்களை காப்பாற்றும் சக்தியாக எந்த எதிர்கட்சியும் களத்திற்கு வருவதில்லை.

அப்படி வருவது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படித்தான் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தாகாரத் டெல்லியில் களத்திற்கு வந்தார். ஆகவே தங்கள் சகிப்புத் தன்மையும் ,பொறுமையுமே தங்களை பாதுகாக்கும் கவசங்கள் என்ற அனுபவ புரிதலுக்கு பெரும்பாலான இந்திய இஸ்லாமியர்கள் வந்துவிட்டதை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிறது.

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் வீரதீர செயல்கள் எப்போதுமே எளிய மக்கள் குடியிருப்புகள் விஷயத்தில் தான் சாத்தியமாகின்றன! தமிழகத்தின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கான ஐகானாக பார்க்கப்படுவது தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகமாகும். தமிழக காவல்துறைக்கு சொந்தமான சுமார் 58 ஏக்கர் நிலங்களை 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து, அதில் 28 கட்டிடங்களை எழுப்பி உள்ளது சாஸ்திரா பல்கலைக் கழகம்!

பல வருட வழக்கில் 2018 ஆம் ஆண்டே ஆக்கிரமிப்பு நிலங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிட்டது. நீதிமன்றமே ஒப்புதல் தந்த பிறகும் அதை அதிமுக அரசாலும் செயற்படுத்த முடியவில்லை. திமுக அரசாலும் செயல்படுத்த முடியவில்லை. இன்று வரை சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சட்ட விரோத ஆக்கிரப்பை சனாதன சக்திகள் ஒன்று சேர்ந்து பாதுகாத்து வருகின்றன! சனாதன சக்திகளை மீறீ சட்டத்தை பாதுகாக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கே இல்லை!

அதனால் தான், திருவண்ணமலை பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துபத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி, திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க தயக்கம் காட்டாத திமுக அரசு சாஸ்திரா பல்கலை விவகாரத்திலோ சரணாகதியாகிவிடுகிறது. இதைதான் நம் முன்னோர்கள் இருக்கப்பட்டவனுக்கு ஒரு நீதி ! இல்லாதவனுக்கு ஒரு நீதி என்றனர்.  இதைத் தான் பாஜகவினர் இந்துவுக்கு ஒரு நீதி! இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதி என செயல்படுத்தி வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time