எதனால் மின்வெட்டு? யார் காரணம்?

-ச.அருணாசலம்

‘அனைத்தும் தனியார் மயம்’ என்பதே பாஜக அரசின் தாரக மந்திரம்! அதானியும், டாடாவும் தான் மின் உற்பத்தி செய்வார்கள். அவர்கள் வசம் தான் நிலக்கரி சுரங்கங்களை தருவார்களாம்! அவர்களை நம்பியே மாநில அரசுகள் கைக்கட்டி நிற்க வேண்டுமாம்! தனியார் நிறுவனங்கள் தழைத்தோங்குவது ஒன்றே குறிக்கோளாம்!

கடுமையான கோடை வெயில் மக்களை வறுத்தெடுக்கும் வேளையில், தமிழகத்தில் மின்வெட்டு தற்பொழுது அறிவிக்கப்படாத நிகழ்வாக தொடர்கிறது. ”மக்கள் ஒன்றும் கவலை கொள்ள தேவையில்லை” என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறினாலும், மின்வெட்டு சென்னை புறநகரில் தொடங்கி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ,திருவண்ணாமலை கடலூர்,கன்னியாகுமரி என்று பல்வேறு மாவட்டங்களிலும் மின்வெட்டு அதிகரித்து மின்வாரிய ஊழியர்களுடன் பொதுமக்கள் கைகலப்பில் இறங்குமளவிற்கு பிரச்சினை ஆகியுள்ளது.

”அன்றாட மின்தேவை 15,500  மெகாவாட்டாக இருந்து வரும் தமிழகத்தில் நிலக்கரியிலிருந்து மின்உற்பத்தி செய்யும் தெர்மல் தொழிற்கூடங்கள் மொத்தம் ஐந்து உள்ளன! இவற்றில் தூத்துகுடியில் இருக்கும் இரண்டு உற்பத்தி கூடங்கள் சில காரணங்களால் மின்  உற்பத்தியில் இல்லை. மீதமுள்ள மூன்று தெர்மல் கூடங்களும் சேர்ந்து உற்பத்தி செய்வது மொத்தம் 3380 மெகாவாட் மின்சாரமே. இவற்றுக்கான நிலக்கரி கையிருப்பு இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கே போதுமானதாக உள்ளது , நிலக்கரி வரத்து தாமதமானாலோ, தடைப்பட்டாலோ மின் உற்பத்தியும் தடைபடும்” என டான்ஜெட்கோ பொறியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 7,149 மெகாவாட் மினசாரம் நடை முறையில் 4607 மெகாவாட் அளவில் தான் கிடைக்கிறது. இந்த பற்றாக்குறை ஒருபுறமிருக்க, அதிலும் கடந்த வாரம் திடீரென்று 750 மெகாவாட் அளவிற்கு துண்டு விழுந்தது. இதையே, செந்தில் பாலாஜியும் மின்வெட்டிற்கான காரணமாக கூறியுள்ளார்.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரமோ அல்லது  மூன்று தெர்மல் கூடங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ இவையெல்லாமே நிலக்கரி கையிருப்பைப் பொறுத்தே உள்ளது என்பது கசப்பான உண்மை.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு மின்வெட்டு உள்ளது என்று “அறிவாளி” அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக உள்ளது . ஏனென்றால், மின்வெட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 22.2%, ராஜஸ்தான் 19%, ஜம்மு காஷ்மீர் 16% உத்தர பிரதேசத்தில் 26% அளவிற்கு மின்வெட்டு உள்ளதை மறந்தாரா அல்லது மறைக்கிறாரா தெரியவில்லை.

வட மாநிலங்களான உ.பி, ஹரியானா,ராஜஸ்தான் பஞ்சாப் ஆகியவற்றில்  மின் பற்றாக்குறை தினசரி 1500 முதல் 3000 மெகாவாட்  அளவில் உள்ளது . பவர்கட் அல்லது மின்வெட்டு  இந்த மாநிலங்களில் தினசரி 4 மணி முதல் ஏழு மணி நேரம் வரை நீடிக்கிறது.

ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அன்றாட மின்வெட்டுடன் தொழிலகங்களுக்கு  வாரத்திற்கு இரண்டு நாட்கள் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.அகில இந்திய அளவில்  மின் பற்றாக்குறை ஏப்ரல் மாதத்தில் 70 மில்லியன் யூனிட் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் மின்வெட்டு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் அதிகமிருந்தும் , நிலக்கரி உற்பத்தியை சீரமைத்துவிட்டோம் என்று பியூஷ் கோயல் தம்பட்டம் அடித்த பின்னரும் போதுமான நிலக்கரி உற்பத்தியோ, உற்பத்தி கூடங்களில் போதுமான நிலக்கரி கையிருப்போ இல்லாதபொழுது கடந்த அக்டோபர் மாதத்திலேயே நிலக்கரி பற்றாக் குறையினால் மின் உற்பத்தி பெருமளவு தடைபட்டது.

அப்பொழுது மெத்தனமாக இருந்த மோடி அரசு அதற்குப் பிறகும் பல வல்லுனர்கள் மற்றும் எதிர்கட்சியினர் குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்தும் எவ்வித திட்டமிடலோ, எதிர்கால கண்ணோட்ட நோக்கோ இன்றி இருந்தது! எந்தவித  ஒருங்கிணைந்த நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அரசு மீண்டும் கவைக்குதவாத காரணங்களை  இன்றைய நிலைக்கு காரணமாக கூறிக் கொண்டிருக்கிறது.

சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கை கோளாறால் வந்ததே இந்த பிரச்சினை என்பது தான் நூறு சதவிகித உண்மை! எல்லாம் தனியார் தான் செய்ய வேண்டும் என பாஜக அரசு நினைக்கிறது. சுரங்க நிலக்கரி உற்பத்தியை, தனியார் முதலாளிகள் அதிக செலவைக் காரணம் காட்டி நிறுத்திவிட்டனர்! இதனால், எதிர்பார்த்த நிலக்கரி உற்பத்தி எட்டப்படவில்லை. இப்பொழுது சர்வதேச நிலக்கரி விலை எகிறுவதால் தனியார்முதலாளிகள் நிலக்கரி இறக்குமதியும் செய்ய மறுக்கிறார்கள். இதனால் மின் உற்பத்தியும் செய்வதில்லை, மாநில அரசுகளுடன் போட்ட மின் வினியோக ஒப்பந்தத்தையும் தனியார் கம்பெனிகளான அதானி மற்றும் டாடா நிறுவனத்தினர் மதிப்பதில்லை! இந்த நிலையே கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உள்ள யதார்த்த நிலைமையாகும்!

கடந்த ஏப்ரல் 26ந்தேதி எடுத்த கணக்கின்படி 201 GW மின் தேவை நாட்டில் உள்ளது. அதில்   8.2 GW குறைவாக நமது உற்பத்தி உள்ளது . இந்த பற்றாக்குறை வரும் நாட்களில் 30GW ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நம்மிடம் 400 GW உற்பத்தி செய்யும் நிறுவன சக்தி-installed capacity- உள்ளது . அதை வைத்துக் கொண்டு நம்மால் 200GW உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது வேதனை மட்டுமல்ல, நமது எச்சரிக்கை உணர்வையும் இது கேலிக்குரியதாக்குகிறது.

மின் உற்பத்தி நிலையங்களில் குறைந்த அளவே நிலக்கரி கையிருப்பு உள்ளதும், நிலக்கரி உற்பத்தியில் விளக்கவொண்ணா தேக்கநிலை உள்ளதும் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்ற கணக்கில் உள்ளது.

கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் 603 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. காரணம் ரயில்வே நிர்வாகம் நிலக்கரி ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட இடங்களை அடைவதற்கு ஏதுவாக இத்தனை ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்யோசனை  என்பதே பாஜ ஆட்சியாளர்களுக்கு புரியாத விஷயமா?

அல்லது எதைச்செய்தாலும் செய்யாவிட்டாலும் பக்த கோடிகள் ஆதரவு இருக்கும்வரை சமாளித்து விடலாம் என்ற மமதையா?

அக்டோபர் மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்த பின்னரும்,

கோடை காலத்தில் தேவை அதிகமாகும் என்பது புரிந்த பின்னரும்,

மாநிலங்களுக்கிடையேயும்,ஒன்றிய எரிசக்தி அமைச்சகத்திடையிலும் ரயில்வே அமைச்சகம் இடையிலும் எந்தவித ஆலோசனைகளோ, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளோ எதுவுமே திட்டமிடப்படவில்லை! இவை நடந்தால் தானே செயல் வடிவம் கிடைக்கும்!

ஏன் இப்பொழுது ரேக்குகள் (சரக்கு ரயில் பெட்டிகள்) போதுமான அளவில்லை என்று அங்கலாய்க்கின்றனர்? இதற்கு யார் பொறுப்பு?

கடந்த கோடை காலத்தில் (2021) தெர்மல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு -inventory stock- நிர்ணயிக்கப்பட்ட அளவில் 60 முதல்70 சதவிகிதத்திற்கும் மேலாக இருந்தது! ஆனால் இப்பொழுது கையிருப்பு 30-33 சதவிகித அளவே உள்ளது!

மொத்தமுள்ள 173  நிலக்கரி மின் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களில்  105 நிறுவனங்களில் நிலக்கரி கையிருப்பு அளவு 25% க்கும் குறைவாகவே உள்ளது.

மோடி அரசின் மெத்தனத்தையும், முன்யோசனையற்ற அலட்சியத்தையும் அன்றி வேறெதைக் காட்டுகிறது இது!

சர்வதேச நிலக்கரி விலை இன்று எகிறிக்கொண்டிருந்தாலும் நமது மின் உற்பத்தியில் அவை பெரும் பங்கு வகிக்காது , காரணம் நமது தேவையில் அவற்றின் அளவு வெறும் 8 சதவிகிதம் மட்டுமே!

ஆனால், நமக்கு வரும் செய்திகள் கூறுவது என்னவெனில், ஒன்றிய அரசு மாநில அரசுகளை அதிக விலை கொடுத்து சர்வதேச நிலக்கரியை இறக்குமதி செய்ய நிர்ப்பந்தம்  கொடுப்பதுடன், அவற்றை உள்ளூர் நிலக்கரியுடன் 10% கலந்து உபயோகிக்கவும் அறிவுறுத்துகின்றனர். அதிக மின்உற்பத்திக்காக உள்ளூரில் கிடைக்கும் நிலக்கரியை மாநில அரசுகள் தனியார் மின்உற்பத்தி கூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர் . சர்வதேசவிலை எகிறுவதால், உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு கொடுக்கும் பூஸ்ட் மாநில அரசுகளின் நிதி நிலையை காலியாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

வெளிநாட்டு நிலக்கரியை கருத்தில் கொண்டு, துறைமுகங்களுக்கு அருகில் நிறுவப்பட்ட தனியார் மின் உற்பத்தி  நிறுவனங்களுக்கு உள்ளூர் நிலக்கரி சுரங்கங்களின் லைசன்ஸ் வழங்கப்பட்டன!

ஆனால், வெளிநாட்டு நிலக்கரி விலை அன்று குறைவாக இருந்தது. அதனால், உள்நாட்டு உற்பத்தியை கிடப்பில் போட்ட தனியார் நிறுவனங்கள் இன்று வெளிநாட்டு நிலக்கரி விலை அதிகமானதால் மின் உற்பத்தியையே நிறுத்திவிட்டனர் . அவர்களுக்கு உதவ மாநில அரசுகளை தூண்டுகிறது ஒன்றிய அரசு! இவர்களுக்கு மக்கள் மீதான விசுவாசத்தை விட தனியார் மீதான விசுவாசமே உயிர் மூச்சாக உள்ளது!  தரகு வேலைக்கும் இந்த போக்கிற்கும் வித்தியாசம் உள்ளதா?

நிலக்கரி கையிருப்பின்மையும், மின் பற்றாக்குறையும் மாநில அரசுகளை ஒரு இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது. மாநில மக்களின் வெறுப்பை, தொழில்துறையின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள மாநில அரசுகள் வேறு வழியின்றி தனியார் மார்கட்டில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

ஒருபுறம் அதிகவிலை கொடுத்து வெளிநாட்டு நிலக்கரி வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் அவற்றை கொடுக்க வேண்டும். மறுபுறம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி மக்களுக்கு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்ற இருதலைக் கொள்ளி நிலையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதே மோடி அரசின் சீர்திருத்த கொள்கை என்றால் மிகையில்லை!

மோடி அரசின் பவர் செக்டார் ரிபார்ம்ஸ் என்பதான எரிசக்தி துறையின் சீரமைப்பு என்பது, உண்மையில் மாநில அரசுகளின் முதுகெழும்பை உடைப்பதே!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time