தேசத் துரோக வழக்குகளும், திருந்தாத அரசுகளும்!

-சாவித்திரி கண்ணன்

எதற்கெடுத்தாலும் ‘ஆண்டி நேஷனல்’ என தேசத் துரோக வழக்குகளா…? சகிப்புத் தன்மையற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சாட்டையை சுழற்றி உள்ளது உச்ச நீதிமன்றம்! சற்றே பின்வாங்கி அவகாசம் கேட்டுள்ளது பாஜக அரசு! பல்லாண்டுகளாக இந்த சட்டத்தை துஷ் பிரயோகம் செய்து பழகிய ஆதிக்கவாதிகள் பதுங்கிப் பாய்வார்களோ..?

தேசத் துரோக வழக்கு என்பதற்கான 124 ஏ சட்ட பிரிவு அடிமை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட அடக்குமுறை சட்டமாகும்! அதன்படி பேச்சினாலோ, எழுத்தினாலோ, சைகையாலோ இந்திய அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அது குற்றமாக கருதப்படும். இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையாக வழங்கப்பட்டு வருகிறது.

மக்களை அச்சுறுத்துவதற்காக ஆங்கிலேயேர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஓம்பட்கரேவும், எடிட்டர்ஸ் கில்டும் இதை எதிர்த்து சென்ற ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர்!

அச் சமயம் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா “தேச விரோத சட்டப்பிரிவின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே இருந்துள்ளதை அறியலாம். இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படும் விதத்தை, ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு இணையாக ஒப்பிடலாம்,” என்று குறிப்பிட்டார்!

”இது மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின்படியும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி அந்த பிரிவை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்துகின்றன’’ என்றும் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பி இருந்தார்.

“தவறாக சட்டப்பிரிவு பயன்படுத்தப் படுவதற்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பிற வழக்குகளையும் ஆராய்ந்து நிலுவையில் உள்ள அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே விவகாரமாக விசாரிக்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்!

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப் பிரிவை மட்டும் மாற்றுவதற்கு பரிசீலிக்காமல் போனது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மீண்டும் இந்த வழக்கை தற்போது உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, இந்த மனுவுக்கு பதிலளித்திருந்த மத்திய அரசு, தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக இறங்கி வந்துள்ளது! இதையடுத்து, ”மத்திய அரசின் மறுபரிசீலனை முடிவடையும் வரையில் இந்த சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்கு பதியக் கூடாது” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பாஜக தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்!

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “நீதித்துறையையும் அதற்கு இருக்கும் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நீதிமன்றங்களுக்கு ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. அதை அவர்களும் மதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம் “அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கும் சட்டத்தை இயற்றவோ அல்லது அது மாதிரியான ஒரு சட்டத்தை நிலைத்திருக்க செய்யவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அதேபோல, நீதிமன்றங்களுக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கவும் சட்ட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனம் குறித்து பேசும் இவர்கள், முதலில் அதன் 13-வது சட்டப்பிரிவை படிக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கு எதிராக இருந்தால் அதனை செல்லாது என அறிவிக்க மேற்குறிப்பிட்ட 13-வது சட்டப்பிரிவு அனுமதி வழங்குகிறது” எனக் கூறினார்.

எந்தெந்த விவகாரத்திற்கு எல்லாம் இந்த தேசத் துரோக சட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனப் பார்க்கும் போது, நமது ஆட்சியாளர்கள் ஜன நாயகத்தி எந்த அளவுக்கு முதிர்ச்சியற்றவர்களாக உள்ளனர் எனப் புரியும்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனப் பாடி ஆடியதற்காக பாடகர் கோவன் தேச துரோக குற்றச்சாட்டில் கைதானார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இந்தியாவில் இந்த தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் 28% அதிகரித்திருக்கிறது என ஆர்டிகல் 14 என்கிற வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களைக்கொண்ட குழு கூறியுள்ளது.

பிரதமர் மோடி குறித்தும், உ.பி.முதல்வர் ஆதித்தியநாத் யோகி குறித்தும் விமர்சித்தவர்கள் மீதெல்லாம் இந்த தேசத் துரோக வழக்கு சரமாரியாக பதியப்பட்டுள்ளது!

இந்த தேசத் துரோகம் மற்றும் உபா சட்டப் பிரிவில் நடந்துள்ள கைதுகள் கொஞ்ச, நஞ்சமல்ல!

பீமா கொரேகான் வழக்கில், வழக்கறிஞர்கள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் என்பதாக சுரேந்திரா காட்லிங்க், சுதிர் தவாலே, ரோனா வில்சன், ஷோமாசென், மகேஸ் ராட், ஆகியோரும் அக்டோபர் 2018-ம் ஆண்டில் வரவர ராவ், சுதா பரத்வாஜ், அருண்பெரிரா, கௌதம் நவல்கா மற்றும் வெர்னான் கான்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேச ஹாத்திராவில் ஏழை தலித் பெண் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை எதிர்த்து நீதி கேட்டு போராடியவர்கள் மீதும், அந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் மீதும் தேசத் துரோக வழக்குகள்!

உத்திரபிரதேச அரசு மட்டுமே மாட்டுக்கறி தொடர்பாக சுமார் 120 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. ஆட்கொண்ர்வு மனுக்கள் தொடர்பாக இதை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் அதிர்ந்து போனது. கைது செய்யப்பட்டவர்களை நீதிபதிக்கு முன்பாக 24 மணி நேரத்திற்குள் நிறுத்த வேண்டும் இன்ன குற்ற்ச்சாட்டிற்காக இவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை உரிகை கூட மீறப்பட்டு உள்ளது. இதில் மிகப் பலர் மீது போலிக்குற்றங்கள்! ஆகவே ஒரே ஒருவரைத் தவிர அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க சொன்னது நீதிமன்றம். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் மீறி அவர்களை பல நாட்கள் சிறையில் வைத்திருந்தது உ.பி.அரசு!

ஆந்திராவில், ஆளும் கட்சி எம்.பி., ரகுராம கிருஷ்ணம் ராஜு, கொரோனா பிரச்னை தொடர்பாக அரசை கடுமையாக விமர்சித்தார். அதை இரண்டு தொலை காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பின! இதையடுத்து அவர் மீதும், ஊடக நிறுவனக்கள் மீதும், தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திர போலீசார். இது தொடர்பான மேல்முறையீட்டில், ரகுராம கிருஷ்ண ராஜுவுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதோடு ஆந்திர அரசை எச்சரித்தது!

காஷ்மீர் மாணவர்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வென்றதற்காக வாழ்த்தி கோஷம் போட்டதற்காக அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு!

வேளாண்மை சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய பல்லாயிரக்கணக்கானவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள்!

தாங்கள் காலம் காலமாக வாழும் பிரதேசத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதை எதிர்த்த 3,000 பழங்குடிகள் மீது தேசத் துரோக வழக்கு!

இப்படியாக கடந்த எட்டாண்டுகளில் மட்டுமே மாணவர்கள்,சூழலியலாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது எட்டாயிரத்து சொச்சம் வழக்குகள் போடப்பட்டு உள்ளன!

எனில் நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில் தானா?

சுதந்திர இந்தியாவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்த கிட்டதட்ட அனைத்து கட்சிகளுமே இந்த தேசத் துரோக வழக்கை தவறாக பயன்படுத்தி உள்ளன என்பதே உண்மை!

இதை கண்டித்து உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் நிறைய தடவைகள் கண்டனங்களையும், கவலையையும் வெளிப்படுத்தி உள்ளன! தற்போது இதை அதிகமாக தவறாக பயன்படுத்தியதில் பாஜக அரசு நிறையவே அம்பலப்பட்டுவிட்டது. ஆகவே சற்று பின் வாங்கியுள்ளது. ஆனால், அது தன் தவறை சிறிதளவேனும் உணர்ந்ததாக இல்லை எனும் போது இந்த பின்வாங்கல் பதுங்கி பாய்வதாகவே அமையும். வேறு வடிவிலும், வேறு பெயரிலும் இந்த தேசத் துரோக சட்டத்தை மீண்டும் கொண்டு வரவே அரசு திட்டமிடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருந்து அரசின் பயங்கரவாதத்திற்கு மக்கள் பலியாகாமல் காப்பாற்ற வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time