துப்புரவு பணிகளை வேறு சமூகத்தினர் செய்வதில்லை!­

-பீட்டர் துரைராஜ்

மக்களிடம் மேலோங்கியுள்ள சாதிய மனநிலையின் காரணமாக துப்புரவு பணியை இழிவாக நினைக்கிறார்கள்! அடிமாட்டுச் சம்பளம், உரிமைகளற்ற நிலை! துப்புரவு தொழிலாளர்களை சுரண்டுவதில் கின்னஸ் சாதனை படைக்கிறது தமிழகம்! ம.இராதாகிருஷ்ணன் நேர்காணல்!

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான ம.இராதாகிருஷ்ணனை( ஏஐடியுசி) அறம் இதழுக்காக பீட்டர் துரைராஜ் செய்த நேர்காணல்!

கிராம ஊராட்சியில் ரூ 250  தான் மாத சம்பளம் என கூறுகிறீர்களே ! ஆச்சரியமாக உள்ளதே?  கிராம ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் உதவியாளர் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 9,800 பேர் வேலைசெய்து வருகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.250 தான்!  இதைத் தவிர குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரூ.300 வழங்கப்படுகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் முறையிட்ட போதும் அவரும் ஆச்சரியமாகத்தான் எங்களிடம் கேட்டார். ‘’அரைக்காசு உத்தியோகம்னாலும் அரண்மனை உத்யோகமாக இருக்கனும்னுங்ற’’ ஆசையில், தங்களுக்கு விடிவுகாலம் வராதா என்ற ஏக்கத்தோடு கடந்த 17 ஆண்டுகளாக வெறும் 250 ரூபாயை மாத ஊதியத்தில் உழைக்கிறார்கள். அதேபோல குடிநீர் பம்பு இயக்குநர்களுக்கு மாதம் ரூ.4,000 மட்டுமே சம்பளம்! கிராம பஞ்சாயத்தில் பணிபுரியும் அனைவருமே பகுதி நேரத் தொழிலாளர்கள் என்று அரசு கருதுகிறது ஆனால், நாள் முழுவதும் பணிபுரிகிறார்கள். இதே போலத் தான்  தூய்மைக்காவலர்களுக்கும் சொற்பக் கூலியே  வழங்கப்படுகிறது. ஓய்வூதியம், பணிக்கொடையிலும் நீதி கிட்டவில்லை.

அமைச்சர் பெரிய கருப்பனுடன் ஏ.ஐ.டி.யூ.சி தலைவர்கள்

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தானே தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது ?

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 121 நகராட்சிகளும், 528 பேரூராட்சிகளும்,15,525 கிராமப் பஞ்சாயத்துகளும் உள்ளன. ஒரே வேலையைச் செய்தாலும் யாருக்கும் சீரான சம்பளம் இல்லை. ஒரே நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, தினக்கூலி தொழிலாளி, சுய உதவிக் குழு தொழிலாளி என பல பெயர்களில் விதவிதமான சம்பளம் வழங்கப்படுகிறது. சம வேலைக்கு, சம ஊதியம் வழங்காத அரசு நல அரசு (Welfare State) அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை தமிழக அரசு அமலாக்கவில்லை. குறைந்த பட்ச ஊதியம் கூட வழங்கவில்லை. ஈரோடு மாநகராட்சியில் நாளொன்றுக்கு ரூ.707 வழங்கப்படுகிறது. இது தான் நியாயமான கூலி! ஆனால், சென்னை மாநகராட்சி நாளொன்றுக்கு ரூ. 391 வழங்கி வருகிறது.  இப்படி இடத்திற்கு இடம் மாறுபடுவது நியாயமில்லை. தற்போது சென்னையை அனைத்து இடங்களுக்கும் கூலி குறைக்கப்பட உள்ளதாம்!

1962 ஆம் ஆண்டு 500 பேருக்கு மூன்று துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற அளவுகோல் இருந்தது. அப்படியானால் 8 கோடி பேருக்கு எத்தனை பேர் இருக்க வேண்டும் ?  உலக மயமாக்கலுக்குப் பிறகு, னகர்வு போக்குகள் அதிகரித்ததால் கழிவுகள் சேர்வதும் அதிகரித்துள்ளது. எட்டு கி.மீ. தூரத்திற்கு ஒரு துப்புரவு பணியாளர் என்று கணக்கிட்டு வேலைப்பளுவை உயர்த்துகிறார்கள்! நடைமுறைக்கு சாத்தியமில்லாத வேலைப்பளு திணிக்கப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதிய விகிதத்தி்றகும் குறைவாக மாவட்ட ஆட்சியர்  சம்பளம் நிர்ணயம் செய்கிறார். அதற்கும் குறைவாக ஒப்பந்தக்காரர்கள் சம்பளம் தருகிறார்கள்.இப்படி ஒரே சுரண்டல் மயம் தான்!

‘சுரண்டலில் கின்னஸ் சாதனை வேண்டாம்’ என்று துண்டறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்கள். இது கடுமையான விமர்சனமாக உங்களுக்குப் படவில்லையா ?

துப்பரவுப் பணி என்பது நிரந்தரமானது;  அப்படி இருக்க ஏன் வேலையாட்களை தற்காலிகமாக  வைத்துக் கொள்கிறார்கள்? இ.எஸ்.ஐ, பி.எப் கட்டவேண்டும் என்று சொல்லி பணத்தை நகராட்சிகளிடமிருந்து வாங்கி விடுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் கணக்கில் கட்டுவதில்லை. ஒப்பந்த எண்ணிக்கையில் உள்ளபடி தொழிலாளர்களை தருவதில்லை.  இது ஒரு பெரிய ஊழல். அரசே, நேரடியாக சம்பளம் கொடுக்கும் போது மட்டுமே இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட முடியாது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையை காலம் தாழ்த்தாமல் அமலாக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாத பூஜை செய்தாரே ! அவர்கள் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவினார்களே ?

தூய்மைப் பணியாளர்களின் பணியிடமே வீதிகள்தான். தங்கள் வசமுள்ள பாத்திரங்களைக் கொடுத்துதான், வீடுகளில் இருந்து தண்ணீர் பெற்றுக் குடிக்க முடியும்.  கடைகளில் கூட, ஒரு ஓரமாக நின்று, ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப்களில்தான் (use and throw cup) தேநீர் வாங்கிக்  குடிக்க முடியும். சென்னையிலும் இதை பார்க்கலாம். இந்த நிலையில் பிரதம்ர் மோடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி போன்றோர் துப்புரவாளர்களை கடவுள் என்கிறார்கள்! கடவுள் பெயரைச் சொல்லி, அனைத்து படையலையும்  பூசாரி எடுத்துக் கொள்ளலாமா? தொழிலாளர்களுக்கு உரிய சட்ட உரிமைகளை அவர்களுக்குத் தர வேண்டும் என்று நினைத்தால் போதுமானது.

தூய்மை இந்தியா திட்டம்,  திடக்கழிவு, திரவக் கழிவுகளை அகற்றுவது குறித்துப் பேசுகிறது. இவை அனைத்தையும் முகமை (agency) மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்று அது கூறுகிறது. அதாவது ஒப்பந்த முறைப்படி தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளையடிக்கலாம் என்பதுதான் இதன் பொருளாகும்.

மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று பாராளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது பற்றி ?

மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதை தடை செய்து 2013 ம் ஆண்டு சட்டம் வந்தது. அதன்படி, பாதாளச் சாக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்ய உரிய பாதுகாப்பு உபகரணங்களையும், பணிக் கருவிகளையும் தர வேண்டும். ஆனால், இவை தரப்படுவதில்லை.மலக்குழி மரண சம்பவங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவே போராட வேண்டி இருக்கிறது.

தமிழ்நாடு சமூகநீதியை பேசுகிற அரசு. ஆனால் நீங்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறீர்களே ! 

தமிழ்நாடு 69 சத இட ஒதுக்கீட்டை பெற்ற மாநிலம். இதற்காக நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.  உள்ளாட்சிகளில் துப்புறவு பணிகளில் எல்லா சாதியிலும் உரிய சதவீதத்தில் பணிபுரிகிறார்களா ?  நகராட்சிகளில் துப்புரவுப் பணிக்கு  தலித் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் அந்த வேலையைச் செய்வதில்லை.அவர்கள் வேலையையும் சேர்த்து தலித் தொழிலாளிகள்தான் செய்கின்றனர். கோயமுத்தூரில் வேலுமணி அமைச்சராக இருந்த போது பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 323 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அவர்களில் தலித் தொழிலாளர்கள் தான் துப்புரவு பணியைச் செய்கிறார்கள்.  மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் கூட துப்புரவுப் பணியை செய்யததில்லை.  இதை எதிர்த்து சங்கம் கேள்வி கேட்டபோது, அவர்களுக்கு வேலையே கொடுக்காமல் சம்பளம் கொடுத்தார்கள். பல நகராட்சிகளிலும் இப்படிப்பட்ட தொழிலாளர்களை நீங்கள் பார்க்கலாம். நிர்வாகத்தின் துணையோடு தீண்டாமை, சமூக அநீதி நடக்கிறது. ஆட்சி மாற்றம் நடந்தாலும், தலித் அல்லாதவர்கள் துப்புரவு வேலைகளைச் செய்யவில்லை.

தூய்மைப் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாரியம் தொழிலாளர் துறையின் கீழ் வராமல் தாழ்த்தப்பட்டோர் துறையின் உள்ளது. இது மாற வேண்டும். 250, 1000, 3600, 4000 என அற்பத்தொகையை மாத ஊதியமாக அரசு வழங்குவதை, ஓய்வூதியத்தை மறுப்பதை, பணிக்கொடையை மறுப்பதை நீங்கள் சமூக நீதி என்று சொல்வீர்களா ? இந்தச் சுரண்டலில் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவது தலித்துகள்; குறிப்பாக பெண்கள்.

பெருங்குடி குப்பை கிடங்கில் தீ பிடித்து எரிந்து கொண்டுள்ளது. குப்பைகளை கையாளுவதில் மிக மோசமான ஆபத்தான நடைமுறை எரிப்பது அல்லது எரிய விடுவதுதான். தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி சேமித்து வைப்பதும் கூடாது. ஆனால்  தமிழ்நாடு மறு சுழற்சி செய்வதில் மிகவும் பின்தங்கி உள்ளது. தமிழகத்தில் உருவாகும் குப்பைகளில் 8 % மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இது சரி தானா?

திடக்கழிவு மேலாண்மையில் முதல் படி கழிவுகளை முழுமையாக தரம் பிரித்து பெறுவதும், அவற்றின் தன்மைக்கேற்ப கையாளுவதும்தான். இந்த முதல் படியைகூட தமிழகம் இன்னும் எட்டவில்லை. கேரளாவில் வீடுகளில் மக்கும் குப்பைகளை அவர்களே மக்கச்செய்து உரமாக்கி பயன்படுத்த, தக்க நடவடிக்கைகள் உள்ளன. வீடுகளில் தரம் பிரித்து தருகிறார்கள் என்று அறிக்கை வைத்து, தூய்மை பணியாளர்கள் மீது அந்த பணியை சுமத்தி, அதிலும் பற்றாக்குறை பணியாளர்களைக் கொண்டு உள்ள நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது. அதனால் கொட்டி வைக்கும் கிடங்குகளில் கூட தரம் பிரித்து வைக்கப்படுவது இல்லை. மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள், ஆபத்தான கழிவுகள் அனைத்தும் கொண்டதாக கிடங்குகள் இருக்கும் நிலையில் சூழலியல் கேடுகளையும், மக்களுக்கு பல்வேறு நோய்களையும் தருகிறது. எரிக்கப்படும் போது இன்னும் அதிகமாக கேடுகளை உருவாக்குகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பற்றதன்மை, அபரிமிதமான நுகர்வு கலாச்சாரம் இக் கேடுகளுக்கு காரணமாக உள்ளது.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time