காங்கிரஸ் கட்சியும், பிரசாந்த் கிஷோரும்!

-ச.அருணாசலம்

காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோரால் முன்னேற்றம் உண்டா? அவர் கடைசி வரை காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே தொடர்வாரா? அவர் நம்பத் தகுந்தவரா? அவரது வருகை காங்கிரசில் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் என்ன? காங்கிரசில் நடக்க வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?

காங்கிரஸ் கட்சித் தலைமையும் தேர்தல் விற்பன்னரான பிராஷாந்த் கிஷோரும் இணைந்து செயல்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் மீண்டும் தோல்வியில் முடிந்தன. எதிர் நோக்கிய உடன்பாட்டு எட்ட முடியாததற்கு வருந்துவதாகவும், பிரஷாந்த் அளித்த ஆலோசனைகளையும் எடுத்து வைத்த வாதங்களையும் காங்கிரஸ் கட்சி மதிப்பதாகவும், கட்சித்தலைமை ஏற்படுத்திய அதிகாரமுடைய நடவடிக்கை குழு 2024-Empowered Action Group2024(EAG) வில் தன்னை இணைத்துக்கொள்ள கிஷோர் மறுத்து விட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் சந்தீப்சிங் சூரஜ்வாலா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

இப்பதிவு வெளிவந்த இருபது நிமிடங்களில் பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் , EAG ல்  இணைவது மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் பொறுப்பு ஏற்குமாறு விடுக்கப்பட்ட தலைமையின் “பெருந்தன்மையான” அழைப்பை தன்னால் ஏற்க முடியவில்லை என்றும், ‘கட்சியின் தற்போதைய அவசிய தேவை , அடிப்படை கட்டுமான பிரச்சினைகளை தீர்க்கவல்ல பாரதூர சீர்திருத்தங்களும் அவற்றை நடைமுறைக்கு கொண்டுவரும் செயல்துணிவும் அதற்கான அரசியல் கூட்டுத் தலைமையும்தானே ஒழிய தான் கட்சியில் இணைந்து பணியாற்றுவது அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

ஆக, இருதரப்பும் “வாய் புளித்ததோ…மாங்காய் புளித்ததோ..” என ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரியிறைக்காமல் கண்ணியமாக இயலாமையை ஒத்துக் கொண்டுள்ளனர்.

இது வெளியானவுடன் பல்வேறு விமர்சனங்களும், கண்ணோட்டங்களும் ஊடகங்களில் வெளிப்பட்டன.

இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இது போன்ற ஒரு ‘கன்சல்ட்டன்சி’ தேவையா? அரசியல் சமூக இயக்கத்திற்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் உள்ளிருந்துதான் வரவேண்டுமேயொழிய, ரெடிமேட் தீர்வுகள் சரிதானா? அவை எடுபடுமா? போன்ற பல கேள்விகளும், ஐயங்களும் எல்லோர் மனதிலும் தோன்றுவது இயற்கை.

நாடு இன்று ‘புதிய இந்தியா’வாக, நயா இந்தியாவாக பரிணமித்துள்ள இந்த அமிர்த காலத்தில் , மனித கூட்டங்கள் மனிதாபிமானமின்றி செயல்படுவதும், வன்முறையையும் வெறுப்புணர்வையும் கையிலெடுத்து மக்களில் ஒரு பகுதியினர் மீது காழ்ப்பும், குரோதமும் காட்டி அடக்குவதும் உச்சத்தை தொட்டுள்ளன. ராம நவமியும், அனுமான் சாலிசாவும் சிறுபான்மையினரை நசுக்கியழிக்க வழிவகுக்கும் காலமாகியுள்ளது. இந்த வெறிகொண்ட கூட்டத்தை எதிர்த்து எதிர்வினை ஏதும் தென்பட்டால் அரசாங்கமும் அரசு இயந்திரமும்  சட்டத்தை மதிக்காமல் அதை காற்றில் பறக்கவிட்டு சிறுபான்மையினரின் இல்லங்களையும் வாழ்வாதார இடங்களையும் ‘புல் டோசர்’ மூலம் தரைமட்டமாக்குவதும் கைது செய்து சிறையிலடைப்பதும் புதிய இந்தியாவின் அடையாளங்களாக மாறிவிட்டது.

வாராது வந்த மாமணியான சமாதானத்தையும்,சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் எங்கே தோற்றுவிடுவோமோ அல்லது தோற்றேவிட்டோமோ என்று நல்லோர் பதைக்கின்ற வேளையிது.

இந்தியவை மீட்டெடுக்கும் வேள்வியில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெரும்பங்கு உள்ளது! காங்கிரஸ் கட்சி துடிப்புடன் செயல்படவேண்டும் என்று திருவாளர் நிதின் கட்கரி கூட திருவாய் மலரும்பொழுது நாட்டின்மீது பற்றுள்ள நல்லோர் காங்கிரஸ் இயக்கம் தேய்வதை நிறுத்தி வெற்றியை நோக்கி எழுச்சி நடை போடவேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை.

ஆனால் விருப்பங்கள் மட்டுமே வெற்றிக்கு அடிகோலுமா? அதற்கான சிந்தனைகளும் ஆலோசனைகளும் அவை எங்கிருந்து வந்தாலும் அவதானிக்கப்பட வேண்டும்.

பரந்த உள்ளத்தோடு , திறந்த மனதோடு அவை பரீசிலிக்கப்படல் வேண்டும் .

பரிசீலிக்கத் தயாரான காங்கிரஸ் கட்சித் தலைமை அதிகாரம் உடைய நடவடிக்கை குழுவை அமைத்துள்ளது! அதில் இணைந்து பணியாற்றுமாறும், தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்குமாறும்  பிரசாந்த் கிஷோரை வேண்டியுள்ளது.

இதற்கு முன்னர் , ம்மதா பானர்ஜிக்கும் , தி மு க விற்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஐ பாக் நிறுவனம் ஆலோசனகளும் தீர்வுகளும் அளிப்பதற்கு முன்னால் , உ.பி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் பிரசாந்த் இணைந்து பணியாற்றினார் என்பதும் அந்த கூட்டணி அரைப்பிரசவத்தில் முடிந்தது என்பதும் பழைய கதை; அப்பொழுதும் கட்சித்தலைமையும கிஷோரும் பரஸ்பர மரியாதையோடு விலகிக் கொண்டனர்.

மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் கட்சிக்கு பணியாற்றி வெற்றி சூடியபின் மீண்டும் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்ற செய்தியும் (வதந்தி?) பலமாக அடிபட்டது. ஆனால், அது நடக்கவில்லை மாறாக காங்கிரஸ் தலைவர்கள் சிலரை திரினாமுல்லுக்கு இழுத்தது மட்டுமின்றி காங்கிரஸ் தவிர்த்த ஏனைய பாஜக எதிர்ப்பு கட்சிகளை (சரத் பவார், ம்மதா, தாக்கரே ) ஓரணியில் திரட்ட மாற்று மையத்தை உருவாக்க பிரசாந்த் முனைந்ததும் தோல்வியில் முடிந்தது.

பாரதூரமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவதும் , அனைத்து மட்ட கட்சிதலைவர்களும் பொறுப்பையுணர்ந்து பணியாற்றும் விதிமுறையை நடைமுறைக்கு கொண்டுவருவதும் முதல் அவசியம் என்று கூறி தான் இணைவதை ‘தள்ளிப்போட்டுள்ளார்’ பிரசாந்த் என விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 எளிமையாக கூறுவதென்றால், ‘தனக்கான அதிகாரமுடைய பொறுப்பும், கூட்டுத்தலைமையும், அதிகாரப்பரவலும் மக்கள் தொடர்பும் காங்கிரஸ் கட்சிக்கு மிக மிக அவசியம் . இவை நடைபெற்றாலே தன்னால் இணந்து பணியாற்ற இயலும்’ என்பதை சூசகமாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

பிரசாந்த் கிஷோர் இணந்து பணியாற்றுவதில் ஆர்வமில்லாத காங்கிரஸ் கட்ணியினரும் உள்ளனர் என்ப தை  மறுப்பதற்கில்லை.பொறுப்புள்ள அதிகாரம் என்பது கட்சி அடையும் ஏற்றத் தாழ்வுகளுக்கு பொறுப்பேற்பவர்களாக  இருக்க வேண்டும் என்று கூறினால், நியமனத் தலைவர்கள் கதி என்ன என்பது பலரின் வயிற்றில் புளியை கரைக்கும் . ஏனெனில், இன்று பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே நியமனத் தலைவர்கள்தாம் இவர்களில் சிலர் தொண்டர்கள். செல்வாக்குடன் இருக்கலாம் சிலர் மக்களிடம் நன்மதிப்பு பெற்றோராக இருக்கலாம் ஆனால் பலர் மேலிட செல்வாக்கு உள்ளவர்களதான் என்பது அரசியல் நோக்கர்களுக்கு புரியும் .

பல்வேறு அம்சங்களை விவரித்து, பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி பலவாறான தீர்வுகளை முன்னிறுத்தி அறுநூற்றுக்கும் மேற்பட்ட ஒளித்தகடுகள் மூலம் தனது திட்டத்தை பிரசாந்த் விவரித்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவது இவைதான் .

கட்சித் தலைமைக்கு கட்சி, யாருக்கான கட்சி, யாருடைய நலன்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும் எந்த இலக்கை அடைய வேண்டும் என்பதில் தெளிவும், தீர்க்கமான பற்றும் வேண்டும்,

சமாதானம்,சம உரிமை, சமூக நல்லிணக்கம் ,மக்கள் நலன் , மாநில உரிமைகள் ஆகியவற்றை சமரசமின்றி தூக்கிப்பிடிப்பதும் அதற்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை பேணுவதும் அதை மென்மேலும் வளரத்தெடுப்பதும் கொள்கைகளாக மட்டுமன்றி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

அரசியல் தெளிவுள்ள தலைமையும் அத்தெளிவை பரப்பும் அடிமட்ட தொண்டர்களும், கருத்துக்களை மக்களிடம எடுத்துச்சென்று அவர்களை ஒன்றிணைக்கும் கீழ்மட்ட தலைவர்களும் கட்சிக்கும் மக்களுக்குமான பாலமாக அமையவேண்டும் . அவை இன்று டிஜிட்டல் உலகில் பல்வேறு பரிமாணங்களையும் உருவங்களையும்பெற்று புது சமூக ஊடகமாக உருவெடுத்துள்ளது.

அதனுடைய வேகமும் வீச்சும் பாஜக அறிந்துள்ள அளவு காங்கிரஸ் இன்னும் அறியவில்லை.

ஏழுநாட்களும் இருபத்துநான்கு மணி நேரமும் அரசியல் பணியாற்றவேண்டியது அரசியல் கடமை ; இதில் தலைவர், தொண்டர் என்ற பாகுபாடு கிடையாது என்று கட்சித்தலைமை உணர வேண்டும் .

அறிவுறுத்தல்களும், தகவல் பரிமாற்றங்களும் தங்குதடையின்றி தாமதமுமின்றி நடைபெற வேண்டும் . போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை நிவர்திக்க வழிமுறைகளும் முன் வைக்கப்பட்டது! அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றாலும், அவற்றை நடைமுறைப் படுத்துவதில் தான் சிக்கல்கள் எழுகின்றன.

2024 தேர்தலில் பாஜகட்சியை எதிர்கட்சிகள் வீழ்த்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் அதற்கு இப்பொழுதிருந்தே எதிர்கட்சிகள் தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் சமீபத்தில் தெரிவித்தது இங்கு நினைவு கூறத்தக்கது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைமையுடன் பல நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் அதன் விளைவாக காங்கிரஸ் கட்சித்தலைமை இஏஜி -அதிகாரம்பெற்ற நடவடிக்கை குழு – அமைத்ததும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகிறது.

அது பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் தலைமையும் விரும்புவது ஒன்றைத்தான் , பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான பலம்வாய்ந்த அணி தான் அவர்களது விருப்பம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டிய கட்சி சீரமைப்புகளின் வேகமும் தாக்கமும் எவ்விதம் அமையவேண்டும் என்பதில் இருதரப்பினரும் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர் .

சீர்திருத்தங்கள் தடாலடியாக நடைமுறைப்படுத்தி மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமா அல்லது சிறிது சிறிதாக மாற்றங்கள் கொண்டுவரவேண்டுமா என்பதே இவர்களிடையே உள்ள பிரச்சினை என்பது புரிகிறது.

இதற்குப் பின் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது?

பிரசாந்த கிஷோர் அடுத்து என்ன செய்யப்போகிறார்? அவர் ஒரே ஒரு கட்சிக்கென நிலைத்து நின்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டு  செயல்படுவாரா..? நிபந்தனையின்றி பி.கே வை நம்ப முடியுமா?

இதற்கெல்லாமான விடை மே மாதம் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தன் ஷிவிர் ‘ மாநாடு முடிவில் கிடைக்குமா? இந்த வருட இறுதியில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குஜராத் இமாச்சல் பிரதேச தேர்தல்களும் இவ் வருட முடிவில் நடைபெற உள்ளது.

காலம் காங்கிரஸ் கட்சிக்கு சலுகை காட்டப் போவதில்லை.

பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டுமல்ல, நாட்டை அழிவுப்பாதையினின்றும் மீட்க நினைக்கும் அனைவரின் நிலையாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time