நடப்பது ஸ்டாலின் ஆட்சியா? துர்காவின் ஆட்சியா?

-சாவித்திரி கண்ணன்

ஒன்றடுத்து ஒன்று என அடுத்தடுத்து பல விவகாரங்களில் நியாயம், நீதி, ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் புறம் தள்ளி ஆதிக்க சக்திகளின் கைகள் மேலோங்கும் வண்ணம் முடிவு எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு! இதன் பின்னணியை அடையாளப்படுத்துகிறது இந்தக் கட்டுரை!

யார் ஒருவரையும் எடை போட அவரது பேச்சுக்களை விட செயல்பாடுகளே முக்கியமாகும். அந்த வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் ஸ்டாலின் சொல்வதைப் போல நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சியுமல்ல! அது மக்கள் நலன் சார்ந்த ஆட்சியுமல்ல! ஒன்றல்ல, இரண்டல்ல பல சம்பவங்களில் இது தான் உறுதிப்படுகிறது!

இந்துத்துவ பாஸிச சக்திகளின் ஆபத்துக்களில் இருந்து தமிழகத்தை பாதுகாக்கும் சக்தியாக திமுகவை மக்கள் நம்பியதாலேயே பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிம் தமிழக மக்கள் பெரும் வெற்றியை அள்ளித் தந்தனர்! அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் அவர்கள் பாஜக அரசிடம் அடிமைப்பட்டு இருந்ததாகும்!

ஆக, யாருக்கும் அஞ்சாத மக்கள் நலன் சார்ந்த ஆட்சி அமையவே மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்தார்கள்! பொதுவாக, அனைத்து எளிய மக்களின் எதிர்பார்ப்பு என்னெவென்றால், பாதிப்பு ஏற்படுத்துகிறவர்களை தண்டிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி கிடைக்கவுமான ஒரு ஆட்சி தான்! ஆனால், ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து பாதிப்பு ஏற்படுத்துகின்ற ஆதிக்க சக்திகளுக்கு அனுசரனையாகவே ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது!

# கொரோனா காலம் முடிவுக்கு வந்த அனைத்து கோவில் நடவடிக்கைகளும், வழிபாடுகளும், திருவிழாக்களும் நடந்து கொண்டுள்ளன. ஆனால்.சிதம்பரம் தீட்சிதர்களோ அந்த சிற்றம்பல மேடையில் தேவாரம்,திருவாசகம் பாட மட்டும் தடை விதித்து வருகின்றனர். அதை பாடச் சென்ற ஒரு தலித் பெண்ணையும், சிவனடியாரையும் கேவலமாக திட்டி அடித்து துரத்தினர். இந்த உரிமைக்காக தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா நான்காவது அலை வரும் என சொல்லப்படுவதால் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடப்படுவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கவில்லை என தீட்சிதர்களுக்கு முட்டு கொடுத்துள்ளது! அரசின் இந்த நிலைபாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் உள்ள சிதம்பர ரகசியம் என்னவென்றால், ஸ்டாலின் மனைவி துர்கா எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவாளாக்கும். அவா இருக்கும் வரை எங்களை அசைக்க முடியாது என தீட்சிதர்கள் சொல்லி வருவது தான்! இந்த தீட்சிதர்கள் மீது 21 எப்.ஐ.ஆர் இருந்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

# சென்னையின் புகழ் பெற்ற பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் மிகத் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் ஏழு மாணவிகள் மகளிர் போலீசாரிடம் நேரில் சென்று விரிவாக புகார் தந்தனர். ஆனால், செல்வாக்கு மிக்க அந்த பள்ளியின் தாளாளர்  கைதாகவில்லை. கைதான ஆசிரியர் ராஜகோபாலனும் அரசு தரப்பில் சரியாக புகாரை நீதிமன்றத்தில் நிருபிக்கத் தவறியதால் விரைவில் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். கோவை சின்மயா வித்யாலயா, செட்டிநாடு பள்ளி உள்ளிட்ட பல செல்வாக்கான தனியார் பள்ளிகள் விவாகரங்கள் அனைத்திலும் பெண் குழந்தைகளின் கற்பைச் சூறையாடிய எந்த ஒரு ஆசிரியரும், நிர்வாகமும் தண்டிக்கப்படவில்லை. இப்படி பஞ்சமா பாதகம் செய்யத் துணிந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு துணை நின்ற நிர்வாகங்களும் ஒரு போதும் சட்டத்தால் தண்டிக்கப் படமாட்டார்கள் என்றால், இது போன்ற தவறுகள் செய்பவர்களுக்கு அது துணிவைத் தராதா? படிக்க அனுப்பப்படும் பெண் குழந்தைகளுக்குத் தான் என்ன பாதுகாப்பு?

# சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரத்தை எடுத்துக் கொண்டால், சொசைட்டி பேரால் பதிவான ஸ்ரீராம சமாஜம் என்ற அமைப்பு அங்கே சிலைகளை நிறுவி கோவில் வழிபாடுகளையும், நிதி வசூலையும் செய்கிறது. எதற்கும் முறையான கணக்கு,வழக்கு இல்லாமல் அநீதிகள் தொடர்ந்து நடந்தன. அந்த மண்டபம் அமைந்துள்ள இடத்திற்கான மூலபத்திரம் கூட அவர்களிடம் இல்லை. ஆகவே, ஜெயலலிதாவே அந்த அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறைக்கு எடுத்து உத்திரவிட்டார். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த இரண்டு வழக்கில் தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது! ஆனால், அவர்கள் மேல் முறையீடு சென்றதில், நீதிமன்றத்தில் அறநிலையத் துறை சார்பாக உரிய ஆவணங்களை சமர்பிக்காத காரணத்தால், வேறு வழியின்றி நீதிமன்றம் அயோத்தியா மண்டபத்தை திருப்பித் தரச் சொல்லிவிட்டது.

இங்கு இந்த விவகாரத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனரான ரமணி என்பவர் நம்மிடம் கூறியது; ஒன்றல்ல, இரண்டல்ல..எத்தனையோ உதவிகள், சலுகைகள், பரோபகாரங்கள் இங்குள்ள பிரமாணாள் ஸ்டாலின் குடும்பாதாவாள்ட அனுபவிச்சிருக்கா. அதுக்கெல்லாம் ஸ்டாலின், துர்கா படத்தை வீட்டுல மாட்டி தினம் விழுந்து கும்பிட்டு நமஸ்காரம் செய்யணும்னு சொல்வேன்’’ என்றார்.

அயோத்தியா மண்டபம் அரசின் தோல்விக்கு என்ன காரணம்? 

தஞ்சையில் அரசுக்கு சொந்தமான 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அதில் 30 லட்சம் சதுர அடிப்பரப்பில் 28 பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பி நில ஆக்கிரமிப்பின் அடையாளச் சின்னமாக எழுந்து நிற்கிறது சாஸ்திரா பல்கலைக் கழகம். பல வருடங்களாக நடந்த நீதிமன்ற வழக்கில் சாஸ்திராவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனபோதிலும், அந்த இடத்திலிருந்து சேதுராம ஐயரின் சாஸ்திரா நிர்வாகத்தை வெளியேற்றி, அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும் திரானி திமுக அரசுக்கு இல்லை! இந்த அரசு ஏழை எளிய மக்கள் வாழும் ஆர்.ஏ.புரம் இளங்கோ நகர், அரும்பாக்கம் போன்ற குடியிருப்புகளில் தான் புல்டோசர்களைக் கொண்டு வந்து இடித்து தள்ளும். அங்கே அதை எதிர்த்து நடக்கும் தீக்குளிப்புக்கு கூட கவலைப்படாது!

சட்டத்திற்கு அப்பாற்ப்பட்ட சாஸ்திரா பல்கலைக் கழகம்!

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த ஒரு அநீதிக்கு எதிராகவாவது நடவடிக்கை எடுத்திருக்கிறாரா என்றால், இல்லை! ஊழலில் சாதனை படைத்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சுகாதாரத்துறையை சூரையாடிய விஜயபாஸ்கர், ஆவின் நிறுவனத்தில் அசாகாய சூரத்தனத்தோடு கொள்ளையடித்த ராஜேந்திர பாலாஜி, நெடுஞ்சாலைத் துறையில் நினைத்து பார்க்கவியலாத ஊழலில் ஈடுப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சி.என்.டி.ஏவில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்து உதிர்ந்து விழக்கூடிய நிலையில் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய ஒ.பி.எஸ்..என யாருமே தண்டிக்கப்படவில்லை. சில அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியதே பேரங்கள் நடத்தத் தானோ, என்னவோ என மக்கள் ஆழமாக சந்தேகிக்கின்றனர்.

கடைசியாக பல்லக்கு விவகாரம். மனிதனை மனிதன் தூக்கி சுமக்கும் – ஆதிக்கத்தை அடையாளப்படுத்தும் – இந்த பழங்கால சடங்கிற்கு தடை விதித்ததை ஒட்டுமொத்த தமிழக மக்களும் வரவேற்றனர்! மக்களிடம் செல்வாக்கில்லாத பாஜகவும், சில மேல்சாதியினரும் தான் இந்த பல்லக்கு நிகழ்வை ஆதரித்தனர். ஆனால், திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக அடிக்கடி சொல்லிக் கொள்ளும் இந்த அரசோ, மக்கள் மன நிலைக்கு எதிராக ஆதிக்க சக்திகளின் அழுத்தத்திற்கு  பணிந்து பல்லக்கு தூக்கும் தடையை விலக்கிக் கொண்டது! ஏன், ஒரு குதிரை வண்டி பூட்டிய சாரட்டிலே ஆதினத்தை வீதியுலா வரச் சொல்லி அறிவுறுத்தி இருக்கலாமே!

புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோவிலை உடமையாகக் கொண்ட தருமபுர ஆதினம் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் உள்ள செல்வாக்கு பெற்ற ஆதீனமாகும். அந்த வகையில் கருணாநிதி குடும்பத்தின் முன்னோர்கள் அந்த மடத்திற்கு சம்பந்தப்பட்டு இருக்கலாமோ என்னவோ! அதன் நீட்சியாகயோ என்னவோ, உதயநிதி ஸ்டாலின் தருமபுர ஆதினத்தை சந்தித்து ஆசி பெற்று வந்தார்!

ஆனால், ஆதினங்களுக்கு அரசு அனுசரணையாக முடிவெடுத்ததானது அரசுக்கு ஆதரவாக நின்ற பொதுஜன சமூகத்தின் முகத்தில் அரசே கரி பூசிய விவகாரமாகிவிட்டது!

பாஜகவினர் இந்த விவகாரத்தை தங்கள் வெற்றியாக கொண்டாடுகின்றனர். ”ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும். தமிழக அரசு அடிபணிந்தது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எச்.ராஜா. ”பல்லக்கு தூக்க போடப்பட்ட தடை நீக்கப்பட்டிருப்பது பாஜகவிற்கு கிடைத்த முதல் வெற்றி!” என்கிறார் அண்ணாமலை.

பாஜக போன்ற ஆதிக்க சக்திகளுக்கு வெற்றி மேல் வெற்றியை சாத்தியப்படுத்தத் தானோ என்னவோ, திராவிடத்தின் பெயரிலான ஒரு நிஜமான ஆரிய ஆதரவு நிலை செயல்பாடுள்ள ஆட்சியை ஸ்டாலின் சாத்தியப்படுத்தி வருகிறார்!

”இது ஆன்மீக ஆட்சி” என அடிக்கடி சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு! பாஜகவிற்கு போட்டியான ஒரு இந்துத்துவ அரசியல் குரலாகத் தான் இது தெரிகிறது! மக்கள் வேண்டுவது மனித நேய ஆட்சி தான்!

நாம் வேண்டுவதெல்லாம் வெறும் திராவிட, ஆரிய லேபிளைக் கொண்ட ஆட்சியல்ல, உண்மையான, மக்கள் நலன் சார்ந்த – ஆதிக்க சக்திகளின் அநீதியில் இருந்து மக்களை பாதுகாக்க கூடிய ஒரு ஆட்சியைத் தான்! முதுகெலும்பில்லாத ஒரு முதல்வரை மக்கள் நீண்ட காலம் தூக்கி சுமக்க மாட்டார்கள்! அய்யா ஸ்டாலின் அவர்களே, போதும் உங்கள் சரணாகதி அரசியல்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time