முயன்றால் மீளலாம், மூட்டு வலியிலிருந்து !

- எம்.மரிய பெல்சின்

தவறான உணவுகளால் வரக் கூடிய இந்த மூட்டு வலியை, வந்த சுவடு தெரியாமலும், செலவில்லாமலும் விரட்டி அடிக்கலாம்! மறந்து போன மரபு வழியிலான உணவுகளை மீளவும் உண்ணத் தொடங்குவதும், சிலவற்றை தவிர்ப்பதும் மூட்டுகளை பலப்படுத்தும்!

மனிதனை எந்த நோயும் தாக்குவதற்கு முன்பாக முன்னறிவிப்பு செய்கிறது. ஆளைப் பொறுத்து பல்வேறு விதமான வலிகள் இருந்தாலும், மூட்டு வலி மிகுந்த அவதியைத் தரும். இன்றைக்கு வயது வித்தியாசமில்லாமல் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும் பாடாய்படுத்தி வருவது மூட்டுவலி. மாறி வரும் உணவு முறை, உடல் உழைப்பின்மை, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூட்டு வலி வரலாம்.

இதய நோய், சர்க்கரை வியாதி, நாள்பட்ட மனச்சோர்வு கூட மூட்டுகளில் வலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிலருக்கு வரும் மூட்டு வலிக்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னாலும், அது ஏதாவது ஒரு பிரச்சினையின் வெளிப்பாடாகவே இருக்கும். ஆனால், நம்மில் பலர் அன்றாடம் செய்யக் கூடிய சில தவறான செயல்பாடுகளால் மூட்டு வலி, முழங்கால் வலி, கை கால் இணைப்புகளில் வலி வர வாய்ப்புகள் உள்ளன.

மூட்டு வலி என்றில்லை… உடலில் ஏற்படக்கூடிய எத்தகைய வலிகளாக இருந்தாலும், நமது அன்றாட வாழ்வியல் முறையை ஒழுங்கமைத்துக் கொள்வதன் மூலம் வலியிலிருந்து மீளமுடியும். எலும்புகளை உறுதியாக்கக்கூடிய, கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலமும் வலிகளிலிருந்து மீண்டெழலாம். உணவு என்னும்போது பாலில் கால்சியம் சத்து அதிகமுள்ளது என்றுகூறும் மருத்துவர்கள் வழக்கமாக பாலைக் குடியுங்கள், சீஸ் சாப்பிடுங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், எல்லோராலும் எப்போதும் பால் அருந்த முடியாது. மேலும் இன்றைய சூழலில் கலப்படமில்லாத, சுத்தமான பால் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டதால் அதற்கு மாற்று என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

கால்சியம் சத்துகள் தேங்காய், காளான், கீரைகள், பழங்கள் என ஏராளமான இயற்கைப் பொருள்களில் நிறைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாதாம்பருப்பு, சோயா, மீன், நண்டு போன்றவற்றிலும்கூட கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கேழ்வரகு, எள் போன்ற தானியங்களிலும்கூட கால்சியம் சத்து நிறைந்துள்ளது. கேப்பை அல்லது ராகி என அழைக்கப்படும் கேழ்வரகில் கூழ், களி, கஞ்சி, அடை என பலவிதங்களில் தயாரித்து சாப்பிடலாம். முற்காலத்தில் சிறுதானிய உணவு உண்பது வழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் சிறுதானிய உற்பத்தி குறைந்ததுடன் உணவியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் கேழ்வரகை பயன்படுத்துவது குறைந்துவிட்டது.

இளைத்தவனுக்கு எள்ளு என்று ஒரு பழமொழி உண்டு. உடல் இளைத்தவர்களுக்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கு பலம் தர வேண்டுமென்றால் எள்ளு துவையல், எள்ளை இடித்து காய்ந்த மிளகாய், உப்பு உள்ளிட்ட சில பொருள்களைச் சேர்த்து இட்லி பொடி செய்து சாப்பிட வேண்டும். எள்ளில் நம்ப முடியாத அளவுக்கு கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், அதில் தின்பண்டங்கள் தயாரித்து சாப்பிடலாம்.

பொதுவாக மூட்டு வலி உள்ளவர்கள் அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து காலை, இரவு வேளைகளில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வலியைக் குறைப்பதுடன் முடக்கு வாதத்திலிருந்தும் நிவாரணம் தரக்கூடிய அமுக்கரா… அஸ்வகந்தா என்ற பெயரிலும் நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அஸ்வகந்தா என்பது சமஸ்கிருதப் பெயர்; அஸ்வகந்தா என்றால் குதிரையின் வாசனை என்று பொருள்படும்.

மூட்டு வலி உள்ளவர்கள் கடுகு அல்லது சுக்கை அரைத்து பற்று போடலாம். முடக்கத்தான் இலைகளை அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒரு துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இதேபோல் முடக்கத்தான் இலைகளை அரைத்து அரிசி மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம். முடக்கத்தான் இலையை ரசத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். நொச்சி இலையை அரைத்து பற்று போடலாம் அல்லது நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை ஊற்றலாம். எருக்கன் இலைகளையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரில் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம். ஆமணக்கு இலைகளை வெறுமனேயோ, விளக்கெண்ணெய் விட்டு வதக்கியோ ஒத்தடம் கொடுக்கலாம். வேலிப்பருத்தி இலைகளை வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம்.

விளக்கெண்ணெயில் இஞ்சி, பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பொறுக்கும் சூட்டில் அந்த எண்ணெயை வலி உள்ள இடத்தில் தடவி லேசாக நீவி விடலாம். வாதமடக்கி எனப்படும் வாதநாராயணன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒரு துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். விளக்கெண்ணெயை கீரை போன்று வதக்கி சாப்பிடலாம் அல்லது தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம். இதேபோல் வாதமடக்கி, முருங்கை மற்றும் லெச்சக்கொட்டை கீரை சம அளவு எடுத்து கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் சேர்த்து கொதிவிட்டு மூட்டில் தேய்த்து வந்தால் வலி விலகும். கோதுமை மாவை வறுத்து தேனில் குழைத்து மூட்டின்மீது தேய்த்து வந்தால் வலி விலகும்.

இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளை பின்பற்றினால் மட்டும் போதாது. உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் மேற்கொண்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக கிழங்கு வகைகள் மற்றும் வாழைக்காய் போன்ற வாய்வுக் கோளாற்றினை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. வாய்வுப்பிரச்சினை அதிகரித்தாலும் மூட்டு வலி ஏற்படலாம் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் நீர்ச்சத்துள்ள, வாதக்கோளாறை ஏற்படுத்தும் உணவுகளையும் உட்கொள்ளாமலிருக்க வேண்டும்.

மீந்துபோன பழைய உணவுகள், பழைய சாதம் போன்றவற்றையும் சாப்பிடாமலிருப்பது நல்லது. மூங்கில் அரிசி, அறுபதாம்குறுவை, இலுப்பைப்பூ சம்பா, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு போன்ற பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை உண்டு மூட்டு வலி வராமல் பார்த்துக்கொள்ளலாம். மூட்டு வலியால் அவதிப்படுவோர் மேற்கொண்டு வராமலிருக்க உணவியல் மாற்றங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

கட்டுரையாளர்; – எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time