தாஜ்மகாலை தகர்க்கத் துடிக்கும் பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

புனிதமான காதலின் நினைவுச் சின்னம் என்றால், சட்டென்று உலக அளவில் அனைவரின் நினைவுக்கும் வருவது தாஜ்மகால் தான்! மதம், மொழி, இனம் கடந்து தலைமுறை தலைமுறையாக கோடானு கோடி மக்களை பரவசப்படுத்தி ஈர்த்துக் கொண்டிருக்கிறது! அந்த தாஜ்மகாலுக்கு தற்போது ஆபத்து ஆரம்பித்து உள்ளது!

காரணம், அது இஸ்லாமிய மன்னனால் கட்டப்பட்டது! முஸ்லீம்களை நினைவுபடுத்துகிறது! முஸ்லீம்களின் இருப்பே கசப்பாக உணர்பவர்களுக்கு, அவர்களின் சிறப்பாக கொண்டாடப் படும் ஒன்றை நினைக்கும் போதே கொந்தளிப்பு ஏற்படுகிறது. ‘கை வைக்கவே முடியாது’ என கருதப்பட்ட பாபர் மசூதியை காலி செய்தாயிற்று! அடுத்து மதுராவில் உள்ள மசூதிக்கு ஸ்கெட்ச் போடப்பட்டுவிட்டது! உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மன்னர்களின் பெயர்களில் உள்ள ஊர்களின் பெயர்களை எல்லாம் மாற்றியாகிவிட்டது. தற்போது டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருப்பதால் டெல்லியில் உள்ள முஸ்லீம்களை நினைவுபடுத்தும் சாலைகளின் பெயர்கள் எல்லாம் மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன!

இந்த தாஜ்மகாலை மட்டும் விட்டு வைப்பதா? உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது! 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பித்துவிட்டார்கள்!

”தாஜ்மகால் இருந்த இடத்தில் முன்பு சிவன் கோயில் இருந்தது! சிவன் கோயிலை தகர்த்துத் தான் தாஜ்மகால் கட்டப்பட்டது!” என மேடைக்கு மேடை பாஜகவினர் முழங்குகிறார்கள்!

தியாகுமாரி,  ஆனந்த் குமார் ஹெக்டே,  வினய் கட்டியார்

யோகி பதவியேற்றதுமே பாஜக தலைவர் வினய்கட்டியார், ”தாஜ்மகாலுக்கு கீழே என்ன உள்ளது என ஆராயுங்கள்! அங்கே இந்து கடவுள்களின் சிற்பங்கள் இருக்கலாம்!” என அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறார்!

இன்னொரு பாஜக தலைவர் ஆனந்த் குமார் ஹெக்டே, ”தாஜ்மகாலை ஷாஜகானே கட்டவில்லை. அதை இந்து மன்னர் ஜெய்சிங்கிடம் இருந்து ஷாஜகான் அதை வாங்கினார்’’ என்றார்!

இன்னொரு பாஜக எம்.பியான தியாகுமாரி,  ”இந்த இடம் ஜெய்பூர் ராஜவம்சமான எங்க குடும்பத்திற்கு சொந்தமானது…’’ என்கிறார்!

இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறார்களோ..! எத்தனை பேர் இப்படி கிளம்பி வருவார்களோ…!

‘தாஜ்மகால் எந்த காலகட்டத்தில் யாரால் உருவானது எப்படி கட்டப்பட்டது’ என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் நிறையவே உள்ளன! அந்த ஆவணங்களை கண்டெடுத்து ஆய்வு செய்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே பதிவு செய்துள்ளனர்! மொகலாய மன்னர்கள் காலக் குறிப்பேடுகளும் உள்ளன! அந்த காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த வெளி நாட்டு எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். அவற்றில் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம்!

பிரிட்டிஷ் பேரசால் கூட இது போன்ற ஒரு அரிய அழகிய கட்டிடத்தை கட்டி எழுப்ப முடியாது! எவ்வளவோ நவீன வசதிகள் வந்துவிட்ட சூழலும் கூட இன்னொரு தாஜ்மகாலை உலகத்தில் யாராலும் இனி கட்டி எழுப்ப முடியாது! ஆகவே, இது உலகில் காதலிப்பவர்களுக்கு எல்லாம் – வாழ்க்கையை நேசிப்பவர்களுக்கு எல்லாமான – பொதுச் சொத்து என்பதாகத் தான் உணர முடிகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலன்மஸ்க் சமீபத்தில் இந்தியா வந்து தாஜ்மகாலைப் பார்த்து வியந்து, ”உண்மையிலேயே இது உலக அதிசயம” என மலைத்துப் போய் பதிவு செய்துள்ளார். இப்படி உலகமே வியக்கும் தாஜ்மகாலை இன்னொரு முறை யாராலும் கட்ட முடியாது! இது இந்தியாவில் இருப்பது நமக்கு மிகவும் பெருமை தானே! சுற்றுலா பயணிகள் மூலமாக அதில் கோடிக்கணக்கான வருமானம் வருகிறது!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாஜ்மகாலை நம் அரசுகள் சரியாக பராமரிக்கின்றனவா? என்றால், இல்லை என்பதே உண்மை! ஆக்ரா நகரத்தில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் படு மோசமான ஆலைகள் வெளிவிடும் கரும் நச்சுப் புகை தாஜ்மகாலின் எழிலை சிறிது சிறிதாக பாழ்படுத்தி வருகிறது! பல தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள் தாஜ்மகால் அமைந்துள்ள யமுனை நதியை நாசப்படுத்தி நாற்றமெடுக்க வைக்கின்றன! இது தான் பல கோடிகள் வருமானம் தரக்கூடிய தாஜ்மகாலை நாம் பராமரிக்கும் லட்சணமாகும்!

இந்துத்துவ அமைப்புகள், சன்னியாசிகளாக தங்களை வெளித் தோற்றத்தில் காட்டிக் கொண்டு சதா சர்வகாலமும் சர்ச்சை செய்து கொண்டிருக்கும் சாமியார்கள் போன்றோர் தொடர்ந்து மக்களிடையே, ”தாஜ்மகால் இருந்த இடத்தில் சிவன் கோவில் இருந்தது! அதற்கு கீழேயுள்ள ரகசிய அறைகளில் சிவன் சிலைகள் உள்ளன” எனப் பேசி மக்களை தூண்டி வருகின்றனர். ஒரு பொய்யை இடைவிடாது பேசிக் கொண்டே இருந்தால் அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் உருவாகத் தானே செய்யும்! அது தான் தற்போது நடந்து கொண்டு உள்ளது! இதைத் தான் ‘கோயபல்ஸ் பிரச்சாரம்’ என்பார்கள்!

முதலில் அலகாபாத் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தாஜ்மகால் குறித்து சந்தேகம் கிளப்பிய மனுக்களை நிராகரித்துக் கொண்டே தான் இருந்தன! மீண்டும், மீண்டும் இது போன்ற வழக்குகளை தொடர்ந்து போடப்படுவதற்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்க தற்போது மனுவை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு உத்திரவிட்டு உள்ளது! ”தாஜ்மகாலா? சிவன் கோயிலா? சற்று தெளிவு படுத்துங்கள்” என இது குறித்து அகழ்வாய்வுத் துறையிடம் கேட்டு உள்ளது அலகாபாத் நீதிமன்றம்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் அதிகாரியான தயாளன் ஆக்ரா மண்டல கண்காணிப்பாளராக இருந்தவர். அந்த வகையில் தன் நிர்வாகத்தில் இருந்த தாஜ்மகால் கீழேயுள்ள அறைகளை பார்த்து உள்ளவர்! அவர், ”அது வெற்றிடமாகத் தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்! ”அதன் உள்ளே நுழைவது மிக குறுகலாக உள்ள காரணத்தாலும், அதில் பார்க்க வேண்டியது ஒன்றும் இல்லை என்பதாலுமே அந்த நிலவறை சாத்தி வைக்கப்பட்டு உள்ளது” எனக் கூறியுள்ளார்! ஆகவே, உள்ளபடியே அதை திறந்து ஒரு முறை பொது பார்வைக்கு வைத்து விடுவது நல்லது தான்! ஆனால், அது வரை அந்த நிலவறை கண்காணிக்கப்பட வேண்டும். வேண்டுமென்றே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளே யாருக்கும் தெரியாமல் சிவன் சிலைகளை வைக்கும் முயற்சிகள் நடந்துவிடாமல் இருக்க வேண்டும்.

நமது வட இந்திய இந்து மன்னர்களின் மனைவிகள் அந்த மன்னர்கள் இறந்த பிறகு எரிக்கப்படும் சிதையிலே உயிரோடு கொழுத்தப்பட்டு உள்ள வரலாறுக்கு நேர் முரணாக, தன் காதல் மனைவிக்கு மிகப் பெரிய நினைவுச் சின்னத்தை காதலின் அடையாளமாக விட்டுச் சென்ற ஷாஜகான் வித்தியாசமானவர் தான்!

அன்பான தீவிர இந்துத்துவ நண்பர்களே, ”வேண்டாம் வில்லங்கம் தாஜ்மகால் விவகாரத்தில்! தாஜ்மகாலை தகர்க்கும் எண்ணத்தை உடனே கைவிடுங்கள்! உங்கள் வெறுப்பு அரசியல் உங்களை உலகமே வெறுக்கும் நிலைக்கு தரம் தாழ்த்திவிடும்!”

எத்தனையோ பழம் பெருமை வாய்ந்த சிவன் கோவில்கள் பழுதடைந்து சீந்துவார் இல்லாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளன! அவற்றை புனரமைப்பதில் கவனம் செலுத்தினால், உங்கள் பக்தி மெச்சப்படும்! ‘அன்பே சிவம்’ என நம்பும் இந்துக்கள் தாஜ்மகாலை தகர்க்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time