அமித்ஷா வருகையில் அத்துமீறிய புதுவை பாஜகவினர்!

-அஜிதகேச கம்பளன்

அமித்ஷா வருகையால் சின்னஞ்சிறு புதுச்சேரி திணறியது! 2,500 கட் அவுட்கள்! ஏராளமான பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள், பேனர்கள் வைத்து அல்லோகலப்படுத்தினர்! இந்தியா உள்துறை அமைச்சர் வரவேற்பில், பேனருக்கான தடை சட்டம் மீறப்பட்டு, பாஜகவின் அருவெறுக்கதக்க ஆடம்பர அரசியல் அம்பலப்பட்டு விட்டது!

புதுச்சேரி மிக அழகிய நகரமாகும். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் நகரின் அனைத்து வீதிகளும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் பார்த்துபார்த்து வடிவமைக்கப்பட்ட நகரம் புதுச்சேரி! மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 12 லட்சம் பேர் அதில் புதுச்சேரி நகரத்தில் மட்டும் 7 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அகில இந்திய அளவில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டநகரம் புதுச்சேரி.

புதுச்சேரியின் அழகை பாதுகாக்கும் பொருட்டு 1973-ம் ஆண்டு நகராட்சிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.தொழில் வர்த்தக, வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த கடந்த 2000ம் ஆண்டு நகரின் அழகை பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி பொது இடங்களில் அரசின் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என சட்டம் இயம்புகிறது.

மீண்டும் புதுச்சேரி அரசு 2009ஆம் ஆண்டு திறந்தவெளி விளம்பர பேனர் தடை சட்டம் கொண்டு வந்தது. ஆனால் தற்போது சட்டம் போட்ட அமைச்சர்களும், கட்சிகளும் தான்  சட்டத்தை மீறி அமித்ஷாவிற்கு அளவுக்கு மீறி கட் அவுட் வைத்து புதுச்சேரியை அலங்கோலப்படுத்தினர்! திரும்பிய திக்கெல்லாம் அமித்ஷா சிரித்தபடி கை உயர்த்திக் கொண்டிருந்தார்!

அமித்ஷாவின் ஒரு நாள் வருகைக்காக சுமார் ஒரு வாரகாலமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக, சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் மாடி குடியிருப்புகள் மேலேயும் என அனைத்து இடங்களிலும், அரசின் அனுமதியின்றி சட்டவிரோத விளம்பர கட் -அவுட் பேனர்கள் வைக்கப்பட்டன. ஆளுங்கட்சியினர் விளம்பர கட்-அவுட் பேனர்களை மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு வைத்தனர்!

100 அடிச் சாலையில் வைக்கப்பட்ட ஒரு பேனர் சரிந்து விழுந்ததில் 75 வயது மதிக்கதக்க முதாட்டி படுகாயமடைந்தார்.

இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சென்ற சமூக ஆர்வலர் சுந்தர் என்பவர் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

மேற்கண்ட அமித்ஷாவின் விளம்பர கட்-அவுட் பேனர்களில், சிறைச்சாலையில் இருக்கும் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளும் இடம் பெற்று இருந்தனர். இதனால் ஒரு சில குழுக்கள், அவ்வாறு வைக்கப்பட்ட விளம்பர கட்அவுட் பேனர்களை கிழித்தனர். இதைக் கண்டு பாஜகவினர் ஆவேசமாகி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாய நிலைக்கு புதுச்சேரி மாற்றப்பட்டது.

இதன் உச்சகட்டமாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு, அரியாங்குப்பத்தில் அனுமதியின்றி கட்அவுட் பேனர் வைக்கப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்ட கட் அவுட் பேனரை ஒரு சில நபர்கள் அனுமதியின்றி கிழித்து விட்டனர். இதன் காரணமாக காவல் நிலையம் பாஜகவினரால்  முற்றுகை இடப்பட்டது.

இத்தகைய சூழலில் புதுச்சேரிக்கு கேடு விளைவிக்கும் சட்ட விரோத விளம்பர கட்-அவுட் பேனர்களை  அகற்றிட வலியுறுத்தி, கடந்த 19/04/2022 அன்று சமூக ஆர்வலர் கோ.அ.ஜெகன்நாதன் முன்னெடுப்பில் பல்வேறு பொதுநல அமைப்புகள் பங்கேற்ற, கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளாட்சித்துறை முன்பு நடத்தப்பட்டது.

கட் அவுட்டுக்கு எதிரான போராட்டம்!

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கடந்த 22/04/2022  அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநிலச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் பொதுநல வழக்கு தொடுத்தார்! (18/04/2022  W.P.No.41213 of 2022)   தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு  கடந்த ஏப்ரல் 28 அன்று உடனடியாக புதுச்சேரி முழுவதும் உள்ள சட்டவிரோத  விளம்பர கட் -அவுட் பேனர்கள் அனைத்தையும் அகற்றிட வேண்டும் எனவும், இதற்கான செலவுகள் அனைத்தையும் பேனர் வைத்தவர்களிடமே வசூல் செய்திட வேண்டும் என ஆணை பிறப்பித்தனர். ஆனால், இந்த தீர்ப்பு அத்து மீறியர்களுக்கு அபராதமோ, தண்டனையோ வழங்கவில்லை என்பது ஒரு புறம் வருத்தம் தருகிறது என்ற போதிலும், இன்னும் கூட அந்த பேனர்கள் அகற்றப்படாமல் அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது!

ஒரே ஒரு நாள் அமித்ஷா வருகையால் புதுச்சேரியில் பேனர்கள்,கட் அவுட்களை வைக்க ஆயிரக்கணக்கான இடங்களீல், சாலைகளில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டது பாஜக! அத்துடன் இந்த கட் அவுட் குப்பைகள் வேறு சேர்ந்துவிட்டன! பாவம் முதல்வர் ரங்கசாமி அமித்ஷாவின் ஒவ்வொரு வருகையின் போதும் அவரது பதவி பறிக்கப்படும் என்பதாகவும் பாஜக ஆட்சி அமைக்க போகிறது என்பதாகவும் வேறு வதந்திகளை பரப்பி பகீர் அரசியல் செய்கிறது பாஜக!

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் கிட்டதட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கருப்பு கொடி காட்டின. ஆனால், பிரதான எதிர்கட்சியான திமுக ஏனோ அமைதி காத்தது! இந்தியாவின் உள்துறை அமைச்சரைக் கொண்டு புதுவையின் ஒரு காவல் நிலையத்தில் புதிதாக சேர்ந்தவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டன!

அஜிதகேச கம்பளன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time