மனம் கவரும் கைவினைப் பொருட்கள்! மாற்றுத் திறனாளியின் சாதனை!

-மாயோன்

சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் ஐஸ்குச்சிக் கலைஞர் சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர்  ஐஸ்குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களைச் செய்து தன் வீட்டில் காட்சிப்படுத்தி வைத்துள்ளார்.

விமானம், ஊஞ்சல் ஆடும் மீன்கள், மோட்டார் சைக்கிள், படுக்கை அறை விளக்கு அலங்காரம் போன்றவற்றை தனக்கே உரித்தான பாணியில் தத்துரூபமாக அழகுற வடிவமைத்து உள்ளார்.

தான் நினைப்பதை அப்படியே ஐஸ் குச்சிகளால் காட்சிப் படுத்தும் ஆற்றல் கொண்டவர் இவர். போலியோ நோயால் இரு கால்களை இழந்து சக்கர நாற்காலியில் வலம் வந்த போதிலும் மனம் தளராமல் சாதனை எண்ணம் கொண்டவராகத் திகழ்கிறார் இந்த அற்புதக் கலைஞர்.

ஐஸ் குச்சிகளைப் பயன்படுத்தி இவர் செய்த முகக்கவசம் இவருடைய அண்மைக்கால படைப்புகளில் ஒன்று. கொரோனா குறித்த விழிப்புணர்விற்காக இதை உருவாக்கியுள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  மாமனிதர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இராட்டையை உருவாக்கியுள்ளார்.

சுமார் 200 ஐஸ் குச்சிகளை இதற்காக பயன்படுத்தியதாகவும், இதை வடிவமைக்க நான்கு நாட்கள் ஆனதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

” காந்தியடிகள் நம் நாட்டின் அடையாளம். இராட்டையில் நூல் நூற்று கதர் ஆடையை அவர் உடுத்தியதன் விளைவாக நம் நாட்டு மக்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர் ,அந்நியப் பொருட்களை புறந்தள்ளினர்.

’’ அமைதி வழியில் சுதந்திரப் புரட்சிக்கு வித்திட்ட ஒரு எளிய அடையாளம்  இராட்டை” என்கிறார் சந்திரன். தொடர்ந்து இந்த கலைத்துறைக்கு தான் வந்தது எப்படி ?என்பது குறித்து நம்மிடம் விவரித்தார் .

“நான் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களையும் இழந்தேன்‌ அதோடு, வலது கையில் மூன்று விரல்களும் செயல்படாது.

சூளைமேட்டில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் . பின்னர் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நண்பர் ஒருவரின் பரிந்துரையில் அழகு நிலையம் ஒன்றில் சூப்பர்வைசராக பல ஆண்டுகள் பணிபுரிந்தேன் .

ஒரு சராசரி மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்து விட்டுப் போகக்கூடாது எந்தத் துறையிலாவது சாதித்துவிட்டுத்தான் மறைய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது .

அது தொடர்பாக தேடலை சதா மேற்கொண்டேன்.

இரு கால்களும் இல்லை, ஒரு கையும்  முழுவதுமாக வேலை செய்யாது. இந்த பலத்துடன் எதைச் செய்யலாம் என்று ஆராய்ந்த போதுதான் ஐஸ் குச்சிகள் என்னைக் கவர்ந்து இழுத்தன.

அழகான வடிவத்தை கொண்ட ஐஸ் குச்சிகளைக் கொண்டு கலை அம்சங்கள் கொண்ட கைவினைப் பொருட்கள் செய்ய முடிவு செய்தேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்களால் இந்த பூமிக்கு ஏற்படும் தீங்கு குறித்து விரிவான பேச்சு எழுந்தது .

ஐஸ்குச்சி போன்ற மாற்றுப் பொருட்களைக் கொண்டு பரிசு பொருட்கள், கலைப்பொருட்களை செய்வது தொடர்பாக கூகுளில் தேடிய போது எந்த விவரமும் கிடைக்கவில்லை .

என் மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இரவும் பகலுமாய்  சிந்தித்து நானே  புதிய புதிய வழிமுறைகளைக் கண்டு பிடித்தேன்.

மக்களிடம் அப்போதைய  பேசும்பொருளாக (Latest Trend) இருப்பதை நான் வடிவமைத்து மகிழ்ந்தேன். 2011 இல் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றபோது இந்த கோப்பையை அப்படியே தத்ரூபமாக வடிவமைத்துக் காட்டினேன்.

மக்களிடம் பிரபலமாகத் திகழ்ந்த அனைத்தையும் ஐஸ் குச்சிகளால்  செய்து காட்சிப்படுத்தினேன்.

கொரோனா விழிப்புணர்வுக்காக

ஐஸ் குச்சிகளால் முகக் கவசம் செய்து நானே அணிந்தும் காட்டினேன்.

இதுவரை 300 க்கும் மேற்பட்ட ஐஸ் குச்சி கலைப்பொருட்களை செய்து என் வீட்டில் வைத்துள்ளேன்.

இத்துறையில் உலகில் ஒரு முன்னோடி கலைஞராக கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது என் லட்சியம்.

அண்மைக் காலமாக பள்ளி ,கல்லூரி மாணவர்கள் தேடி வந்து தாங்கள் விரும்பும் கலைப்பொருட்களை செய்யச் சொல்லி பெற்றுச் செல்கிறார்கள். மாணவர்கள் பலருக்கு இக்கலையை  சொல்லித்தருகிறேன்.

தமிழக அரசு உதவி செய்தால் நிறைய பேருக்கு  சொல்லிக் கொடுத்து பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இதை பெரிய அளவில் எடுத்துச்செல்ல முடியும்” என்கிறார்  ஐஸ்குச்சிக் கலைஞர் சந்திரன்.

சந்திரனின் தந்தை ஆறு மாதங்களுக்கு முன்பு தான் காலமானார் .

தாயாரும் இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இவருடைய கலைத் திறன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள் .

சந்திரன் திருமணம் செய்துகொள்ளவில்லை .கலைப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சாதனை சிகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

(இவருடைய தொடர்பு எண். 9677050329)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time