ஊழல் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் எதிரி போல நடித்தாலும் உண்மையில் கூட்டாளிகள் என்பது இலங்கையில் ராஜபக்சேவிற்கு மாற்றாக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற நிகழ்வில் நாம் உணரலாம்! மக்களின் மாபெரும் போராட்டம் என்பது ஆட்சியில் வெறும் ஆள்மாறாட்டத்திற்கானதாக சுருக்கிவிட கூடியதல்ல!
இலங்கையின் இந்த இழி நிலைக்கு ராஜபக்சே தான் முழுக் காரணம் என இது நாள் வரை பேசி வந்தவர் ரணில் விக்கிரமசிங்கே! ராஜபக்சே குடும்பம் இலங்கையையே சூறையாடிவிட்டது என குற்றம் சாட்டியவர்களில் முக்கியமானவர் ரணில் விக்கிரமசிங்கே!
ஆனால், தற்போது மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய தயவில் பிரதமராக பதவி ஏற்று உள்ளார். அவர் பிரதமராக நீடிக்க ராஜபட்சே கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்தால் மட்டுமே சாத்தியப்படும்! எனில் இவரால் போராடிய பொது மக்கள் மீது கொடும் தாக்குதல் நடத்தியும் ,அவர்களின் கூடாரங்களை தீயிட்டு கொளுத்தியும் அராஜகம் செய்த ராஜபக்சேவின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஒளிந்து கொண்டிருக்கும் ராஜபக்சேவை உதைத்து வெளியில் கொண்டு வந்து கைது செய்யும் துணிச்சல் எப்படி வரும்! ரணில் பிரதமர் பொறுப்பு ஏற்க ராஜபக்சே வாழ்த்து சொல்லி இருக்கிறார் எனும் போதே, ரணிலுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு ராஜபக்சே குடும்பத்தை மக்களின் ஆத்திரத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சி என நாம் புரிந்து கொள்ளலாம்!
ராஜபக்சேவிற்கும், ரணிலுக்கும் இருக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் ராஜபக்சே பெரும் வன்முறையாளர். ஈவு இரக்கமற்ற கொடுங்கோலர். கொள்ளையடிப்பதில் குடும்பத்தையே ஈடுபடுத்தியவர். ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அளவுக்கு தமிழர்கள் மீதான கொடுந்தாக்குதலுக்கு உடன்பட்டிருக்க மாட்டார். மற்றபடி அவரும் சிங்கள பேரினவாத பார்வையுள்ளவரே! ராஜபக்சேவின் போர் குற்றங்களை கண்டு கொள்ளாமல் விட்டவர். ஊழல் செய்வதில் ராஜபக்சேவிற்கு சளைத்தவர் அல்ல!
ராஜபக்சேவின் படுமோசமான ஆட்சியை வெறுத்துத் தான் 2015 ஆம் ஆண்டில் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் ஆக்கினார்கள்! இந்த காலகட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொடூர குற்றங்களில் தொடர்புடைய ராஜபக்சேவின் மீதோ,அவரது அமைச்சரவை சகாக்கள் மீதோ ரணில் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து இருக்கும். ஆனால், அவரோ வெறுமே வழக்கு போட்டு, கோர்ட்டுக்கு அலையவிட்டதோடு நாசுக்காக அவர்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டார்! ரணில் விக்கிரமசிங்கேவின் நெருங்கிய நண்பரான அர்சுனா மகேந்திரன் என்பவருக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் என மிக உயர்ந்த பதவி தரப்பட்டது. அவரோ பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு சிங்கப்பூர் சென்று செட்டில் ஆகிவிட்டார். அவர் மீது இன்று வரை நடவடிக்கை இல்லை!
இலங்கையின் வெளி நாட்டுக் கடன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுமை கொண்டதாக ( 51 மில்லியன் டாலர்) உயர்ந்ததற்கு ராஜபக்சேவின் ராணுவ வெறியும், அழித்தொழிக்கும் ஆயுதங்களுக்காக அவர் அள்ளி இறைத்ததும் முக்கிய காரணமாகும்! அதேசமயம் நாட்டில் நிலவிய தாரளமய பொருளாதாரக் கொள்கையும் ஒரு முக்கிய காரணமாகும்! அதற்கு வித்திட்டவர் ஜெயவர்த்தனா தான்!
1978 வரை இலங்கை ஓரளவு தன்னிறைவு பொருளாதாரத்தில் குறைவின்றி தான் இருந்தது!
ஆனால், ஜே.ஆர். தனது புதிய தாராளவாதக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக 1978 இல் கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரமுள்ள அரசியல் அமைப்பு முறை, 6 ஆவது திருத்தச் சட்டம், இனவாத அரசியல் முறை, பயங்கரவாத தடைச் சட்டம் என்பனவற்றை அறிமுகப்படுத்தியது தொடங்கி இலங்கைக்கு பிடித்தது சனி! அவை அனைத்தும் இன்று வரை தொடர்கின்றன! இதை மாற்றி ஒழுங்குபடுத்துவதற்கான ஆளுமை கொண்ட அரசியல் தலைமை இன்று வரை அமையவில்லை!
ஜே.ஆரின் பிறகு அவருடைய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தார். அவருக்குப் பின்னர் ஐ.தே.க. எதிர்ப்பாளர்களான சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே தொடர்ந்து ஜனாதிபதிகளாக இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் யாருமே ஜே.ஆரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையை மாற்றியமைக்க சிறிதளவும் முயற்சிக்கவில்லை! அதற்கு மாறாக அவரது கொள்கையைத் தொடர்ந்து வளர்த்தெடுத்து தற்போது நாட்டில் சரி பாதியை சீனா ஆளுகைக்கும் விட்டுக் கொடுத்து இன்றைய நெருக்கடிக்கு பெரும் காரணகர்த்தாக்களாக திகழ்கின்றனர்!
ரணிலை பொறுத்த வரை அவர் இன்று மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தவர்.கடந்த தேர்தலில் ரணில் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை! ஆயினும், அவரது கட்சிக்கு ஓட்டுகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒரு எம்.பி.பதவி தரப்பட்டது!
ராஜபக்சே நாட்டிற்கு செய்த மிகப் பெரிய துரோகம் 20 வது சட்ட திருத்தமாகும். இதன் மூலம் அரசாங்கம் நாடாளுமன்றம், அதன் மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் அனைத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டு, நாட்டின் அதிபர் ஒருவருக்கே அனைத்து அதிகாரமும் என்ற வகையில் சட்ட திருத்ததை தற்போதைய ஆட்சியில் கொண்டு வந்தார். இதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையுமே பறித்து, தன் ஒற்றைக் குடும்ப சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது தான் இன்றைய பேரழிவிற்கு வித்திட்டதாகும்!
இந்த 20 வது சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சங்களாவன;
# ஜனாதிபதியால் பிரதமரை நியமிக்கவும் முடியும் நீக்கவும் முடியும்!
# அமைச்சர்களை நியமிப்பதில் பிரதமருடன் கலந்தாலோசிக்க தேவையில்லை. தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.
# குற்றவியல் வழக்கு உட்பட எந்தவொரு வழக்குகளிலிருந்தும் ஜனாதிபதி விலக்களிப்பு உள்ளவர். எந்த சட்டத்தாலும் அவரை கேள்வி கேட்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது! மேலும் அவர் மீது அடிப்படை உரிமை வழக்குகள் கூட பதிவு செய்ய முடியாது.!
# தேர்தல் ஆணையம், காவல்துறை,, பொது சேவை, மனித உரிமைகள், லஞ்சம், ஊழல் மற்றும் நிதி தொடர்பான ஆணைக்குழுக்களின் தலைவர்களை அதிபரே நியமிப்பார்!,
# உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் அதிபரின் விருப்பத்திற்கு உட்பட்டதே!
# முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளையும் ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த நியமனங்களை பற்றி, பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கத்தவர்களாக கொண்ட ஒரு குழுவிடம் கலந்துரையாடலாம். ஆனால், அவரது முடிவே இறுதியானது.
இந்த சட்ட திருத்தத்தில் இலங்கை அதிபர் ஒரு கடவுள் என்று சொல்லாதது தான் பாக்கி! இப்படியாக அனைத்துக்கும் அப்பாற்பட்ட அதிகாரமிக்கவராக அதிபரை நிலை நிறுத்துகிற இந்த சட்டதிருத்தம் இருக்கும் வரை ரணில் விக்கிரமசிங்கேவால் எதையும் செய்ய முடியாது!
ஏற்கனவே இரு முறை அதிபராகவும்,மூன்றுமுறை பிரதமராகவும் இருந்துள்ள ராஜபக்சே தன் தம்பியான அதிபர் கோத்தபயேவிற்கு அதிக அதிகாரங்களை உறுதிபடுத்தும் இந்த சட்டதிருத்ததை நிறைவேற்றியதன் மூலம் நாட்டில் எந்த கொந்தளிப்பு ஏற்ப்பட்டாலும், தன் குடும்பத்தை பாதுகாக்கும் வண்ணம் தெளிவாக திட்டமிட்டுக் கொண்டார்!
Also read
எனவே, ரணில் விக்கிரம சிங்கே வலிந்து போய் தானே தன்னை தற்கொலைக்கு ஆட்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ராஜபக்சேவின் மீதான கோபமெல்லாம் ரணில் மீது திரும்புவதற்கே இத்தகைய மாற்றம் பயன்படும். மக்களுக்கு எந்த சிறு நன்மையும் ஏற்படாது! ஒட்டுமொத்த 225 எம்.பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும். மிக முக்கியமாக அதிபர் கோத்தபய முதலில் பதவி விலக வேண்டும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply