உத்திரப் பிரதேச சம்பவங்கள் மனதை உலுக்கி எடுக்கின்றன!
இந்த சம்பவங்களை நாம் வரிசைப்படி வைத்துப் பார்த்தால், நாம் நாகரீகமான சமுதாயத்தில் தான் வாழ்கிறோமா…என வெட்கமாக உள்ளது.
உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்திய நாத் முதல்வரானது முதல் வன்முறைகள்,அராஜகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்கள் பெரும்பாலானவற்றை அரசே பொதுவெளியில் கசியாதவாறு பார்த்துக் கொள்கிறது.அதற்கு பெரும்பாலான ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன! ஆனால்,அதையும் மீறி வரக் கூடிய ஒரு சில செய்திகளே பேரதிர்வைத் தருகின்றன.அதற்கு எதிர்வினையாற்றும் போது ராகுல் காந்தியே தாக்கப்படுகிறார் என்றால்…,இந்த நாட்டில் தவறுகளை துணிந்து தட்டிக் கேடக் முனையும் மற்றவர்களுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
உ.பி.யில் ஹாஸரத் என்ற சிறு நகரத்திற்கு அருகில் சண்டா என்ற குக்கிராமம் உள்ளது. அங்கே,தாக்கூர்,பிராமணர்,தலித் ஆகிய மூன்று சமூகங்களும் சமஅளவில் வசிக்கின்றனர். செப்டம்பர் 14 ந்தேதியன்று புல்பறிக்க சென்ற ஒரு இளம்பெண்ணை நான்கு இளைஞர்கள் சேர்ந்து வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் வன்முறை செய்துள்ளனர்.அந்த பெண் கடுமையாகத் தாக்கப்ட்டதில் முதுகு தண்டுவடம் ஒடிந்துள்ளது.அவர் வெளியில் உண்மையை பேசிவிடக் கூடாது என நாக்கையும் அறுத்துள்ளனர்.
குற்றுயிரும்,குலையுயிருமாய் விடப்பட்ட அவருக்கு உள்ளுர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டு அலிகரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். இந்த செய்தியை ஒரு சில உள்ளுர் பத்திரிகைகளே சிறு அளவில் பிரசுரித்துள்ளன.டெல்லிக்கு 200 கீமீ தூரத்தில் உள்ள இந்த கொடுரமான சம்பவத்தை பிரபல பத்திரிகைகள் போதுமான அக்கரை காட்டாதது ஏன் எனத் தெரியவில்லை. நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தேசம் தழுவிய அளவில் கொண்டு வந்து தொடர்ந்து அதிரவைத்த ஊடகங்கள் அதைவிட மோசமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஏழை தலித் பெண் விவகாரத்தில் ஏனோ முக்கியத்துவம் தரவில்லை!
Also read
அலிகரில் அந்த பெண்னை மருத்துவமனை வந்து சந்திக்க முயன்ற பீம் ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தை பலவாறு போலீசார் தடுக்க முனைந்துள்ளனர்.ஆனால்,அவர் எப்படியோ போலீஸ் கண்ணில் படாமல் சந்தித்துச் சென்று டிவிட்டரில் போட்ட பின்பு தான் இந்த சம்பவம் கவனம் பெற்றது. அதாவது ஒரு தலித் பெண் விவகாரத்தை ஒரு தலித் தலைவர் சுட்டிக்காட்டும் வரை இந்த தேசத்தில் யாருக்கும் காதுமில்லை, கண்ணுமில்லை, உணர்வுமில்லை! அந்த பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சை தந்தால் தான் பிழைக்க வாய்ப்புண்டு என அவர் டிவிட்டரில் எழுதியதையடுத்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவர் அட்மிட் செய்யப்பட்டார்.அப்போது தான் தில்லி ஊடகத்தினர் எழுதினர். உடனே,அடுத்த நாளே அந்த பெண் இறந்தார். சம்பவம் நடந்து 15 நாட்கள் கடந்து, அந்தப் பெண் உயிர் இழந்த பின்பு தான் உரிய முக்கியத்துவம் பெற முடிந்தது என்பது இங்கு சமூக ஆர்வலர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் அனைவரும் வெட்கபடவேண்டியதாகும்.
காவல்துறையின் அராஜகம்
உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்திய நாத் தாக்கூர் சாதியைச் சேர்ந்தவர்.அவர் முதல்வரான பிறகு காவல்துறையில் தாக்கூர் சமூகத்தினர் தான் பெரும்பாலான காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக உள்ளனர். இவர்கள் குற்றவாளிகள் முதலில் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதைக் கொண்டே நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தான் இன்றைய உபியில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு காரணம் என சொல்லப்படுகிறது! பாதிக்கப்பட்ட பெண் விவகாரத்தை மூடிமறைத்ததில் ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகள் தாக்கூர் சாதியினர் என்பதால் போலீசார் கெடுபிடியாக செயல்பட்டனர்.அந்த பெண் யாரிடமும் பேசிவிடாதபடிக்கு மிகவும் உஷார் காட்டினார்கள் என்றால்,அது குற்றவாளிகளை பாதுகாக்கவே என நாம் புரிந்து கொள்ளலாம்!
அந்தப் பெண் இறந்ததும் சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல், தாங்களே இரவோடிரவாக எரித்துள்ளனர் என்றால்,போலீசாரை விட பெரிய கிரிமினல்கள் இந்த வழக்கில் வேறு யாராயிருக்க முடியும்! மேலும் அந்த கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க கூடாது அரசியல் கட்சித் தலைவர்களோ,சமூக ஆர்வலர்களோ விவகாரத்தை விசார்த்து வெளிப்படுத்திவிடக் கூடாது என்ற வகையில் அந்த கிராமத்திற்கே 144 ஊரடங்கு போடுகிறார்கள் என்றால்,அரசாங்கமே கிரிமினல்மயமாகிவிட்டது என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டாம்.
ராகுல் காந்தி மீதான தாக்குதல்
மிகக் கொடூரமான முறையில் ஒரு அநீதி நடக்கிறது என்றால்,அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உதவ,விசாரிக்க யாருமே மனிதாபிமானத்துடன் வருவது இயற்கை தானே! அப்படி வரக்கூடாது என்றால்,இது ஜனநாயக நாடு தானா? அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை,எழுத்துரிமையை பறிக்கும் அதிகாரம் எந்த அரசுக்குமே கிடையாது தானே!
காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடத்தி, காவல்துறையைக் கொண்டு,அரசியல் கட்சித் தலைவர்களை தாக்கிவருகிறது யோகி அரசு! இந்த நாட்டின் பிரதான கட்சியின் தலைவரான ராகுல் காந்திக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதரண முடிமகனுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? ராகுல் காந்தியை தடுக்க முயன்றது நியாயமற்ற அணுகுமுறையாகும்.
மிரட்டலின் உச்சம்
உபியில் டிஜிபியே அந்தப் பெண் கற்பழிக்கப்படவில்லை என்கிறார். அந்த பெண்ணின் தந்தை இந்த பிரச்சினையில் அரசாங்கம் சரியாக நடக்கிறது.ஆகவே,அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று சொன்னதாக அறிக்கை தர நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அந்த பெண் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு தந்து பாவத்தை கழுவ முயன்றுள்ளது யோகி அரசு! எத்தனை கோடி கொடுத்தலும் நடந்த அநீதிக்கு அது தீர்வோ,பரிகாரமோ ஆகிவிடாது!
Leave a Reply