பொய் வழக்கு! போலிக் குற்றச்சாட்டு! அசிங்கப்பட்ட பாஜக!

-ச.அருணாசலம்

எதிர்த்தால் கைது, விடுதலையானாலும் பொய் குற்றச்சாட்டில் மீண்டும் கைது, என இளம் தலைவர் ஜிக்னேஷ் மேவானி விவகாரத்தில் மோடியை திருப்திபடுத்த திரைக்கதை வசனம் எழுதியது காவல்துறை! அந்தக் கட்டுக் கதையை பகிரங்கமாக நீதிமன்றத்தில் தோலுரித்த நீதிபதி, காவல்துறையை கடுமையாக எச்சரித்தது இந்தியாவையே அதிர வைத்துள்ளது!

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது மோடி விஷயத்தில் உண்மையாகி விட்டது! அதுவும் எவ்வளவு வெளிப்படையாக சந்தி சிரிக்கும்படி நடந்துவிட்டது பாருங்கள்!

குஜராத்தின் இளம் தலித் தலைவரும் காங்கிரஸ் எம் எல் ஏவுமான திரு. ஜிக்னேஷ் மேவானி பாஜகவுக்கு சவால்விடக் கூடிய வகையில் அரசியலில் துடிப்பாக வலம் வருகிறார். அவர் திடீரென அசாம் போலீசாரால் ஏப்ரல் 20 ந்தேதி கைது செய்யப்பட்டு, அசாம் கொண்டு செல்லப்பட்டார் . மேவானியை அசாம் போலீசார் கைது செய்ய என்ன காரணம்?

ஏப்ரல் 20ந் தேதி குஜராத் மாநிலத்திற்கு வருகை தரும் மோடிக்கு, ஜிக்னேஷ் மேவானி ஒரு ட்வீட்டர் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார் என சொல்லப்படுகிறது.

ராம நவமியை தொடரந்து குஜராத்தில் பல இடங்களில் – ஹிம்மட் நகர் உட்பட- பல இடங்களில் மதக் கலவரம் வெடித்தது. முஸ்லீம் மக்களின் வாழ்விடங்களும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. ‘இந்த சமயத்தில்  குஜராத்திற்கு வருகை தரும் மோடி – கோட்சேயை தன்னுடைய கடவுளாக கருதும் – மோடி அவர்களிடம் அமைதிக்கான வேண்டுகோள் விடுக்க கேட்டுக் கொள்கிறேன். மிகப் பெரிய கோவில் கட்டும் மோடி அவர்களிடம் நாம் இதை எதிர்பார்க்கலாமா..?’ என்று நக்கலாக ட்வீட்டில் தெரிவித்திருந்தார் ஜிக்னேஷ் மேவானி!

ஏப்ரல் 19 அன்று வெளிவந்த இந்த ட்வீட் இரு சமூகங்களிடையே பகையுணர்வை தூண்டி  கலவரத்தை தூண்டமுயல்வதாக அசாமில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கொடுத்த புகாருக்காக குஜராத் பறந்து சென்று, ஏப்ரல் 19 இரவு 10 மணியளவில் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் அதிரடியாக கைது செய்து அசாமிற்கு கூட்டிச்சென்றனர்.

தகவலறிந்த காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர் ஜகதீஷ் தாக்கூர் மற்றும் பலரும் அமதாபாத் விமான நிலையம் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜிக்னேஷ் மேவானியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் ‛’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே. இவர் தான் மகாத்மா காந்தியை கொன்றார். கோட்சேவை இதயத்தில் வைத்து கொண்டு காந்தியை உதட்டில் உச்சரிக்கும் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். பலமாக இருங்கள் ஜிக்னேஷ் மேவானி உண்மை வெல்லும்’’ என சொல்லியது குறிப்பிடதக்கதாகும்! இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகும்!

வியாழக்கிழமை அசாம் கொண்டு செல்லப்பட்ட மேவானி சிறையிலடைக்கப்பட்டார். ‘எதிர்த்து குரல் கொடுப்பவர் யாராயினும் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாயடைக்க, சிறையில் தள்ளப்படுவர்’ என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது இந்த நடவடிக்கை.

இதில் வேடிக்கை என்னவென்றால், குஜராத் மொழியில் வந்த ட்விட்டர் அறிவிப்பு அசாமில் உள்ள பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிக்கு மன உளைச்சலை கொடுத்துவிட்டதாம்! குஜராத்தில் உள்ள பாஜகவினர் யாரும் இந்த டிவிட்டரால் கொந்தளிக்கவில்லை! அசாம் பாஜக நிர்வாகி  கொடுத்த புகாரின் அடிப்படையில் அசாம் போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்து குஜராத்தின் பலாம்பூரில் இருந்த ஜிக்னேஷ் மேவானியை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த கேலிக்கூத்து ஒருபுறமிருக்க யாரை திருப்திபடுத்த அசாம் போலீசார் இந்த செயலில் ஈடுபட்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூன்று நாட்கள் தங்களது கட்டுப்பாட்டில் மேவானியை வைத்திருந்த அசாம் போலீசார் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்குப்பின் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் மேவானியை நிறுத்தினர் . இருதரப்பு வாதங்களையும் செவியுற்ற நீதிபதி ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார் .

மூன்று நாட்களுக்கும் மேலாக அசாம் காங்கிரஸ், கட்சியினரும் மற்ற எதிர்கட்சிகளும் மேவானியை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்களும், பேரணியும் நடத்தி அசாமையே கதி கலங்க வைத்தனர். இந்த நிலையில்  நீதிமன்றம் தந்த ஜாமீன்  அவர்களுக்கு சிறு நிம்மதியை கொடுத்தது. ஆனால், அந்த நிம்மதியை குலைக்கும் விதமாக வெளியே வந்த மேவானியை மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்தது காவல்துறை!

 அப்படி அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றே மேவானிக்கும் தெரியவில்லை, அவரது வக்கீலுக்குமே தெரியவில்லை! கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது தான் சொன்னார்கள்! இவர் பெண் காவலரை மானபங்கப்படுத்தி விட்டார் என்று! இதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர் அனைவரும்! ஏனெனில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை! மேவானி வெளியே வந்தார். அவரை வரவேற்க வந்த அவரது ஆதரவாளர்களிடம் பேசியபடி பயணித்தார் அவ்வளவே!

குறுமதியும், குள்ள நரித்தனமும்!

ஜிக்னேஷ் மேவானியை கௌகாத்தியில் இருந்து கொக்ரஜகார் நகருக்கு  காவலர் வண்டியில் கொண்டு செல்லப்பட்டபோது, உடனிருந்த பெண் உதவி ஆய்வாளரிடம் கைவிரல் நீட்டி மானபங்கம் செய்யும் எண்ணத்தோடு தவறாக நடந்து கொண்டதாக அந்த பெண் ஆய்வாளர் “கொடுத்த” புகாரின் அடிப்படையில் F I R போடப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று அசாம் போலீசார் அறிவித்தனர். குற்றப்பிரிவு 294(ஆபாசமான வார்த்தைகள் பாடல்கள் மொழிதல்) 323 (தானாக காயபடுத்தும் எண்ணத்தோடு தாக்குதல் நடத்துதல) 353( பொது அதிகாரியை காயப்படுத்துதல்) 354 (மானபங்கப்படுத்த முயலுதல்)போன்ற பிரிவுகளில் வழக்கு தொடுத்தனர் .

பொதுவாக சிறு கோர்ட்டுகளில் உள்ள மாஜிஸ்ட்ரேட்கள் போலீசார் விருப்படி செயல்படுவது வாடிக்கையாக உள்ளது. அதே போல பார்பெட்டா நகரின் தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்ட்ரேட் CJM குற்றஞ்சாட்டப்பட்ட ஜிக்னேஷ் மேவானியை முறையாக விசாரிக்காமல் போலீஸ் சொன்னதை கேள்விக்கு இடமில்லாமல் ஏற்றுக் கொண்டு, பிணை ஏதும் கொடுக்காமல், ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடி என்று தீர்ப்பளித்து போலீஸ் காவலுக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து புதிய பிணை மனுவை மேவானி ஏப்ரல் 28ல் சமர்ப்பித்தார் . இந்த மேல் முறையீடு பார்பெட்டா செஷன்ஸ் கோர்ட்டின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை தீர விசாரித்த நீதிபதி  அபரேஷ் சக்கரவர்த்தி அதிர்ந்து போனார். இந்த வழக்கு ஜிக்னேஷ் மேவானியை காவலில் வைப்பதற்காக எழுதப்பட்ட கட்டுக் கதை, அப்பட்டமான பொய்வழக்கு (Manfactured case to keep him in detension) என்பதை விசாரணையில் உணர்ந்தார். காவல்து றையின் திரைக்கதையான FIR மற்றும் அதன் முரண்பாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டிக் காட்டி இது போலி வழக்கு என்று சாடியதோடு இந்த உண்மையை பகிரங்கமாக உடைத்து, மேவானிக்கு ரூபாய் 1000 மதிப்பில் சொந்த  ஜாமீனில்  பிணை வழங்கி அதிரடியாக உத்தரவிட்டார்.

ஜிக்னேஷ் மேவானிக்கு அளித்த பிணை உத்தரவில் நீதிபதி அபரேஷ் சக்கரவர்த்தி , இத்தகைய பொய் வழக்குகளை போடும் அசாம் காவல்துறையின் அணுகுமுறையை கண்டித்து அசாம் உயர்நீதி மன்றத்தின் பார்வைக்கு இந்தப் பிணை தீர்ப்பு உத்தரவை அனுப்பி வைத்துள்ளார் . அசாமில் ஹேமந்த பிஸ்வா சர்மா பா ஜ க முதல்வராக பொறுப்பேற்ற பின் காவல்துறையின்  அத்துமீறல்களும், போலி என்கவுண்டர்களும் பெருகி உள்ளதை சுட்டிக்காட்டி இதை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தானே முன்வந்து இந்த வழக்கை (suo-motto) நடத்தி காவல் துறையின் அத்துமீறல்களுக்கும், பொய்வழக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

”இந்த நிலை நீடித்தால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது , கேள்வி கேட்பாரற்ற போலீஸ் ஸ்டேட்டாக மாறிவிடும் அபாயம் உள்ளது’’ என்று கூறியுள்ளார்! மேலும் காவல்துறையினரின் இந்த அடாவடி செயல்களை கட்டுக்குள் கொண்டுவர காவலர்கள் பாடி காம் (Body Cam) அணிவதையும், காவல்துறை வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதையும் வலியுறுத்தி உள்ளார்.

அரசியல் நாகரீகம் சிறிதும் இன்றி , ஜனநாயக மாண்பையும் சகிப்புதன்மையும் புறந்தள்ளும் இன்றைய ஒன்றிய மற்றும் மாநிலங்களில் உள்ள பாஜக ஆட்சியாளர்கள் சட்டத்தை வளைத்தும், தவறாக உபயோகித்தும் தங்கள் அதிகாரத்தை தக்க வைக்க முயல்கின்றனர் .இந்த போக்கு எவ்வளவு தரந்தாழ்ந்து போய் உள்ளது என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக்காட்டாகி உள்ளது. மேலும், பெண் காவலர்களை இது போன்ற தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துவது அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்காகிவிடும். இது பெண் காவலர்களின் குடும்ப உறவிலும் சிக்கலை உருவாக்கக் கூடும்!

அதிகாரத்தின் பொய்களுக்கு வளைந்து கொடுக்காமல் உண்மையை வெளிக் கொண்டு வந்த நீதிபதி அபரேஷ் சக்கரவர்த்தி மக்கள் மனதில் என்றும் மரியாதைக் குரியவராக போற்றப்படுவார்! இந்த வழக்கானது பாஜகவினர் எதிர்கட்சிகளை அழித்தொழிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான உதாரணமாகும்! நாட்டு மக்களாகிய நமக்கு விழிப்பு வரவேண்டும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time