லாபகரமான பொதுத் துறை நிறுவனங்களை – விற்கவே கூடாத தேசத்தின் மாணிக்க மகுடமான எல்.ஐ.சியை – நாட்டு மக்களின் பொதுச் சொத்தை – அடிமாட்டு விலைக்கு விற்கிறது பாஜக அரசு!
காலத்தை வென்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் தலையானது எல்.ஐ. சி எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும் .
இந்தியா விடுதலை அடைந்த பொழுது நாட்டின் மக்கள் தொகை 34.5 கோடியாகவும், தனி நபர் வருமானம் தலா 250/- ரூபாயாகவும் மிக ஏழ்மை நிலையில் இருந்தது. படிப்பறிவோ மக்கள் தொகையில் 12 சதவிகிதமே இருந்தது. அந்த சூழலிலும் சமூக பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்த பிரதமர் நேரு , ‘காப்பீடு’ – Insurance- என்ற கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை உயர்த்திப்பிடிக்க முன்வந்தார் !
இப்படித்தான் எல் ஐ சி என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 1956ம் ஆண்டு பிறந்தது.
தீப ஒளியை- வாழ்வு என்னும் விளக்கை- அணையாது காப்பாற்றும் இரு கைகளான எல் ஐ சி
அன்றிலிருந்து சாதாரண இந்திய மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்துள்ளது. 1956 முதல் 2011 வரை ஒன்றிய அரசு இந் நிறுவனத்திற்கு முதலீடாகவும மற்ற வகையிலும் கொடுத்த தொகை வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே.
ஆனால், ஆண்டு தோறும் எல் ஐ சி ஒன்றிய அரசிற்கு கொடுக்கும் டிவிடென்ட் தொகையோ பல்லாயிரம் கோடி!
இந்திய மக்களின் ஆதரவால் , சேமிப்பால் (29 கோடி பாலிசிதாரர்கள் கொண்ட எல் ஐ சி)அவர்களது உழைப்பால் இன்று 39 லட்சம் கோடி மதிப்புள்ள மாபெரும் நிறுவனமாக வளர்ந்த கதை அனைவருக்குமே தெரியும்!
2014ல் ஆட்சிக்கு வந்தவர்கள் அன்று முதலே இந்தியா பிறந்து இப்பொழுது ‘நயா இந்தியா’ வாக நடை போடுவதாகவும் கதை விடுகின்றனர் . அதன் ஒரு பகுதியாகவே பொதுத்துறை நிறுவனங்களையும் , துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் கனிம வளங்களையும் சுரங்கம் மற்றும அதன் உரிமைகளையும், அதன் பெருமை அறியாமல் விற்று காசாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மானிட்டைசேஷன் (பொதுச்சொத்தை விற்று பணமாக்குதல்) என்ற கொள்கை தேசீய பணமாக்கல் திட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் அங்கமாக எல் ஐ சி யை விற்று ஏப்பம் விடுவதன் முதல் படியாக குறிப்பிட்ட அளவு எல் ஐ சி பங்குகளை தனியாருக்கு(பணக்கார முதலாளிகளுக்கு) விற்பது என்று முடிவெடுத்தனர்.
எல் ஐ சி ஊழியர்கள் மற்றும் பாலிசிதார்ர்களின் பலத்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சேணம் போட்டுவிட்ட மட்ட குதிரை போல் ஒன்றிய அரசு முதலில் ஆரம்ப பொது விற்பனை (Initial Public Offer IPO) மூலம் 22.1375 கோடி பங்குகளை விற்று பணம் திரட்ட முயற்சிக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளுக்கான மக்களின் ஆணையம் -Public Commission on Public Sector and Public Services PCPSPS என்ற ஒரு அமைப்பு, பல வல்லுநர்களை, பல முன்னாள் அதிகாரிகளை,நீதியரசர்கள,கல்வியாளர்களை,பேராசிரியர்களை, சமூக ஆர்வலர்களை மற்றும் சிந்தனையாளர்களை உறுப்பினர்களாக கொண்டது இந்த ஆணயம்! மே மாதம் 4ந்தேதி நடக்கப் போகும் விற்பனை பித்தலாட்டமானது, கறைபடிந்தது, இதன்மூலம் இந்திய அரசுக்கு 54,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த பங்கு விற்பனையை மோடி அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
முன்னாள் ஒன்றிய அரசின் எரிசக்தி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையின் மூத்த செயலாளர் திரு. E.A.S . சர்மா, முன்னாள் கேரளா நிதி அமைச்சர் திரு. தாமஸ் ஐசக், முன்னாள் திட்டக்குழுமத்தின்(Planning Commission) உறுப்பினர் S.P. சுக்லா போன்றோர் இவ்வமைப்பின் உறுப்பினர்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொடுக்கின்ற அழுத்தத்தினால் மோடி அரசின் நிதி அமைச்சகம் எல் ஐ சி ஷேர்களின் விலையை அதிக டிஸ்கவுண்ட் கொடுத்து விலை நிர்ணயித்து உள்ளது. இதனால் அரசுக்கு பல்லாயிரங்கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் இக்குழுவினர் .இப்பொழுது தேசிய பங்கு வர்த்தக ஆணயமான Securities and Exchange Board of India (SEBI) விடம் எல் ஐ சி யின உள்ளார்ந்த மதிப்பு-Embedded Value- 5.40 லடசம் கோடி ரூபாய்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. . இதன் பொருள் எல் ஐ சி ஷேரின் அடிப்படை மதிப்பு-Base Value- ரூ.853/- ஆகும்.
உள்ளார்ந்த மதிப்பு என்பது ( Embedded Value) ஒரு நிறுவனத்தின் உண்மை மதிப்பை நிர்ணயிக்க உதவும் ஒரு கூறுதானே ஒழிய, உண்மை மதிப்பல்ல. அந்த அடிப்படைக்கூறின் மேல் மற்ற கூறுகளையும் சேர்த்தால் உண்மை மதிப்பு தெரியவரும் . அதனடிப்படையில்தான் பங்குகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
HDFC Life, SBI Life, ICICI போன்ற மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் இப்படித்தான் – உள்ளார்ந்த மதிப்பு மற்றும் பல சந்தைக் கூறுகளை இணைத்து மதிப்புக் கூட்டல் மூலமாக- நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதே நடைமுறையை எல் ஐ சி பங்கு மதிப்பீட்டிற்கும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது மட்டுமல்ல அவசியமானதுங்கூட.
அந்த வகையில் எல் ஐ சி யின் பங்கு விலை அடிப்படை மதிப்பான ரூ.853 2.5 மடங்கு முதல் 4 மடங்கு வரை கூட்டி மதிக்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் கடந்த ஏப்ரல் 26ந்தேதி செபியிடம் (SEBI) எல் ஐ சி சமர்ப்பித்துள்ள சிகப்பு வரைவு அறிக்கையில் ( Draft Red Herring Prospectus) எல் ஐ சி பங்கின் விலையை 904-949 ஆக நிர்ணயித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஷேரின் விலை 1.11 மடங்கே மதிப்பு கூட்டப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இது அநியாயமானது மட்டுமல்ல, பல்லாயிரக் கணக்கான பாலிசிதாரர்களை, சாதாரண இந்திய மக்களை மோசடி செய்யும் வேலை என இந்த அமைப்பு கூறுகிறது.
இதன்மூலம் 22.1375 கோடி பங்குகளை 904 ரூ என்ற குறைத்த மதிப்பீட்டில் பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்றால்-தாரை வார்க்கப்பட்டால்- அரசுக்கு கிடைக்கும் தொகை ரூ.21,008/- கோடிகள் தான்.
மதிப்பு கூட்டுதல் 2.5 மடங்காக இருந்தால் ஒரு பங்கின் விலை ரூ.2132/- ஆகும் . அரசுக்கு விற்பதால் வருமானம் 47,197/- கோடி கிடைக்கும்.
ICICI Prudential, SBI Life, HDFC Life ஆகிய மூன்று காப்பீட்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த மதிப்பை (E V). சந்தைப் படுத்தப்படும் பொழுது ( Market Capitalisation) கடைப்பிடித்த விகிதம் 2.49 முதல் 3.96 வரை. இதில் HDFC க்கு அனுமதிக்கப்பட்ட அளவு 3.96 ஆகும் . சந்தை மதிப்பில் எல்ஐசி மலை என்றால், HDFC வெறும் மடுதான்.
HDFC Life காப்பீட்டு நிறுவன பங்குக்கு அளித்த மதிப்பு கூட்டல் (3.96 மடங்கு) முறையை எல் ஐ சிக்கு அனுசரித்தால் எல் ஐ சி பங்கின் விலை குறைந்தபட்சம் ரூ.3,379/- ஆக மாறியிருக்கும் . இதன் மூலம் வருமானமும் ரூ.74,803/- கோடியாக கூடியிருக்கும் . ஆனால் வெறும் 21,008/- கோடி ரூபாய்க்கு விற்க அரசு முயலுவதால் அரசுக்கு ஏற்படும இழப்பு 53,795/- கோடிகளாகும்.கோவிட் பெருந்தொற்றிலிருந்து உலகம் முற்றிலும் விடுபடுமுன்னர், உக்ரைன் ரஷ்யா போரினால் உலக பங்கு ச்சந்தையும் உள்நாட்டு பங்கு சந்தையும் தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது இந்த அடிமாட்டு விலை விற்பனை தேவையா? சந்தை நிலவரங்கள் சரியானபின் ஐபிஓ வெளியிட்டால் நஷ்டம் தவிர்க்கப் பட்டிருக்கும் அல்லவா?
Also read
பொதுத்துறை நிறுவனங்களை விற்று காசாக்குவதற்கு என்றேன்றே ஒரு அமைச்சகம் ஒன்றிய அரசிடம் உள்ளது. இத்த அமைச்சகத்தின் செயலாளர் , “சந்தை நிலவரங்கள் சாதகமாக இல்லாத பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கமாட்டோம் என்ற கொள்கை உறுதிமொழியை நாடாளுமன்றத்திலும் அறிவித்தது. எல்ஐசி IPO பங்கு விற்பனையில் ஏன் இந்த கொள்கையிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது ? இதற்கு யார் காரணம்? என்று காங்கிரஸ் கட்சி இன்று கேள்வியெழுப்பி உள்ளது.
56 இன்ச் மார்பு, அரசியல் திண்ணம் என்றெல்லாம் வாய்ச் சவடால் பேசும் ஆட்சியாளர்கள், இன்று பன்னாட்டு முதலாளிகள் கொடுக்கும் அழுத்தத்திறகு பணிந்து எல் ஐ சி பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்கத் துணியும் (பாஜக அரசின் ) தேசபக்தியை என்னவென்பது?
நெஞ்சில் உரமுமின்றி,
நேர்மைத்திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி – கிளியே
வாய்ச் சொல்லில் வீர்ரடி”
என்ற பாரதியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
கட்டுரையாளர்;ச.அருணாசலம்
பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விலைக்கு வாங்கி அரசியல் செய்யும். வர்த்தக நிறுவனம். வேறு என்ன அந்த கட்சியிடம் எதிர்பார்க்க முடியும்.