எதிர்காலம் தொலைத்த உக்ரைன்- மருத்துவ மாணவர்கள்!

-செழியன் ஜானகிராமன்

பல்லாயிரக்கணக்கான நடுத்தர குடும்பத்து மாணவர்கள் போர் காரணமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் கல்விக்கு இன்று வரை எந்த உத்திரவாதமும் வழங்கப்படாததால் அலைக்கழிக்கப்படுகின்றனர்!

ரஷ்யா போரில் ஏராளமான மனித உயிர்கள் மட்டும் பலியாகவில்லை, இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்களின் எதிர்காலமும் சேர்ந்து பலிகடாவாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்!

போர் தொடங்கியவுடன் இந்தியா நம் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து வந்தது. அப்படி வந்தவர்களில் 18,000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள்.

ஏன் இந்தியாவில் படிக்காமல்  உக்ரைனுக்குச் செல்ல வேண்டும்?

மருத்துவ படிப்பு என்பது பள்ளி மாணவர்களில் பெரும்பாலோரின் கனவு. ஆனால், அதில் மருத்துவ படிப்புக்குச் சேர்பவர்கள் 1 சதவிகிதம் மட்டுமே. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவ இடம் 5,125 மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி 5,250 மொத்தம் 10,375 மருத்துவ இடங்கள் உண்டு. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மருத்துவம் சேர்வதற்கு முயற்சிப்பவர்கள் சில லட்சம் ஆகும்.

இதில் அரசு கல்லூரியில் சேர்ந்தால் வருடப் படிப்பு கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் நம் நாட்டில் தனியார் கல்லூரியில் மருத்துவ கல்வி படிக்க ஒரு கோடிக்கும் மேல் செல்வாகிறது. அதாவது கோடீஸ்வரகளுக்கு மட்டுமான படிப்பாகிவிட்டது.

இதனால் தான் பல மாணவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் மருத்துவ படிப்பைத் தேடிச்  செல்ல தொடங்கினார்கள். இந்த வகையில் உக்ரைனில் 18,000 ரஷ்யர்கள் 16,500, பிலிப்பைன்சில் 10,000, பிரான்சில் 10,000 மாணவர்கள் படிக்க சென்றுள்ளனர்!

உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட இந்த நாடுகள் மருத்துவக் கல்வியையும்,தொழிலையும் பணம் கொழிக்கும் வியாபாரமாக பார்க்கவில்லை இந்திய மாணவர்கள் அந்த நாடுகளில் மருத்துவம் படிக்கச் சுலபமாக இடம் கிடைக்கிறது.

கனவைத் தகர்க்கும் நீட் தேர்வும், கட்டணக் கொள்ளையும்!  

நீட் தேர்வு முழுக்க முழுக்க மத்திய அரசுஉருவாக்கிய பாடத்திட்டத்தின் படி கேட்கப்படுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டுச் சேர முடியாமல் மாநில பாடத்தைப் படிக்கும் மாணவர்கள் தவிக்கிறார்கள்.

# 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் தகுதி மதிப்பெண்- பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 138 மதிப்பெண் ஆகவும், பிற்பட்ட மாணவர்களுக்கு 108 மதிப்பெண்ணாகவும் நிர்ணயித்தது அரசு. ஆனால் இந்த மதிப்பெண் எடுத்தால் தகுதி மட்டுமே! ஏன் இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை தகுதியாக்குகிறார்கள் என்றால், தனியார் மருத்துவ கல்லூரிகள் தகுதி குறைவான மாணவர்களிடம் நல்ல காசு பார்க்கத் தான்!  அரசு மருத்துவ கல்லூரியில் 500 க்கு மதிப்பெண் எடுத்தால் கூட இடம் கிடைக்கச் சிறிது மட்டுமே வாய்ப்பு உண்டு.

தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முழுவதும் படித்து முடிந்து வெளியே வர 1 கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டும். இதனால் எளிய நடுத்தர பிரிவு மக்களுக்கு இந்தியாவில் மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகிவிடுகிறது.

உக்ரைன் போன்ற நாடுகளில் 6 வருட மருத்துவ படிப்புக்கும் அதிகபட்சம் 25 லட்சம் தான் செலவாகிறது. இதில் கல்லூரி கட்டணம்-தங்குவதற்கு-உணவு-போக்குவரத்து என்று எல்லாம் அடங்கும். அதனால் கடனை வாங்கியாவது அங்குச் சென்று படிக்கிறார்கள். 25 லட்சத்தில் மருத்துவம் படிப்பதை இந்தியாவில்  நினைத்துக் கூட பார்க்க முடியாது.  இந்த வகையில் உக்ரைனில் படிக்க சென்றவர்களில் தமிழ் நாட்டிற்கு திரும்பியுள்ள 1,896 மாணவர்கள் நிலை இன்று கேள்விக் குறியாகியுள்ளது. இவர்கள் சென்னையில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தையும் நடத்தி உள்ளனர்.

இப்படி படிக்கப் போன மாணவர்களுக்கு உக்ரைன்-ரஷியா போர் பெரும் பாதிப்பை உருவாக்கியது என்றால், இதில் மத்திய அரசின் மெத்தனம் அதை விட பாதிப்பை உருவாக்கி உள்ளது.

உக்ரைன் போர் ஏற்படுத்திய பாதிப்பு 

மூன்று மாதங்கள் முன்பு தொடங்கிய போரால் இந்தியா அழைத்து வந்த மாணவர்களுக்கு, இங்கேயே படிக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு கூறியது!

இது தொடர்பாக மத்திய அரசிடமும், மருத்துவ கவுன்சிலிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை.

இங்கு இருந்துதான் பிரச்சனை தொடங்குகிறது.

உக்ரைனிலிருந்து வந்த மாணவரிடம் பேசியபொழுது மருத்துவ படிப்பு முடிக்க 6 வருடங்கள் ஆகும். இதில் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் ஒன்றாம் வருடம் முதல் கடைசி வருட மாணவர்கள் வரை அடக்கம். இதில் கடைசி வருட மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க 4 மாதங்கள் மட்டுமே உண்டு.

போர் சூழல் இருந்தாலும் படிப்பை ஆன்லைனில் எடுக்கத் தொடங்கினார்கள். அதில் கலந்து கொண்டு பாடங்களைக் கவனித்தார்கள்.  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் படிப்பு முடிந்துவிடும். ஆனால், ஒன்றாம் அல்லது இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் நிலை இதிலிருந்து  மாறுபட்டதாகும். .

இந்த மாணவர்களிடம் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புக்காக கல்லூரி செமஸ்டர் பீஸ் கட்ட சொன்னார்கள். ஆனால், மாணவர்களோ. இந்திய அரசு எப்படியும் இங்கேயே படிக்க ஏற்பாடு செய்துவிடும் என்று நம்ப தொடங்கினார்கள். அதற்கே ஏற்ப அரசு பரிசீலனை செய்வதாகத் தொடக்கத்தில் சொன்னது. ஆனால் அதற்கு அடுத்து எந்த நகர்வும் அரசிடம் இருந்து இல்லை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், தொடக்கத்தில் எங்களைக் கவனித்த மீடியா கூட  பிறகு  அமைதியாகிவிட்டது.

அரசு மீது நம்பிக்கை வைத்து காத்துக்கொண்டு இருந்த மாணவர்கள் உக்ரைன் கல்லூரிகளுக்குக்  கட்டணம் செலுத்தாமல் காலம் தாழ்த்தினார்கள். பொதுவாக  அங்கு உள்ள கல்லூரிகள் மூன்று நான்கு முறை நினைவுபடுத்தினார்கள். இருந்தும், அரசின் மீது நம்பிக்கை காரணமாகக் மாணவர்கள் பீஸ் கட்டாமல் இருந்து உள்ளனர்.

பிறகு உக்ரைன் பல்கலைக்கழகங்கள் கட்டணம் கட்டாத சில மாணவர்களை நீக்கியது. அதுதான் இன்று விவாதம் ஆகி உள்ளது.  அதுவும் நாங்கள் படிக்கும் Dnipro பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை. Kharkiv பகுதியில்தான் இது போல் நடந்து உள்ளது என்று அந்த மாணவர் தெரிவித்தார்.

அரசு எங்களை இந்தியாவிற்கு  அழைத்து வருவதில் காட்டிய கவனத்தை  எங்கள்  எதிர்காலம் தொடர்பாக காட்டவில்லை. தற்பொழுது சில மாநில அரசுகள்  குறிப்பாக கர்நாடக அரசு இங்கு உள்ள மருத்துவ நிலையங்களில் கவனிக்க அனுமதி தந்து உள்ளனர். அதாவது அங்குச் சென்று கவனிக்கலாம். ஆனால் எந்த மருத்துவமும் செய்ய முடியாது. தற்பொழுதுக்கு இது மட்டும்தான் அனுமதி தந்து உள்ளனர். இங்கேயே படிக்க அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே என்றும் குறிப்பிட்டார்.

உக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்கு மாணவர்களைப் படிக்க அனுப்பும் முகவர் ஒருவரிடம் பேசியபொழுது இன்னும் பல செய்திகள்  தெரியவந்தது.

எப்படியும் இந்திய அரசு நம்மைக் கைவிடாது என்று நினைத்து பணம் செலுத்தாமல், ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் அவர்களை சில கல்லூரி நீக்கியது. மருத்துவக் கல்வியை ஆன்லைன் வகுப்பில் மட்டுமே முடித்துவிட முடியாது. பிராக்டிகல் வாய்ப்பு இல்லாமல் ஆன்லைனில் மட்டும் கல்வி கற்பதை தவிர்க்க மாணவர்கள் விரும்பினர். ஆக்வே இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பை எதிர்பார்த்தனர்! ஆனால், இந்திய அரசை நம்பி தங்கள் எதிர்காலத்தையே இந்த மாணவர்கள் இழக்கவுள்ளனர்.ஆகவே அரசு உடனடியாக இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களைக் கல்வி மிக முக்கியம். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற அல்லது அதற்கு மாற்று ஏற்படு அரசு செய்து தரவேண்டும். இப்படி மவுனமாக இருக்கக் கூடாது.

வெளிநாட்டிலிருந்து மருத்துவ படிப்பை முடித்தவர்கள் இந்தியாவில் FMGE தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்வு ஆனால்தான் மருத்துவராக செயல்பட முடியும். இப்படி வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கும் நிறையக் கட்டுப்பாடுகள் இந்திய அரசு நிர்ணயித்து உள்ளது. சமீபமாக இந்தியாவில் படிக்கும் மாணவர்களும் FMGE தேர்வு எழுத வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

மாணவர்கள்-பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அரசு உடனடியாக ஓர் நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும். தீர்வு காணாமல் காலம் தாழ்த்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும். இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் இடை நின்ற கல்வியை முழுமையாக முடிக்க அரசு உதவ வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

-செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time