அதிகரிக்கும் குழந்தையின்மை பிரச்சினையை சரி செய்ய வழிகள் உண்டு! ரசாயன உரங்களால் உருவாக்கப்பட்ட உணவுகள் ஒரு முக்கிய காரணம்! நம்முடைய உணவு முறைகள், உடை பழக்க, வழக்கங்களில் சில மாற்றங்கள் செய்ய முடிந்தாலே அற்புத மாற்றங்களை பெறலாம்!
நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தே நமது உடல்நலம் அமையும். ஆம், நம் முன்னோர் உண்டு வந்த உணவுகள் அனைத்திலும் சத்துகள் நிறைந்திருந்தன. அவை உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் அமைந்திருந்தன. ரசாயனங்கள் தெளிக்கப்படாமல் உருவான இயற்கை விளைபொருள்களில் தயாரிக்கப்பட்ட அந்த உணவுகளால் யாருக்கும் எந்தக் கேடும் நிகழவில்லை. ஆனால், இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளால் நோய்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைக் குணப்படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் மருத்துவமனைகள் அதிகரித்தாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்கது குழந்தையின்மைக் குறைபாடு.
ஆண், பெண் வித்தியாசமில்லாமல் இருபாலாருமே ஏதாவது ஒரு குறைபாட்டுடன் காணப்படுகின்றனர். ஆண்களில் பலருக்கு போதிய வீரியமில்லை; பெண்களுக்கோ கருப்பையில் ஏற்படும் கோளாறுகளால் அவர்களால் கருத்தரிக்க முடியவில்லை. இவை அனைத்துக்கும் உணவு என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு கடந்து போக முடியவில்லை. இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. உடுத்தும் உடை, செய்யும் வேலை என அந்தப் பட்டியல் நீளும். பணம் ஈட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் மனிதத்தை தொலைத்து தாய்ப்பாலைக் கூட விஷமாக்கிவிட்டோம். நாளைய நம் சந்ததியைக் காப்பாற்ற, மலடாகிப்போன மண்ணையும் இந்த மனிதர்களையும் காக்க அரசாங்கம், உற்பத்தியாளர் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களும் சிந்திக்கவேண்டும்.
மேலும் இன்றைக்கு நாம் உடுத்தும் உடைகள் பெரும்பாலும் நமது இடுப்புப் பகுதியை இறுக்கும் விதத்தில் தான் அமைந்துள்ளன. அவற்றாலும் நமது உள்ளுறுப்புகள் மெல்ல மெல்ல செயலிழந்துபோகின்றன. பருத்தி ஆடைகளை பயன்படுத்திய வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சிந்தெடிக் ஆடைகளை உடுத்தி சீரழிந்து நிற்கின்றோம். மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுவதால் பலருக்கு போதிய எழுச்சி இல்லை. இல்லறம் என்னும் நல்லறத்தில் பலரால் இயல்பாக ஈடுபட முடியவில்லை. தாம்பத்தியம் என்னும் புனிதமான உறவுக்கு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உணவு என்று எடுத்துக் கொண்டால், முற்காலத்தில் நமது பாரம்பரிய அரிசிகளிலேயே இயல்பாக எல்லா சத்துகளும் நிறைந்திருந்தன. திருமண வயதைத்தொடும் ஆண்களுக்கு போதுமான உடல்வளத்தைக் கொடுக்கும் ஆற்றல் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு உண்டு. உடலுக்கு வலுவூட்டுவதுடன் நரம்புகளை முறுக்கேறச் செய்து ஆண்மைத் தன்மையை அதிகரிக்க உதவக்கூடியது மாப்பிள்ளை சம்பா. அதேபோல், பெண்களின் பூப்பெய்தும் பருவம் தொடங்கி கர்ப்ப காலம், பாலூட்டும் பருவம் வரை அவர்களுக்கு நல்ல உடல்நலத்தை தரக்கூடியது பூங்கார் அரிசி. இன்னும் சொல்லப்போனால் சுகப்பிரசவமாவதற்கும்கூட பெரிதும் உதவக்கூடியது பூங்கார் அரிசி.
ஆண்மையை அதிகரிப்பதற்கென்றே ஏராளமான பழங்கள் உள்ளன. குறிப்பாக சின்னஞ்சிறு விதைகளைக் கொண்ட பழங்களில் ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. ஆல், அரசு, அத்தி போன்ற பழங்களின் உள்ளே காணப்படும் சிறு சிறு விதைகளுக்கு ஆண்மையை அதிகரிக்கக்கூடிய சக்தி உண்டு. அதேபோல் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் மாதுளம்பழம் ஆண்மைக்கு நல்ல உரமூட்டக்கூடியது. பூசணி விதை, வெள்ளரி விதை, முருங்கை விதை மட்டுமல்லாமல் பாதாம், பிஸ்தா, முந்திரி என பல்வேறு பருப்புகளும் ஆண்மைக்கு நல்லது.
இயற்கையின் படைப்பில் சில ஆச்சரியங்களைக் காணலாம். அதாவது, நமது உடலுறுப்புகளைப் போன்று அச்சு அசலான வடிவத்தில் சில பூக்களும், விதைகளும், காய்கறிகளும், கிழங்குகளும் காணப்படுகின்றன. பட்டாணியை முளைகட்டினால் அதில் முளைவந்ததும் விந்தணு போன்ற வடிவத்தில் காணப்படும். அந்தவகையில் விந்தணு பிரச்சினையை சரிசெய்வதில் பட்டாணியின் பங்கு அளப்பரியது. பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதால் போதுமான ஆண்மை பலம் கிடைக்கும். பட்டாணியை தனியாகச் சாப்பிடுவது எப்படி என்று சிலர் யோசிப்பதுண்டு. சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு இணை உணவாக தயாரித்துச் சாப்பிடலாம். பட்டாணியை அரைத்து வடை செய்துகூட சாப்பிடலாம்.
வெங்காயம், ஜாதிக்காயைச் சாப்பிடுவதன்மூலம் ஆண்மை பலம் அதிகரிக்கும். வெங்காயத்தில் சின்ன வெங்காயம் நல்லது; அதிலும் வெள்ளை வெங்காயமாக இருந்தால் இன்னும் சிறப்பு. இதேபோல் செவ்வகத்திப்பூவுக்கும் ஆண்மையை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்றவற்றுக்கு ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும் சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளைப்பூண்டு, கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆண்மைக் குறையிலிருந்து மீளலாம்.
ஆண்களைப் பொறுத்தவரை போதிய எழுச்சியின்மையால் அவதிப்படுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் கோளாறுகளால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுகிறது. நாகரிக மோகத்தில் சிக்கித் தவிக்கும் நாம் மேலைநாட்டு உணவுகளான ஃபிரைடு ரைஸ், பீட்ஸா, தந்தூரி, நூடுல்ஸ், நாண், பர்கர், பராத்தா, பிரன்ச்பிரைட் போன்ற உணவுகளை உண்பதில்தான் அக்கறை காட்டுகிறோம். இந்த உணவுகள் மலச் சிக்கலை ஏற்படுத்தி மலட்டுச் சிக்கலுக்கும் வழிவகுக்கும்! அதேபோல் ஊசி போட்டு வளர்க்கப்படும் கறிக்கோழிகளில் சிக்கன் 65 உள்ளிட்ட நாவிற்கு சுவையான உணவுகளை அதிக அளவில் உண்கிறோம். இதனால் ஆண்மைக்கு பாதிப்பு ஏற்படுவதைப்போல பெண்களின் கருப்பையிலும் கோளாறுகளை ஏற்பட்டு குழந்தையின்மை பிரச்சினை அதிகரிக்கிறது.
இவை ஒருபுறமிருக்க இன்றைய பெண்கள் பருவமெய்தும் காலங்களில் சாப்பிட வேண்டிய ஊட்டமிக்க உணவுகளை முறையாகச் சாப்பிடாததால் பின்வரும் நாட்களில் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். பல பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. நீடித்த மாதவிடாய் எனப்படும் அதிக ரத்தப்போக்கு மற்றும் பல மாதங்களாக மாதவிடாய் வராமலிருப்பது என அந்தப் பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இவற்றையெல்லாம் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதன் மூலம் மிகச்சாதாரணமாக சரிசெய்துவிட முடியும். மாதவிடாய் வராத நாட்களில் கற்றாழை ஜெல்லை நன்றாக நீரில் கழுவி எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு வரும் பெண்கள் நாட்டு வாழைப்பழத்துடன் பொடித்த ஏலக்காயைச் சேர்த்து சாப்பிட்டை நல்ல தீர்வைப் பெறலாம். அதேபோல் பெண்கள் உண்ணும் உணவுகளால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இதனால் பல பெண்களால் கருத்தரிக்க முடியாமல் போகின்றது. கருப்பை நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய்க்கோளாறு பிரச்சினைகளுக்கு கருஞ்சீரகம், மரமஞ்சள், சதக்குப்பை போன்றவற்றை பொடியாக்கிச் சாப்பிடலாம். மாதவிடாய் வராத நாட்களில் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிடுவதன்மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். கழற்சிக்காய் சாப்பிடுவதன்மூலம்கூட இந்தப் பிரச்சினையை சரி செய்யலாம்.
குழந்தையின்மை பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள் மணத்தக்காளி கீரை மற்றும் அதன் காய், பழங்களைச் சாப்பிடுவது நல்லது. அரச விதையை அரைத்து பாலில் கலந்து குடிப்பது, ஆலம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடுவது, மாதுளம் விதை, மாதுளம்பூ போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும். அரச இலைக்கொழுந்தை மையாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாள் ஆண், பெண் இருவரும் சாப்பிடுவதால் குழந்தையின்மை குறைபாட்டிலிருந்து மீளலாம். அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தாம்பூலம் தரித்தல் என்னும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையுடன் துளசி விதை அல்லது ஜாதிக்காய் சேர்த்துச் சாப்பிடுவதன்மூலம் தாம்பத்தியம் இனிமை பெறும். மேலும் இது குழந்தையின்மை பிரச்சினையிலிருந்து விடுபட உதவும். கருப்பை கோளாறுகளை சரி செய்வதில் வாழைப்பூவின் பங்கு முக்கியம். வாழைப் பூவை பொரியல், கூட்டு அல்லது வடை செய்து சாப்பிடுவதன்மூலம் கருப்பை பிரச்சினையிலிருந்து விடுபடலாம். ஆண்களுக்கும்கூட வாழைப்பூ மிகவும் நல்லது. கல்யாண முருங்கை இலை மற்றும் பூ பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். கல்யாண முருங்கை இலையை பருப்பு அல்லது உளுந்து சேர்த்து அரைத்து வடை செய்து சாப்பிடுவதன்மூலம் தீர்வு கிடைக்கும்.
Also read
இது போன்று இன்னும் பல எளிய உணவுமுறைகளின்மூலம் குழந்தையின்மை பிரச்சினையை சரிசெய்துவிட முடியும். ஆனால், இன்றைக்கு இவற்றையெல்லாம் நம்பாமல் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலன் கிடைக்காமல் பலர் ஏமாற்றுத்துடன் இருக்கிறார்கள். நமது முன்னோர் பின்பற்றி வந்த பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நலமுடன் இருக்கலாம்.
கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்,
மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.
வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.
Leave a Reply