காவல்துறையிடம் இருந்து மக்களை யார் பாதுகாப்பது..?

சாவித்திரி கண்ணன்

ஜெய்பீம், டாணாக்காரன் படங்களை நினைவுபடுத்தும் வண்ணம் காவல்துறையினர் தாக்குதலால் இரண்டு பேர் இறந்துள்ளனர்! இந்த இருவர் மரணங்களையும் தமிழக முதல்வர் அணுகிய விதம் மேன் மேலும் இது போன்ற காவல்துறை தாக்குதல்களும், மரணங்களும் சம்பவிப்பதற்கான சமிக்சையாகிறது.

சென்னை பட்டிணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தன் நண்பர் சுரேஷ் உடன் ஆட்டோவில் பயணிக்கும் வேளையில் நள்ளிரவு போலீசாரின் சந்தேகத்திற்கு ஆளாகிறார். மெரீனாவில் குதிரை ஓட்டி குழந்தைகளை ஏற்றி சவாரி செய்து ஏதோ ஒரு  வகையில் உழைத்து பிழைக்கும் இந்த எளிய இளைஞர் விக்னேஷிம், பெயிண்டர் வேலை பார்க்கும் சுரேஷும் போலீசாரிடம் பயபக்தியுடன் பேசாத காரணத்தால், அடிப்பிண்ணி எடுக்கப்பட்டு உள்ளனர்.

சுரேஷ் மற்றும் விக்னேஷ்

தலையில் ஹெல்மெட்டால் ஓங்கி அடிக்கப்பட்டு உள்ளார் விக்னேஷ்! இவரை நள்ளிரவு அயனாவரம் காவல் நிலையம், தலைமைச் செயலக காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு அலைக் கழித்து காலையில் இரும்பு பைப் கொண்டு தாக்கி உள்ளனர். இதையடுத்து அவர் வாந்தி எடுத்து நினைவிழந்துள்ளார். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கே இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.சுரேஷ் எந்தக் காரணமும் இன்றி இன்னும் சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். அவரை வெளியில் விட்டால் காவல்துறை நடந்து கொண்டதை அம்பலப்படுதுவிடுவார் என்ற காரணமாக இருக்கலாம். இதை கேட்க நாதி இல்லையே!

மருத்துவமனையில் கூட அவரது குடும்பத்தினர் அவரது உடலை பார்க்க அனுமதிக்கவில்லை. விக்னேஷ் நல்ல ஆரோக்கியமானவர், அவர் இறப்பதற்கான நோய் எதுவும் அவரிடம் இல்லை என குடுமபத்தினர் தெரிவித்தனர். அவரது இறந்த உடலை குடும்பத்தினர் பார்த்தால் உடம்பில் உள்ள ரத்தக் காயங்கள் முகம் மிக மோசமாக வீங்கியுள்ளது தெரிந்து கதறி கலாட்டா செய்வார்கள் என்பதால், வீட்டார், உற்றார், உறவினருக்கே காட்டாமல் அவரது தம்பி ஒருவனுக்கு மட்டும் காட்டிவிட்டு, 200 போலீசார் புடை சூழ காவல்துறையே விக்னேஷை அடக்கம் செய்துவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை!

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு அன்றைய தினம் காலையில் இருந்து மாலை வரை மருத்துவமனை வந்த ஊடகத்தினரை பேசி சமாளித்து நிகழ்வை வெளியுலத்திற்கு தெரியாமல் செய்துவிட்டது காவல்துறை! அனைத்து மீடியாக்களும் காவல்துறை இந்த மரணம் தொடர்பாக எழுதி அனுப்பிய திரைக் கதையை மட்டும் அப்படியே பிரசுரித்துவிட்டனர். ஆனால், தி நியூஸ் மினிட் டாட் காம் என்ற ஆங்கில பத்திரிகையின் சபீர் அகமது மட்டும் காவல்துறை தடுத்தும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி அனைத்து உண்மைகளையும் அம்பலப்படுத்தினார். அதே போல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் உடனே புகார் தந்ததுடன் யூ டுயூப் சேனல்கள் பலவற்றில் பேசி இந்த அநீதியை அம்பலப்படுத்தினார்!

விக்னேஷ் சம்பவம் ஏப்ரல் 18ல் கைதாகி அடுத்த நாள் 19ல் இறக்கிறார் என்றால், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தட்டரணை தங்கமணி சம்பவம் ஏப்ரல் 26 ல் கைதாகி அடுத்த நாள் 27ல் மரணமடைகிறார். இந்த சின்னஞ் சிறு தட்டணை கிராமம் பெருமளவு நரிக்குறவர் இன பழங்குடிமக்கள் வசிக்கும் கிராமமாகும்.

”ஜெய்பீம் படத்தில் வருவது போலவே, யாராவது குற்றவாளி வேண்டும் என்றால், இந்த கிராமத்தில் புகுந்து காவல்துறை ஆண்களை அடித்து இழுத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது” என்கின்றனர் கிராம மக்கள்! தங்கவேலு மீது சுமத்திய புகார் அவர் கள்ளச்சாரயம் காய்ச்சினார் என்பது. ஆனால்,அவரது மனைவி மலரோ, எங்கள் கிராமத்தை காவல்துறையினர் கரும்புள்ளி கிராமம் என பெயரிட்டு குற்ற வழக்குகள் புனையும் காரணத்தால் கடந்த பத்தாண்டுகளாகவே இங்கு யாருமே சாராயம் காய்ச்சுவதில்லை என்கிறார்.

தங்கவேலு,                                            தினகரன்

”கள்ளச்சாராயம் காய்ச்சாத ஒருவரை பிடித்து பொய் வழக்கு போடுவேன் பணம் தா’ என்றால், எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? பணம் தராவிட்டால் குண்டர் சட்டத்தில் அடைத்துவிடுவோம் என தேவையில்லாமல் அவரை அழைத்துச் சென்று சரமாரியாக கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவருக்கு நாக்கு வெளித் தள்ளி ரத்தம் கக்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். ஆயினும் கூட, அவரது சிகிச்சையளித்து காப்பாற்ற முன் வராமல் அலட்சியம் காட்டி காலதாமதமாக மருத்துவமனை சேர்த்து உள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்’’ என தங்கமணியின் மகனும் பாலிடெக்னிக் ஆசிரியருமான தினகரன் கூறுகிறார்.

தங்கமணியின் உடல் பகுதிகள் முகம் ,கைகள் ஆகியவற்றில் கடுமையான காயங்கள் இருந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். தங்கமணி இறந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற கிராமத்தினரை மறித்து கலெக்டர் அலுவலக இரும்பு கேட்டுகளை மூடி விரட்டி அடித்துள்ளனர் காவலர்கள். ஆனால், மக்கள் உறுதி குலையாமல் நின்று போராடி கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து வந்துள்ளனர். உண்மையில் இந்த நிகழ்ச்சிக்காக கலெக்டர் அவமானப்பட்டு இருக்க வேண்டும். தாங்கள் செய்த தவறுக்கு காவல்துறை கலெக்டரையே அலுவலகத்தில் சிறை பிடித்து வைத்ததாகத் தான் இந்த சம்பவத்தை சொல்ல முடியும்.

இந்த இரண்டு சம்பவங்களும் காவல்துறை மனிதத் தன்மையை இழந்தும், நிதானமிழந்தும் செயல்படுவதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன! இரை தேடும் வேட்டை நாய்களை ஒத்த மன நிலையில் அவர்கள் செயல்படுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. ‘இறந்து போன இருவர் மீதும் ஏற்கனவே இத்தனை வழக்குகள் உள்ளன’ என்பதாக குற்ற பின்னணி சொல்வதன் மூலம் தாங்கள் செய்த கொலையை காவல்துறை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த மோசமான தந்திரத்தை முதலில் விட்டொழியுங்கள்!

இந்த இரண்டு சம்பவங்களும் சட்ட சபை நடக்கும் நாட்களில் நடந்ததால் சட்ட சபையில் இ.பி.எஸ்சும், ஒ.பி.எஸ்சும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், இது குறித்து பெரிய அளவு குற்றம் சாட்டி அழுத்தம் தரவில்லை. திமுகவின் தோழமை கட்சிகளோ, ஏதோ நாங்களும் கேட்டோம் என்ற ரீதியில் பேசி கடந்துவிட்டனர். ஆனால், முதலமைச்சரோ மனசாட்சியே இல்லாமல் குற்றமிழைத்த காவலர்களின் குரலாய் வெளிப்பட்டதோடு,  சாகஸ வார்த்தைகள் பேசி சமாளித்தார்!

ஆனால், இந்த சம்பவம் அலட்சியம் காட்டக் கூடிய ஒன்றல்ல, சாதாரண எளிய மக்களுக்கு அரசாங்கம் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பு தர வேண்டிய அரசின் காவல்துறையே எளியோர்களை அழித்தொழிக்கும் என்றால் மக்களை, காவல்துறையிடம் இருந்து பாதுகாப்பது தான் தமிழக அரசின் முதல் கடமை மட்டுமல்ல, அவசரக் கடமையுமாகிறது! ‘காவலனே காலனாக மாறுவான்’ என்றால், இதைவிட பேரவலம் என்ன இருக்க முடியும்…?

அதிமுக ஆட்சியில்  சாத்தான்குளத்தில் ஜெய்ராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு பேர் போலீஸ் லாக் அப்பில் இறந்த போது அன்று தமிழ்நாடே பதறும்படி அவர்கள் சார்ந்த வணிக சமூகம் அந்த பிரச்சினையை கவனப்படுத்தியது! அதே போல இந்த இருவரும் தலித் அல்லது வன்னியர் போன்ற பெரிய எண்ணிக்கையிலான சமூகத்தவராக இருந்திருந்தால் தமிழகம் அல்லோகலப்பட்டு இருக்கக் கூடும். ஊடகங்களின் வெளிச்சமும் கிடைத்திருக்கும். ஆனால் விக்னேஷ் ‘குதிரை வண்ணார்’ என்ற மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட சமூகம், அதே போல தங்கமணியின் நரிக்குறவர் சமூகமும் செல்வாக்கு இல்லாதது. இது தான் இன்றைய சமூகத்தின் யதார்த்தம்!

நமக்கு வருத்தம் என்னவென்றால், மேற்படி இரு சம்பவங்களிலும் காவல்துறை எழுதி தந்த திரைக் கதை வசனத்தை அப்படியே முதல்வர் சட்டமன்றத்தில் வாந்தி எடுத்தது தான்! முதல்வர் தான் காவல்துறைக்கு மந்திரியாக இருக்கிறார். இது குறித்து குறைந்தபட்ச அக்கறை காட்டி இருந்தால் கூட, காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்.

ஒரு கொலைக்கு தற்காலிக பணி நீக்கம் என்பது தீர்வாகாது. காவல்துறையே கொலை செய்தாலும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்படி அடைக்கப்படுவார்கள் என்றால் தான் அது மக்களுக்கான அரசாங்கமாகும். தாங்கள் கொலை செய்தால் முதல் அமைச்சரே சட்டமன்றத்தில் பொய் பேசி தங்களை காப்பாற்ற முன் வருவார் என்றால், காவல்துறை மேன்மேலும் இது போன்ற கொலைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள்!

ஒரு சில காவலர்களால் தான் லாக் அப் மரணங்கள் நிகழ்கின்றன! நடந்துவிட்ட நிகழ்வை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டு தவறு செய்தவர்களை பாரபட்சமில்லாமல் தண்டித்தால் தானே அது சட்டப்படியான ஆட்சியாக இருக்க முடியும். அப்படி ஒத்துக் கொள்வது ஒட்டுமொத்த காவல்துறைக்கே இழுக்கு மற்றும் கவுரவ பிரச்சினை என்ற கோணத்தில் மட்டுமே இது போன்ற லாக் அப் மரணங்கள் அணுகப்படுகின்றன! ஆகவே தான், காவல் துறையின் அத்துமீறல்கள் எல்லா ஆட்சிகளிலும் கட்டுப்பாடின்றி தொடர்கின்றன!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time