உள்ளாட்சி உரிமைகளை எப்படி வென்றெடுப்பது?

-நா.தெ. சிவகுமரன்

மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்பது எப்படி முக்கியமோ, அது போல உள்ளாட்சிகளில் தன்னாட்சி என்பதும் முக்கியமாகும். ஆனால், அதற்குத் தான் எத்தனை முட்டுக் கட்டைகள்! இவற்றை எல்லாம் கடந்து, உள்ளாட்சி உரிமைகளை எப்படி வென்றெடுப்பது என உள்ளாட்சி பிரதிநிகள் விவாதித்தனர்!

உள்ளாட்சி உரிமைகளை  மீட்டெடுக்க, பஞ்சாயத்து ராஜ் தின கருத்தரங்கம், மே-8 அன்று சென்னை சமூகவியல் கல்லூரி (MSSW) , எழும்பூர், சென்னையில் ‘தன்னாட்சி’ இயக்கத்துடன் இணைந்து நடத்தியது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் மூன்றடுக்கு அரசு படி நிலைகளின் படி ஒன்றிய அரசு , மாநில அரசு, உள்ளாட்சி அரசு (ஊரக, நகர உள்ளாட்சிகள் உட்பட) என வடிவமைக்கப்பட்டுள்ளன.

எப்படி ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்ற, நிர்வகிக்க பல்வேறு துறைகளின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ, அதே போன்று ஊரக உள்ளாட்சிகளுக்கும் குறிப்பாக கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு இருபத்தி ஒன்பது துறைகளின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்தியில் உள்ள ஒன்றிய அரசு, மாநில அதிகாரங்களில் தலையிட்டு சுதந்திரமாக செயல்படவிடாமல் தடை போட்டு வருவதை அன்றே எதிர்த்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ”மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என சூளுரைத்தார். அதை நோக்கியே தனது கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தினார்!  அதே வேளையில் பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு வந்தவர்கள் –  தற்போதைய முதல்வர் வரை – கிராம நிர்வாகம் சுயமாக செயல்படுவதற்கு போதுமான ஆர்வம் காட்டாதவர்களாக உள்ளனர்.

ஊராட்சித் தலைவர்களை சுயமாக செயல்படவிடாமல் ஏகப்பட்ட விதிமுறைகள் ஏற்படுத்தி, அரசு அதிகாரிகளின் குறுக்கீடுகள் செய்கின்றனர்! ஒவ்வொரு ஊராட்சியும் மாவட்ட ஆட்சியர், இயக்குனர் , ஊரக வளர்ச்சித் துறை, துணை இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) ..என பல்வேறு நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தும் வகையிலே தான் அமைந்துள்ளது.

கடந்த அதிமுக அரசில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத போது சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இன்னபிற அலுவலர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பல விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துக் கொண்டு ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதோடு, சகட்டுமேனிக்கு ஊழல்கள் செய்கின்றனர். 100 நாள் வேலை திட்டம், கழிப்பிட கட்டுமானம்… என பல துறைகளில் இந்த அதிகாரிகள் தலையிட்டு ஊழல் புரிந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் , வார்டு உறுப்பினர்கள் வந்த பின்னரும் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அனுமதிப்பதில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் உள்ளனர். மேலும் நிர்வாக அனுமதிகள் மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் பெறவேண்டுமென்றால் 3 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கமிஷன் தொகை தந்தால்தான், ஒரு ஊராட்சித் தலைவர் தனது மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று வழங்க முடியும் என்ற நிலை உள்ளது!

ஆகையால், இது  போன்ற சூழல்களை சரிக்கட்ட ஊராட்சி தலைவர்கள் மக்களிடமிருந்து கையூட்டு பெற்று அதை சரி செய்யும் நிலையும் உள்ளது! மற்றும் தாழ்த்தப்பட்ட, பட்டியலின தலைவர்கள் உள்ளூர் உயர்சாதி சமுதாயத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப் படுகின்றனர் என்ற பல கருத்துக்களை கருத்தரங்கிற்கு வந்திருந்த ஊராட்சி தலைவர்கள் பகிர்ந்தனர்.

கிராம சபையில் மக்களை பங்கெடுக்க வைப்பது, அவர்கள்  அதிகாரத்தை உணர்த்துவது, ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சிகள் என பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தன்னாட்சி அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் அரசு முன்னெடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை ஆய்வாக தொகுத்து வடிவமைத்திருந்தனர் . கருத்தரங்கில் தமிழகமெங்கும் இருந்து ஊராட்சி தலைவர்கள் சமூக அமைப்புகள் தன்னார்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர்.

ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள பல்வேறு சிக்கல்கள் அவற்றைக் களைவது உரிமைகளை வென்றெடுப்பது என்ற அடிப்படையில் கருத்தரங்கு அமையப்பெற்றது! இந்த கருத்தரங்கில் அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணன்,  அருஞ்சொல் ஆசிரியர் சமஸ், பஞ்சாயத்து தலைவர்களின் முன்னோடியான குத்தம்பாக்கம் இளங்கோ ,சமூக செயற்பாட்டாளர் முனைவர். கல்பனா சதீஷ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், அறப்போர் ஆர்.ஜெயராமன் என பலரும் பங்கெடுத்துக் கொண்டு ஊழல், அதிகார பகிர்வு, ஊராட்சி தலைவர்களின் எதிர்கொள்ளும்  பல சிக்கல்களுக்கு எப்படி தீர்வு கண்பது ஆகியவற்றை விவாதித்து உள்ளாட்சி பிரதிநிதிகளை ஊக்கப்படுத்தினர்!

நகர உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகும், நகர மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமையான ஏரியா சபை, வார்டு கமிட்டி  ஆகியவை இன்னும் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவது நகர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே உள்ளது. இது குறித்து  விவாதிக்கப்பட்டது. விழாவில்  ‘ஊராட்சி நிர்வாகம் அடிப்படை கேள்விகளும், பதில்களும்’ என்ற நூலின் இரண்டாம் பதிப்பு தன்னாட்சி அமைப்பு மூலமாக வெளியிடப்பட்டது! இறுதியில் தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதி கூட்டமைப்பின் நேர்மையான தலைவர்கள் பங்கெடுத்து எதிர்கால செயல்பாடுகளை தீர்மானித்தனர். முன்னதாக கருத்தரங்கில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேராசிரியர்.திரு. காளீஸ்வரன், மாற்று ஊடக மையத்தின் கலை வழிக் கற்றல் நிகழ்வு சிறப்பாக அமையப் பெற்றது.

கருத்தரங்கில் இந்திய அரசமைப்புச் சட்டம், சரத்து 40 படியும், 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 73 வது அரசமைப்பு திருச்சி திருத்தச் சட்டத்தின்படியும் நாடு முழுவதும் அமையப்பெற்ற மாநில அரசுகள் ஊராட்சி சட்டங்களை கொண்டுவர வேண்டுமென பரிந்துரைத்தது! அதன்படி தமிழக அரசும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், இயற்றி அதன் பிறகு உரிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு 1996 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முறையாக நடந்து வந்தன. இருந்தபோதும் அதன் பிறகு வந்த பல்வேறு அரசு ஆணைகள் அவற்றிற்கு உரிய சுதந்திரம் வழங்காமல், ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது.

அவற்றிற்கு வழங்கவேண்டிய மத்திய , மாநில நிதிகளை வேறு துறைகளுக்கு திருப்புவது அல்லது மாநில அரசே நேரடியாக செயல்படுத்துவது என்ற விதமாக அமைந்து வந்துள்ளது! இந்த நிலையில் காந்தி அடிகள் காண விரும்பிய கிராம சுயாட்சி இன்னும் கற்பனையாக மட்டுமே உள்ளது. அதனை நிலைநாட்ட இக்கருத்தரங்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்நாடு ஊராட்சி பிரதிநிதிகள் கூட்டமைப்பை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட விரும்பும் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் உற்சாகமாக பங்கெடுத்து கருத்தரங்கை நிறைவு செய்தனர்.

கட்டுரையாளர்; நா.தெ. சிவகுமரன்

வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time