இலங்கை அரசியலில் யாழ் வெள்ளாள மேட்டிமை ஆதிக்க சக்திகள் தற்போதைய போராட்டத்தில் தமிழ் மக்கள் பங்கேற்பதை தடுத்து வருகின்றன! மக்களை போராடாமல் வைத்திருந்து, இலங்கை ஆளும் வர்க்கத்தோடு பேரம் பேசுவதே இவர்களின் நோக்கம். கொந்தளிக்கும் இலங்கை ஆய்வாளர் அ.சி.விஜிதரன் நேர்காணல்!
தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணையாமல் இருப்பதற்கும், போராட்டங்கள் தமிழ் தரப்பில் நடைபெறாமல் இருப்பதற்கும் இவர்கள் ஆதிக்கமே முக்கியம். மக்கள் போராடினால் தங்களது பேரம் பேசும் அரசியலுக்கு சிக்கல் வரும் என்று மக்களை அமைதியாக வைத்திருக்கிறார்கள்
இலங்கை எழுத்தாளரும், ஆய்வாளருமான அ.சி.விஜிதரன், தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பற்றி பேசுகிறார். ஆட்சி மாற்றம், பொருளாதார நெருக்கடி, ராஜபக்சேவின் ஊழல் என்ற அளவில்தான் இலங்கையில் நடக்கும் போராட்டம் பேசப்படுகிறது. ஆனால், இதையும் தாண்டி இதில் ஆழமாக பேச வேண்டியுள்ளது என்கிறார்!

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
கோத்தபய ராஜபக்சே இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது பாசிச ஆட்சியின் முன்னோடியாக இலங்கை இருக்கும் என அஞ்சினேன். சிங்களப் மக்கள் பெரும்பான்மையாக ஒரே கட்சிக்கு வாக்களித்தது இலங்கை வரலாற்றில் இதுதான் முதல்முறை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உயிர்த்த ஞாயிறு அன்று, தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடந்தபோது, இலங்கையைக் காப்பாற்ற வந்த தலைவராக கோத்தபய ராஜபக்ச கருதப்பட்டார். சுதந்திரா கட்சியில் இருந்த ராஜபக்சேக்கள் குடும்பமாக விலகி அவர்களுக்கென ‘பொதுஜன பெரமுனா’ என்ற புதிய கட்சியை உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே அங்கு அவர்களின் கும்பல் ஆட்சி எழுச்சி தொடங்கிவிட்டது என்று அஞ்சினேன்.
ஆனால் இப்போதோ ‘கோட்ட கோ கமா’ என்ற முழக்கத்தை சிங்கள இளைஞர்கள் தன்னெழுச்சியாக எழுப்பி வருகிறார்கள். ‘மைனா கோ கமா’ என்ற பெயரில், ( மைனா என்பது மகிந்தா ராசபக்ஷே) பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு போராடினார்கள்; தற்போது ‘நோ டீல் கோ கம’ என்ற பெயரில் பேரம் பேசும் அரசியலை எதிர்த்து புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விகரமசிங்காவிற்கு எதிராக போராட்டத்தை தொடர்கிறார்கள். தமிழில் தேசியகீதத்தை போராட்ட இடத்தில் பாட, ஆட்களை அழைத்து வருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு நினைவு நாளை, அங்கு கடைபிடிக்கிறார்கள். சிங்கள மக்கள் இசைப்பிரியாவின் கொலைக்கும் சிவராமின் கொலைக்கும் நீதி கேட்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூட சிங்களம்,தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இருந்தது, இனவாதம் வேண்டாம் என்கிறார்கள்,மக்கள் இலங்கையராக ஒன்றுபடுவதே முக்கியம் என்கிறார்கள். இவை வரவேற்கத் தக்கவை.
இரண்டு ஆண்டுகளில் மக்கள் மாறக் காரணம் என்ன ?
இலங்கையில் மக்களுக்கு மருத்துவமனையில் அடிப்படை மருந்துகள் இல்லை. உணவு இல்லை. பால் இல்லை. பெட்ரோல், டீசல் இல்லை. சமையல் எரிவாயு இல்லை. மக்கள் பெரும் வரிசைகளில் இவற்றுக்காக காத்திருக்கிறார்கள். இருந்தும் கிடைக்கவில்லை. இதனால் வெகுண்டு எழுந்த மக்கள் போராட்டத்திற்கு வந்துள்ளனர். நாடு இவ்வளவு மோசமானதற்கு ராஜபக்சே குடும்பம் ஊழல் முக்கிய காரணம் என்று நினைக்கிறார்கள். அது சரியே.
அதுமட்டுமல்ல டாலர் இருப்பை காப்பாற்ற இந்தியாவில் ஐநூறு ரூபாயை ஒரே நாளில் செல்லாமல் ஆக்கியது போல, இலங்கையில் ஒரே நாளில் நாடு முழுவதும் இயற்கை எருவை விவசாயத்திற்கு பயன்படுத்துங்கள் என உத்தரவு போட்டுவிட்டு, செயற்கை உர இறக்குமதியை நிறுத்தினார்கள். இதனால் விளைச்சல் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விட்டது. இருந்தும் டாலர் இருப்பை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. குரூட் ஆயிலோடு கப்பல் இலங்கை துறைமுகத்தில் ஒருவாரமாக நிற்கிறது. அதை இறக்குவதற்கு கொடுப்பதற்கு அரசிடம் காசு இல்லை. எனவே அரசை எதிர்த்து மக்கள் போராட தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதோடு 1970 களில் இருந்து இலங்கையானது தாராளவாத பொருளாதாரத்தை கடைபிடித்து வருகின்றது. அதுவும் கவனிக்கப்பட வேண்டிய காரணம். சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட போரும், குவிக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரமும் இன்றைய சூழலின் முக்கிய காரணம். 30 வருடங்களாக நடந்த போரினால் அதன் பொருளாதாரம் அழிந்தது.
ஆனால் இன்னமும் மூன்று இலட்சம் பேரைக்கொண்ட இராணுவத்தை நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள். வளர்ச்சி திட்டங்களுக்கு என நிறைய கடன் வாங்கினார்கள். கொரோனாவினால் பொருளாதாரம் பாதிப்பு அடைந்தது. ஊழல், யதேச்சதிகாரம் மேலோங்கிவிட்டது. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ராஜபக்சேவின் 40 குடும்ப உறுப்பினர்கள் நடத்தினர்.
வளர்ந்த நாடுகள் கடனைக் கொடுத்து, வட்டி மூலம் இலங்கையைச் சுரண்டுகிறார்கள். மொத்த கடனில் சீனாவின் பங்கு 13 சதம்தான். ஆனால் ஜப்பான் 10 சதம் கடன் கொடுத்துள்ளது. ஜப்பான் தலைமை வகித்திருக்கும் ஆசிய வளர்ச்சி வங்கி 13 சதம் கடன் கொடுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு வட்டியாகவே 7 பில்லியன் டாலர் இலங்கை அரசு கொடுக்க வேண்டும். இதுவும் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளி உள்ளது.
இந்தப் போராட்டத்தின் அரசியல் எப்படி உள்ளது ?
பொருளாதார நெருக்கடியால் முதலில் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள்தான். அதனால்தான் முதலில் அவர்கள் தெருவிற்கு வந்தார்கள். அதன் பிறகு மத்தியதர வர்க்கம் போராட்டத்தில் இணைந்தது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். பல்வேறு முற்போக்கு அம்சங்கள் போராட்டங்களில் தெரிகின்றன. அதே நேரத்தில், கோரிக்கைகளில் அரசியல் முதிர்ச்சி இல்லை. அது இயல்பானதே. இது எதற்கு சொல்கிறேன் என்றால் இலங்கையின் முக்கிய பிரச்சனையான சிங்கள இனவாதம் பற்றிய அவர்களின் கோரிக்கைகளை சொல்கிறேன். அனைவரும் சமமான உரிமையோடு வாழவேண்டும், இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கிறது. இனவாதம் தொடர்பில் இன்னும் உறுதியான கோரிக்கைகள் வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இலங்கையில் பொதுவாக அரசியல்கட்சிகள் சிங்கள இடதுசாரிகள், வலதுசாரிகள் சிங்களப் பேரினவாதத்தால்தான் பொருளாதாரம் சீர்குலைந்தது என்று ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. உள்நாட்டுப் போருக்கு ஆன செலவு எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கத் தயாராக இல்லை. எல்லாரும் சிங்கள இனவாதத்திற்கு ஆதரவு. அதுமட்டும் அல்ல பேரினவாதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த வித பொறுப்புக் கூறலும் இல்லை. அரசியல் அரங்கில் அது இல்லாதினால் யாரும் அது பற்றி பேசுவது இல்லை.
இப்போது இலங்கையில் போராடி வருபவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற ‘மக்கள் கண்காணிப்பு சபை’ என்று பேசி வருகிறார்கள். அதே போல இனவாத சட்டங்களை மாற்றியமைக்க, இனவாதத்தால் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் போராட்டக்களத்தில் குரல் எழுப்ப வேண்டும்.
இலங்கை முழுவதும் போராட்டம் நடக்கவில்லை என்கிறீர்களே ?
இந்தப் போராட்டத்தை தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் சாபம் என்றும், போராட்டங்கள் சிங்கள மக்களுக்கானது எனவும் கூறி விலகி நிற்கிறார்கள். ஆனால், அதை மட்டும் வைத்து அரசியலை அணுகக் கூடாது. எதாத்தார்த்தில் கூறவேண்டும் என்றால், இனவாதத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதி தமிழர்கள், மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் தற்போது பொருளாதார நெருக்கடியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மலையக மக்களின் ஒரு நாள் சம்பளம் 650 ரூபாய்தான். ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாய். அவர்களால் எப்படிக் குடும்பத்தை நடத்த முடியும். தங்கள் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கோரி வருகிறார்கள். அதைப்பற்றி பேச யாரும் தயாராக இல்லை.

2019, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு, பொது இடங்களில் முஸ்லிம்கள் ஹிஜாப் அணியக்கூடாது, கொரானா காலத்தில் முஸ்லிம் உடல்களை, அவர்கள் மத வழக்கப்படி புதைக்கக் கூடாது எரிக்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 2000 நாட்களாக, போர் நடந்த சமயத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்குப் பகுதியில் போராடி வருகிறார்கள். இப்படி தமிழ் மக்கள் இலங்கையில் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது… அவர்களின் தலைமைகள் அதற்காக போராடவில்லை. மக்களுக்குத் தைரியம் கொடுத்து போராட்டக் களத்தில் இறக்க வேண்டும். ஆனால்,
பேரினவாதத்தினால் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் குழுமமாக இருக்கும் வடக்கு,கிழக்கு தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் ஒன்றினையவே அவர்களின் தலைமைகள் விடவில்லை. இதற்கு நான் தமிழ் தேசியத் தலைவர்களை குற்றம் சொல்லுவேன்.
பொதுவாக தலைமைகள் எப்போது வாய்ப்பு கிடைக்கும் அப்போது பேரினவாதத்தோடு இணைந்து லாபங்களைப் பார்க்கலாம் என்று தலைமைகள் காத்திருக்கிறார்கள். தமிழ் எம்.பி சுமந்திரன் தற்போது இலங்கை அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவுக்கு தலைவராகப் போகிறார். இது ஓர் உதாரணம். மக்களை போராடாமல் வைத்திருந்து வைத்து இலங்கை ஆளும் வர்க்கத்தோடு பேரம் பேசுவது அவர்களது நோக்கம்.

இதுதான் காலம் காலமாக நடக்கிறது. தமிழ் அரசியலில் யாழ் வெள்ளாள மேட்டிமைச் சாதியின் ஆதிக்கம் இதற்கு மிக முக்கிய காரணம். தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணையாமல் இருப்பதற்கும், போராட்டங்கள் தமிழ் தரப்பில் நடைபெறாமல் இருப்பதற்கும் இவர்கள் ஆதிக்கமே முக்கியம். மக்கள் போராடினால் தங்களது பேரம் பேசும் அரசியலுக்கு சிக்கல் வரும் என்று மக்களை அமைதியாக வைத்திருக்கிறார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இஸ்லாமியர்களும் இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சிங்கள மக்கள் போராட்டமாக இல்லாமல் அனைவரின் போராட்டமாக மாறவேண்டும். இருக்கும் இலங்கைக்குள்தான் தீர்வினைப் பெற முடியும் என்ற சூழலுக்கு வந்த பிறகு, இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது என்ன நியாயம்? என்பேன்.
எனவே தமிழ் பேசும் மக்கள் குழுமம் இனவாத ஒழிப்பு, சம்பள உயர்வு, பயங்கரவாத ஒழிப்புச் சட்ட நீக்கம், இராணுவம் வசம் உள்ள நிலங்களை மீண்டும் மக்களுக்குத் தர வேண்டும். சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், வடக்குப் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், காணாமல் போனவர்கள் பற்றி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை இன்று இருக்கும் சூழலில் போராட்டம் மூலம் எடுத்து வைக்க முடியும். அதன் மூலம் சிங்கள போராட்டக்காரர்களுடன் அதாவது சிங்கள மக்களுடன் உரையாடல்களை முன்னெடுக்க முடியும். அது போராட்டக் களத்திற்கு வருவதன் மூலமே சாத்தியம். அப்போதுதான் நமது குரல்களும் கேட்கப்படும். அதன் மூலமே தீர்வும் சாத்தியமாகும். தற்போதைய அரசியல் தலைமைகளால் எதுவும் நடக்காது.
மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இதை எப்படி பார்க்கின்றனர் ?
ஈழப்போராட்டத்தின் ஒவ்வொரு தகவல்கள் வரும் போதும் புலம்பெயர்ந்து இருக்கும் தமிழகள் எப்படி கிளர்ந்து போராடினார்கள். அதுபோல இப்போது ஏன் அவர்கள் போராடவில்லை என்ற கேள்வி வருகிறது! பொதுவாக தமிழ் மேட்டுக் குடிகளுக்கு தற்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. அதோடு, எப்போதும் தமிழ் அரசியல் சிந்தனைப் போக்கு என்பது மேல் தட்டு வர்க்கத்தின் நலனுக்கான பேரம் பேசும் அரசியலே. இதே அரசியலைத்தான் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் முன்னெடுக்கிறார்கள். அதாவது, அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சனையை பேசாமல் நடக்கும் போராட்டத்திற்கும், தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசுகிறார்கள். இந்த நேரத்தில் மக்களை அரசியல் படுத்த வேண்டும். தமிழ்பேசும் மக்கள் குழுமத்தை ஒன்றுசேர்க்க வேண்டும்.
Also read
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள் ?
தமிழ்நாட்டில் திராவிடவாளர்கள், தீவிர இடதுசாரிகள் என்று கூறுபவர்கள் கூட இலங்கையில் தமிழ் அரசியலில் இருக்கும் யாழ் வெள்ளாள மேட்டிமை அரசியலைப் பற்றி பேசுவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு அவர்களின் குரலாகவே ஒலிக்கிறார்கள். இங்கு விடுதலைப் புலிகள் என்ற பெரும் மாயைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் அதைத் தாண்டிய மக்கள் அரசியல் ஒன்று இருப்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தமிழகத்தில் இலங்கை தொடர்பில் இருக்கும் மோசமான விசயம் ஆகும்.
இன்றளவும் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கருத்தாளர்கள் யாழ் மேட்டிமை சமூகத்தால் முன்வைக்கப்படும் கருத்துக்களையே பேசுகின்றார்கள். இன்றைய சிக்கல்களை ‘பிரபாகரன் அன்றே சொன்னார்’ என்பது போன்ற வசனங்களை பேசுகின்றனர். ‘முள்ளிவாய்க்கால் சாபம்’ என்று பேசுகின்றனர். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply