அற்புதமான முந்திரிப் பழத்தை அநியாயத்திற்கு வீணடிக்கிறோம்!

- சாவித்திரி கண்ணன்

முந்திரி பருப்புக்கு நல்ல மவுசு இருக்குது. ஆனால்,சத்துமிக்க முந்திரி பழம் பல்லாயிரம் டன்கள் அப்படியே வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து பழச்சாறு மற்றும் ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! அதில் நமக்கு ஆர்வம் இல்லாததால் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன! தீர்வு என்ன?

இன்றைய சட்டமன்ற நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க முன் வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இந்த கோரிக்கை பரிசீலிக்கபடும் எனக் கூறினார். ஆம், இது உடனடியாக பரிசீலித்து செயல்படுத்த வேண்டிய அற்புதமான திட்டம் என்பதால், இவை குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கே பார்க்கலாம்!

தமிழகத்தில் திருக்கோவிலூர், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், புதுக்கோட்டை, அரியலூர், கன்னியாகுமரி..ஆகிய இடங்களில் முந்திரி விளைச்சல் சிறப்பாக நடந்து வருகிறது! முந்திரி பருப்பு நல்ல விலைக்கு போனாலும் முந்திரிப் பழம் மிகக் குறைந்த பயன்பாடே இருப்பதால் பெருமளவு விவசாயிகளால் வயலிலேயே வீணடிக்கப்பட்டு விடுகின்றன!

முதன் முதலில் கோவாவில் தான் இந்த முந்திரியை போர்த்துகீசியர்கள் அறிமுகப்படுத்தினர்! போர்ச்சுகீசியர்கள் முந்திரிப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவார்களாம். அதேபோல் ‘ஃபெனி’ (Feni) என்ற வித்தியாசமான உற்சாக மதுபானமும் தயார்செய்து பருகியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் இன்று வரையிலும் கோவாவில் மட்டும் முந்திரி பழத்தில் இருந்து தயாராகும் ‘ஃபெனி’ என்ற பானம் மிகவும் பிரபலமாகும்.

இந்தப் பழத்தில் இருந்து  தயாரிக்கப்படும் மதுபானம் ஆரோக்கியமானது. இதில் ஊட்டச்சத்து பானமும் தயாரிக்கலாம். அதனால் தான் பெப்சி நிறுவனம் கோவாவில் விவசாயிகளிடம் மொத்தமாக முந்திரி பழத்தை கொள்முதல் செய்து குளிர்பானத்திற்கு பயன்படுத்துகிறார்கள்!

இந்தப் பழத்தை பறித்தவுடன் 12 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். நேரம் கடந்தால் இது நொதித்து கெட்டு விடும். ஆகையால், தான் தொலைதூர இடங்களுக்கு இந்த பழத்தை அனுப்புவதில்லை! இந்த பழத்தை மதிப்பு கூட்டி எது செய்ய நினைத்தாலும், அதற்கான தொழிற்சாலை, இவை விளைவிக்கப்படும் பகுதியில் அமைவதே சாலச் சிறந்ததாகும்!

முந்திரி பழத்துடன் சிறிதளவே வினிகர் சேர்த்து புளிக்க வைத்து, மதுபானம் தயாரிக்கும் பழக்கம் பிரேசிலில் உண்டு. முந்திரிப் பழத்தில் இருந்து சட்னி, ஊறுகாய், முந்திரி மிட்டாய் மற்றும் ஜாம் தயாரிக்கப்படுகின்றன!. இந்தப் பழத்தில் அபரிமிதமான சத்துக்களும்,மருத்துவ குணங்களும் உள்ளதால் இதை உற்சாகமூட்டும் மது பானமாக தயாரித்தாலும் சரி, ஊட்டச சத்து மிக்க பானமாக தயாரித்தாலும் சரி நுகர்வோர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.விவசாயிகளுக்கும் அதிக பயன் கிடைக்கும்.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வி.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முந்திரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 9,000 டன்கள் முந்திரி பருப்பு உற்பத்தியாகின்றன! இம்மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது சாகுபடி பரப்பு 30 ஆயிரம் ஏக்கராக குறைந்துவிட்டது. எனவே, இதன் உற்பத்தியை அதிகரிக்க அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பருப்பை பிரித்தெடுக்கும் தொழிற்சாலையும்,முந்திரி பழத்தை மதிப்பு கூடி பானம் தயாரிக்கும் பழச்சாறு தொழிற்சாலை வேண்டும் எனவும்  விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன், மறைமுகமாக பலருக்கும் வேலை கிடைக்கும். என விவசாயிகள் கூறுகின்றனர்.

திருப்போரூர் வட்டத்தில், திருப்போரூர்,சிறுதாவூர், மடையத்தூர், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை காடுகள் உள்ளன.இவற்றில், முந்திரி மரங்கள் கணிசமாக வளர்க்கப்படுகின்றன.கடந்த, 20 ஆண்டுகள் முன், இந்த பகுதியில், முந்திரி சாகுபடி அதிகம் நடந்தது! ஆனால், தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. அதை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குமரி மாவட்டம் இடையான்குடியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு முந்திரி தொழிற்சாலை ஒன்று இருந்தது. அது தற்போது மூடப்பட்டு உள்ளது. அதை மீண்டும் திறக்க வேண்டும்.

முந்திரி மிகவும் சத்தானது, விலையோ குறைவானது என்றாலும், அதன் ஆயுள் மிக குறைவு என்பதால் உள்ளூரில் மட்டுமே விற்க முடியும்! முந்திரிப் பழத்தை, ஊரகப் பகுதி மக்கள் மட்டுமே விரும்பி ஒரு பழமாக உண்கிறார்கள்! முந்திரி அதிகம் விளையும் இடங்களில், முந்திரிப் பழத்தை சமைத்து உண்ணும் வழக்கமும் உண்டு. இதை, பலாப்பழத்திலும்,கொட்டையிலும் இருந்து உணவு வகைகள் தயாரிப்பதற்கு ஒப்பிடலாம்.

முந்திரியின் மரத்தில் அதன் பூவின் அடிப்பகுதியில் உருவாகும் பூக்காம்புப் பகுதியே பழம்போல காணப்படுகிறது. இது, முந்திரிப் பழம், கொல்லாம் பழம், முந்திரி ஆப்பிள்,கொமங்கா எனவும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இப்பழத்தில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாகும். இவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு!. இப் பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக் கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது. இப் பழமானது கல்லீரலை நன்கு சுத்தப்படுத்துவதால் குடிபழக்கம் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்!

அத்துடன் முந்திரிப் பழம் உடலின் பி. எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. இப்பழத்தினை உண்ணும்போது அவை உடலில் உள்ள கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் உண்ணும் போது கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது என்பதும் மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

முந்திரிப் பழங்கள் இதய நலத்திற்கு தேவையான ஆன்டி ஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளன! இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை காக்க விரும்புபவர்கள் இந்தப் பழத்தினை உண்ணலாம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுவதால் இதனை உண்டு எலும்புகளுக்கு வலு சேர்க்கலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த முந்திரி குறித்த ஆராய்ச்சி நிலையம் கேரளாவில் தான் உள்ளது. தமிழ் நாட்டில் இல்லை.

இந்தப் பழங்கள் லட்சக்கணக்கான டன்கள் வீணடிக்கப்படுவதை தடுத்து, இதை உரிய முறையில் மக்கள் நுகர்வதற்கு தோதாக ஆங்காங்கே தொழிற்சாலைகள் தொடங்கி செயல்பட்டால் விவசாயிகளும் மகிழ்வார்கள்! வேலை வாய்ப்புகளும் பெருகும். மக்களின் ஆரோக்கியமும் சிறக்கும்!  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் வலியுறுத்திய விஷயம்  விவசாயிகளின் பல்லாண்டு கால எதிர்பார்ப்பு மட்டுமல்ல, நுகர்வோர்களின் எதிர்பார்ப்புமாகும். எனவே, விரைவில் செயற்பாட்டுக்கு வந்தால் நலமாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time