அரசு பள்ளிகளில் அராஜக மாணவர்களா? உண்மை நிலை என்ன..?

- நாகை பாலா

பல்லாயிரம் பள்ளிகள், பல லட்சம் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் ஒரு சில இடங்களில் நடந்த சம்பங்களைக் கொண்டு அராஜக மாணவர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அவல நிலையில் அரசுப் பள்ளிகள்..என்ற தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன! வகுப்பறை வரம்பு மீறினால், சிதைக்கப்படும் மாணவர் மாண்பு! உண்மை நிலை என்ன?

மாணவர்கள் பொறுப்பற்ற முறையில் ஆசிரியர்களிடம்  நடந்து கொள்ளும் நிகழ்வுகளை நியாயப்படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கம் கிடையாது.  ஆனால். சமீப காலமாக இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடப்பது போல் பேசப்படுவதன் பின்புலத்தில் உள்ள காரணங்களை விவாதிப்பது தான் இந்த கட்டுரையை நோக்கம்.

வகுப்பறை என்பது மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் அத்தனை திறமைகளையும் அடையாளங்கண்டு வெளிக் கொணர்ந்து செம்மைப்படுத்தும் இடம்.

பல காலமாக மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் தங்களுக்கு தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்று அதற்காக ஆசிரியர்கள் தங்களை கூடுதலாக முன் தயாரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

குரு சிஷ்ய முறையும் குருகுல கல்வியும் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே உள்ள உறவை மிகப் புனிதமானதாக கட்டமைக்கப்பட்டது! இது எதிர்த்துக் கேள்வி கேட்காத மிகவும் கீழ் படிதலுக்கு பழக்கப்படுத்தப்பட்ட மாணவர்களை உருவாக்கும் முறை ஆகும். குருகுல கல்வி முறையில் ஆசிரியர் சொல்வதே வேத வாக்கு. குரு ஒரு கருத்தை தவறாக சொன்னாலும் சிஷ்யர்கள் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இந்த முறையை பகடி செய்து அப்போதே பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற இலக்கியம் படைக்கப்பட்டது.

ஆனால் நவீன கல்வி முறையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வு ஆழமாகவும், உண்மையாகவும் அமைவதற்கு தோதாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே உள்ள பாரம்பரிய குரு சிஷ்ய முறையை பின்னுக்குத் தள்ளி இருவருக்குமான மரியாதையான இடைவெளியை குறைத்துள்ளது உண்மை.

பாரம்பரிய குரு-சிஷ்ய உறவு முறைதான் சிறந்தது என்ற கருத்து பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இவர்களுக்கு தற்கால மாணவர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகள் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

சில வாரங்களாக வகுப்பறையில் மாணவர்கள் ஒழுங்கீனமான வன்முறையான செயல்களில் ஈடுபடுவது போல தோற்றம் மிகைப்படுத்தப்பட்டு பிரபல படுத்தப்பட்டு வருகிறது.

சமீப காலங்களில் நடைபெற்ற வகுப்பறை வன்முறைகளில் மிகக் கொடூரமானது சென்னையில் ஒரு தனியார் பள்ளியின் பெண் ஆசிரியை, மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தான். இது மிகவும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க செயல். ஆனால், இதில் ஒரு கொடுமை என்னவென்றால் தினசரி செய்தித்தாள் வாசிப்பவர்களுக்கே அந்தப் பள்ளியின் பெயர் தெரியாது.  எல்லா தினசரிகளும் தனியார் பள்ளியின் பெயரை திட்டமிட்டு மறைத்தன! சென்னையில் உள்ள தனியார் பள்ளி என்பது மட்டுமே தெரியும்.

பத்ம சேஷாத்திரி, செட்டி நாடு வித்யாஸ்ரமம், சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இண்டர் நேஷனல் உள்ளிட்ட பல பிரபல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒரு சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்ட நிகழ்வுகள் பலகாலமாக நிகழ்ந்து ’மீ டூ’ கால கட்டத்தில் தான் முன்னாள் மாணவிகளின் துணிச்சலால் வெளிப்பட்டது. இவை தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து கூட வாய் திறக்க முடியாத அவலத்தை நமக்கு உணர்த்தின.

அதிகமான கட்டணம், கொரானா காலகட்டத்தின் பொருளாதார நெருக்கடிகள் போன்ற சில காரணங்களால் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தனியார் பள்ளி நிர்வாகங்கள் சில அதிர்ச்சியுடன் பார்க்கின்றன!

கடந்த சில மாதங்களாக ஒரு சில அரசு பள்ளிகளில் நடக்கும் வகுப்பறை கலாட்டாக்கள் பள்ளியின் பெயர் ஊர் உட்பட அனைத்து விவரங்களும்  மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் காட்சிப் படுத்தப்படுகின்றது.

மாணவர்கள் அத்து மீறி நடந்து கொள்வது தற்போதுதான் நடைபெறுகிறதா அல்லது இதற்கு முன்பே நடைபெற்றுள்ளதா என்ற விவரங்களை சேகரித்தால் இதன் முழு விவரம் தெரியும். இது போன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வது அதிசயமல்ல! ஆனால், தற்பொழுது தொலைபேசியிலேயே கேமரா இருப்பதனாலும் சமூக ஊடகங்களில் விரைவாக பரப்பப்படுவதாலும் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாகி விட்டது போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தங்களை சுதந்திரமாக உணர்கிறார்கள். கல்விச் சூழலுக்கு இது அவசியமும் கூட! சில நேரங்களில் ஆசிரியர் பற்றாகுறை, அடிப்படை வசதியின்மை ஆகியவற்றுக்கு போராட்டம் நடத்தும் நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளதையும் நாம் பார்க்கிறோம்.

பிரச்சனைக்குரிய மாணவர்கள் வகுப்பறையில் இதற்கு முந்தைய காலங்களில் இருந்து தான் உள்ளனர். அவர்களை கையாளுவதில் உள்ள வழிமுறைகள் தான் தற்போது மாற்றம் அடைந்துள்ளது. இந்த மாணவர்களை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு போதுமான அளவு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் அந்த சூழலை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்துள்ளன என்பது தான் உண்மை.

எடுத்துக்காட்டாக, வகுப்புக்கு கட்டுப்படாத முரட்டுத்தனமாக உள்ள மாணவர்களை விளையாட்டுகளில் ஈடுபட வைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் அவர்களை நல்வழிப்படுத்துவது பல காலங்களாக நடைபெற்று வந்துள்ளது.

பள்ளிகளில் நடக்கும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், இதற்காக அவர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சி, பள்ளியில் மாணவர்களை அழைத்துக் கொண்டு கல்வி சுற்றுலா செல்லுதல் போன்ற நிகழ்வுகள் ஆசிரியர் மாணவர்களின் உளப்பூர்வமான நெருக்கத்தை அதிகரிக்கும்.

வகுப்பறை விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் மாணவர்களை  நேர்மறையான அணுகுமுறையில் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத்தான் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிறகு ஏன் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற வேண்டும் என்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் காரணங்கள்.

#  கூடுதல் பாடச் சுமை

#  தேர்வு மதிப்பெண்களால் ஏற்படும் அழுத்தம்

#  மாணவர்களை ரிலாக்ஸ் செய்ய கூடிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து போனது.

இதுபோல எண்ணற்ற காரணங்கள் அரசு தரப்பிலும் கல்வித்துறை தரப்பிலும் இருக்கும்பொழுது மாணவர்களை மட்டுமே குறை சொல்வது சரியானதாக இருக்காது. மதிப்பெண்கள் மற்றும் தேர்வுகளை நோக்கியே வகுப்பறை கல்வியை உந்தி தள்ளுவது என்பது ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இந்தக்கால மாணவர்கள் வகுப்பறையில் மட்டும்தான் இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது வீட்டிலும் இப்படி நடந்து கொள்கிறார்களா என்பது பெற்றோர்களின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். தாங்கள் விரும்பிய பொருளை பெற்றோர்களிடம் கேட்டு அதை வாங்கிக் கொடுக்காமல் போனால், வீட்டில் உள்ள பொருட்களை உடைக்கும் பழக்கத்தை சில குழந்தைகள் வழக்கமாக வைத்துள்ளனர்.  இது போன்ற குழந்தைகளிடம் வகுப்பறையில் மட்டும் எப்படி ஒழுங்கை எதிர்பார்க்க முடியும்.

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மலையாளத்தில் இருந்து தழுவப்பட்ட தமிழ் படமான “நம்மவர்” படத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் கமல்ஹாசன் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது போன்ற கதைக்களம் உள்ள திரைப்படங்கள் ஆசிரியர்களுக்கு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும்.

2006ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலப் படமான “ரான் கிளார்க் ஸ்டோரி” அனைத்து ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் ஆகும். அமெரிக்காவின் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் செய்யும் இடையூறுகளைக் கடந்து அவர்களை பண்படுத்தும் ஒரு வெற்றிகரமான ஆசிரியரின் கதை.  ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் அணுகு முறையை மாற்றி அவர்களை கையாள வேண்டும்.

அரசு பள்ளிகளில் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாக யாராவது எண்ணினால் அது அவர்களது அறியாமையையே காட்டும்.  பணக்கார உயர்தட்டு வகுப்பு பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் பிரச்சனைகள் எந்த விதத்தில் இருக்கும் என்பதை தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே அறிவார்கள். பெரும்பாலும் இந்த செய்திகள் வெளி உலகத்தின் கவனத்திற்கே வராது.

உணவு இடைவேளையில் ஆசிரியர் இல்லாத பொழுது மாணவர்கள் தங்களுக்குள் விளையாட்டாக செய்துகொள்ளும் வேடிக்கை விளையாட்டுகள் கூட ஏதோ பெரிய குற்றம் போல படம் பிடித்துக் காட்டப்படுகின்றன. ஒரு விஷிவலில் உள்ளது தமிழக மாணவர்களே அல்ல!

சொற்ப எண்ணிக்கையிலான சில மாணவர்கள் நிகழ்த்தும் இதுபோன்ற நிகழ்வுகளை  ஊதிப் பெரிதாக்கி பதட்டப்படுத்தாமல் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் அவற்றை குறைக்கும் பொறுப்பை தொடர்புடைய ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் மட்டுமே ஒப்படைத்து விட்டு மற்றவர்கள் ஒதுங்கி கொள்வதே சாலச் சிறந்தது.

மாணவர்களை சிறந்த அணுமுறையைக் கொண்டு அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அரசும் பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும்.

கட்டுரையாளர்; நாகை பாலா

[email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time