ஓராண்டில் சாதனைகள் என்ன? சறுக்கல்கள் என்ன?

சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்த உண்மையான மதிப்பீட்டைத் தருக!

பாராட்டத்தக்க அம்சங்கள்;

இறையன்பு, உதயச் சந்திரன் போன்ற நல்ல அதிகாரிகளுக்கு உயர்ந்த பொறுப்புகளைத் தந்து ஓரளவுக்கேனும் சுதந்திரமாக இயங்க அனுமதித்து இருப்பது!

பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம் போன்ற மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ள ஒரு அமைச்சரவை!

ஆட்சியாளர்களின் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஓரளவுக்கேனும் நடவடிக்கைகள் எடுப்பது! நமது அறத்தில் வெளியான சில கட்டுரைகளுக்குமே கூட உடனடி ‘ரெஸ்பான்ஸ்’ கிடைத்து மாற்றங்கள் நடந்தன!

அதிமுக ஆட்சியாளர்களைப் போல சுயத்தை முற்றிலுமாக தொலைத்து, பாஜகவிற்கு பல்லக்கு தூக்காமல் இருப்பது!

ஜனநாயக செயல்பாடுகளுக்கும், பொது கருத்திற்கும் ஓரளவேனும் மதிப்பளிப்பது

வருத்தத்திற்கு உரிய அம்சங்கள்;

முதலமைச்சர் குடும்பத்தின் ஆதிக்கம்!

இந்துத்துவ அரசியல் சக்திகளை எதிர்க்கதக்க வகையிலான நேர்மையான ஆட்சியையும், துணிச்சலான எதிர்வினைகளையும் ஆற்றத் தவறியமை!

அயோத்தியா மண்டபத்தை அநியாயமாக கை நழுவவிட்டது! அற நிலையத்துறைக்கு ஆதரவான 100% ஆவணங்கள் கைகளில் இருந்தும், நீதிமன்றத்தில் சமர்பிக்காமல் விட்டுக் கொடுத்தது!

இன்று வரை கவர்னரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 19 மசோதாக்கள் என்னென்ன? அதனால் தமிழக மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் என சொல்லத் துணியாதது!

அதிமுக ஆட்சிக்கு இணையாக ஊழல்களில் கொடி கட்டிப் பறப்பது!

முதல்வரின் மருமகன் இன்னொரு சசிகலாவைப் போல நிலபுலன்களை வாங்கிக் குவிப்பதும், மறைமுகமான அதிகார மையமாக இருப்பதும்!

ஆர்.ஜெகதீசன், சுங்குவார்சத்திரம்

சட்டமன்றக் கூட்டத் தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறித்து?

வரவேற்றகதக்க முன்னெடுப்பு!. அதே சமயம் சர்ச்சைக்குரிய நேரங்களில் அதிரடியாக ஒளிபரப்பை நிறுத்துவது கோழைத்தனமாகும்!

கு.மஸ்தான், ராணிப்பேட்டை

முதல்வர் ஸ்டாலினிடம் உங்களுக்கு பிடித்தவை, பிடிக்காதவை என்னென்ன?

அசாதரணமான உழைப்பாளி!

நிதானம் மற்றும் சகிப்புத் தன்மை!

நல்ல அறிவுரைகளை ஓரளவேனும் காது கொடுத்து கேட்கும் பண்பு!

ஆகியவை பிடித்த அம்சங்கள்!

ஊழல்களுக்கு துணை போவது!

வெளிப்படைத்தன்மையற்று கமுக்கமாக இருப்பது!

பாஜகவிற்கு மறைமுகமாக அடிபணிவது!

ஆகியவை பிடிக்காத அம்சங்களாகும்!

சு.முத்துசாமி, காரைக்கால்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து?

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மீதான நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன!  பொறுப்புக்கு தகுதி இல்லாதவர். இவர் பள்ளிக் கல்வியில் தொடர்வது, அத் துறையை விரைவில் படுகுழிக்குள் தள்ளிவிடும். எச்சரிக்கை!

ம. ஏழுமலை, திருத்துறைபூண்டி

இல்லம் தேடி கல்வித் திட்டம் எப்படி செயல்படுகிறது?

அது பள்ளிக் கல்வித் துறைக்கே பள்ளம் தோண்டி குழி பறித்த வண்ணம் உள்ளது! ஏற்கனவே ஆசிரியர் பற்றாக் குறையுள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை இல்லம் கல்வித் திட்ட பொறுப்பு கொடுத்து அனுப்புவது ஏற்க முடியாத அநியாயம்!

மு.ரவிச்சந்திரன், விழுப்புரம்

ஓராண்டு ஆட்சி தொடர்பாக பத்திரிகைகளில் பக்கம்பக்கமாக விளம்பரம் வந்ததை பார்த்தீர்களா..?

பார்த்தேன்! அதில் டாஸ்மாக் அச்சிவ்மெண்டை மட்டும் விட்டுவிட்டார்கள்! இந்த ஓராண்டில் எத்தனை கோடிகள் கூடுதல் வருமானம்! அதில் எத்தனை பெண்களின் தாலிகள் அறுந்தன! ஏற்கனவே விதவைகள் எண்ணிக்கையில் கின்னஸ் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு இந்த ஓராண்டில் திமுக ஆட்சியின் பங்களிப்பு என்ன என்றும் சொல்லி இருக்கலாமே!ஆட்சியாளர்களுக்கு டாஸ்மாக் மோகம்  குறையாத வரை நல்லாட்சி என்பதே சாத்தியமில்லை!

கு.தங்கவேல், விருதாச்சலம்

இது ஆன்மீக ஆட்சி என்று அமைச்சர் சேகர்பாபு அடிக்கடி சொல்கிறாரே?

பாஜகவின் இந்துத்துவ அரசியல் செல்வாக்கு திமுகவை எந்த அளவுக்கு பாதித்து உள்ளது என்பதன் வெளிப்பாடாகவே இதை பார்க்கிறேன். இது மனித நேய ஆட்சி என்று சொல்வது தான் பெரியார் தொண்டர்களுக்கான இலக்கணமாகும்!

என்.அபிராமி, நங்கநல்லூர், சென்னை

பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் எந்த பொறுப்பும் ஏற்காமல் சென்றது குறித்து?

வெற்றிக்கு வாய்ப்பில்லாத இடங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது அவரது இயல்பாகும்!

எஸ். ராம,நாதன், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாட்டில் பாஜக செல்வாக்கு பெறும் வாய்ப்பு உள்ளதா?

உண்மையில் இன்றைய நிலையில் இல்லை. ஆனால், ஊழல் மிக்க ஆட்சியை நடத்திக் கொண்டு, பாஜகவிற்கு மறைமுகமாக விசுவாசம் காட்டுவதால் திமுகவினர் அந்த வாய்ப்பை பாஜகவிற்கு ஏற்படுத்தி தந்து விடுவார்களோ..என அஞ்சுகிறேன்!

எம்.நல்லசாமி, நாமக்கல்

ஆதினங்களுக்கு பல்லக்கு தூக்கி பரவசப்பட இங்கு ஒரு கூட்டம் இருக்கிறதே எதனால்?

ஆதினங்களிடம் அளவுக்கு மீறி குவிந்திருக்கும் சொத்துக்களும், நிறுவனங்களும் தான் காரணம்! அவர்களை அண்டி பிழைப்பவர்கள் இருக்கும் வரை இது தொடரவே செய்யும்! மடங்களின் சொத்துக்களுக்கு ஒரு உச்ச வரம்பை ஏற்படுத்திவிட்டாலே போதுமானது, மடாதிபதிகளை ஏறெடுத்து பார்க்கவும் ஆளிருக்காது!

கருப்பசாமி, அருப்பு கோட்டை

அதிமுகவில் அனைவரையும் தன் காலில் விழ வைத்து அடிமைகளைக் கொண்டு கட்சி நடத்திய ஜெயலலிதாவை ஒப்பிடும் போது ஸ்டாலின் தலைமையிலான திமுக பரவாயில்லை தானே?

நானும் இப்படித் தான் நினைத்திருந்தேன்! ஆனால், இது ஒரு மேம்போக்கான பார்வையாகும்!

உண்மையில் திமுகவிற்குள்: கட்சி ஜனநாயகம் என்பது காணாமல் போயிருப்பதை நாம் கவனிக்க தவறியுள்ளோம். எந்த மாற்றுக் கருத்தோ, எதிர்கருத்தோ அங்கு எழுவதற்கே வாய்ப்பற்ற நிலை உருவாகி இருப்பதன் அடையாளமே ஸ்டாலினின் கமுக்கமான அரசியல் அணுகுமுறைகள் சக்ஸஸ் ஆகி இருப்பதாகும். உதயநிதி தான் திமுகவின் அடுத்த தலைவர் என்பதையும், சபரீசன் ஒரு மாபெரும் அதிகார மையமாக வளைய வருவதையும் குறித்து கட்சிக்குள் எதிர்ப்பே இல்லையே!

குறிப்பு ;

கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லிங்கை சொடுக்கி, உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம்!

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time