மாதவிடாய்க் கோளாறுகள்; உணவில் சரி செய்யலாம்!

-எம்.மரிய பெல்சின்

உணவில் உண்டான மாற்றங்கள் மொத்த மனிதர்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது . இதனால், தாய்மை மற்றும் பெண்மையையே கேள்விக் குறியாகி  இருக்கிறது.  ஒரு பெண்ணானவள் பருவம் எய்திய நாள் முதல் தாய்மை அடைந்து மாதவிடாய் காலம் முடியும் வரை சிரமமின்றி அதை கடக்க என்ன செய்ய வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு மாதவிடாய் காலத்தையும் சிரமத்துடன் கழிப்பதும்தான் நடக்கிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்து வருகிறது! முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று யார் என்ன சொன்னாலும், அதை சாப்பிடுகின்றனர். பக்குவமற்றவர்கள் சொல்லும் மருந்துகளைச் சாப்பிடுவதால் பிரச்சினைகள்தான் அதிகரிக்கின்றன. பொதுவாக மாதவிடாய்க் கோளாறு பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படி வெளியே சொன்னாலும் பல பெண்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி வலி, வேதனையுடன் தங்கள் வாழ்நாட்களை கழிக்கின்றனர்.

மாதவிடாய்க் கோளாறுகள்  அனைத்துக்கும் உணவியல் மாற்றம், வாழ்க்கை மாற்றம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பருவம் எய்தும் வயதிலும், அதற்கு பின்னரும் பெண் குழந்தைகள் உண்ணும் உணவுகளை பட்டியல் போட்டுப் பார்த்தாலே உண்மை வெளிப்படும். வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு எலும்புகள்  நன்றாக வளரவும், நரம்பு மண்டலம் சீராக இயங்கவும், தசைநார்கள் பலப்படவும் சுண்ணாம்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம் தேவை. அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததுடன் அவற்றை சொல்லித்தர  பல வீடுகளில் பெரியவர்கள் இல்லை.

கருப்பட்டி ( பனை வெல்லம் )உளுந்தங்களி

உளுந்தங்களி, வெந்தயக்களி, கேழ்வரகு கூழ், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, பாதாம், வெள்ளைப்பூண்டு மற்றும் பால் உணவுகளில் சுண்ணாம்புச் சத்து எனப்படும் கால்சியம் அதிகம் உள்ளது. உளுந்தங்களியை பனை வெல்லத்துடன் சேர்த்து செய்து சாப்பிடுவது இடுப்புக்கு பலம் தரும்! ஆனால், இவற்றையெல்லாம் மறந்துவிட்டு மேலைநாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ், விதவிதமாக தயாரிக்கப்படும் கறிக்கோழி உணவு வகைகள், பானி பூரி போன்றவற்றையே இன்றைய தலைமுறை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை போன்றவற்றிலும்கூட கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருந்தும் அவற்றை நம் பிள்ளைகள் சாப்பிடுவதில்லை. அவை  நோய்வாய்ப்பட்டவர் களுக்கான உணவு என்று  ஒதுக்கிவிடுகின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக, ஏற்கெனவே கூறியது போல இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் கறிக்கோழிகளில் சிக்கன் 65, கென்டகி சிக்கன், தந்தூரி, ஷவர்மா, பட்டர் சிக்கன் மசாலா, சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன், மொறுமொறு சிக்கன், பி.பி.க்யூ சிக்கன் உள்ளிட்ட உணவுகள் நாவிற்கு ருசியாக இருப்பதால் அவற்றைத் தான் வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். வளரும் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுங்கள் என்று தாய்மாரும், உறவினர்களும் சொல்வதை குடும்பத்தாரும் தவறாமல் பின்பற்றுகின்றனர். ஆனால், அந்த உணவுகளால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அந்த தாய்மாருக்கோ, உறவினர்களுக்கோ, குடும்பத்தாருக்கோ முழுமையாக தெரியாதது வருத்தமே.

பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடப்படுவதாலும், அவை திரட்சியாக வளர்வதற்காக சில ஊட்ட உணவுகள் கொடுக்கப்படுவதாலும் தான் பெண் குழந்தைகளின் உடலியக்கத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பிராய்லர் கோழி வளர்ப்போர் திட்டவட்டமாக மறுக்கின்றனர். ஏனென்றால், குற்றச்சாட்டினை முன் வைப்போர் பொத்தாம்பொதுவாக உரிய ஆய்வு மேற்கொண்டு அதற்கான தரவுகளை காட்டச் சொல்லுங்கள் என்கின்றனர் கோழி வளர்ப்போர். ஹார்மோன் ஊசி போடப்படுகிறதா, இல்லையா என்ற விவாதத்துக்கு போகாவிட்டாலும் ஒன்று மட்டும் உண்மை! மேய்ச்சலுக்கு விடப்படும் கோழிகளுக்கும், கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் கோழிகளுக்கும் குணமாறுபாடுகள், வேறுபாடுகள் நிச்சயம் இருக்கிறது. கோழிகளில் கோளாறு இல்லையென்று இவர்கள் கூறினாலும் கறிக்கோழி உணவுகளை மேலைநாட்டு முறையில் தயாரித்துக் கொடுப்பதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவை இப்படியிருக்க அடுத்துவரும் காலகட்டங்களில் இன்றைய பெண்கள் முற்காலங்களைப் போல தண்ணீர் குடங்களை இடுப்பில் சுமப்பதில்லை, அம்மியில் மசாலா அரைப்பதில்லை, ஆட்டுக் கல்லில் மாவு ஆட்டுவதில்லை. எந்தப் பெண்ணும் ஸ்கிப்பிங் போடுவதில்லை, உட்கார்ந்து துணி துவைப்பதில்லை என இல்லை… இல்லை என பல இல்லைகளை அடுக்கலாம்.  இவை அனைத்துமே பெண்களின் இடுப்புப் பகுதி வலுப்பெறவும், கருப்பை வலுப்பெறவும் இயற்கையாகவே உதவியது! அவற்றையெல்லாம் விட்டு விட்டதால் பலவீனமாகிவிட்டனர்.

இது போக இன்றைய பெண்களில் பலர் வேலைக்குச் செல்வதால் அவசர அவசரமாக உணவை உண்பது, டைனிங் டேபிள் மற்றும் நின்றபடி உணவு உண்பது, எண்ணெய் நீராடலை பின்பற்றாதது என அடுக்கிக்கொண்டே போகலாம். தேவையான சத்தான உணவுகள் சாப்பிடாதது, போதுமான அளவு நீர் அருந்தாதது, குடும்பச் சூழல், பொருளாதார தேவையால் மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் பெண்களின் உடலியக்கம் பாதிக்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் தலை தூக்கி நிற்கும் போது தன் பிரச்சினையை வெளியே சொல்லாமல் பல பெண்கள் உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொள்வதாலும் மாதவிடாய்க் கோளாறுகள் அதிகரிக்கும் வாய்ப்பாகிறது!

மாதவிடாயின்போது வயிற்றுவலி அல்லது தலைவலி, அதிக ரத்தப்போக்கு, குறைந்த அளவே மாதவிடாய் வெளியேறுவது, மாதம் தவறி வருவது, பல மாதங்கள் வராமலிருப்பது என அந்த பிரச்சினைகள் நீள்கிறது. நீர்க்கட்டி ஏற்பட்டு, அதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் பலர் கருப்பையையே அகற்றும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இவை அனைத்துக்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் நிறைய தீர்வுகள் இருக்கின்றன என்பது பல பெண்களுக்கு தெரியாதது வருத்தமே.

கற்றாழைக்கு இன்னொரு பெயர் குமரி. குமரி என்றால் பெண்ணையும் குறிக்கும். ஆக, பெண்களின் மாதவிடாய் பிரச்சினையைத் தீர்க்க குமரி என்ற கற்றாழை அதிஅற்புதமான மருந்து. மாதவிடாய் வராத நாட்களில் கற்றாழையின் தோல் பகுதியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை நீர் விட்டு நன்றாகக் கழுவிவிட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து வெள்ளைப்படுதல் நீங்கும், ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். கருப்பை கட்டிகள்கூட கரையும்.

செம்பருத்திப் பூக்கள் சாப்பிடுவது மாதவிடாய்க்கோளாறுகளை சரிசெய்வதுடன் கருப்பைக்கோளாறுகளையும் சரிசெய்யும். செம்பருத்தி பூவை காய்வைத்து தேனீராக போட்டு குடிக்கலாம்! இன்னும் சொல்லப்போனால் உரிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு செம்பருத்தி பூக்களை நெய்விட்டு வதக்கி காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் பூப்பெய்துவார்கள்.

கருஞ்சீரகம், சதக்குப்பை, மரமஞ்சள் என்ற மூலிகைகளை பொடியாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டிகள் சரியாவதுடன் மாதவிடாய் சீராகும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு வந்தால் நாட்டு வாழைப் பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்துச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்துக் குடிப்பது, வடை அல்லது அடை செய்து சாப்பிடுவதும் மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும். ஏதாவது, ஒருவிதத்தில் எள் சாப்பிடுவது, அன்னாசி, பப்பாளி பழங்கள் சாப்பிடுவது, மணத்தக்காளி கீரை மற்றும் பழங்கள் சாப்பிடுவதும் பலன் தரும்.

பூங்கார் அரிசியை பொங்கி பூப்பெய்திய பருவம் முதல் குழந்தைப்பேறு காலம் வரை சாப்பிடுவதன் மூலமும் பலன் கிடைக்கும்.  இது போன்ற இன்னும் பல்ல எளிய பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவதுடன் உணவியல் மாற்றம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் செய்தால் மாதவிடாய்க் கோளாறுகளை வெல்லலாம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

 

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time