மருத்துவக் கல்வியில் என்ன நடக்கிறது? யார் பொறுப்பு?

-முகமது காதர் மீரான்

மதுரை மருத்துவ கல்லூரி உட்பட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் மகரிஷி சாரக் ஷாபாத்தின் சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டு உள்ளது! மருத்துவ கல்வியின் மனித நேயத்திற்கு முற்றிலும் மாறான, பிற்போக்குத்தனமான இந்த போக்கு குறித்து இத்தனை நாட்களாக அமைதி காத்தது ஏன்?

பொதுவாக அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மருத்துவ வகுப்புகள் தொடங்கும்போது, இப்போகிரடிக் உறுதிமொழி (Hippocratic Oath) யை எடுக்க வைப்பது வழக்கம். இந்த கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு (NEET- UG 2021) செப்டம்பரிலேயே நடந்து முடிந்து விட்டாலும், இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளால் மிகவும் தாமதமாகி முதலாமாண்டு வகுப்புகள்  பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்கப்பட்டன.

ஏற்கனவே சில மாதங்களாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவரும் நிலையில், Induction Program/Whitecoat ceremony என்று அழைக்கப்படும் முதல் நாள் வகுப்பு தொடக்கவிழா ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 30 ம் தேதி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில்முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்காக நடைபெற்ற இப்படிப்பட்ட ஒரு விழாவில்தான், நிதித்துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களும், வணிகவரித்துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த காரணத்தால் இந்த சமஸ்கிருத உறுதி ஏற்பு கவனம் பெற்றது! அதுவும் குறிப்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சியடைந்து விளக்கம் கேட்டதால் தமிழகம் தழுவிய கவனம் பெற்றது!

புதிய மருத்துவ கல்வி கொள்கையில்  தற்போது ஆங்கில மருத்துவ முதலாம் ஆண்டு  பயிற்சியில் இதுவரை மரபாக பின்பற்றி வந்த ‘ஹிப்போகிரேட்டஸ்’ உறுதிமொழியை நீக்கிவிட்டு ‘சாரக் ஷாபாத்’ என்ற மருத்துவ உறுதிமொழியை திணிப்பதற்கு இந்திய மருத்துவ அசோஷேசியன் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது!  காரணம், சாரக் ஷாபாத் உறுதிமொழியானது, ‘மருத்துவத்தை சாதிய மற்றும் பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகிறது’ என்பதாகும்!

கிரேக்க ஞானியும், மருத்துவ மேதையுமான ஹிப்போகிராட்டின் உறுதி மொழியையே உலகம் முழுமையும் உள்ள ஆங்கில மருத்துவர்கள் பின்பற்றி டாக்டர் தொழிலுக்குள் பிரவேசிக்கின்றனர்.

‘மனித குலத்திற்கு சேவையாற்றுவதே என் நோக்கம்! நோயாளியின் நலனும், ஆரோக்கியமுமே என் குறிக்கோள். நோயாளியின் தனிப்பட்ட பிரைவேசியை நான் பாதுகாப்பேன். அவர் உடல் தொடர்பான ரகசியங்களை கண்ணியமாக பாதுகாப்பேன். எந்த நோயாளியையும் வயது, நிறம், இனம், குலம், பாலினம், அரசியல், சமூக சார்புகள் ஆகியவை சார்ந்து அணுக மாட்டேன்’ என்பதே ஹிப்போகிராட்டின் உறுதி மொழியாகும்.

மதுரை சம்பவத்தை தொடர்ந்து மே 1 ம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,“மதுரை மருத்துவக்கல்லூரியின் டீன்ஏ. ரத்தினவேலு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாகவும், அவர் ‘இப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சப்த்’ ஐ ஏற்க வைத்தமைக்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த செய்திக் குறிப்பு தான் இவ் விடயத்தை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission)  ஏற்படுத்தப்பட்டதிலிருந்தே இந்த ஆணையம் மருத்துவத் துறையை காவிமயமாக்க முயற்சிப்பதாக கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் உள்ளன.

இது குறித்து நமது அறம் இதழில்,

மருத்துவ கல்வியிலும் இந்துத்துவ சித்தாந்தமா?

என்ற கட்டுரை வெளி வந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஹிப்போகிரடிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்க பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. இந்த நிலையில், தமிழகம் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

அதனை தொடர்ந்து மக்களவையில் மார்ச் 25ம் தேதி ஒரு கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் மருத்துவர் பாரதி பவார் அவர்கள் “தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இப்போகிரடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை கட்டாயமாக்கும் எவ்வித பரிந்துரையும் தற்போதைக்கு இல்லை” என்று குறிப்பிட்டார். (மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதிலை படிக்க : http://164.100.24.220/loksabhaquestions/annex/178/AU3744.pdf )

விவகாரம் இதோடு முடிந்துவிடவில்லை. தேசிய மருத்துவ ஆணையம் மார்ச் 31 ஆம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், “ஒவ்வொரு  மாணவரும் மருத்துவக்கல்வியில் சேரும்பொழுது, மாற்றியமைக்கப்பட்ட மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை  ஏற்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது.” என் இருந்தது! மேலும், இந்த சுற்றறிக்கையானது அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக்கல்லூரிகள் ஆகியவற்றிற்காக வெளியிடப்படும் சுற்றறிக்கை என்றும், இதை  நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.”

( தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையை வாசிக்க : https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/Implementation.pdf     )

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட, தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் (National Medical Commission Act 2019) பிரிவு 10(1)(b) ஆனது, மருத்துவத்துவ துறையின் சகலத்தையும் கட்டுப்படுத்ததக்க அதிகாரத்தை  தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கிறது. இவ்விதிகளின்படி, தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் படித்தால் மட்டுமே MBBS மற்றும் பிற நவீன மருத்துவ இளங்கலை/முதுகலை பட்டங்களை பெற முடியும். அதாவது, இதன் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதும், தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ பட்டங்களை கொடுப்பதும் தேசிய மருத்துவ ஆணைய சட்ட விதிகளின் படியாக கொண்டு வரப்பட்டு உள்ளது.

மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை  MBBS மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்துடன் சேர்த்து இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வெளியிடப்பட்ட மார்ச் 31 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையானது, தமிழக அரசிற்கும், டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் பொருந்தும். மேலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும்.

இந்த சுற்றறிக்கை வெளியானதிலிருந்து, கடந்த ஒரு மாதத்தில், ‘சர்ச்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்கவேண்டாம்’ என்று எவ்வித சுற்றறிக்கையோ, ஆணையோ மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடமிருந்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு (டீன்) எழுதப்பட்டதாக தெரியவில்லை. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகமும், ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்கத் தேவையில்லை’ என்று மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தவில்லை.

குறைந்தபட்சம்,தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடமிருந்தோ, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திடமிருந்தோ, தமிழக அரசின் சுகாதாரத்துரையிடமிருந்தோ, ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு கடிதம் எழுதியிருந்தால்கூட இவ்வளவு பெரிய சர்ச்சை வந்திருக்காது.

மருத்துவக் கல்வியில் சமஸ்கிருத உறுதி மொழி விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக வெடிக்க, இது குறித்து  தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, உரிய நேரத்தில் மறுப்பு தெரிவிக்காமல், கமுக்கமாக அமைதி காத்த  மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபுவும்,  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யனும், சுகாதராத்துறை முதன்மை செயலாளர் இராதா கிருஷ்ணனுமே பொறுப்பாவர். குறைந்தபட்சம் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த சுற்றறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனுடைய கவனத்திற்கு கொண்டு போய் விவாதித்து இருக்க வேண்டும்! ஆக, விசாரிக்கப் பட வேண்டியவர்களும், விளக்கம் சொல்ல வேண்டியவர்களும் இவர்களே! இவர்களின் கள்ள மெளனம் களையப்பட வேண்டும்!

பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திலிருந்து கடந்த ஒரு மாதமாக எவ்வித தெளிவுபடுத்தலும் இல்லாத நிலையில்,தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ஏ. ரத்தினவேலு அவர்கள் செயல்பட்டுள்ளார்கள். சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படும் விடயம் சர்ச்சையான பிறகு,சுகாதாரத்துறை மீது அவப்பெயர் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு டீன்  ஏ.ரத்தினவேலு அவர்கள் பலிகடா ஆக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகூட பரவாயில்லை. இந்த சர்ச்சைக்கு முழுமுதல் காரணமான மருத்துவக்கல்வி இயக்குனர் மரு. நாராயணபாபு அவர்களே, மரு.ஏ. ரத்தினவேலு மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப் பட்டுள்ளது எவ்வகையில் நியாயம்?

சரி மதுரை மருத்துவக் கல்லூரியில் மட்டும்தான் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டதா என்று கேட்டால், இராம நாதபுரம் உள்ளிட்ட இன்னும் சில மருத்துவக்கல்லூரிகளிலும் இந்த சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

அப்படியிருக்கையில் அந்த மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்கள் ஏன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படவில்லை? இது போல மேலும் எத்தனை மருத்துவக் கல்லூரிகளில் சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது என்று என விசாரணை நடத்த அரசு ஏன் உத்தரவிடவில்லை? இவ்வாறு நடந்த தவறுக்கு காரணம் என்ன என்று ஆராய முன்வராமலும், மீண்டும் இத்தகைய தவறுகள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்காமலும் இருந்துவிட்டு ஒரே ஒரு அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மீது பழி சுமத்தி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

இதை விட கேலிக்கூத்து மாணவர் அமைப்புகளைக் கொண்டு பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி ஏதோ மாணவர்களே தன்னிச்சையாக முடிவெடுத்து புதிய உறுதி மொழியை ஏற்றது போல பேச வைத்திருக்கின்றனர். பாவம் மாணவர்கள்! இந்த நாடகத்திற்கு ஒரு பாவமும் அறியாத மாணவர்களை பலிகடா ஆக்குவது பித்தலாட்டத்தின் உச்சமாகும்!

கட்டுரையாளர்;  முகமது காதர் மீரான்,

மூத்த மருத்துவர் மற்றும் Author of Patients’ Rights India,  ‘இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time