கதியற்ற நிலையில் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்!

-செழியன் ஜானகிராமன்

கசாப்புக் கடைக்காரர்களிடம் இருக்கும் கருணை கூட பல கல்லூரி நிர்வாகிகளிடம் இருப்பது இல்லை! தமிழகத்தில் சுமார் 60,000க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் கொரோனா காலச் சூழலால் வேலை இழந்தனர். பலர் 30 முதல் 60 சதவிகித சம்பளக் குறைப்புக்கு ஆளாகினர். சூழல்கள் தற்போது மேம்பட்டாலும், இவர்களின் நிலையில் பெரிய மாற்றம் இல்லை!

கொரோனா அலையில் அதிக பாதிப்புக்குள்ளானவர்கள் தனியார் கல்லூரி (பள்ளிகள் கூட)  பணிபுரிபவர்கள் தான்! சொல்ல முடியாத அவர்களின் சோகங்கள் இன்றும் தொடர்வது தான்  வேதனையாகும். அதற்குள் நான்காவது அலை என்று சொன்னால் இன்னும் மோசமான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இது குறித்துப் பல தனியார் கல்லூரியில் பணிபுரிபவர்களிடம் பேசிய பொழுது. ஆச்சரியப்படும் நிகழ்வுகள் நடந்துள்ளன என தெரிய வந்தது.  பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்கள்  பெயரில் கல்லூரி நிர்வாகம் வங்கியில் கடன் வாங்கி வருவதாக  ஒரு ஆசிரியர் தெரிவித்தார்.

”உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொள்கிறோம் அதனால் கையெழுத்துப் போடுங்கள்” என்று சொல்வார்கள். ”ஏன் எங்கள் பெயரில் கடன் நீங்கள் ஏன் வாங்குகிறீர்கள்” என்று கேட்டால், வேலையை விட்டு நீக்கி விடுகிறார்கள். அப்படி எங்கள்  கல்லூரியில் கேள்வி கேட்ட பேராசிரியர் ஒருவரை அவரே வேலையை விட்டுச் செல்லும் வகையில் நடத்தினார்கள்.

என்னுடைய பெயரிலும் கல்லூரி கடன் வாங்கியுள்ளது வாங்கிய கடனை நிர்வாகம் கட்டுகிறதா என்று கூட எனக்குத் தெரியாது. கட்டவில்லையென்றால் என்னுடைய  சிபில் ஸ்கோர் குறையும், நான் மேற்கொண்டு கடன் வாங்க முடியாது. ஆனால்   மீறி அவர்களை கேள்வி கேட்க முடியாது. கேட்டால் அந்த பேராசிரியர் நிலை தான் எனக்கும் ஏற்படும்..

வேலையை விட்டுப் போகவும் முடியாது அப்படிச் சென்றால் வெளியே வேலையும் கிடைக்காது. அதனால் நிர்வாகம் என்ன சொல்கிறதோ, அப்படியே கேட்க வேண்டியுள்ளது’’ என்று சொன்னவர், ”ஒரு வகையில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவது அடிமை முறைதான்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தனியார்ப் பள்ளியின் நிலை 

மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்படுவது தனியார்ப் பள்ளிகளில்தான்.. அதுவும் சென்னை தவிர்த்து ஊர் பக்கம் இருக்கும் பள்ளிகளில், கிராமப்புறத்தில் இருக்கும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் நிலை மிக மோசமாக உள்ளது.  மாதம் 5,000 முதல் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் சிலரை கரோனா முற்றிலும் கைவிட்டுவிட்டது.

பள்ளி நிர்வாகம் பணிபுரிந்த பலரையும்  நிறுத்திவிட்டது. ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டது. அதுவும் எதற்கு என்றால், ஆன்லைன் வகுப்பு எடுக்க ஒருவராவது வேண்டும் என்பதால், அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களுக்கும் பாதி சம்பளம் தான்!

ஒரு ஆசிரியரிடம் பேசிய போது, ”நான், என்னுடைய தங்கை இருவரையும் வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்கள். அப்பா டீ கடை வைத்து இருந்தார். அவரும் கரோனா காரணமாகக்  கடையை மூடிவிட்டார். மிகப் பெரிய பொருளாதார பிரச்சனையில் வீடு இருந்தது. சேமிப்பு என்பது எங்கள் போன்ற குறைந்த சம்பளக்காரர்களால் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாகும். ஏனென்றால் வாங்குவதே பற்றாகுறை சம்பளம் தான்!” என்றார்.

தமிழகம் தழுவிய நிலையில் விசாரித்த போது, சில பள்ளி ஆசிரியர்களும், கல்லூரி ஆசிரியர்களும் 100 நாட்கள் வேலை திட்டத்திற்கு போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு சிலர் கட்டிட வேலைக்கு கூட சென்றனர். காய்கறி, பழம் வாங்கி விற்கும் நிலைக்கு சென்றனர் சிலர். ஒரு கல்லூரி ஆசிரியர் பனையேறி வேலையை செய்ய முயன்று மேலே இருந்து கீழே விழுந்து இறந்து போனார். இன்னும் சிலர் எந்த வேலை கிடைத்தாலும் செல்லக் கூடிய நிலையில் வேலை தேடி வருகின்றனர். படிப்பு சொல்லித் தரும் ஆசிரியர்களை இப்படி எல்லாம் அல்லாட வைக்கும் சமுகச் சூழலை நினைத்தால் உள்ளம் கொந்தளிக்கிறது.

மன உளைச்சலால் மரணித்தவர்கள்!

உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் சொன்னது, உண்மையில் இவர்கள் நிலை ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நிலையை விட மோசமாக இருந்தது

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்  கூட வீட்டிலிருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் எடுக்க முடியும். அதே கல்லூரியில் பணிபுரியும் எங்களைப் போன்ற உடற்கல்வி ஆசிரியரான நாங்கள், வீட்டிலிருந்து ஆன்லைன் வழியாக உடற்கல்வி கற்றுக் கொடுக்கமுடியாது. அதனால் கல்லூரி நிர்வாகம் பல உடற்கல்வி ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டது.

நீக்கப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டனர். பொருளாதாரம் மிக மோசமாக மாறியது. எங்களுக்கு என்று வாட்ஸ்ஆப் குழு உண்டு;. அதில் அவ்வப்பொழுது அங்குமிங்குமாக உடற்கல்வி ஆசிரியர் இறப்பு என்று செய்தி வந்து கொண்டே இருக்கும். படிக்கும் எனக்கும்  மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் தினமும் வாட்ஸ் ஆப் திறக்கவே பயமாக இருந்தது.

இருக்கும் ஒரு சில உடற்கல்வி ஆசிரியர்களுக்குமே கூட 50 சதவிகிதம் சம்பளம்  .குறைத்து விட்டார்கள். ஆனால், வீட்டின் வாடகை, கடன்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இந்த பண பிரச்னையை சமாளிக்க  இன்னும் சில வங்கிகளில் கடன் அட்டை வாங்க முயன்றேன். அப்படி இப்பொழுது என்னிடம் 4 கடன் அட்டை சேர்ந்துவிட்டது. அது மட்டும் இல்லாமல் கடன் அட்டையில் இருக்கும் பணமும் செலவாகிவிட்டது.

அதற்கு மாதா மாதம் கட்டவேண்டிய தொகைக்கு வட்டி அதிகமாகி வருகிறது. என்னைப்போல என் சில நண்பர்களும் கடன் அட்டை சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்கள்.

பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் 

”சில கல்லூரிகளில் நிர்வாகம் பணம் பிரச்சனையில் உள்ளது அதனால் உங்களுடைய சம்பளம் தற்பொழுதுக்கு குறைத்துக் கொள்கிறோம். பிறகு நிலைமை சரியானதுடன் முழு சம்பளம் தருகிறோம். இருக்க விரும்புபவர்கள் இருங்கள். விருப்பம் இல்லையென்றால் வேலையை விட்டுச் சென்றுவிடுங்கள்” என்று நேரடியாகச் சொல்கின்றனர். ஒரு சிலர் வேலையை விட்டு விட்டனர். ஆனால், நான் வீட்டு வாடகை, பிள்ளைகள் பள்ளி கட்டணம், அடுத்த வேளை சாப்பாடு ஆகியவற்றை நினைத்து எழுதிக் கொடுக்கவில்லை. வேலையில் தொடர்கிறேன் என்று கல்லூரியில் சொல்லிவிட்டேன்”என்றார் ஒரு பேராசிரியர்.

இது அவர்களுக்கு இன்னும் வசதியாக மாறிவிட்டது. ‘ஒரு அடிமை சிக்கிவிட்டான்’ என்று நினைத்துவிட்டார்கள். பல கட்டுப்பாடு போடத் தொடங்கினார்கள். ”லீவு என்பது இனிமேல் கிடையாது. அப்படி யாராவது விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் குறைத்துக் கொள்வோம். அதே போல் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை அவசர வேலை காரணமாக 1 மணிநேரம் பர்மிஷன் எல்லாம் இனிமேல் கிடையாது. அப்படி எடுத்தால் அதற்கும் சம்பளத்தில் குறைத்து விடுவோம்.

இனிமேல் கல்லூரி பேருந்து இயங்காது. பதவி உயர்வு, சம்பள உயர்வு என்பது முற்றிலும் இல்லை” என்று எங்களை அடிமை போன்று நடத்துகிறார்கள்.  ஒரு மனிதனுக்கு மாதம் ஒரு முறையாவது லீவு எடுக்கும் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்கவில்லை. இப்படியே இரண்டு வருடம் கடந்து இதோ  மூன்றாவது வருடமும்  இதே நிலையில்தான் கல்லூரி இயங்குகிறது.

ஆனால், கல்லூரியில் சேரும் மாணவர்கள் இந்த ஆண்டு அதிகரித்து தான் உள்ளனரே அன்றி குறையவில்லை. கல்லூரி நிர்வாகம் கரோனா காரணத்தைச்  சொல்லி எங்களைப் பந்தாடி விட்டார்கள். குறைத்த சம்பளத்தை மீண்டும் ஏற்றவில்லை! எங்கள் கல்லூரியிலும் சேரவேண்டிய அளவு அட்மிஷன் நடைபெற்றது. நிர்வாக செலவு பாதியாகக் குறைந்தது. காரணம், ஆன்லைன் பாடம் எடுக்கச் சொன்னதால், நடைமுறை செலவு கல்லூரிக்கு இல்லை.

அடிப்படை வேலையில் இருப்பவர்கள் 

பள்ளி, கல்லூரி என்று எடுத்துக் கொண்டால் ஆசிரியர், பேராசிரியர் என்பதைத் தவிர அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் என்று இன்னும் நிறைய பணியாளர்களின் நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது!  மிகக் குறைந்த சம்பளத்தை வாங்கி பணிபுரியும் இந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பே இல்லை.

தமிழகத்தில் தனியார், பள்ளி, கல்லூரி நிர்வாகங்களின் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதை சரியாக கொடுக்கிறார்களா..? என்று கண்காணிக்க வேண்டும். கொடுக்காத நிர்வாகங்களை தண்டிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வகுப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் போதுமான ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படுகிறதா என்றெல்லாம் கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும்.

கட்டுரையாளர்;செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time