ஒரு வரலாற்று பார்வையில் தமிழர் மருத்துவம்!

-ரதன் சந்திரசேகர்

தமிழரின் பாரம்பரிய மருத்துவம், சங்க கால  மருத்துவக் கலை, திருமூலரின் ரச சித்த மரபு, பழந்தமிழ் இலக்கியங்களில் அறுவை சிகிச்சை குறிப்புகள், சித்தர்களின் சீன தேசத்  தொடர்புகள், ரசாயன தந்திரம், ரச சாத்திரம்,  வள்ளுவர் மருத்துவம், நாடிப் பரிசோதனை, சிறு நீர் பரிசோதனை போன்ற அரிய தகவல்களை கூறுகின்றது!

தமிழர் மரபணு ஆய்வு, மண் பகுப்பாய்வு, என்றெல்லாம் தொல்லியல் ஆய்வுகளும், கீழடி, மயிலாடும் பாறை தடயங்களும் முன்னெடுக்கப்படும் இந்த நாள்களில், தமிழர் தொல் நாகரிகம்  குறித்த தனித்த ஆய்வுகள்  மிகுந்த  கவனம் பெற வேண்டியவை.

தற்போது கனடாவில் வாழும் இலங்கையைச் சார்ந்த, முனைவர் பால.சிவகடாட்சம்   இத்தகைய  ஆய்வுகளில் மூழ்கி முத்தெடுத்தவர் .

தமிழர்களின் சோதிட அறிவு, மருத்துவ அறிவு குறித்த ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடுடைய பால.சிவகடாட்சம்  அவர்களின் ஆர்வத்துக்கு இத் துறைகளில் முழுமையான  ஈடுபாடு கொண்ட மரபில் பிறந்தவர் என்பது  இயல்பான காரணமாகும்!

இலங்கையில் தமிழின் முதல் சோதிட ஆய்வு நூல் என்று கருதப்படக்கூடிய ‘சரசோதி மாலை’ குறித்த இவரது ஆராய்ச்சி நூல்  தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்களிடையே  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதைப்போன்றே, தமிழர் மருத்துவத்தை ஆய்ந்து இவர் எழுதியிருக்கும்,’தமிழர் மருத்துவம்  – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூலும் அதன் உள்ளீடாலேயே தனி முக்கியத்துவம் பெறுகிறது.

‘பட்டினம்’ பதிப்பக  வெளியீடாக இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல், தமிழ் மக்களின் பாரம்பரிய மருத்துவம், சங்க கால தமிழகத்தில்  மருத்துவக் கலை, திருமூலரின் ரச சித்த மரபு, பழந்தமிழ் இலக்கியங்களில் அறுவை சிகிச்சை குறித்த குறிப்புகள், சித்தர்களின் சீன தேசத்துத்  தொடர்புகள், ரசாயன தந்திரம், ரச சாத்திரம்,  ஆயுர்வேத மருத்துவத்தில் பௌத்தர்களின் பங்களிப்பு, வள்ளுவர்  கால மருத்துவம் என்றெல்லாம் நாமறியாத  பழைய உலகத்துக்கு ஒரு கால எந்திரத்தில் பயணிப்பதைப் போல நம்மை கூட்டிச் செல்லுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றி வளர்ந்த மற்ற மருத்துவ முறைகளையும் எழுதுகிற பால சிவகடாட்சம், ஆயுர்வேத மருத்துவத் துறையில் வடமொழி செலுத்திய ஆதிக்கத்தையும் சுட்டிக் காட்டுகிறார்.

பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை வடித்தவர் போகர் எனும் சித்தர் என்றும், அவருடைய சமாதி பழனியில் இருக்கிறதென்றும்  நாம் அறிந்திருக்கிறோம். காலாங்கி நாதரின் சீடரான போகர், கதிர்வேல் பிள்ளை குறிப்பிடும் சீன பௌத்தத் துறவி போகர் போன்றோரை சுட்டிக் காட்டி, போகர் எனும் சித்தர் ஒருவரா? அல்லது அப்பெயரில் வெவ்வேறு சித்தர்கள் இருந்தார்களா? என்று வினவுகிறார் பால சிவகடாட்சம். ‘போகர் ஏழாயிரம்’  என்னும் பழந்தமிழ் நூலை அவர் விவரிக்கிற போது நமக்கு  வியப்பே விளைகிறது.

இந்திய மருத்துவ முறைகளில் நோய்மையைக் கண்டறிவதற்காக பொதுவாக எட்டு பரிசோதனை முறைகள் மேற்கொள்ளப் படுகின்றனவாம். ஆனால், இவற்றைக் கடந்து, பண்டை சமஸ்கிருத ஆயுர்வேத நூல்களில் கூறப்படாத, நாடிப்  பரிசோதனை, சிறுநீர் பரிசோதனையெல்லாம் தமிழ் மருத்துவத்தின் சிறப்புகள் என்று புத்தகம்  அரிய செய்திகளை விரித்துக்கொண்டே  போகிறது.

‘தென்னிந்தியாவில் வைத்தியர்கள் சூத்திரர்களாக இருப்பதனால், சாஸ்திரிய பிராமணர்களால் பேணிக் காக்கப்படும் ஆயுர்வேத நூல்களை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை’ என்று இரண்டாம் சரபோஜி காலத்தில் இங்கிலாந்திலிருந்து வந்த  ‘வைட்லா அய்ன்ஸ்லி’  என்ற அறுவை சிகிச்சை நிபுணர் எழுதியிருப்பது போன்ற தகவல்கள் மருத்துவத்தையும் சாதி கூறு போட்ட கதையைச் சொல்லுகின்றன.

இன்னோரிடத்தில், சாதி வேறுபாடு காட்டாத  சித்தர்களைக் கூட  இன்னின்ன சாதி சித்தர் இவர் என்று  குறிப்பிட்டிருக்கும்  செய்தியையும்  புத்தகம் சுட்டுகிறது.

‘சித்த மருத்துவம் என்ற ஒன்று தனித்துவம் வாய்ந்ததொரு மருத்துவக் கலையாக  அக்காலத்தில் அறியப்படவோ, அங்கீகரிக்கப்படவோ இல்லை என்பதுதான் உண்மை’ என்று போட்டுடைக்கிற நூலாசிரியர்,  ஆனால்,சித்தர்களின் மருந்துகள் என்று இன்று அடையாளப்படுத்தப்படும் மருந்துகள் பற்றிய தீவிரமான ஆராய்ச்சிகள் அக்காலத்தில் மேற் கொள்ளப்பட்டன என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

சித்தமருத்துவம் போற்றுகிறவர்களுக்கு இந்த நூலிலிருந்து  கலகத்துக்கான வாய்ப்புகள் கிடைக்கக் கூடும்.

‘வைணவர்கள் தன்வந்திரியை ஆயுர்வேதப் பிதாமகராகக் கொள்வது போல, சைவர்கள் ஆதி சிவனை மருத்துவத்தின் கடவுளாக நம்புகிறார்கள். சிவன் பார்வதிக்கு ‘அருளிய’ மருத்துவத்தை, பார்வதி நந்திக்கு விளக்கியதாகவும், நந்தி தம் எட்டு சீடர்களுக்கு  அக் கலையை வழங்கியதாகவும் சேதிகள் சொல்லப்படுகின்றன. அந்த எட்டுப் பேர் பட்டியலில் அகத்தியர் இல்லை. ஆனால் அகத்திய முனியைத் தான் தமிழர் மருத்துவத்தின்  முன்னோடி என்கிறார்கள்’ போன்ற சுவையான சேதிகள் நூல் நெடுக விரவிக் கிடக்கின்றன.

அறிவதற்கு மட்டுமல்லாமல், மென்மேலும் ஆராய்வதற்கும் தூண்டுகிற நூல் இது.

அவசியம் வாசிக்க வேண்டும் என்கிற நூற்பட்டியலில் இதை உறுதியாக இணைத்துக் கொள்ளலாம்.

நூல் விமர்சனம்; ரதன் சந்திரசேகர்

‘தமிழர் மருத்துவம்  – ஒரு வரலாற்றுப் பார்வை’

ஆசிரியர்; முனைவர் பால சிவகடாட்சம்

விலை ரூ.250/-

‘பட்டினம்’ வெளியீடு.

தொடர்புக்கு-

தொலைபேசி – 9715089690

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time